தொழில் திறனுடன் வெளிநாடு செல்லும் சிங்கள முஸ்லீம் இளைஞர்கள் – வெளிநாட்டு கடைகளுக்கு அடிமைகள் போல் வேலைக்கு செல்லும் தமிழ் இளைஞர்கள் !
வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து 6,000 முறைப்பாடுகளை அதிகாரிகள் பெற்றுக் கொண்டுள்ளதோடு அந்நிறுவனங்களின், உரிமங்களை இடைநிறுத்தல் மற்றும் சட்ட ரீதியாக வழக்குத் தொடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பதில் அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.
தற்போதும் நாளாந்தம் ஏராளமான முறைப்பாடுகள் கிடைகின்றன. அண்மைய காலத்தில் முறைப்பாடுகளுடன் தொடர்புடைய 6,000 நிறுவனங்களுக்கு எதிராக முறைப்பாடுகள் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளன என்றார்.
இதேவேளை யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் வெளிநாட்டு மோகம் அதிகரித்து வரும் நிலையில் லட்சங்கள் தொடங்கி கோடிகள் வரை கொடுத்து ஆயிரக்கணக்கானவர்கள் ஏமாந்து போயுள்ளனர் என யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்து வருகின்றனர். இதேவேளை பாடசாலை மாணவர்கள் தொடங்கி பல்கலைக்கழக இளைஞர்கள் வரை தமிழர் பகுதிகளில் வெளிநாட்டு மோகம் கல்வி நிலையையும் சீரழித்து வருவதாக கல்வி சமூகத்தினர் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.
வடக்கு இளைஞர்களின் வெளிநாட்டு மோகம் தொடர்பில் அண்மையில் தேசம் நெட்க்கு தெரிவித்த தொழில்கல்வி ஆசிரியர் ஒருவர், சிங்கள, முஸ்லீம் இளைஞர்களிடையேயும் வெளிநாட்டு மோகம் காணப்படுகின்றது. ஆனால் அவர்கள் அனைவருமே NVQ முறையில் அமைந்த தொழில்கல்விகளை கற்று தொழில் அறிவுடன் ஜப்பான், கொரியா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு நல்ல வேலைகளுக்கு செல்கின்றனர். நிம்மதியாக இருக்கிறார்கள்.
ஆனால் நமது தமிழ் இளைஞர்கள் – மாணவர்கள் அவ்வாறின்றி பாடசாலை கல்வியையும் இடைநிறுத்தி எந்த ஒரு தொழில் திறனும் இல்லாமல் அடிமைகள் போல் ஐரோப்பிய நாடுகளுக்கு தலைமறைவாக செல்ல ஏஜென்சிகளிடம் லட்சம் ரூபாய் தொடங்கி கோடி வரை கொடுத்து ஏமாறுகின்றனர். அங்கு தலைமறைவாக செல்வோரை ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழர்களும் தம் கடைகளில் இரகசியமாக வேலைக்கு அமர்த்தி உழைப்பை உறிஞ்சி விடுகின்றனர். சுருக்கமாக சொல்வதாயின் ஒரு காலத்தில் வெளிநாட்டவர்கள் அங்கிருந்து இங்கு வந்து நம்மை அடிமையாக்கினர் – தற்போது நாமே விரும்பி போய் அங்கு அடிமையாகி வேலை செய்ய ஆசைப்படுகின்றோம். வெளிநாட்டுக்கு செல்ல செலவழிக்கும் பல லட்சம் ரூபாய்களை இங்கு வைத்திருந்தாலே ஓர் புதிய தொழிலை தொடங்க முடியும் எனவும் குறித்த தொழில்கல்வி ஆசிரியர் தெரிவித்தார்.