20

20

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால் ட்ரம் இன்று பதவியேற்கிறார் !

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால் ட்ரம் இன்று பதவியேற்கிறார் !

இன்று அமெரிக்காவின் 47வது ஜனாதிபதிய டொனால் ட்ரம் பதவியேற்கின்ளறார். வழமையாக பதவியேற்பு தலைநகர் வோஷிங்டனில் உள்ள கபிடல் பிளாஸாவுக்கு வெளியே இடம்பெறும். ஆனால் தற்போது அங்கு ஏற்பட்டுள்ள உறைய விறைக்க வைக்கும் குளிர் காரணமாக நிகழ்வுகள் கபிடல் பிளாஸாவுக்கு உள்ளேயே இடம்பெற ஏற்பாடாகி உள்ளது.

டொனால் ட்ரம் ஒரு எதிர்வு கூறப்பட முடியாத தன்னை முதன்மைப்படுத்தும் ஒரு இயல்பு கொண்டவராக இருப்பதால் சர்வதேச நாடுகளும் அவரை எப்படிக் கையாள்வது என்கின்ற சங்கடத்தில் உள்ளன. குறிப்பாக கனடா, பிரித்தானியா, மற்றும் ஐரோப்பிய நாடுகளே சங்கடத்தை எதிர்கொள்கின்றன. அதிகாரத் திமிரும் பணத் திமிரும் உடைய பெடியளைப் போல் ட்ரம், மற்றும் அவருடைய சகா எலோன் மஸ்க் போன்றவர்கள் விதிமுறைகளை மதிப்பதுமில்லை மற்றவர்களை மதிப்பதுமில்லை என்ற கணக்கில் செயற்படுகின்றனர்.

சீனாவுக்கு எதிராக இறக்குமதி வரிகளைக் கொண்டுவருவேன் என்ற சவாலோடு வருகின்றார் டொனால் ட்ரம். அவர் பதவியேற்க சில தினங்களுக்கு முன்பாக சீன நிறுவனமான பைற்டான்ஸின் ரிக்ரொக் சமூக வலைத்தளத்தை அமெரிக்க நீதிமன்றம் தடைசெய்து வைத்துள்ளது. ட்ரம் பதவியேற்றதும் முதல் கையொப்பமிடவுள்ள விடயம் ரிக்ரொக்கின் தடையை நீக்கச் செய்வதே எனத் தற்போது தெரியவந்தள்ளது. அமெரிக்காவின் மில்லியன் கணக்கான மக்கள் ரிக்ரொக்கைப் பயன்படுத்துகின்றார்கள். தன்னுடைய பதவியேற்பை அமெரிக்க மக்கள் சீனாவின் ரிக்ரொக் கூடாக பார்ப்பதற்கு வசதியாக ரிக்ரொக் மீதான தடையை நீக்கும் ஆவணத்தில் டொனால் ட்ரம் கையெழுத்திட உள்ளார்.

தான் வருகின்ற போதே சமாதானமும் சேர்ந்து வருகின்றது என இஸ்ரேல் – காஸா சமாதானஉடன்பாட்டை சுட்டிக்காட்டியுள்ள அவர், தொடர்ந்தும் நிரந்தரமான சமாதானத்தை நோக்கிப் பயணிக்க இஸ்ரோலுக்கு அழுத்தம் கொடுப்பாரா இல்லையேல் காஸாவை இஸ்ரேலின் பகுதியாக இணைக்க அனுமதியை வழங்குவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பெரும்பாலும் யுத்தத்திற்கு ஆர்வம் காட்டாதவராகவும் வியாபாரத்திற்கே ஆதரவானவராகவும் கருதப்படும் அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால் ட்ரம் காஸாவில் எடுக்கும் முடிவு மத்திய கிழக்கினதும் உலகினதும் அரசியல் போக்கில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும்.

உக்ரைன் போர் விடயத்தில் டொனால் ட்ரம் ஏற்கனவே தனது நிலைப்பாட்டை ஓரளவு தெளிவுபடுத்தி உள்ளார். அதன்படி ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்குமிடையே ரஷயா கைப்பற்றிய பகுதிகளை ரஷ்யாவிடமே விட்டுவிட்டு சமாதானத்தை முன்னெடுப்பதே ட்ரமின் திட்டமாக உள்ளது.

47வது ஜனாதிபதி டொனால் ட்ரமின் அமெரிக்க எப்படி அமையும் என்பதை இனிவரும் நாட்கள் எமக்கு தெரியப்படுத்தும்.

வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் குடும்பஸ்தர் மர்ம சாவு !

வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் குடும்பஸ்தர் மர்ம சாவு !

கடந்த 18 ஆம் திகதி சனிக்கிழமை சந்திரகுமார் சந்திரபாலன் எனும் 49 வயதுடைய குடும்பஸ்தர் வல்வெட்டித்துறை பொலிஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார் எனக் கூறப்படுகிறது. சந்திரபாலனுக்கு எதிராக விடுக்கப்பட்டிருந்த பிடியாணை காரணமாகவே அவர் விசாரணைகளுக்காக கொண்டு செல்லப்பட்டிருந்தார். அவர் கைதாகும் போது மதுபோதையில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

கைதான நபர் சனிக்கிழமை இரவே உயிரிழந்துள்ளார். அவருடைய உடல் முதலில் வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், பின்னர் அங்கிருந்து பிரேத பரிசோதனைக்கு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. சந்தேக மரணமாகையால் உடற்கூறு பரிசோதனையில் மேலதிக தகவல்களை பெறும் பொருட்டு சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதுள்ளது. இறந்தவரின் உடலில் அடிகாயங்கள் காணப்படுவதால், பொலிஸாரின் சித்திரவதையினால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என உறவினர்களும் அப்பகுதி மக்களும் தெரிவிக்கின்றனர்.

இதேமாதிரி 2023 இல் வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகிய நாகராசா அலெக்ஸ் எ‌‌ன்ற இளைஞர் பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இறந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மகிந்த வீட்டுக்கு மாத வாடகை 46 லட்சம் மக்களின் வரிப் பணத்தில் !

மகிந்த வீட்டுக்கு மாத வாடகை 46 லட்சம் மக்களின் வரிப் பணத்தில் !

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து உத்தியோகபூர்வ இல்லங்களையும் அரசாங்கம் மீளப்பெறும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். களுத்துறை – கட்டுகுருந்தவில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த ஜனாதிபதி, தற்போதுள்ள சட்டங்களின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஒரு குடியிருப்பு அல்லது அவர்களின் சம்பளத்தில் 1/3 பங்கைப் பெற உரிமை உண்டு. அரசாங்கம் இப்போது இந்த நன்மையை ரூ. 30,000 ரொக்க உதவித்தொகையாகக் கட்டுப்படுத்த முடிவுசெய்துள்ளது. இது அவர்களின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கான வாடகை மாதத்திற்கு ரூ. 4.6 மில்லியன் ஆகும். இதில் நில மதிப்பு சேர்க்கப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அவர்களது வீடுகளை காலி செய்யவோ அல்லது வாடகையை செலுத்தவோ தெரிவுகளை வழங்குவோம்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகை, கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகை தவிர அனைத்து அமைச்சர் பங்களாக்களும் ஹோட்டல் திட்டங்கள் அல்லது பிற பொருத்தமான பயன்பாடுகளுக்காக மீண்டும் பயன்படுத்தப்படும் என்றார்.

யாழ்ப்பாண மாணவர்களிடையே வேகமெடுக்கும் போதைப்பொருள் பாவனை – மௌனம் காக்கும் கற்ற சமூகம் !

யாழ்ப்பாண மாணவர்களிடையே வேகமெடுக்கும் போதைப்பொருள் பாவனை – மௌனம் காக்கும் கற்ற சமூகம் !

யாழ்ப்பாண நகர்ப்புற பாடசாலைகள் தொடங்கி பல பகுதிகளிலும் ஊசி உள்ளிட்ட போதைப்பொருள் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் இது தொடர்பில் யாழ்ப்பாண உயர் மட்ட அதிகாரிகள் தொடங்கி சமூக செயற்பாட்டாளர்கள் வரை யாரும் கவனம் செலுத்த முனைவதில்லை எனவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

அண்மையில் யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் இரு மாணவர்கள் அதீத போதையுடன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். மாணவர்கள் இருவரும் போதை மாத்திரைகளை உட்கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்தது.

வாட்ஸ் அப் செயலி ஊடாக மாணவர்களை உள்ளடக்கிய குழுக்கள் ஊடாக போதை மாத்திரை விநியோகங்கள் நடைபெற்று வருவதாக யாழில் பரவலான குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றது. எனினும் இவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான பொலிஸாரின் நடவடிக்கைகள் அத்தனை காத்திரமானதாக இல்லை என்கிறார்கள் சமூக செயற்பாட்டாளர்கள்.

இதேவேளை ஊசிமூலம் போதைப்பொருளை கையில் நாளத்தினூடாக ஏற்றி பாவித்தன் மூலம் பாதிக்கப்பட்ட பருத்தித்துறையை சேர்ந்த 14 வயது பாடசாலை மாணவன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

சமூகத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு தொடர்பில் தமிழ்தேசிய தலைவர்கள் சின்ன அழுத்தத்தை கூட வழங்குவதில்லை என அண்மையில் தேசம் திரை நேர்காணலில் ஊடகவியலாளர் தமிழ்செல்வன் குற்றஞ்சாட்டியிருந்தார். கண்முன்னே எதிர்கால தலைமுறையினர் போதைப்பொருள் பாவனையால் அழிந்து போவதை தடுக்க திராணியற்ற இந்த தலைவர்கள் தமிழ்தேசியம் என்ற பெயரால் பெறப்போகும் நிலத்தில் வாழ யாரும் மிஞ்சியிருக்க மாட்டார்கள் எனவும் தமிழ்செல்வன் விசனம் வெளியிட்டிருந்தார்.

தைப்பூசத்திலிருந்து திக்கம் வடிசாலை இயங்கும் – அமைச்சர் சந்திரசேகரன் 

தைப்பூசத்திலிருந்து திக்கம் வடிசாலை இயங்கும் – அமைச்சர் சந்திரசேகரன்

யாழ்ப்பாணம்-வடமராட்சி திக்கம் வடிசாலை எதிர்வரும் தைப்பூச நாளிலிருந்து இயங்கும் என பனை அபிவிருத்தி சபை தலைவர் சகாதேவன், மற்றும் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் சந்திரசேகரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

திக்கம் வடிசாலையை மீள இயங்குவது தொடர்பான கலந்துரையாடலானது திக்கம் வடிசாலையில் பனை தென்னை வள கூட்டுறவு சங்க கொத்தணி தலைவர் தலைமையில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இதன் போது அவர்கள் தெரிவித்துள்ளதாவது, இறுதியாக பனை அபிவிருத்தி சபை தலைவராகவிருந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நபர் பல கோடி ரூபா பணத்தை கையூட்டாக பெற்று தனியார் நிறுவனம் ஒன்றிற்கு 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளார்.

அந்த குத்தகை இரத்து செய்யப்படும். பனை அபிவிருத்தி சபை இவ்வாண்டு முதல் பனை தென்னை வள அபிவிருத்தி சங்கங்களிடம் கையளிக்கப்படும். அங்கு இடம்பெற்ற ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். என்றனர்

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார் !

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார் !

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் தனது 75ஆவது வயதில் காலமானார். அச்சமற்ற செய்தி அறிக்கையிடல் மற்றும் கூர்மையான வர்ணனைக்கு பெயர் பெற்ற இவர், “ராவய” பத்திரிகை தொடங்கப்பட்டதிலிருந்து தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணியாற்றினார்.

விக்டர் ஒரு புலனாய்வு பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர், கோட்பாட்டாளர், சமூக ஆர்வலர் மற்றும் பல புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

1971 இளைஞர் கிளர்ச்சி தொடர்பான பிரதான நீதிமன்ற வழக்கில் அவர் 7ஆவது குற்றவாளியாக இருந்தார். சந்தேகத்துக்குரிய அனைத்து பிரதிவாதிகளிலும் மிகவும் வண்ணமயமான நபர் என்று நீதிபதிகள் குழு அவரை விவரித்தது. விசாரணையின் முடிவில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சிறைவாசத்தினை தொடர்ந்து வன்முறைக் கோட்பாட்டை நிராகரித்த அவர், மகாத்மா காந்தி விளக்கிய அகிம்சை தத்துவத்தை ஏற்றுக்கொண்டு அதனை தீவிரமாகப் பின்பற்றுபவராக மாறினார்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியமும் இலவச உணவும் இரத்து! 

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியமும் இலவச உணவும் இரத்து!

நாட்டை வங்குரோத்துக்கு தள்ளியவர்கள் செல்வந்த நாட்டை எங்களிடம் ஒப்படைத்ததை போன்று இன்று பேசுகிறார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விசனம் வெளியிட்டுள்ளார். களுத்துறை – கட்டுகுருந்தவில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துள்ளதால் மோசடியாளர்கள் தற்போது திணறுகிறார்கள். தமக்கு இணக்கமான ஊடகங்களில் புலம்புகிறார்கள். இவர்கள் இன்னும் 2 தசாப்தங்கள் அழ வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்யும் சட்டமூலத்தை வெகுவிரைவில் பாராளுமன்றத்துக்கு கொண்டு வருவேன். பாராளுமன்றத்தில் உணவு பெறுவதாயின் அதற்குரிய கட்டணத்தை செலுத்த வேண்டும். ஒரு வேளை உணவுக்கு 2000 ரூபாய் செலவாகுமாயின் உறுப்பினர்கள் 2000 ரூபாவை செலுத்த வேண்டும். இன்னும் ஓரிரு நாட்களில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பொருளாதார ரீதியில் பலமடைந்த நாட்டை நாங்கள் பொறுப்பேற்கவில்லை. வங்குரோத்து நிலையடைந்த நாட்டையே நாங்கள் பொறுப்பேற்றோம். நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் இன்று செல்வந்த நாட்டை எங்களிடம் ஒப்படைத்ததை போன்று பேசுகிறார்கள். இந்த நாட்டை மீண்டும் வங்குரோத்து நிலையடைவதற்கு இடமளிக்க போவதில்லை என்றார்.

மன்னார் இரட்டைக் கொலை – யாழ் நகைக் கடைக் களவு – இராணுவ சிப்பாய்கள் கைது !

மன்னார் இரட்டைக் கொலை – யாழ் நகைக் கடைக் களவு – இராணுவ சிப்பாய்கள் கைது !

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாய் உட்பட மூவர் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் யாழில் இடம் பெற்ற நகைக்கடைக் கொள்ளையிலும் இராணுவ சிப்பாய்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்னளர்.

மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை வழக்கு கடந்த வியாழக்கிழமை 16ம் திகதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. விசாரணைகளுக்காக சென்ற சந்தேக நபர்கள் மூவர் உட்பட்ட நான்கு நபர்கள் மீது நீதிமன்றத்திற்கு முன் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்தனர். இதையடுத்து இடம்பெற்ற விசாரணையில் சந்தேக நபரான இராணுவ சிப்பாய் பேசாலை நடுக்குடா பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக மன்னார் கொலைக்குப் பின்னனியிலுள்ளவர் வெளிநாட்டில் இருப்பதாக கொழும்பில் பொலிஸ் திணைக்களம் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் கடந்த வியாழக்கிழமை 16ம் திகதி இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பிலும் இரண்டு இராணுவச் சிப்பாய்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் கஸ்தூரியர் வீதியில் உள்ள நகைக் கடைக்குள் புகுந்து தம்மை புலனாய்வுப் பிரிவினர் என அடையாளப்படுத்திய குழுவொன்று 30 லட்சம் ரூபாவை அபகரித்து சென்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளால் கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் கடை உரிமையாளரிடம் இருப்பதாக கூறியே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் கடை உரிமையாளர் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது. இதில் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த இரண்டு சிப்பாய்கள் மற்றும் காப்புறுதி நிறுவனமொன்றின் மாவட்ட முகாமையாளர் உட்பட இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று முன்தினம்(18) கைது செய்யப்பட்டுள்ளனர்.

அறுகம்பே தாக்குதல் திட்ட சூத்திரதாரிகள் முன்னாள் புலிகள் : சிஐடி புனைகிறதா? புலனாய்வு செய்கிறதா?

அறுகம்பே தாக்குதல் திட்ட சூத்திரதாரிகள் முன்னாள் புலிகள் : சிஐடி புனைகிறதா? புலனாய்வு செய்கிறதா?

அறுகம்பே தாக்குதலில் சிறை வைக்கப்பட்ட புலிகளை முடிந்து விட முயற்சிப்பது புனைவே அல்லாமல் புலனாய்வு அல்ல என்றும் இது தமிழ் மக்களுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் உள்ள உறவை முறிப்பதற்கான திட்டமிட்ட செயல் எனவும் முன்னாள் விடுதலைப் புலிகள் பலர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையிடம் இருந்து வரும் கட்டளைகளுக்கே கட்டுப்பட்டுச் செயற்படுபவர்கள். அதனால் தான் தலைமைகள் அழிக்கப்பட்ட பின் மே 18க்குப் பின் ஒரு வெடிச்சத்தம் கூட அவர்கள் பக்கத்தில் இருந்து எழுப்பப்படவில்லை. இப்பொழுது அறுகம்பே தாக்குதலில் சம்பந்தப்பட்டவர் விடுதலைப் புலிக் கைதிகள் இருந்த சிறையில் இருந்தார் என்ற ஒரே காரணத்தை வைத்துக்குகொண்டு புனைவது புலனாய்வு அல்ல. தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற போராட்டம் நடந்துகொண்டிருக்கையில் இவ்வாறான செய்திகளை வெளியிடுவது சிங்கள மக்களைத் தூண்டிவிடவும் நாட்டின் சமாதானத்தை கேள்விக்கு உட்படுத்தவுமே.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் அறுகம்பே பகுதியில் வந்திருந்த இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளை குறி வைத்திருந்த தாக்குதல் திட்டச் சதியொன்று அம்பலமாகியிருந்தது. இதன் பின்னணியில் அமெரிக்க தூதரகம் பயண எச்சரிக்கையும் விடுத்திருந்தது. இந்த தாக்குதல் சதித்திட்டம் தொடர்பில் முற் கூட்டியே எச்சரிக்கை கிடைத்ததால், இத்திட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் கைதோடு இத்திட்டம் முறியடிக்கப்பட்டது.

அறுகம்பே தாக்குதல் திட்டத்தின் திருப்பு முனையாக முன்னாள் புலிகளை இவ்விடயத்தில் சிஐடியினர் இழுத்து விட்டுள்ளனர். அதன்படி பல ஆண்டுகளாக சிறையிலிருந்து விடுதலையான முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களை பயன்படுத்தியே அறுகம்பே தாக்குதலை நடத்த திட்டமிட்டதாக சிஐடியினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். அதற்காக அறுகம்பே பகுதியை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க ஆட்களை நியமித்ததாகவும் கூறப்படுகிறது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான பல வழக்குகளில் ஆஜரான பெயர் குறிப்பிட விரும்பாத வழக்கறிஞர் கூறும் போது இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் வழமையானவை என்கிறார். இந்த விடயத்தில் உண்மையான தாக்குதல் திட்ட சூத்திரதாரிகள் பாதுகாக்கப்படுகிறார்களோ எனவும் சந்தேகம் தெரிவித்தார்.

அறுகம்பே தாக்குதல் திட்டம் தொடர்பில் இது வரை ஏழு பேர் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு, பயங்கரவாத தடுப்பு புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். ஜனவரி 17 ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் யோகராஜா நிரோஜன், சுரேஷ் ரஞ்சன மற்றும் டபிள்யூ ஏ. தொன் அமரசிறி ஆகியோர் முற்படுத்தப்பட்டனர்.

சந்தேக நபர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி ரஜிந்த கந்தேகெதர சிஐடியினர் முதலாவது சந்தேகநபரிடமிருந்து பல ஆவணங்களில் கையொப்பம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டினார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களிடமிருந்து கடும்சித்திரவதை மூலம் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் கையொப்பம் வாங்கியே வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறு கட்டாய ஒப்புதல் வாக்குமூலம் குற்றவாளி என குற்றம் சுமத்தப்பட்ட பலர் நீதிமன்றங்கள் மூலம் இலங்கையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இத்தாக்குதல் திட்டத்தின் முதல் சந்தேக நபரான பிலால் அகமது 2008 ஆம் ஆண்டு கெஸ்பேவ பேருந்து குண்டுவெடிப்பில் கைதாகி சிறையில் உள்ள ஆனந்தன் சுகதரனுடன் சிறையில் இருந்ததாகவும் கூறும் சிஐடியினர், ஏனவே சிறையிலிருந்த முன்னாள் விடுதலைப் புலிகளை இத்திட்டத்திற்கு பயன்படுத்த உத்தேசித்திருந்தாக கூறுகின்றனர்.

2009 விடுதலைப் புலிகள் மௌனிக்கப்பட்ட பின் ஆங்காங்கே முன்னாள் புலி உறுப்பினர்களை அல்லது புலிகளுக்கு வேலை செய்தவர்களை இந்திய, இலங்கை மற்றும் பன்னாட்டு உளவு அமைப்புகள் தத்தம் நலன்களுக்கு பயன்படுத்தி வருகின்றமையும் மறுப்பதற்கில்லை. முன்னாள் புலி பல குழுக்களாக புலத்திலும் நாட்டிலும் பிரிந்து நின்று செயற்படுகிறார்கள். புலிகளின் தலைவர் பிரபாகரன் வருகிறார், துவாரகா வந்து விட்டா, தலைவர் இல்லை, தலைவரைப் பார்த்தேன் என பல குழப்பங்களும் கேலிக்கூத்துக்களும் நிகழ்ந்து வருகின்றன.

 

அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் – சித்திரை வரை காலக்கெடு !

அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் – சித்திரை வரை காலக்கெடு !

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்காவிடில் வடக்கு – கிழக்கை ஸ்தம்பிக்க வைக்கக்கூடிய ஒரு அறவழிப் போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். நெல்லியடி பொதுச் சந்தை முன்பதாக முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டத்தின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் தற்போதைய நீதி அமைச்சர், அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என்று தெரிவித்துள்ளமை மிகவும் மோசமானது. தமிழ் அரசியல் கைதிகளில் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும். தண்டனை விதிக்கப்படாதவர்களை விடுதலை செய்ய முடியும்.

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் , வடக்கு, கிழக்கை ஸ்தம்பிக்க வைக்கக்கூடிய ஒரு அறவழிப் போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்க வேண்டும் என்றார்.