09

09

பெரும்போகத்திற்கான உர மானியமாக 25000 ரூபா – பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

பெரும்போகத்திற்கான உர மானியமாக 25000 ரூபா மற்றும் பொட்டாசியம் உரத்தை இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கென உர மானியத்தை வழங்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்ற விவாதத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திற்குமென உர மானியத்தை வழங்குவதற்கான கால எல்லை 2024 ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து 2025 பெப்ரவரி முதலாம் திகதி வரையாகும். இதற்கென 25000 ரூபா உர மானியம், 15000 ரூபா மற்றும் 10000 ரூபா என்ற தவணை அடிப்படையில் இரு கட்டங்களாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்

தற்போது 15000 ரூபா முதல் தவணை வழங்கப்பட்டுள்ளதுடன் விவசாயிகளின் உரத் தேவையை பூர்த்தி செய்வதற்காக சாதகமான மற்றும் உரிய செயன்முறையை முன்னெடுப்பதற்கு எமது அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதற்கென விவசாய அமைப்புகளிடமிருந்து கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கையும் இடம்பெறுவதாக பிரதமர் தெரிவித்தார்.

மேலும் வயல் காணிகளில் நெற் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கென வழங்கப்படும் நிதி நிவாரணத்திற்கு மேலதிகமாக 25000 தசம் ஏழு மூன்று மெட்ரிக் தொன் அளவிலான மியுரியேட் ஒப் பொடேஷ் உரத்தை அரசினால்; இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய குறிப்பிட்டார்.

அரசாங்க பணியாளர்களின் நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன்

அரசாங்க பணியாளர்களின் நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் ஊடாக மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

‘கிளீன் சிறிலங்கா’ திட்டம் தொடர்பில் வடக்கு மாகாண அலுவலர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு வடக்கு மாகாண பிரதம செயலர் அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று (09) காலை நடைபெற்றது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலர்  சாரதாஞ்சலி மனோகரன் கலந்துகொண்டு, ‘கிளீன் சிறிலங்கா’ வேலைத்திட்டம் தொடர்பான விரிவான விளக்கங்களை வழங்கியதுடன், அரசாங்க அலுவலர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

அதன் பின்னர் உரையாற்றிய வட மாகாண ஆளுநர், ‘கிளீன் சிறிலங்கா’ வேலைத்திட்டம் கௌரவ ஜனாதிபதியால் தொடக்கி வைக்கப்பட்டது என்பதையும் இந்த அரசாங்கத்தின் அந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு என்றும் குறிப்பிட்டார்.

மக்களின் சேவைகளை விரைவாகவும் தரமாகவும் அன்பாகவும் வழங்குவது அரச பணியாளர்கள் ஒவ்வொருவரினதும் பொறுப்பு எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், அந்த மாற்றத்தை அரச பணியாளர்களின் நடத்தையில் ஏற்படுத்துவதன் ஊடாக செய்ய முடியும் என்று குறிப்பிட்டார்.

மேலும், இந்த நடத்தை மாற்றங்கள் உடனடியாக செய்யக்கூடியவை எனக் குறிப்பிட்ட ஆளுநர், 2025ஆம் ஆண்டினை வட மாகாணத்தில் இந்த மாற்றங்களை ஏற்படுத்தும் ஆண்டாக மாற்றுவோம் என்றார்.

கஜா தேவையில்லை என்கிறார் ஆனால் 13ஆவது திருத்தமும் – மாகாணசபையும் இல்லாத தீர்வை நாம் ஏற்க மாட்டோம் – ரெலோ

கஜா தேவையில்லை என்கிறார் ஆனால் 13ஆவது திருத்தமும் – மாகாணசபையும் இல்லாத தீர்வை நாம் ஏற்க மாட்டோம் – ரெலோ அமைப்பின் லண்டன் பிரதிநிதி சாம் சம்பந்தன்

 

 

 

கமலா முதல் அனிதா வரை வட அமெரிக்க அரசியலில் கலக்கும் தமிழ்ப் பெண்கள்

கமலா முதல் அனிதா வரை வட அமெரிக்க அரசியலில் கலக்கும் தமிழ்ப் பெண்கள்

உலகின் சக்தி வாய்ந்த நாடுகளாக கருதப்படுகிற அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளின் அதியுயர் அரச தலைமைப் பதவிகளை பெறும் போட்டியில் இடம்பெறுவதே மிகச் சவாலான காரியம்.

அப்படியிருக்க அமெரிக்காவில் தமிழகத்தையும் தமிழையும் பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரீஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருப்பதும், க‌ட‌ந்த 2024 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கியமையும் குறிப்பிடத்தக்கதாகும். கமலா அமெரிக்காவில் வீசிய வெளிநாட்டவர்களுக்கு எதிரான தீவிர வலதுசாரி அலையால் வெற்றி வாய்ப்பை தவற விட்டிருந்தார். ஆனாலும் பிற்போக்குவாத கடும்போக்கு வலதுசாரியான டொனால்ட் ரம்புக்கு கமலா கடும் எதிர் போட்டியாளராக திகழ்ந்தார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

அதேபோன்று கனடாவின் நடப்பு பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் லிபறல் கட்சியானது பொதுத் தேர்தலுக்கு செல்ல முன்னர் கட்சியின் புதிய தலைமைக்கான தேடலில் ஈடுபட்டுள்ளது. லிபரல் கட்சியின் புதிய தலைவர் பதவிக்கு பலருடைய பெயர்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.

அதில் முன்னாள் துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் முதல் வெளியுறவுத் துறை அமைச்சர் மெலனி ஜோலி மற்றும் தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் அனிதா ஆனந்த் வரையிலான மூன்று பேருமே போட்டியில் முன்னிலை வகிக்கின்றனர். லிபறல் கட்சியின் தலைமைப் பதவியை யார் கைப்பற்றுவார்களோ அவர்களே லிபறல் கட்சி சார்பாக பிரதம வேட்பாளராக போட்டியிடுவர்.

 

57 வயதாகும் அனிதா ஆனந்த் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அனிதாவின் தந்தை தமிழகத்தைச் சேர்ந்தவர் எனவும் தாயார் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. இவரது பெற்றோர் நைஜீரியாவிலிருந்து கனடாவில் குடியேறியவர்கள். ஒக்ஸ்போர்ட் மற்றும் குயின்ஸ் பல்கலைக்கழக பட்டதாரியான இவர் கனடாவிலும் தன்னுடைய பட்டப்படிப்பை தொடர்ந்துள்ளார். 2019 இல் அரசியலுக்கு வந்த அனிதா ஆனந்த் லிபறல் கட்சி தலைமையிலான அரசாங்கத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புக்களை வகித்துள்ளார்.

தன்னை முதலாவது கனடாவின் இந்து பாராளுமன்ற பெண் உறுப்பினர் என பெருமிதத்துடன் குறிப்பிடும் அனிதா ஆனந்த், கட்சித் தலைமைப் பதவியை கைப்பற்றி பிரதமர் வேட்பாளரானால் அவரே கனடாவின் அதிஉயர் பதவியக்குப் போட்டியிடும் முதலாவது தமிழ் பூர்வீக பெண் ஆவார். எவ்வாறெனினும் இடம்பெறப் போகும் கனடா பொதுத்தேர்தலில் அனிதா ஆனந்த் அங்கம் வகிக்கும் லிபறல் கட்சி மண்ணை கவ்வும் என அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். கமலா ஹாரீஸ்சும் சரி அனிதா ஆனந்தும் சரி குடியேறிகளின் வாரிசுகளான இவர்கள் எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல் அரசியலுக்குள் துணிந்து வந்தவர்கள். இவர்கள் இருவருமே அரசியலில் பெண்களுக்கு முன்மாதிரிகளாக இருக்கின்றார்கள்.

ஒடுக்குமுறையைச் சந்தித்து அதுக்கு எதிராக உயிரையும் துச்சமென மதித்துப் போராடிய தமிழ் பெண்களுக்கு தமிழ் தேசியக் கட்சிகள் வெல்லக் கூடிய ஒரு ஆசனத்தைக் கூடக் கொடுக்கவில்லை. ஆனால் சர்வதேச அரங்கில் பிரித்தானியாவில், அமெரிக்காவில், கனடாவில் என தமிழ் பெண்கள் களமிறங்கி ஆண்களைக் காட்டிலும் மிகத் திறமையாக அரசியலை முன்னெடுக்கின்றனர்.

அமெரிக்க அரசியல்: பணக்கார பையன்களின் கூட்டு அட்டகாசங்கள் !

அமெரிக்க அரசியல்: பணக்கார பையன்களின் கூட்டு அட்டகாசங்கள் !

பேஸ்புக் ஓனர் மார்க் ஸுகர்பெர்க் தனக்கு சொந்தமான “மெற்ரா” நிறுவனத்தின் கீழான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூகவலைத் தளங்களில் பயன்படுத்தப்படும் தகவல்களின் உண்மை தன்மையை கண்டறியும் செயல்முறையை நிறுத்தப்போவதாக பேஸ்புக் வீடியோ மூலம் அறிவித்துள்ளார். இதுபற்றி கூறும் மார்க் “இந்த முடிவானது கருத்துச் சுதந்திரத்தை தனது சமூக வலைத்தளங்களில் மீண்டும் அமுல்ப்படுத்தவே “ எடுக்கப்பட்டதாக கூறுகிறார். தகவல்களின் உண்மைத்தன்மையை சம்பந்தப்பட்ட சமூகவலைத்தளங்களை நிர்வகிக்கும் நிறுவனங்கள் ஆராய்வதை கருத்துச் சுதந்திரத்தின் மீதான தணிக்கை என விமர்ச்சிக்கின்றனர்.

குறிப்பாக அமெரிக்காவில் குடியரசுக் கட்சிவாதிகள் மற்றும் டொனால்ட் ரம்பை ஆதரிக்கும் தரப்பினர் ஏலவே சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்களின் உண்மைத்தன்மையை பரிசோதனை செய்யும் புறோகிறாம்ஸ்சை எதிர்த்து வந்தனர். இந்தவிடயத்தைப் பொறுத்தவரை கடும்போக்கு வலதுசாரியான இன்னொரு பணக்கார பையனான எலான் மஸ்க் தனக்கு சொந்தமான சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் ஆரம்பம் முதலே தகவல்களின் உண்மைத்தன்மையை சோதிக்கும் செயல்முறையை இல்லாதொழித்திருந்தார். அதற்குப் பதிலாக எக்ஸ் தளம் “சமூக குறிப்புக்கள் “( community notes) என்ற அம்சத்தை உருவாக்கியிருந்தது.

ஒப்பீட்டளவில் மெற்ரா அதனது சமூகவலைத்தளங்களில் குடியேறிகள் மற்றும் பாலினம் தொடர்பான விரோதக் கருத்துக்களை தணிக்கை செய்து வந்தது. தற்போது மார்க் ஸுகர்பெர்க் தான் அமெரிக்க நிறுவனங்களை தாக்கும் மற்றும் அதிக தணிக்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் அரசாங்கங்களுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப்புடன் இணைந்து செயற்படப்போவதாக அறிவித்துள்ளார். மறைமுகமாக மார்க் சாடுவது ஐரோப்பிய நாடுகளின் தனிநபர் உரிமைகளை பாதுகாக்கும் சட்டங்களையும் சமூக வலைத்தளங்களில் மீதான ஐரோப்பிய நாடுகளின் கட்டுப்பாடுகளையுமே என அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

மறுபுறம் பார்த்தால் மார்க் ஸுகர்பெர்க்கும் டொனால்ட் ரம்ப்பிற்கும் இடையிலான உறவு எப்போதுமே மோசமாகவே இருந்தது. இதன் விளைவாக டொனால்ட் ரம்ப்பின் பேஸ்புக் கணக்கு இரண்டு வருடங்களுக்கு மேல் இரத்து செய்யப்பட்டிருந்தது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ரம்ப் வெற்றியடைந்த பின்னர் மார்க் ஸுகர்பெர்க் உடனான உறவு மேம்பட்டு வந்தது. கடந்த வருடம் நவம்பரில் டொனால்ட் ரம்ப் மார்க்கை விருந்துபசாரத்திற்கும் அழைத்திருந்தார். அந்த வகையில் டொனால்ட் ரம்பின் பதவியேற்பு விழாவிற்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக அளிப்பதாக மார்க் ஸுகர்பெர்க் அறிவித்துள்ளார். இதனை எலான் மஸ்க்கும் வரவேற்றுள்ளார். இப்படியாக பணக்கார முதலாளிப் பையன்கள் ஏகாதிபத்திய அமெரிக்க ஆட்சியாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு உலகை ஆட்டிப்படைக்க விரும்புகிறார்கள்.

வடக்கில் ஐந்து தொழில் பேட்டைகள் – புலம்பெயர் தமிழர்களை அழைக்கின்றனர் யாழ் என்பிபி யினர் !

வடக்கில் ஐந்து தொழில் பேட்டைகள் – புலம்பெயர் தமிழர்களை அழைக்கின்றனர் யாழ் என்பிபி யினர் !

புலம்பெயர் தமிழர்கள் வடக்கில் முதலீடு செய்வது குறித்து ஆர்வத்துடன் உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, வைத்தியர் பவானந்தராஜா ஆகியோர் வெளிநாட்டு விவகார அமைச்சர் விஜித ஹேரத் அவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை பாரளுமன்ற அலுவலகத்தில் நடத்தியிருந்தனர். அதன் போதே யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இதன் போது வடக்கு மாகாணத்தில் ஐந்து தொழிற்பேட்டை நிலையங்களை அமைப்பதற்காக காணிகள் இனங்காணப்பட்டு உள்ளதாகவும் விரைவில் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். ஆர்வமுள்ளவர்கள் இலங்கை முதலீட்டு சபையின் ஊடாக தங்கள் செயற்திட்டங்களை முன்வைக்க முடியும் எனவும் விஜித ஹேரத் பதிலளித்தார்.

அதே போன்று நீண்ட காலமாக புலம்பெயர்ந்து நாட்டுக்கு வர முடியாது இருக்கும் தமிழர்கள், தாங்கள் நாட்டுக்கு வர விரும்புவது தொடர்பான ஆர்வத்தை பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி அமைச்சருக்கு தெரியப்படுத்தினார்.

இதேவேளை செய்வாய்க்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய பா.உ செல்வம் அடைக்கலநாதன் புலம்பெயர் தமிழ் மக்கள் இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பில் பேசிய போது பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறையிலிருப்பதானது புலம்பெயர் மக்களின் முதலீடுகளை இலங்கைக்கு கொண்டு வருவதில் பாரிய தடையாக உள்ளது என சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யூத வழிபாட்டு தலங்களிற்கு அரசு அனுமதி வழங்கவில்லை. விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் ! – பிரதமர் ஹரினி !

யூத வழிபாட்டு தலங்களிற்கு அரசு அனுமதி வழங்கவில்லை. விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் ! – பிரதமர் ஹரினி !

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, இஸ்ரேலின் தேசிய மத நிலையங்களையோ அல்லது அதற்கு நிகரான கட்டிடங்களையோ நிர்மாணிப்பதற்கு எந்தவொரு அரசாங்க நிறுவனமும் அனுமதி வழங்கவில்லை என தெரிவித்துள்ளார். அத்தோடு இவ்வாறான சட்டவிரோத கட்டிடங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டு இஸ்ரேலிய மத நிலையங்கள் அல்லது கலாச்சார நிலையங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் அவ்வாறான இடங்களில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பிய போதே பிரதமர் மேற்கண்டவாது தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் எவ்வித சட்டவிரோதச் செயல்களிலும் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார்.

இஸ்ரேலில் யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவத்தினர் இலங்கைக்கு குறிப்பாக அறுகம்பே பகுதிக்கு சுற்றுலாவருகின்றனர். இது தொடர்பில் யுத்தக்குற்றத்தில் ஈடுபட்ட ஒருவர் கொழும்பில் இருப்பதாகத் தேடப்பட்டு பின்னர் அவர் தப்பித்து விட்டதாகச் சொல்லப்பட்டது. விசா காலாவதியான பின்னரும் சில இஸ்ரேலியப் பயணிகள் தங்கியுள்ளார்கள் என்றும் இவர்கள் பொலிஸாரால் குடிவரவு அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டு மிரிஹான குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் ஹரினி நேற்று மாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 

பெரும்பான்மையின முதலாளித்துவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துக்கு இருக்கும் ஈரம் தமிழ் தேசியவாதிகளிடம் இல்லை காணவில்லை !

பெரும்பான்மையின முதலாளித்துவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துக்கு இருக்கும் ஈரம் தமிழ் தேசியவாதிகளிடம் இல்லை காணவில்லை !

ரோஹிங்கியா அகதிகளை உடனடியாக நாடு கடத்தும் மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபடுவதை அரசாங்கம் தவிர்க்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது, அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை இதற்கு பதிலளித்த பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் தமது அரசாங்கம் இந்த விவகாரம் குறித்து மியான்மர் அதிகாரிகளுடன் விவாதிக்கத் தொடங்கி உள்ளதாகவும், சட்ட நடவடிக்கைகளின் பின்னரே நாடு கடத்துவது சாத்தியமாகும் என்றும் கூறினார்.

எவ்வாறாயினும், இந்த முடிவு ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது, SJB இன் முஜிபுர் ரஹ்மான் மற்றும் ACMC தலைவர் ரிஷாத் பதியுதீன் உட்பட பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், அரசாங்கம் அதன் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு கோரியுள்ளனர். இந்த விடயத்தில் தமிழ் மக்களின் மனித உரிமைகள் பற்றிப் பேசும் தமிழ் தேசியக் கட்சிளின் பாராளுமன்ற உறுப்பினர்கள்இ மௌனம் காத்தனர். உலகின் எப்பாகத்திலும் ஒடுக்கப்பட்ட மகளுக்காக குரல்கள் எழும்புகின்ற போது ஏனோ தானோ என்று தங்களுக்கு சம்பந்தமேயில்லாத விடயமாகவே இவர்கள் நடந்துகொள்கின்றனர் தமிழ் தேசியக் கட்சிகள்.

ரோஹிங்கியா அகதிகள் விடயத்தில் தமிழ் மக்களும் ஒரு அகதிச் சமூகம் என்ற வகையில் எங்களுக்கு ஒரு தாரடமீகக் கடமைப்பாடு இருப்பது இந்த அரசியல்வாதிகளுக்குத் தெரிவதில்லை. இவர்கள் தமிழ் மக்கள் விடயத்தில் வலிந்து குரல் எழுப்புவது கனடிய வெள்ளையின பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் வாக்குகளுக்காக மனித உரிமை பேசுவது போன்றது. காஸா இனப்படுகொலை பற்றி கனடியர்களும் வாய்திறக்கமாட்டார்கள். தமிழ் தேசியக் கட்சிகளும் வாய் திறக்கமாட்டார்கள். பெரும்பான்மை முதலாளித்துவக் கட்சிக்கு இருக்கின்ற ஈரம் கூட தமிழ் தேசியம் பேசுபவர்களிடம் இல்லாது போனது தமிழ் மக்களின் சாபக்கேடு.

பாராளுமன்றம் தொடங்கி யாழ் பல்கலை வரை பாலியல் குற்றவாளிகள் !

பாராளுமன்றம் தொடங்கி யாழ் பல்கலை வரை பாலியல் குற்றவாளிகள் !
கடந்த சில வாரங்களாக நாடாளுமன்றத்தில் பணிபுரியும் சில பெண் ஊழியர்கள்இ பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக செய்திகள் வெளியாகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவிக்கையில், “மூத்த அதிகாரிகள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் பெண் ஊழியர்களை தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர். எனக்குக் கிடைத்த தகவலின்படி, சில சந்தேக நபர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், சிலருக்கு கட்டாய ஓய்வு அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் தகவல் அமைப்புகள் மற்றும் மேலாண்மைத் துறையின் மூத்த அதிகாரிகள் அங்குள்ள பெண் ஊழியர்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாக செய்திகள் வந்துள்ளன” என்றார்.
எனினும் முஜிபுர் ரஹ்மானின் கருத்துக்கு பதிலளித்த ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் எவையும் கிடைக்கப்பெறவில்லை எனவும் ஊகத்தின் அடிப்படையில் எந்த கருத்துக்களையும் முன்வைக்க வேண்டாம் எனவும் குறிப்பிட்டதனை அடுத்து சபை அமலி துமளியாகியது.
இதேவேளை அண்மையில் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய பல்கலைக்கழக மாணவிகள் மீது பாலியல் ரீதியான – பாலின ரீதியான துன்புறுத்தல்கள் இடம்பெறுவது பற்றியும் தனது விசனத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்திருந்தார்.
அண்மையில், யாழ் பல்கலைக்கழகத்தில் பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவம் பற்றிய இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு நடைபெற்றது . இதில் உரையாற்றிய துணைவேந்தர், பேராசிரியர் சி சிறிசற்குணராஜா, பால்நிலை வன்முறைகள் பல்கலைக்கழகங்களிலும் தலைதூக்கியுள்ளன. சில விரிவுரையாளர்கள் இரவு நேரங்களில் அவர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்புகின்றனர். இது சிக்கலான ஒரு பிரச்சினை எனவும் தெரிவித்திருந்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பாலியல் துஸ்பிரயோகங்கள், வன்முறைகளால் பெண்கள் தொடர்ந்தும் பாதிப்புள்ளாகி வருகின்றனர். ஆயினும் அவை தொர்பான முறையான விசாரனைகளோ, சட்ட ரீதியான நடவடிக்கைகளோ இடம்பெறுவதில்லை. இது தொடர்பில் தேசம்நெற் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வருகின்றது. இந்த பிரச்சனைகள் தொடர்பில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கவனம் செலுத்துமா என சமூக ஆர்வலர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.