“நான் கனக்கப் பார்த்திருக்கிறேன், நான் மகிந்த ராஜபக்ச என்பதை ஜனாதிபதி அநுர மறந்து விடுகிறார்” முன்னாள் ஜனாதிபதி மகிந்த
ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை 4.6 மில்லியன் வாடகையுடைய அரசாங்க வீட்டிலிருந்து கிளப்ப அறிவித்தல் வழங்கப்பட்டுவிட்டது. இது தென்னிலங்கை அரசியல் பரப்பில் பாரிய வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளது.
இந்நிலையில் , இது தொடர்பில் பதிலளித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, “நான் மகிந்த ராஜபக்ச என்பதை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மறந்து விடுகிறார். நான் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன். அரசியல் பழிவாங்கல் முதல் துன்புறுத்தல் வரை, எனது அரசு இல்லம் என்னிடமிருந்து பறிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி நினைத்தால், நான் வெளியேறத் தயாராக இருக்கிறேன். அவர் எனக்கு எழுத்துப்பூர்வ கோரிக்கையை அளிக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகை குறைப்பு மற்றும் பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பில் மகிந்த ராஜபக்ச தரப்பினருக்கும் – என்.பி.பி தரப்பினருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டிருந்தன.
எனினும் இவை தொடர்பில் பாராளுமன்றத்தில் பதிலளித்திருந்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் “எச்சரிக்கைகள் தேவைப்படும் விஷயங்களில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட வேண்டும். சிலர் இதை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு, அரசாங்கம் கடுமையான முடிவுகளை எடுக்க இயலாது என்று காட்டுகிறார்கள். நாங்கள் கடுமையான முடிவுகளை எடுக்க முடியும்,” என்று கூறியிருந்தார்.