யூத வழிபாட்டு தலங்களிற்கு அரசு அனுமதி வழங்கவில்லை. விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் ! – பிரதமர் ஹரினி !
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, இஸ்ரேலின் தேசிய மத நிலையங்களையோ அல்லது அதற்கு நிகரான கட்டிடங்களையோ நிர்மாணிப்பதற்கு எந்தவொரு அரசாங்க நிறுவனமும் அனுமதி வழங்கவில்லை என தெரிவித்துள்ளார். அத்தோடு இவ்வாறான சட்டவிரோத கட்டிடங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டு இஸ்ரேலிய மத நிலையங்கள் அல்லது கலாச்சார நிலையங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் அவ்வாறான இடங்களில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பிய போதே பிரதமர் மேற்கண்டவாது தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் எவ்வித சட்டவிரோதச் செயல்களிலும் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார்.
இஸ்ரேலில் யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவத்தினர் இலங்கைக்கு குறிப்பாக அறுகம்பே பகுதிக்கு சுற்றுலாவருகின்றனர். இது தொடர்பில் யுத்தக்குற்றத்தில் ஈடுபட்ட ஒருவர் கொழும்பில் இருப்பதாகத் தேடப்பட்டு பின்னர் அவர் தப்பித்து விட்டதாகச் சொல்லப்பட்டது. விசா காலாவதியான பின்னரும் சில இஸ்ரேலியப் பயணிகள் தங்கியுள்ளார்கள் என்றும் இவர்கள் பொலிஸாரால் குடிவரவு அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டு மிரிஹான குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் ஹரினி நேற்று மாராளுமன்றத்தில் தெரிவித்தார்.