பாராளுமன்றில் பாலியல் குற்றவாளிகளின் பதவிகள் பறிப்பு – யாழ். பல்கலைக்கழகத்திலும் மாற்றங்கள் நடக்குமா ?
நாடாளுமன்ற பெண் ஊழியர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர் என குற்றம் சாட்டப்பட்ட ஊழியர்கள் மூவரும் பதவி நீக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பான பல கட்ட விசாரணைகளின் அடிப்படையில் மூவரும் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டுள்ளனர். அதையடுத்து நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவின் பரிந்துரையில், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மூன்று ஊழியர்களையும் பணிநீக்கம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் அரசுக்கு அறிவிக்கப்பட்டு மிகக்குறுகிய கால இடைவெளியில் இந்த பணிநீக்கம் இடம்பெற்றுள்ளமையானது மகளிர் அமைப்புக்கள் பலவற்றினுடைய பாராட்டையும் பெற்றுள்ளது.
இதேவேளை பல்கலைகழகங்களில் உள்ள பாலியல் சுரண்டல்கள் தொடர்பிலும் என்.பி.பி கவனம் செலுத்த வேண்டும் என பெண்ணிய செயற்பாட்டாளர்களின் குரல்கள் மேலோங்க ஆரம்பித்துள்ளன. குறிப்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சில விரிவுரையாளர்கள் மாணவிகள் மீதான பாலியல் சுரண்டல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் தமிழ்தேசியத்தின் பின்னால் அவர்கள் பாதுகாப்பாக ஒழிந்து கொண்டுள்ளனர் என்பதை பலரும் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.