வீடும் நாடும் சுத்தமாக இருக்க வேண்டும்: ஜனாதிபதி அனுரவின் கிளீன் ஶ்ரீ லங்கா திட்டத்திற்கு தமிழரசின் ஸ்ரீநேசன் !
இனவாதம், மதவாதம், மொழிவாதம் மற்றும் பிரதேசவாதம் ஆகியவற்றால் நாடு அசுத்தமாக்கப்பட்டு உள்ளது. இவை கடந்த காலங்களில் தேர்தல் பிரச்சாரமாக காணப்பட்டது. ஆனால் தற்போது அவை தோல்வியடைந்துள்ளது. சுத்தமான நாட்டை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமாயின், சுத்தமான வீட்டை விரும்பும் கட்சிக்காரர்கள் என்ற வகையில் அதை ஆதரிக்க தயாராக இருக்கிறோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஞானமுத்து ஸ்ரீநேசன் மேலும் உரையாற்றிய போது, கிளீன் ஶ்ரீ லங்கா என்ற எண்ணக்கரு சிறந்த விடயமாகும். வீட்டை சுத்தமாக வைத்திப்பதற்கு நாம் விரும்புவதை போன்று நாட்டை சுத்தமாக வைத்திருக்கவும் விரும்புகின்றோம். அந்த வகையில் இந்த கிளீன் ஶ்ரீலங்கா திட்டம் நல்ல விடயமே. எமது நாடு இலஞ்சம், ஊழல், மோசடி, திருட்டு மற்றும் குற்றச்செயல்கள் என பல முறையற்ற செயற்பாடுகளினால் சூழ்ந்துள்ளது. கடந்த 77 வருடங்களாக நாட்டை ஆட்சி செய்தவர்கள் நாட்டில் சுத்தத்தை ஏற்படுத்தவில்லை என்பது கிளீன் ஶ்ரீலங்கா என்ற திட்டத்தின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது.
இதனால் தூய்மையான விடயங்களை நாங்கள் ஆதரித்தே ஆக வேண்டும். ஊழல், மோசடி, திருட்டு மற்றும் வீண் விரயம் இல்லாத நாட்டை உருவாக்குவதற்கு அனைவரும் விரும்புவர் என்றே நம்புகின்றோம். என அவர் தெரிவித்தார்.