15

15

இலங்கை அரசாங்கம் ஒரே சீனா கொள்கையை ஆதரிக்கும் – ஜனாதிபதி அநுரகுமார

இலங்கை அரசாங்கம் ஒரே சீனா கொள்கையை ஆதரிப்பதாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிடம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

சீனாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க இன்று(15) அந்நாட்டு ஜனாதிபதியுடனான சந்திப்பின்போதே இதனைத் தெரிவித்தார்.

இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு சீனாவில் உள்ள மக்கள் மண்டபத்தில் அந்நாட்டு நேரப்படி மாலை 5:00 மணிக்கு நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின் போது, ​​இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,தெரிவிக்கையில் “சீனாவின் பொருளாதாரம், தொழில்துறை மற்றும் தொழில்நுட்பம், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மனித மேம்பாட்டில் அடைந்துள்ள மகத்தான முன்னேற்றத்தில் இலங்கை மிகவும் மகிழ்ச்சியடைகிறது. எமது அரசாங்கம் இருதரப்பு மற்றும் பலதரப்பு உட்பட அனைத்து துறைகளிலும் ஒரே சீனா கொள்கையை ஆதரிக்கிறது. பல தசாப்தங்களாக  இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சீனா முக்கிய பங்கு வகித்து வருகிறது, மேலும் இந்த விஜயம் நமது நாடுகள் மற்றும் மக்களின் பரஸ்பர செழிப்பை வலுப்படுத்தும் என்று நம்புகிறேன்.” என்றார்.

இதேவேளை அபிவிருத்தியின் புதிய யுகத்திற்காக இலங்கையுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் நெருங்கிய நட்பு நாடுகள் என்ற வகையில் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவை நினைவுகூர்ந்த சீன ஜனாதிபதி, எதிர்காலத்தில் இலங்கையுடன் தொடர்ந்து ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

பழைய பல்லவியை  பாடாமல் தமிழ் அரசியல் கைதிகளை உடனேயே விடுவியுங்கள் – பா.உ. மனோ கணேசன்

“அரசியல் கைதிகள் இல்லை” என்ற பழைய பல்லவியை  பாடாமல் தமிழ் அரசியல் கைதிகளை உடனேயே விடுவியுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் நாடாளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளார்.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் கருத்து தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

“சிறையில் அரசியல் கைதிகள் இல்லை” என்ற கருத்தைத்தான் எப்போதும் எல்லா  சிங்கள பெரும்பான்மை அரசாங்கங்களிலும், எல்லா அமைச்சர்களும்  சொன்னார்கள். அரசாங்க தரப்பு அப்படிதான் சொல்வார்கள்.  அவர்களுக்கு “பயங்கரவாதி”. மக்களுக்கு “போராளி”. பாலஸ்தீனம் முதல் இலங்கை வரை, உலகம் முழுக்க போராட்டங்கள் நிகழ்ந்த நாடுகளில் இப்படி தான்.

இந்நாட்டில், 1971ல் தமிழ் இளைஞர் ஆயுதம் தூக்க முன்னமே ஆயுதம் தூக்கி பின்னர், 1989லும் ஆயுதம் தூக்கி ஜேவிபி போராட்டம் செய்த போது, கைதாகி சிறையில் இருந்த ஜேவிபி போராளிகளை, அன்றைய அரசாங்கம்,  “பயங்கரவாதிகள்” என்றது. ஆனால் ஜேவிபியினர், “இல்லை, அவர்கள் அரசியல் போராளிகள்” என்றார்கள்.

2015-2019 கால நமது நல்லாட்சியிலும் இடைக்கிடை ஓரிரு அமைச்சர்கள் இப்படி சொன்னார்கள்.  ஆனால் அன்றைய தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சராக இருந்து, அவர்களை கண்டித்து, அமைச்சரவைக்குள் அவர்களை புறந்தள்ளி, ஏனைய முற்போக்கு அமைச்சர்களுடனும், வெளியே தமிழ் தேசிய கட்சிகளுடனும் இணைந்து, கணிசமான தமிழ் அரசியல் கைதிகளை நாம் சத்தமில்லாமல் விடுவித்தோம். தமிழ் அரசியல்  கைதிகளை  அதிகமாக விடுவித்தது எமது நல்லாட்சி அரசாங்கம்தான். இதில் மாற்று பேச்சுக்கு இடமில்லை. இதனால்தான் இன்று வரை இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.

ஆனால், அன்று ஆயுத போராட்டம் செய்த ஜேவிபியே, இன்று இப்படி கூறுகிறது. “அரசியல் கைதிகள் இல்லை” என்று கூறி, அவர்களுக்கு பயங்கரவாதிகள் பட்டம் சூட்ட முனைகிறது. 1971ல், தமிழ் இளைஞர் ஆயுதம் தூக்க முன்னமே, ஆயுதம் தூக்கிய தமது அங்கத்தவர்களை அரசியல் போராளிகளாக அடையாளம் காணும் ஜேவிபி, கைதாகி சிறையில் உள்ள தமிழ் இளைஞர்களை, அரசியல் கைதிகள் இல்லை என்று கூறுகிறது. இந்த இரட்டை வேடம், இவர்களுக்கு இன்று வாக்களித்த செந்தமிழர்களுக்கு தான் வெளிச்சம்.

மேலும் “சிறையில் அரசியல் கைதிகள் இல்லை” என்று அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறுகிறார். இவர் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காராவின் தம்பி மகன். இன்றைய ஜேவிபி அரசில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர். அன்று அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கி போராடிய தமது கட்சி அங்கத்தவர்களை “அரசியல் போராளிகள்” என்று கூறிய ஜேவிபி, இன்று தமிழ் அரசியல் போராளி கைதிகளை “அரசியல் கைதிகள்” என அங்கீகரிக்க மறுக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்

நடைமுறைக்கு வருகிறது டிஜிட்டல் அடையாள அட்டைகள் ! 

நடைமுறைக்கு வருகிறது டிஜிட்டல் அடையாள அட்டைகள் !

இந்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் எரங்க , அடையாள அட்டைகளைப் பெறுவதில் ஏற்கனவே குறிப்பிடத்தக்க தாமதம் ஏற்பட்டுள்ளதால், அதனை நிவர்த்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் மேலும் டிஜிட்டல் அடையாள அட்டை முறையை உருவாக்குவதற்கு சுமார் 20 பில்லியன் ரூபா செலவாகும் என்பதால், அதில் பாதியை இந்தியாவின் உதவி மூலம் பெற எதிர்பார்ப்பதாகவும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தையும் – நிர்வாக நடவடிக்கைகளையும் டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கைகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மிக தீவிரமாக செயற்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் உள்ள சிறைகளில் அரசியல் கைதிகளென யாரும் இல்லை – அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார

இலங்கையில் உள்ள சிறைகளில் அரசியல் கைதிகளென யாரும் தடுத்து வைக்கப்படவில்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்ட அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, “ நாட்டில் உள்ள எந்தவொரு சிறைகளிலும் அரசியல் கைதிகள் என்றொருவரும் இல்லை என்பதை நான் முதலில் தெரிவித்துக்கொள்கின்றேன். பயங்கரவாத தடைச்சட்டம்

ஆனால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் உள்ளார்கள். அந்த வகையில், நாடாளவிய ரீதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டவர்களின் பட்டியலை விரைவாக தயாரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக இன,மத, மொழி பேதங்களுக்கு அப்பால் நியாயமாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதையே இலக்காக கொண்டிருக்கின்றது.”என ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதேவேளை போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரிய கையெழுத்து போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

தேர்தல் அறிவிப்பின் போதெல்லாம் உயிர் பெறுகிறது கஜா – கஜா குழுவினரின் தையிட்டி மீட்பு !

தேர்தல் அறிவிப்பின் போதெல்லாம் உயிர் பெறுகிறது கஜா – கஜா குழுவினரின் தையிட்டி மீட்பு !

 

யாழ்ப்பாணம், தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றக் கோரியும், அதனைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை மீளவும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மீண்டும் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தையிட்டி விகாரை கட்டி முடிக்கப்படும் வரை அமைதி காத்து பின்னர் திறப்பு விழா செய்யும் வரையும் அமைதி காத்துவிட்டு தற்போது முழுமையடைந்த விகாரையை இடிக்குமாறு முன்னணியினர் கோசம் போடுவது தேர்தல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது என நல்லிணக்க செயற்பாட்டாளர்கள் கூறி வருகின்றனர். முழுமையடைந்த விகாரையை மீண்டும் இடித்துவிடுங்கள் என முன்னணியினர் கூறுவது மீள ஓர் 1983 கலவரத்தை ஏற்படுத்தும் என கூறும் நல்லிணக்க அரசியலை விரும்பும் செயற்பாட்டாளர்கள் கஜா – கஜா குழுவினர் கனவு உலகத்தில் வாழ்வதாகவும் குறிப்பிடுகின்றனர்.

கட்டி முடிக்கப்பட்டு முழுமையடையும் வரை அமைதி காத்து பின்னர் விகாரையை இடியுங்கள் என கூறுதல், ஒற்றையாட்சியையும் – தேசிய கொடியையும் எதிர்ப்பதாக கூறிவிட்டு ஒரு நாட்டிற்குள் இருப்போம் என பாராளுமன்றத்தில் சத்திய பிரமாணம் செய்தல், மாகாண சபை முறையை எதிர்த்து நடை பவணி செய்து விட்டு மாகாண சபை தேர்தலிலேயே போட்டியிடுதல் என விதவிதமாக தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் முன்னணியினர் என முகஞ்சுழிக்கின்றனர் சமூக வலைத்தளவாசிகள்.

இதேவேளை அரசியல் லாபமீட்டும் விடயங்களில் மட்டும் தலைபோடும் முன்னணியின் கஜா குழுவினர் தமிழர் பகுதிகளில் உள்ள சமூக சீரழிவுகள் பற்றியும் வைத்திய – அரச அலுவலக மாபியாக்கள் பற்றி மறந்தும் வாய் திறப்பதில்லை என பரவலான குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

வெளிநாட்டு கடைகளுக்கு அடிமைகள் போல் வேலைக்கு செல்லும் தமிழ் இளைஞர்கள் ! 

தொழில் திறனுடன் வெளிநாடு செல்லும் சிங்கள முஸ்லீம் இளைஞர்கள் – வெளிநாட்டு கடைகளுக்கு அடிமைகள் போல் வேலைக்கு செல்லும் தமிழ் இளைஞர்கள் !

 

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து 6,000 முறைப்பாடுகளை அதிகாரிகள் பெற்றுக் கொண்டுள்ளதோடு அந்நிறுவனங்களின், உரிமங்களை இடைநிறுத்தல் மற்றும் சட்ட ரீதியாக வழக்குத் தொடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பதில் அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.

தற்போதும் நாளாந்தம் ஏராளமான முறைப்பாடுகள் கிடைகின்றன. அண்மைய காலத்தில் முறைப்பாடுகளுடன் தொடர்புடைய 6,000 நிறுவனங்களுக்கு எதிராக முறைப்பாடுகள் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளன என்றார்.

இதேவேளை யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் வெளிநாட்டு மோகம் அதிகரித்து வரும் நிலையில் லட்சங்கள் தொடங்கி கோடிகள் வரை கொடுத்து ஆயிரக்கணக்கானவர்கள் ஏமாந்து போயுள்ளனர் என யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்து வருகின்றனர். இதேவேளை பாடசாலை மாணவர்கள் தொடங்கி பல்கலைக்கழக இளைஞர்கள் வரை தமிழர் பகுதிகளில் வெளிநாட்டு மோகம் கல்வி நிலையையும் சீரழித்து வருவதாக கல்வி சமூகத்தினர் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.

வடக்கு இளைஞர்களின் வெளிநாட்டு மோகம் தொடர்பில் அண்மையில் தேசம் நெட்க்கு தெரிவித்த தொழில்கல்வி ஆசிரியர் ஒருவர், சிங்கள, முஸ்லீம் இளைஞர்களிடையேயும் வெளிநாட்டு மோகம் காணப்படுகின்றது. ஆனால் அவர்கள் அனைவருமே NVQ முறையில் அமைந்த தொழில்கல்விகளை கற்று தொழில் அறிவுடன் ஜப்பான், கொரியா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு நல்ல வேலைகளுக்கு செல்கின்றனர். நிம்மதியாக இருக்கிறார்கள்.

ஆனால் நமது தமிழ் இளைஞர்கள் – மாணவர்கள் அவ்வாறின்றி பாடசாலை கல்வியையும் இடைநிறுத்தி எந்த ஒரு தொழில் திறனும் இல்லாமல் அடிமைகள் போல் ஐரோப்பிய நாடுகளுக்கு தலைமறைவாக செல்ல ஏஜென்சிகளிடம் லட்சம் ரூபாய் தொடங்கி கோடி வரை கொடுத்து ஏமாறுகின்றனர். அங்கு தலைமறைவாக செல்வோரை ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழர்களும் தம் கடைகளில் இரகசியமாக வேலைக்கு அமர்த்தி உழைப்பை உறிஞ்சி விடுகின்றனர். சுருக்கமாக சொல்வதாயின் ஒரு காலத்தில் வெளிநாட்டவர்கள் அங்கிருந்து இங்கு வந்து நம்மை அடிமையாக்கினர் – தற்போது நாமே விரும்பி போய் அங்கு அடிமையாகி வேலை செய்ய ஆசைப்படுகின்றோம். வெளிநாட்டுக்கு செல்ல செலவழிக்கும் பல லட்சம் ரூபாய்களை இங்கு வைத்திருந்தாலே ஓர் புதிய தொழிலை தொடங்க முடியும் எனவும் குறித்த தொழில்கல்வி ஆசிரியர் தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல் கட்டாயம் நடக்கும் – ஆனால் ஊழலில் திளைத்த தமிழ் தேசியவாதிகள் ஆட்சியமைப்பார்களா என்பது தான் ஒரே கேள்வி ! 

மாகாண சபை தேர்தல் கட்டாயம் நடக்கும் – ஆனால் ஊழலில் திளைத்த தமிழ் தேசியவாதிகள் ஆட்சியமைப்பார்களா என்பது தான் ஒரே கேள்வி !

“13ஆவது திருத்தச்சட்ட விடயத்தில் எமது நிலைப்பாட்டை விடவும் தமிழ் மக்களின் நிலைப்பாடே முக்கியமானது.” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சென்னையில் தெரிவித்துள்ளார்.

அங்கு அமைச்சர் சந்திரசேகர் மேலும் தெரிவிக்கையில், 13ஆவது திருத்தச்சட்டத்தினை தமிழ் மக்கள் தமக்கு கிடைத்த உரிமையாக கருதுகின்ற நிலையில் அதில் கைவைப்பதற்கு நாங்கள் முனையவில்லை. 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக நாங்கள் என்ன கருதுகின்றோம் என்பதை விடவும் தமிழ் மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது தான் முக்கியமான விடயமாகும். என தெரிவித்தார்.

எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதனை உள்ளீர்த்திருந்தோம். அதுமட்டுமன்றி, 13ஆவது திருத்தச்சட்டம் நாட்டின் அடிப்படைச் சட்டமான அரசியலமைப்பிலும் காணப்படுகின்றது என குறிப்பிட்ட அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அந்த வகையில் எதிர்வரும் மார்ச் மாதமளவில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்தவுள்ளதோடு அதனையடுத்து இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் முற்பகுதியில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம். என குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல், மற்றும் மாகாண சபை தேர்தல் ஒருபுறமிருக்க தமிழ் தலைமைகள் மாகாண சபையை அனைத்து மக்களுக்கும் ஏற்றதாக நடாத்துவார்களா என்ற சந்தேகத்தை அரசியல் செயற்பாட்டாளர்கள் பலரும் எழுப்பி வருகின்றனர். குறிப்பாக கடந்த வடக்கு மாகாண சபை தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரான சி.வி விக்கினேஸ்வரன் உள்ளிட்ட குழுவினரின் நிர்வாகத்தில் ஊழல் மலிந்து போயிருந்ததது பலரையும் முகஞ்சுழிக்க வைத்திருந்தது அனைவரும் அறிந்ததே. இரணைமடு நீர்ப்பாசன திட்டத்தில் நடைபெற்ற ஊழல் தொடங்கி மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்கள் வரை அனைத்திலும் ஊழல் நடைபெற்றதாக ஆதாரங்கள் வெளியாகியிருந்தது. இது தவிர மக்களின் ஒப்புயர்வற்ற தலைவர் என தமிழ்தேசிய கூட்டமைப்பினர் பிரச்சாரம் செய்து முதலமைச்சராக்கிய சி.வி விக்கினேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பை உடைத்து துண்டாடியதும் – அதன் பின் பாராளுமன்ற ஆசனம் ஒன்றை பெற்றதும் – இதன் வழியாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து பார் லைசன்ஸ் பெற்றதுமே தமிழ் மக்களுக்கு எஞ்சியது.

இது ஒருபுறமிருக்க அரசியல் செயற்பாட்டாளரும் , சர்வ ஜன அதிகாரம் கட்சியின் யாழ் தேர்தல் மாவட்ட அமைப்பாளரான அருண் சித்தார்த் தொடர்ச்சியாக மாகாண சபை முறையை எதிர்த்து வருவதும் கவனிக்கத்தக்கது. இந்த வடக்கு மாகாண சபை அதிகாரமானது சாதிய கட்டமைப்பின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது என குறிப்பிடும் அருண் சித்தார்த் வடக்கு மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் அது ஒடுக்கப்பட்ட கீழ் சாதி என மேட்டுக்குடி கூறும் மக்களின் மீது தான் முதலாவது தாக்குதலை நடாத்தும் என குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை மாகாண சபை தேர்தலை மையப்படுத்தி பாராளுமன்ற தேர்தலில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தமிழ்தேசிய தலைமைகள் செயற்படுவதையும் அவதானிக்க முடிகிறது. குறிப்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன், சுமந்திரன் ஆகியோர் மாகாண சபை தேர்தலை வலியுறுத்தி வருவதை அவதானிக்க முடிகிறது. தேசிய மக்கள் சக்தியின் கட்சி அமைப்பானது தமிழர் பகுதிகளின் ஒவ்வொரு பிரதேசத்திலும் அதன் அடிமட்டம் வரை ஆழமாக வேரூன்றியுள்ள நிலையில் உள்ளூராட்சி சபை, மாகாண சபை தேர்தல்கள் தமிழ்தேசிய கட்சிகளுக்கு பாரிய சவாலாக அமையலாம் எனவும் சில நேரங்களில் என்.பி.பி ஆட்சி அமைத்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என அரசியல் செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டு வருவதும் கவனிக்கத்தக்கது.

கிளிநொச்சியில் கோயில் திருவிழாக்கள் போல நீதிமன்றங்களில் குவியும் தமிழர்கள் – குற்றவாளிகளுக்கு துணைபோகும் பொலிஸார் !

கிளிநொச்சியில் கோயில் திருவிழாக்கள் போல நீதிமன்றங்களில் குவியும் தமிழர்கள் – குற்றவாளிகளுக்கு துணைபோகும் பொலிஸார் !

கிளிநொச்சியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சமூக சீர்கேடுகளும் , போதைப்பொருள் பாவனை, வாள்வெட்டு கலாச்சாரம் என்பன மலிந்து போயுள்ளது என சூழலியல் செயற்பாட்டாளரும், ஊடகவியலாளருமான தமிழ்செல்வன் தேசம் திரை நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தமிழ்செல்வன் காடையர் கூட்டம் ஒன்றினால் தாக்கப்பட்டிருந்தார். குறித்த குழுவினர் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர். இந்த பிரச்சனைகள் தொடர்பில் தேசம் ஜெயபாலன் கேள்விகளை தமிழ்ச்செல்வனிடம் எழுப்பியிருந்தார். தன்னை தாக்கிய குழு பிணையில் வந்து அடுத்த இரு நாட்களில் மேலும் ஒரு வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டதையும் சுட்டிக்காட்டிய தமிழ்செல்வன் கிளிநொச்சியில் போதைப்பொருள் பாவனை, வாள்வெட்டு, கள்ளமரக்கடத்தல் மற்றும் ஐஸ்போதைப்போதைப்பொருள் பாவனை என்பன மலிந்து கண்முன்னே நமது எதிர்கால தலைமுறையினர் காணாமல் போவதாகவும் இந்த சமூக சீர்கேடுகள் பற்றி பேசவோ தடுக்கவோ எந்த தமிழ்தேசிய அரசியல்வாதிகளும் தயாரில்லை எனவும் சுட்டி காட்டினார்.

நானும் சமூக சீர்கேடுகள் பற்றி பேசாமல் தமிழ்தேசியம் பற்றி பேசி நூல் வெளியிட்டிருந்தால் தமிழ் தேசியவாதிகள் தன்னை கொண்டாடியிருப்பார்கள் என கூறும் ஊடகவியலாளர் தமிழ்செல்வன் கண்முன்னே அழிவடையும் தமது எதிர்கால சமூகத்தை பாதுகாக்க தவறினோம் என்றால் எதிர்காலத்தில் தமிழ்தேசியம் பெறவுள்ள நிலத்தில் யார் வாழப்போகிறார்கள்..? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிளிநொச்சியில் கோயில் திருவிழாக்களை போல மக்கள் நீதிமன்றங்களில் குவிந்து வழிவதாகவும் பொலிஸாரின் நடவடிக்கைகள் மக்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் இல்லை என விசனம் வெளியிட்ட ஊடகவியலாளர் தமிழ்செல்வன், பொலிஸார் குற்றவாளிகளை பாதுகாப்பதுடன் அரசியல்வாதிகள் கூட தமது சுயலாப அரசியலுக்காக குற்றச்செயல்களில் ஈடுபடவதாகவும் மக்கள் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.