சுற்றுலாத்துறை நாடு என்ற அடிப்படையில் யூதர்களின் வழிபாட்டு தலங்களிற்கு பாதுகாப்பை வழங்கவேண்டிய நிலையில் உள்ளோம். – முஜிபுர் ரஹ்மானுக்கு பிரதமர் ஹரினி அமரசூரிய பதில் !
இன்று இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டு இஸ்ரேலிய மத நிலையங்கள் அல்லது கலாச்சார நிலையங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் அவ்வாறான இடங்களில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, இஸ்ரேலின் தேசிய மத நிலையங்களையோ அல்லது அதற்கு நிகரான கட்டிடங்களையோ நிர்மாணிப்பதற்கு எந்தவொரு அரசாங்க நிறுவனமும் அனுமதி வழங்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இதுவரையில் இஸ்ரேலியர்களுக்கு மத நிலையங்களையோ அல்லது அதுபோன்ற இடங்களையோ கட்டுவதற்கு புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சோ அல்லது அதன் கீழ் உள்ள திணைக்களங்களோ அனுமதி வழங்கவில்லை. ஆனால் அவர்கள் அத்தகைய நிலையங்களை நடத்துகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அது தொடர்பான தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன. அது தொடர்பில் நாங்கள் ஆராய்ந்து பார்த்துள்ளோம். அவை அனுமதியுடன் நடைபெறவில்லை. எந்தவொரு தருணத்திலும் அனுமதி வழங்கப்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சின் தலையீட்டின் ஊடாக அதனை எவ்வாறு தடுப்பது என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது. இந்த வழிபாட்டுநிலையங்களிற்கு அனுமதி வழங்கவில்லை, இந்த விடயத்தில் நாங்கள் விரைவில் தலையிடுவோம், என தெரிவித்துள்ள பிரதமர் எனினும் அருகம் குடா விவகாரத்தை தொடர்ந்து நாங்கள் யூதர்களின் வழிபாட்டு தலங்களிற்கு பாதுகாப்பை வழங்கவேண்டிய நிலையில் உள்ளோம். இது சுற்றுலாப்பயணிகள் குறித்த நாடொன்றின் கடப்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.