கமலா முதல் அனிதா வரை வட அமெரிக்க அரசியலில் கலக்கும் தமிழ்ப் பெண்கள்
உலகின் சக்தி வாய்ந்த நாடுகளாக கருதப்படுகிற அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளின் அதியுயர் அரச தலைமைப் பதவிகளை பெறும் போட்டியில் இடம்பெறுவதே மிகச் சவாலான காரியம்.
அப்படியிருக்க அமெரிக்காவில் தமிழகத்தையும் தமிழையும் பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரீஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருப்பதும், கடந்த 2024 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கியமையும் குறிப்பிடத்தக்கதாகும். கமலா அமெரிக்காவில் வீசிய வெளிநாட்டவர்களுக்கு எதிரான தீவிர வலதுசாரி அலையால் வெற்றி வாய்ப்பை தவற விட்டிருந்தார். ஆனாலும் பிற்போக்குவாத கடும்போக்கு வலதுசாரியான டொனால்ட் ரம்புக்கு கமலா கடும் எதிர் போட்டியாளராக திகழ்ந்தார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
அதேபோன்று கனடாவின் நடப்பு பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் லிபறல் கட்சியானது பொதுத் தேர்தலுக்கு செல்ல முன்னர் கட்சியின் புதிய தலைமைக்கான தேடலில் ஈடுபட்டுள்ளது. லிபரல் கட்சியின் புதிய தலைவர் பதவிக்கு பலருடைய பெயர்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.
அதில் முன்னாள் துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் முதல் வெளியுறவுத் துறை அமைச்சர் மெலனி ஜோலி மற்றும் தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் அனிதா ஆனந்த் வரையிலான மூன்று பேருமே போட்டியில் முன்னிலை வகிக்கின்றனர். லிபறல் கட்சியின் தலைமைப் பதவியை யார் கைப்பற்றுவார்களோ அவர்களே லிபறல் கட்சி சார்பாக பிரதம வேட்பாளராக போட்டியிடுவர்.
57 வயதாகும் அனிதா ஆனந்த் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அனிதாவின் தந்தை தமிழகத்தைச் சேர்ந்தவர் எனவும் தாயார் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. இவரது பெற்றோர் நைஜீரியாவிலிருந்து கனடாவில் குடியேறியவர்கள். ஒக்ஸ்போர்ட் மற்றும் குயின்ஸ் பல்கலைக்கழக பட்டதாரியான இவர் கனடாவிலும் தன்னுடைய பட்டப்படிப்பை தொடர்ந்துள்ளார். 2019 இல் அரசியலுக்கு வந்த அனிதா ஆனந்த் லிபறல் கட்சி தலைமையிலான அரசாங்கத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புக்களை வகித்துள்ளார்.
தன்னை முதலாவது கனடாவின் இந்து பாராளுமன்ற பெண் உறுப்பினர் என பெருமிதத்துடன் குறிப்பிடும் அனிதா ஆனந்த், கட்சித் தலைமைப் பதவியை கைப்பற்றி பிரதமர் வேட்பாளரானால் அவரே கனடாவின் அதிஉயர் பதவியக்குப் போட்டியிடும் முதலாவது தமிழ் பூர்வீக பெண் ஆவார். எவ்வாறெனினும் இடம்பெறப் போகும் கனடா பொதுத்தேர்தலில் அனிதா ஆனந்த் அங்கம் வகிக்கும் லிபறல் கட்சி மண்ணை கவ்வும் என அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். கமலா ஹாரீஸ்சும் சரி அனிதா ஆனந்தும் சரி குடியேறிகளின் வாரிசுகளான இவர்கள் எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல் அரசியலுக்குள் துணிந்து வந்தவர்கள். இவர்கள் இருவருமே அரசியலில் பெண்களுக்கு முன்மாதிரிகளாக இருக்கின்றார்கள்.
ஒடுக்குமுறையைச் சந்தித்து அதுக்கு எதிராக உயிரையும் துச்சமென மதித்துப் போராடிய தமிழ் பெண்களுக்கு தமிழ் தேசியக் கட்சிகள் வெல்லக் கூடிய ஒரு ஆசனத்தைக் கூடக் கொடுக்கவில்லை. ஆனால் சர்வதேச அரங்கில் பிரித்தானியாவில், அமெரிக்காவில், கனடாவில் என தமிழ் பெண்கள் களமிறங்கி ஆண்களைக் காட்டிலும் மிகத் திறமையாக அரசியலை முன்னெடுக்கின்றனர்.