யாழ்ப்பாண மாணவர்களிடையே வேகமெடுக்கும் போதைப்பொருள் பாவனை – மௌனம் காக்கும் கற்ற சமூகம் !
யாழ்ப்பாண நகர்ப்புற பாடசாலைகள் தொடங்கி பல பகுதிகளிலும் ஊசி உள்ளிட்ட போதைப்பொருள் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் இது தொடர்பில் யாழ்ப்பாண உயர் மட்ட அதிகாரிகள் தொடங்கி சமூக செயற்பாட்டாளர்கள் வரை யாரும் கவனம் செலுத்த முனைவதில்லை எனவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
அண்மையில் யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் இரு மாணவர்கள் அதீத போதையுடன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். மாணவர்கள் இருவரும் போதை மாத்திரைகளை உட்கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்தது.
வாட்ஸ் அப் செயலி ஊடாக மாணவர்களை உள்ளடக்கிய குழுக்கள் ஊடாக போதை மாத்திரை விநியோகங்கள் நடைபெற்று வருவதாக யாழில் பரவலான குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றது. எனினும் இவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான பொலிஸாரின் நடவடிக்கைகள் அத்தனை காத்திரமானதாக இல்லை என்கிறார்கள் சமூக செயற்பாட்டாளர்கள்.
இதேவேளை ஊசிமூலம் போதைப்பொருளை கையில் நாளத்தினூடாக ஏற்றி பாவித்தன் மூலம் பாதிக்கப்பட்ட பருத்தித்துறையை சேர்ந்த 14 வயது பாடசாலை மாணவன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
சமூகத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு தொடர்பில் தமிழ்தேசிய தலைவர்கள் சின்ன அழுத்தத்தை கூட வழங்குவதில்லை என அண்மையில் தேசம் திரை நேர்காணலில் ஊடகவியலாளர் தமிழ்செல்வன் குற்றஞ்சாட்டியிருந்தார். கண்முன்னே எதிர்கால தலைமுறையினர் போதைப்பொருள் பாவனையால் அழிந்து போவதை தடுக்க திராணியற்ற இந்த தலைவர்கள் தமிழ்தேசியம் என்ற பெயரால் பெறப்போகும் நிலத்தில் வாழ யாரும் மிஞ்சியிருக்க மாட்டார்கள் எனவும் தமிழ்செல்வன் விசனம் வெளியிட்டிருந்தார்.