மாகாண சபை தேர்தல் கட்டாயம் நடக்கும் – ஆனால் ஊழலில் திளைத்த தமிழ் தேசியவாதிகள் ஆட்சியமைப்பார்களா என்பது தான் ஒரே கேள்வி !
“13ஆவது திருத்தச்சட்ட விடயத்தில் எமது நிலைப்பாட்டை விடவும் தமிழ் மக்களின் நிலைப்பாடே முக்கியமானது.” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சென்னையில் தெரிவித்துள்ளார்.
அங்கு அமைச்சர் சந்திரசேகர் மேலும் தெரிவிக்கையில், 13ஆவது திருத்தச்சட்டத்தினை தமிழ் மக்கள் தமக்கு கிடைத்த உரிமையாக கருதுகின்ற நிலையில் அதில் கைவைப்பதற்கு நாங்கள் முனையவில்லை. 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக நாங்கள் என்ன கருதுகின்றோம் என்பதை விடவும் தமிழ் மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது தான் முக்கியமான விடயமாகும். என தெரிவித்தார்.
எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதனை உள்ளீர்த்திருந்தோம். அதுமட்டுமன்றி, 13ஆவது திருத்தச்சட்டம் நாட்டின் அடிப்படைச் சட்டமான அரசியலமைப்பிலும் காணப்படுகின்றது என குறிப்பிட்ட அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அந்த வகையில் எதிர்வரும் மார்ச் மாதமளவில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்தவுள்ளதோடு அதனையடுத்து இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் முற்பகுதியில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம். என குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல், மற்றும் மாகாண சபை தேர்தல் ஒருபுறமிருக்க தமிழ் தலைமைகள் மாகாண சபையை அனைத்து மக்களுக்கும் ஏற்றதாக நடாத்துவார்களா என்ற சந்தேகத்தை அரசியல் செயற்பாட்டாளர்கள் பலரும் எழுப்பி வருகின்றனர். குறிப்பாக கடந்த வடக்கு மாகாண சபை தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரான சி.வி விக்கினேஸ்வரன் உள்ளிட்ட குழுவினரின் நிர்வாகத்தில் ஊழல் மலிந்து போயிருந்ததது பலரையும் முகஞ்சுழிக்க வைத்திருந்தது அனைவரும் அறிந்ததே. இரணைமடு நீர்ப்பாசன திட்டத்தில் நடைபெற்ற ஊழல் தொடங்கி மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்கள் வரை அனைத்திலும் ஊழல் நடைபெற்றதாக ஆதாரங்கள் வெளியாகியிருந்தது. இது தவிர மக்களின் ஒப்புயர்வற்ற தலைவர் என தமிழ்தேசிய கூட்டமைப்பினர் பிரச்சாரம் செய்து முதலமைச்சராக்கிய சி.வி விக்கினேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பை உடைத்து துண்டாடியதும் – அதன் பின் பாராளுமன்ற ஆசனம் ஒன்றை பெற்றதும் – இதன் வழியாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து பார் லைசன்ஸ் பெற்றதுமே தமிழ் மக்களுக்கு எஞ்சியது.
இது ஒருபுறமிருக்க அரசியல் செயற்பாட்டாளரும் , சர்வ ஜன அதிகாரம் கட்சியின் யாழ் தேர்தல் மாவட்ட அமைப்பாளரான அருண் சித்தார்த் தொடர்ச்சியாக மாகாண சபை முறையை எதிர்த்து வருவதும் கவனிக்கத்தக்கது. இந்த வடக்கு மாகாண சபை அதிகாரமானது சாதிய கட்டமைப்பின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது என குறிப்பிடும் அருண் சித்தார்த் வடக்கு மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் அது ஒடுக்கப்பட்ட கீழ் சாதி என மேட்டுக்குடி கூறும் மக்களின் மீது தான் முதலாவது தாக்குதலை நடாத்தும் என குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை மாகாண சபை தேர்தலை மையப்படுத்தி பாராளுமன்ற தேர்தலில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தமிழ்தேசிய தலைமைகள் செயற்படுவதையும் அவதானிக்க முடிகிறது. குறிப்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன், சுமந்திரன் ஆகியோர் மாகாண சபை தேர்தலை வலியுறுத்தி வருவதை அவதானிக்க முடிகிறது. தேசிய மக்கள் சக்தியின் கட்சி அமைப்பானது தமிழர் பகுதிகளின் ஒவ்வொரு பிரதேசத்திலும் அதன் அடிமட்டம் வரை ஆழமாக வேரூன்றியுள்ள நிலையில் உள்ளூராட்சி சபை, மாகாண சபை தேர்தல்கள் தமிழ்தேசிய கட்சிகளுக்கு பாரிய சவாலாக அமையலாம் எனவும் சில நேரங்களில் என்.பி.பி ஆட்சி அமைத்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என அரசியல் செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டு வருவதும் கவனிக்கத்தக்கது.