பாலியல் தொழிலில் சிறுமிகள் – ஜனவரியில் மட்டும் வடக்கில் 3 சம்பவங்கள் பதிவு
பாலியல் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 வயது சிறுமி உட்பட மூவர் யாழில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கோண்டாவில் பகுதியில் உள்ள மேல் மாடி வீடொன்றினை வாடகைக்கு பெற்று ரகசியமாக இந்த செயற்பாடு தொடர்பில் யாழ், மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 17 வயது சிறுமி உள்ளிட்ட இரு பெண்களும் அவர்களை வைத்து விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்தில் 36 வயதுடைய ஆணும் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் நபர் ஒருவரிடம் 15 ஆயிரம் ரூபாய் பணம் பெற்று, தமக்கு 10 ஆயிரம் ரூபாய் பணத்தினை வழங்குவதாக கைது செய்யப்பட்ட பெண்கள் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை மருத்துவ பரிசோதனைக்கு பின்னர், யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு மாத கால பகுதிக்குள், வடக்கு மாகாணத்தில் பதிவாகிய மூன்றாவது சம்பவம் இதுவாகும். கடந்த 6ஆம் திகதி கிளிநொச்சி பரந்தன் பகுதியில் 15 வயது சிறுமியை வைத்து பாலியல் தொழிலில் ஈடுப்படுத்திய பெண் மற்றும் வீடு வாடகைக்கு வழக்கிய வீட்டு உரிமையாளர் கைதாகியிருந்தனர். கடந்த 12ம் திகதி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை வைத்து பாலியல் தொழில் நடாத்தி வந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவரும், அவரது கணவரும் 12ம் திகதி கைதாகினர். இந்த நிலையிலேயே யாழில் குறித்த 3ஆவது சம்பவம் பதிவாகியுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டில் 213 சிறுமிகள் கருத்தரித்துள்ளதாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக விசாரணைப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டில் 167 சிறுமிகள் கருத்தரித்துள்ள நிலையில் கடந்த ஆண்டு அதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.