தேர்தல் அறிவிப்பின் போதெல்லாம் உயிர் பெறுகிறது கஜா – கஜா குழுவினரின் தையிட்டி மீட்பு !
யாழ்ப்பாணம், தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றக் கோரியும், அதனைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை மீளவும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மீண்டும் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தையிட்டி விகாரை கட்டி முடிக்கப்படும் வரை அமைதி காத்து பின்னர் திறப்பு விழா செய்யும் வரையும் அமைதி காத்துவிட்டு தற்போது முழுமையடைந்த விகாரையை இடிக்குமாறு முன்னணியினர் கோசம் போடுவது தேர்தல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது என நல்லிணக்க செயற்பாட்டாளர்கள் கூறி வருகின்றனர். முழுமையடைந்த விகாரையை மீண்டும் இடித்துவிடுங்கள் என முன்னணியினர் கூறுவது மீள ஓர் 1983 கலவரத்தை ஏற்படுத்தும் என கூறும் நல்லிணக்க அரசியலை விரும்பும் செயற்பாட்டாளர்கள் கஜா – கஜா குழுவினர் கனவு உலகத்தில் வாழ்வதாகவும் குறிப்பிடுகின்றனர்.
கட்டி முடிக்கப்பட்டு முழுமையடையும் வரை அமைதி காத்து பின்னர் விகாரையை இடியுங்கள் என கூறுதல், ஒற்றையாட்சியையும் – தேசிய கொடியையும் எதிர்ப்பதாக கூறிவிட்டு ஒரு நாட்டிற்குள் இருப்போம் என பாராளுமன்றத்தில் சத்திய பிரமாணம் செய்தல், மாகாண சபை முறையை எதிர்த்து நடை பவணி செய்து விட்டு மாகாண சபை தேர்தலிலேயே போட்டியிடுதல் என விதவிதமாக தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் முன்னணியினர் என முகஞ்சுழிக்கின்றனர் சமூக வலைத்தளவாசிகள்.
இதேவேளை அரசியல் லாபமீட்டும் விடயங்களில் மட்டும் தலைபோடும் முன்னணியின் கஜா குழுவினர் தமிழர் பகுதிகளில் உள்ள சமூக சீரழிவுகள் பற்றியும் வைத்திய – அரச அலுவலக மாபியாக்கள் பற்றி மறந்தும் வாய் திறப்பதில்லை என பரவலான குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.