June

June

வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன !

வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்திற்கான 7ஆம் கட்ட விண்ணப்பங்கள் கோரும் காலம் ஜூலை 04 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை 07.08.2023 வரை அனுப்பலாம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக 2019/2020/2021 ஆண்டுகளில் இலங்கைப் பரீட்சை திணைக்களத்தினால் நடத்தப்பட்ட கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் தகுதியானவர்கள் என தொிவிக்கப்பட்டுள்ளது.

http://www.studentloans.mohe.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பங்களை இணையத்தில் சமர்ப்பிக்க முடியும் என்பதோடு, குறித்த இணையத்தளத்திற்குள் பிரவேசித்து வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கான மாணவர் கையேட்டைப் பரிசீலனை செய்து அனைத்து தகவல்களை பெற முடியும்

அத்துடன் 070-3555970-79 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைத்து மேலதிக தகவல்களை பெறலாம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பொலிசாரால் சுட்டக்கொல்லப்பட்ட சிறுவன் – போராட்டக்களமான பிரான்ஸ் !

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நாந்த்ரே பகுதியில் உள்ள சிக்னலில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றது. இதையடுத்து போலீசார் அந்த காரை சுற்றி வளைத்து டிரைவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த காரை ஓட்டி சென்ற ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த நேல் என்ற 17 வயது சிறுவன் தலையில் குண்டு பாய்ந்து காருக்குள்ளேயே இறந்தார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

 

போலீசாரின் இந்த நடவடிக்கை பிரான்ஸ் நாட்டு பொதுமக்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்கள் பாரீஸ் உள்ளிட்ட நகரங்களில் போராட்டத்தில் குதித்தனர். நாடு முழுவதும் பல இடங்களில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தின் போது வன்முறை சம்பவங்கள் வெடித்தது. கார்கள், பள்ளிகள், போலீஸ் நிலையங்கள், குப்பைத்தொட்டிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பல பகுதிகளில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் நடந்தது. வன்முறைகளில் ஈடுபட்டவர்களை போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தனர்.

 

நேற்று இரவும் 3-வது நாளாக கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டது. இந்த கலவரத்தில் இதுவரை 40 கார்கள் சேதம் அடைந்தது. போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் 170 போலீசார் காயம் அடைந்தனர். வன்முறையில் ஈடுபட்டதாக போலீசார் 180-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக 40 ஆயிரம் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.

 

அவர்கள் முக்கிய நகரங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வன்முறையை தடுக்க பாரீஸ் புறநகர் பகுதியான கிளமார்ட் பகுதியில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. வருகிற திங்கட்கிழமை வரை இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரான்ஸ் நாட்டில் பொதுமக்களின் போராட்டம்-வன்முறை சம்பவங்கள் நீடித்து வருவதால் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உயர் மட்ட குழுவை கூட்டி அவசர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் வன்முறையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் இம்மானுவேல் மேக்ரான் கூறும் போது சிறுவன் கொல்லப்பட்டது மன்னிக்க முடியாத குற்றம். குற்றவாளி தண்டிக்கப்படுவார். பொதுமக்கள் அமைதியை கடைபிடிக்க வேண்டும். பள்ளிகள்,போலீஸ்நிலையங்கள்,குடியரசுக்கு எதிரான வன்முறையை நியாயப்படுத்த முடியாது என்று தெரிவித்து உள்ளார்.

வவுனியாவில் உள்ள விகாரை நோக்கி 50 இற்கு மேற்பட்ட பிக்குகள் பாதயாத்திரை !

அனுராதபுரம் ருவென்வெலிசாய விகாரையில் இருந்து தமிழர் பகுதியான வவுனியாவில் உள்ள விகாரை நோக்கி பௌத்த பிக்குகள் பாதயாத்திரை ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

அனுராதபுரத்தில் உள்ள வராலற்று சிறப்புமிக்க ருவென்வெலிசாய விகாரையில் கடந்த 28 ஆம் திகதி கல்காமு சாந்தபோதி பௌத்த பிக்கு தலைமையில் ஆரம்பமான குறித்த பாத யாத்திரையானது இன்று (30) காலை வவுனியா கண்டி வீதியில் உள்ள விகாரையை வந்தடைந்தது.

பின்னர் அங்கிருந்து வவுனியாவில் தமிழர் பகுதியை கையகப்படுத்தி குடியேற்றம் செய்யப்பட்ட காலபோகஸ்வேவ பகுதியில் உள்ள சபுமல்கஸ்கட விகாரையை சென்றடையவுள்ளது.

குறித்த பாத யாத்திரையில் 50 இற்கு மேற்பட்ட பௌத்த பிக்குகள் மறைந்த பௌத்த பிக்குகளின் கேசம், பற்சின்னம் உள்ளிட்ட புனிதப் பொருட்களுடன் சென்று அதனை அங்கு பார்வைக்கு வைப்பதுடன், எதிர்வரும் போயா தினத்தன்று விசேட பூஜை நிகழ்வையும் நடத்தவுள்ளனர்.

குறித்த பாதயாத்திரையானது பௌத்த கலைகலாசார பாரம்பரியத்துடன் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழிநுட்பவியல் நிறுவனத்தின் ஆளுநர் சபை உறுப்பினராக பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா !

ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழிநுட்பவியல் நிறுவனத்தின் ஆளுநர் சபை உறுப்பினர்களில் ஒருவராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்காவின் கல்வி அமைச்சர் சுசில் பிறேமஜெயந்தவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் திறன்கள் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கப் பிரிவின் கீழ் இந் நவீன தொழிநுட்பவியல் நிறுவனம் நிர்வகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

1994 ஆம் ஆண்டின் விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பவியல் அபிவிருத்திச் சட்டத்தின் கீழ், உடனடியாகச் செயற்படும் வகையில் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்கு இந் நியமனம் வழங்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

வவுனியாவில் நடைபெற்ற வாள்வெட்டில் 46 வயது நபர் படுகாயம் !

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை (30)  இரவு 11 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதிக்கு ஜீப் ரக வாகனம் மற்றும் மோட்டர் சைக்கிள் என்பவற்றில் வந்த குழுவினர் அப் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் மீது வாளால் வெட்டி விட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

இதன்போது, கிராம மக்கள் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கிய போதும் பொலிசார் சம்பவ இடத்திற்கு வரவில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனையடுத்து, கிராம மக்கள் விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கியதையடுத்து அங்கு வந்த விசேட அதிரடிப்படையினர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மூன்று பேரை கைது செய்து வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைந்துள்ளனர்.

அத்துடன் தாக்குதலில் ஈடுபட்டவர்களின் ஜீப் வண்டியும் மீட்கப்பட்டுள்ளதுடன், அதில் இருந்து இரு வாள்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய செல்வம் தவேந்திரன் வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் பண்டாரிக்குளம், மகாறம்பைக்குளம் மற்றும் வெளிக்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவில் மனிதப்புதை குழி – நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு !

முல்லைத்தீவில் மனித எச்சங்கள் காணப்படுகின்றன பகுதியில் யூலை 6 திகதி அகழ்வு பணிக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நேற்று(29) மாலை முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை தோண்டியபோது நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தினை தொடர்ந்து கொக்கிளாய் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கொக்குளாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இது தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை 2.30 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா அவர்கள் குறித்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன்போது குறித்த மனித எச்சங்கள் காணப்படுகின்றன பகுதியில் யூலை 6 திகதி அகழ்வு பணிக்கு நீதிபதி உத்தரவிட்டதோடு அதற்குரிய நபர்களுக்கான உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறும் அதுவரை எச்சங்கள் அழிவடையாமால் பாதுகாக்குமாறும் கொக்கிளாய் காவல்துறையினருக்கு பணிப்பு விடுத்தார்.

குறித்த பகுதியில், பெண் போராளிகளின் தடையங்களாக காணப்படுகின்றது. பெண்களின் மேலாடை மற்றும் பச்சை சீருடை மற்றும் எலும்பு எச்சங்கள் என்பன இதன்போது இனம் காப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மக்கள் மத்தியில் பாரிய ஐயம் எழுந்துள்ள நிலையில் குறித்த பகுதிக்கு நீதிபதி வருகை தந்தபோது குறித்த பகுதியில் மனித உரிமைகள் சட்டத்தரணி, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ,சமூக செயப்பாட்டாளர் பீற்றர் இழஞ்செழியன்,கிராம மட்ட அமைப்புக்களின் தலைவர்கள் கிராம மக்கள் உள்ளிட்ட பலர் பிரசன்னமாகியிருந்தனர்

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட 25 பெண்களுக்கு பிணை !

யாழ்ப்பாணம் புத்தூரில் இரண்டு வீடுகளுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 31 பேயரில் 25 பெண்களை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு 6 ஆண்களும் விளக்கமறிலில் வைக்க, மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புத்தூர் கலை ஒளி கிராமத்தில் இளைஞர்கள் இருவரின் வீடுகளுக்குள் புகுந்த 50 இற்கும் மேற்பட்டோர் இருவரையும் தாக்கியதுடன் பெறுமதியான பொருள்களையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர். இந்த சமபவத்தில் காயமடைந்த இருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பெண்களின் ஒளிப்படங்களை கணினியில் கிராபிக் செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர் என்ற அடிப்படையில் 21 வயது தொடக்கம் 25 வயதான இளைஞர்கள் இருவரின் வீடு, மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

புத்தூர் கலை ஒளி கிராமத்தைச் சேர்ந்த பெண்களின் படங்களை கணினியில் கிராபிக் செய்து அசிங்கமாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டன என்று அச்சுவேலி பொலிஸ் நிலையம் ஊடாக சைபர் குற்றப் பிரிவில் மூன்று மாதங்களுக்கு முன்னர் முறையிட்ட நிலையில் காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படாமையே குறித்த வன்முறைக்கு காரணம் என தெரியவருகிறது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுத்த அச்சுவேலி பொலிஸார் 25 பெண்கள் உட்பட 31 பேரை நேற்றைய தினம் கைது செய்த நிலையில் அவர்கள் இன்று மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது 25 பெண்களையும் பிணையில் விடுதலை செய்த நீதிமன்றம் மிகுதி 6 ஆண்களையும் எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டது.

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று போராட்டம் !

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது அலுவலகம் முன்பாக ஏ9 வீதியில் முன்னெடுக்கப்பட்டது.

2383ஆவது நாளாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்துவரும் உறவுகள் ஒவ்வொரு மாதமும் 30ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த போராட்டத்தின்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் புகைப்படங்களையும், சர்வதேசத்திடம் நீதி கோரிய பதாதைகளையும் மக்கள் ஏந்தியிருந்தனர்.

“நான் ஓர் ஆண்பிள்ளை போல, சிறுவனை போல வாழ ஆசைப்படுகிறேன்.” – கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்த சிறுமி !

“நான் ஓர் ஆண்பிள்ளை போல, சிறுவனை போல வாழ ஆசைப்படுகிறேன்” என கடிதம் எழுதிவைத்துவிட்டு, 14 வயது சிறுமியொருவர் தற்கொலை செய்துகொண்ட பரிதாபகரமான சம்பவம் இலங்கையில் இடம்பெற்றுள்ளது.

இந்த 14 வயது மாணவியின் சடலம் மீட்கப்பட்ட அறையில் கடிதமொன்று காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த சிறுமி, ஒரு சிறுவனைப் போல நடந்துகொள்வார் என்றும் அவரது அந்த இயல்பினை மாற்றிக்கொள்ள வேண்டும் என உறவினர்கள் சிறுமிக்கு அழுத்தம் கொடுத்துள்ள நிலையிலேயே அவள் இறந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சிறுமி அக்கடிதத்தை தனது தாயாருக்கு எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த கடிதத்தில் சிறுமி,

நான் ஆணாக, சிறுவனாக வாழவே ஆசைப்படுகிறேன். ஒரு பெண்ணாக வாழ்வதை நினைத்து நான் கவலைப்படுகிறேன்.

ஒரு பெண்குழந்தையாக பிறந்து வாழ்வது எனக்கு கவலையளிக்கிறது. நான் ஓர் ஆணை போல வாழ விரும்புகின்றேன். ஆனால், அதற்கு அனுமதிக்கின்றார்கள் இல்லை.

தாக்கப்பட்ட சிறுமியாக வாழ்வது குறித்து நான் கவலையடைகிறேன்.

நான் வீட்டிலும் பாடசாலையிலும் ஒரு பெண்பிள்ளை போல வாழவேண்டியுள்ளது. ஒரு ஆண்பிள்ளையாக நான் இல்லாதது எனக்கு கவலையளிக்கிறது என எழுதியுள்ளார்.

அத்தோடு, அச்சிறுமி தான் தொலைக்காட்சிகளில் பார்த்த கொரிய நடிகர் மீது பெரும் விருப்பத்தை கொண்டிருந்தார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு – இரண்டு சந்தேக நபர்கள் கைது !

கிளிநொச்சியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இரண்டு சந்தேக நபர்களுடன் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு பாவிக்கப்பட்ட இடியன் துப்பாக்கியும்,  மோட்டார் சைக்கிளும் கணேசபுரம் பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளது.

விரைந்து செயல்பட்ட கிளிநொச்சி மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவினர் கிளிநொச்சி கணேசபுரம் பகுதி வயல் வெளியில் மறைத்து வைக்கப்பட்டவேளையில் குற்ற புலனாய்வு பிரிவினரினால் இன்று பகல் 1.00 மணியலவில் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றார்கள்.