இலங்கை அரசு தெற்கோடு கை கோர்க்க, தமிழ் தேசியம் மேற்கிற்கு மனுக் கொடுக்கின்றது !
உலக சனத்தொகையின், உலக சந்தையின் மிகப்பெரும் நாடுகளான சீனா – இந்தியாவோடு இலங்கை மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஜனாதிபதியின் சீன விஜயம் எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் மிகச்சிறப்பாக அமைந்துள்ளமை பல்வேறுபட்ட பரஸ்பர ஒப்பங்தங்களிலும் வெளிப்பட்டு நிற்கின்றது. உலகின் சிறிய தீவுகளில் ஒன்றான இலங்கை உலகின் மிகப்பெரும் சந்தையைக் கொண்டுள்ள, பொருளாதார பலத்தைக் கொண்டுள்ள நாடுகளாலும் கௌரவிக்கப்பட்டுள்ளமை தேசிய மக்கள் சக்திக்கு கிடைத் வெற்றியாகவே பார்க்கப்படுகின்றது. சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையே 21 ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகி உள்ளது.
சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு ஜனாதிபதி நாடு திரும்பினார். நாடு திரும்புவதற்கு முன் காலையில் நிலையான அபிவிருத்தி மூலம் கிராமிய மறுமலர்ச்சியைக் கண்ட சென் கி மாதிரி கிராமத்தையும் தேசிய விஞ்ஞான தொழில்நுட்ப விவசாய மையத்திற்கும் விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அபிவிருத்தியை ஜனநாயகப்படுத்தும் ஜனாதிபதியின் திட்டத்திற்கு இவை உதவும்.
சீனா கடன்பொறிக்குள் நாடுகளைத் தள்ளிவிடுகின்றது என்ற மேற்கு நாடுகளதும், அவர்களது ஊடகங்களினதும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு எடுபட்டு, சீனாவின் முதலீடுகள் பற்றி பல்வேறு விமர்சனங்கள் வந்தபோதும், அவை பொருளாதார விருத்திக்கான அடிக்கட்டுமானங்கள் என்பது வெளிச்சத்திற்கு வருகின்றது. இனிவரும் காலங்களில் இந்துசமுத்திரப் பிராந்தியம் சர்வதேச கப்பல் போக்குவரத்தின் முக்கிய பாதையாக அமைய இருப்பதும் இதற்கான காரணங்களாக சொல்லப்படுகின்றது.
ஆனால் இதனைக் கடுகளவும் புரிந்துகொள்ளாத தமிழ் தலைமைகள், ரோ புலிகளின் மதியுரைஞர் மு திருநாவுக்கரசு போன்றவர்களின் உலுத்துப்போன கதையாடல்களை வைத்துக்கொண்டு சீனாவுக்கு எதிராக எங்களைப் பயன்படுத்துங்கள் என்று சன்னதம் ஆடுகின்றனர். மறுபக்கம் எங்களுக்கு சீனாவின் புலமைப் பரிசிலும் வேண்டாம், படிப்பும் வேண்டாம் என்று யாழ் பல்கலைக்கழகம் அடம்பிடிக்கின்றது. கோட் ரை கட்டிய வெள்ளைக்காரன் அமெரிக்காவில் ஐரொப்பாவில இருந்து வந்து விசாரிக்க வேண்டும் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு, தற்போது உயிரோடு இல்லாதவர்களின் உறவுகள் வலிந்து கேட்கின்றனர். தமிழ் தேசியமும் அதற்கு பூஸ்ட் கொடுக்கின்றது.
தமிழ் தேசியத்திற்கு சர்வதேச அரசியல் புரியவில்லை என்பது ஒரு பக்கம், தங்கள் வீட்டு தெரு முழுக்க ஜேவிபி வந்த விடயமே இவர்களுக்கு நவம்பர் 15ம் திகதி தானே தெரிய வந்தது. அதுவரைக்கும் அவர்கள் ஊழல், மோசடி என்று போதையேறி மயக்கத்தில் இருந்தனர். கோமாவிலிருந்து எழும்பிய தமிழ் தேசிய மாமாக்களுக்கு கடந்த 15 ஆண்டுகளில் இலங்கையில், சர்வதேசத்தில் என்ன மாற்றம் நிகழ்ந்தது என்பதெல்லாம் மறந்து போய்விட்டது. மீண்டும் வெள்ளாள வெள்ளைக்கார ‘தொரைகளைச்’ சந்தித்து இன்னமும் கண்காணி வேலை எடுக்கத் திரிகின்றார்கள்.
தமிழ் முற்போக்கு கூட்டணியில் தோல்வியடைந்து, தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் சென்ற மனோகணேசன் பிரித்தானியத் தூதுவர் அன்ட்ரூ பற்றிக்கைச் சந்தித்துள்ளார். இலங்கையின் சமூக பொருளாதார தேசத்தைக் கட்டியெழுப்புவது பற்றியும் மலையகத் தமிழ் மக்களின் உரிமைகள் பற்றியும் அங்குள்ள குறைபாடுகள் பற்றியும் பிரித்தானிய ‘தொரை’யிடம் முறையிட்டுள்ளார்.
இதேசமயம் பா உ சிறிதரன் ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைமை கண்காணிப்பாளர் நாச்சோ சான் செஸ் அமோர், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் கார்மன் மொறேனோ உள்ளடங்கிய குழவினரை கொழும்பில் சந்தித்துள்ளார். அவர்களிடம் தமிழர்கள் சமஸ்டி அடிப்படையிலான அதிகாரப்பகிர்வொன்றையே எதிர்பார்ப்பதாக வலியுறுத்தி உள்ளார். இச்சந்திப்பின் இறுதியில் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் எவ்வாறு முன்மாதிரியாக, இதுவரை நடந்திராத வகையில், ஜனநாயகப்படியும், இனவாதமில்லாமலும், வன்முறையில்லாமலும் நடத்தப்பட்டது என்பதைச் சொல்லும் ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு அறிக்கையின் பிரதியை சிறிதரனிடம் கையளித்தனர்.
ஆனால் இலங்கையில் புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினையை இனவாதத்திற்கு எதிராக போட்டியிட்டு தமிழ் மக்களுடைய கணிசமான ஆதரவோடு ஆட்சிபீடம் ஏறியுள்ள தேசிய மக்கள் சக்தியோடு இது தொடர்பில் உரையாட, இவர்கள் தயாரில்லை. தமிழ் தேசியம் பேசுகின்ற தலைவர்கள் இலங்கையில் ஆட்சிக்கு வந்த தமிழ் மக்களின் ஆதரவைப் பெறாத, இனவாதத் தலைவர்களான ஜே ஆர் ஜெயவர்த்தனா, ரணசிங்க பிரேமதாச, மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டபாய ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க என எல்லோருடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். ஆனால் தேசிய மக்கள் சக்தியை தீண்டத் தகாததாக நடத்த முற்படுகின்றனர்.