06

06

“யுத்த காலத்தைப்போன்று செய்தித் தணிக்கைகள் ஊடாக ஊடகங்களை மீண்டும் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சி.” – கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழு

யுத்த காலத்தைப்போன்று செய்தித் தணிக்கைகள் ஊடாக ஊடகங்களை மீண்டும் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவின் செயலாளர் சிங்கராசா ஜீவநாயகம் தெரிவித்துள்ளார்.

ஒளிபரப்பு அதிகார சபை கட்டளைச்சட்டம் தொடர்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒளிபரப்பு மீதான கட்டுப்பாடுகளையும், தடைகளையும் ஏற்படுத்தி காலம் காலமாக ஒவ்வொரு அரசுகளும் ஊடகங்களுக்கு எதிராகப் பல சட்டங்களை ஏற்படுத்தி வருகின்றன.

கருத்துக்களை மக்களிடம் சென்டறடைவதை தடுக்கும் யுக்தியாக காலம் காலமாக ஊடகங்கள் தொடர்பில் ஒளிபரப்புகள் தொடர்பான சட்டங்களையும் கொண்டுவந்துள்ளன.

அந்த வகையில் யுத்த காலத்திலும் கூட செய்தி தணிக்கைகளை, ஊடக தணிக்கைகளை அரசாங்கம் கொண்டுவந்திருக்கின்றது.

அதன் ஊடாக இறுதி யுத்தத்திலும் சரி, யுத்த காலத்தில் ஏற்பட்ட மனித பேரவலங்கள் வெளியிலே ஊடகங்களிற்கு செல்ல முடியாத பேரவலம் காணப்பட்டது.

குறிப்பாக இலங்கையில் ஊடகங்கள்கூட அந்த செய்தி தணி்கையினால் பாதுகாப்பு அமைச்சினால் கட்டுப்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்ட செய்திகளை மாத்திரம் வெளியீடு செய்தது. ஆவே, யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித பேரவலங்கள் தொடர்பாகவோ அல்லது காவுகொள்ளப்பட்ட தமிழர்களது எண்ணிக்கைகள் தொடர்பாகவோ இன்றுவரை விடைகாண முடியாத சூழல் காணப்படுகின்றது.

அந்த நிலைமை யுத்தகாலம் என்பதற்கு அப்பால், இன்றைய காலகட்டத்தில் அரசாங்கம் அவசர அவசரமாக ஒளிபரப்பு அதிகார சபை சட்டத்தை மீள கொண்டு வருவதற்கு எத்தனிப்பதாக நாங்கள் ஊடகங்கள் ஊடாக அறிகின்றோம்.

குறிப்பாக ஒரு நாட்டின் ஜனநாயகத்தின் பண்புகளில் ஊடகங்கள் மிக முக்கியமானவை. நாட்டில் சிறந்த ஆட்சியை வலியுறுத்துவதில் ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கின்றது.

ஊடகங்கள் என்பவை எப்பொழுதும் ஆட்சியாளர்களிற்கு சிம்மசொற்பனமாக இருக்கக்கூடிய கருவிகளாகக்கூட இருக்கின்றன.

இலங்கையில் இப்பொழுதுள்ள நிலையில் அதிகார வெறிபிடித்த அரசாங்கமாக அதிhரத்தின் ஊடாக எதையும் சாதிக்கின்ற அரசாங்கமாக காணப்படுகின்றது.

இந்த சட்டத்தை தனக்கு சாதகமான பாராளுமன்ற உறுப்பினர்களைக்கொண்டு நிறைவேற்றுவதற்கான எத்தனிப்புகளை செய்கின்றது.

எனவே இந்த சட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை பிரஜைகளாக எண்ணி தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக் வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத சில நபர்களுக்காக சுமார் 5400 விசேட பாதுகாப்பு அதிகாரிகள் !

அமைச்சர்கள் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத சில நபர்களுக்காக சுமார் 5400 விசேட பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த விவகாரம் மறுஆய்வு செய்யப்படும் என்றும், அதன் பின்னர் விசேட பாதுகாப்பு அதிகாரிகள் நீக்கப்படுவார்கள் அல்லது சேவைத் தேவையின் அடிப்படையில் குறைக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் .

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு  வெளிநாடு செல்லத்தடை – கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு !

இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கிளிநொச்சி நீதிமன்றில் மருதங்கேணி பொலிஸார் இன்றையதினம் (06) முன்வைத்த விண்ணப்பத்திற்கமைய, அதனை ஆராய்ந்து குறித்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

மருதங்கேணி காவல்நிலையத்தில் நிலையத்தில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த விடயம் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கொழும்பில் உள்ள எனது வீட்டிற்கு சிங்கள மொழியில் எழுதப்பட்ட தகவலை வழங்குவதற்காக கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் சற்றுமுன்னர் வந்தனர்.

எனக்கு சிங்களம் படிக்கவோ, எழுதவோ தெரியாது என அதை ஏற்க மறுத்துவிட்டேன். அதைத் தொடர்ந்து அவர்கள் சிங்கள மொழியில் எனக்குப் படித்துக் காண்பித்தார்கள்.

 

குறித்த தகவலின்படி, ஜூன் மாதம் 8ஆம் திகதி காலை 10 மணிக்கு மருதங்கேணி காவல் நிலையத்தில் என்னை முன்னிலையாக வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

என்னை மருதங்கேணி காவல்நிலையத்தில் முன்னிலையாகும் வரை எனக்கு வெளிநாட்டு பயணத்தை தடை விதிக்குமாறு கிளிநொச்சி நீதவானிடம் காவல்துறையினர் விண்ணப்பித்ததுடன், நான் காவல் நிலையத்தில் அறிக்கையிடும் வரை வெளிநாட்டுப் பயணம் தடைசெய்யப்படும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

லசித் மலிங்க தேடிய சிறுவன் இவர்தான் – அவுஸ்திரேலியாவில் இருந்து திரும்பியதும் சந்திப்பு !

சிறுவன் ஒருவன் போன்று பந்து வீசும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியிருந்தது. இதனை அவதானித்த லசித் மாலிங்க இந்த சிறுவனை கண்டுபிடிக்க உதவுமாறு தனது முகநூல் பதிவொன்றில் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், குறித்த சிறுவன் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
May be an image of 1 person, child, smiling and tree
வீரவில பகுதியை சேர்ந்த தரம் ஐந்தில் கல்வி கற்கும் தினித் என்ற சிறுவனே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார். இருப்பினும், லசித் மாலிங்க தற்போது அவுஸ்திரேலியாவில் உள்ளமையினால் இலங்கைக்கு வருகை தந்த உடன், குறித்த சிறுவனை நேரில் சென்று பார்வையிடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும், சிறுவனின் திறமையை பாராட்டி சிறந்த கிரிக்கெட் பயிற்சியாளரிடம் பயிற்சிகளை பெறுவதற்கான வாய்ப்புக்களை பெற்றுத்தரவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 110 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை !

தனது  11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 110 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பலப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க குற்றவாளியாக காணப்பட்ட நபருக்கு 110 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து திங்கட்கிழமை (05) தீர்ப்பளித்துள்ளார்.

குற்றவாளியான நபர் 2008 ஆம் ஆண்டு முதல் தனது மகளை பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.  குறித்த நபர் உரகஸ்மன்ஹந்திய, கோரக்கீன பிரதேசத்தில் வசிப்பவராவார்.

“நீண்ட கால முயற்சிகளின் பின் 15 இலட்சம் மலையக தமிழர்களின் பிரச்சினைகள் பற்றிய தெளிவு சர்வதேசத்துக்கு ஏற்பட்டுள்ளது.” – மனோ கணேசன்

“நீண்ட கால முயற்சிகளின் பின்னணியில் 15 இலட்சம் மலையக தமிழர்களின் பிரச்சினைகள் பற்றிய தெளிவு சர்வதேசத்துக்கு ஏற்பட்டுள்ளது.” என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான், பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாட்டுத் தூதுவர்களுடனும், அந்தந்த நாடுகளில் இருந்து இலங்கை வந்துபோகும் ஐ.நா., உலக வங்கி உட்பட பன்னாட்டு நிறுவன மற்றும் அரச பிரதிநிதிகளுடனும் தமிழ் முற்போக்கு கூட்டணி தொடர்ச்சியாக நடத்தி வரும் கலந்துரையாடல்கள் மற்றும் அவர்களுக்கு எம்மால் வழங்கப்பட்டுள்ள எழுத்து மூலமான ஆவணங்கள் காரணமாக இலங்கை இந்திய வம்சாவளி மலையக தமிழர் தொடர்பான போதிய தெளிவு தற்போது சர்வதேச சமூகத்துக்கு ஏற்பட்டு வருகின்றது. இன்னமும் பல நாட்டு தூதுவர்களுடனும், பன்னாட்டு நிறுவனங்களுடனும் நாம் எதிர்வரும் வாரங்களில் பேசவுள்ளோம்.

மத்திய, மேல், சப்ரகமுவ, ஊவா, தென் மாகாணங்களில் வாழும் சுமார் 15 இலட்சம் மலையக தமிழர்களின் தேசிய அரசியல் அபிலாஷைகள் மற்றும் அவர்கள் மத்தியிலான பெருந்தோட்ட பிரிவினரின் மிகவும் பின்தங்கிய வாழ்வாதார நிலைமைகள் தொடர்பான எமது தொடர்ச்சியான வலியுறுத்தல்கள் இன்று பலனளிக்க ஆரம்பித்துள்ளன. இது மகிழ்ச்சியை தரும் ஒரு வளர்ச்சி மைல்கல்லாகும்.

நம்மை ஆளும், ஆண்ட அரசாங்கங்கள் எம்மை மாற்றாந்தாய் பிள்ளைகளாக நடத்தும்போது, நாம் அயலவரை நாடி எமது நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொள்ள முயல்வது மிகவும் இயல்பானதாகும்.

இதில் தவறில்லை. இருந்தால், அரசாங்கத்திடமே தவறு இருக்கிறது. இதுபற்றிய தெளிவு என்னிடம் நிறையவே இருக்கிறது. ஆகவே, எந்த இனவாதிகளும் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.

எந்தவொரு முயற்சியும் ஒரே இரவில் பலன் தரப்போவதில்லை. படிப்படியான இடைவிடாத முயற்சிகளின் பின்னரே பலன் கிடைக்கும் என்பது எமக்கு நன்கு தெரியும்.

எம்மை நோக்கிய இந்த சர்வதேச கவனத்தை எமது மக்களுக்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகளாக மாற்ற, நாம் நன்கு திட்டமிட்டுள்ளோம். அதன் விபரங்களை அடுத்துவரும் நாட்களில் நாடு அறிந்துகொள்ளும் என கூட்டணி தலைவர் என்ற முறையில் இப்போதே கூறிவைக்கிறேன்.

நாம் சர்வதேச அரசுமுறை பிரதிநிதிகள், தூதுவர்கள் ஆகியோருடனும், யூ.எஸ்.எய்ட், உலக வங்கி உட்பட்ட இலங்கையின் அபிவிருத்தி பங்காளி நிறுவனங்களுடனும் பேசுகிறோம்.

‘இலங்கைக்கு நீங்கள் தரும் நன்கொடைகள், உதவிகள், கடன்கள் இலங்கையில் மிகவும்  பின்தங்கிய எமது மக்கள் பிரிவினருக்கும் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்’ என நாம் வலிந்து வலியுறுத்துகிறோம்.

இன்று அரசு முன்னெடுக்கவுள்ள ‘அஸ்வெசும ஆறுதல்’ என்ற நாளாந்த பிரிவினருக்கான கொடுப்பனவுகள் தொடர்பிலும் நாம் எடுத்த முன்நகர் நடவடிக்கை இன்று உலக வங்கியினதும், அரசாங்கத்தினதும், சர்வதேச சமூகத்தினதும் கவனத்தை பெற்றுள்ளது.

‘அஸ்வெசும ஆறுதல்’ திட்டம் தொடர்பாக உலக வங்கியுடனான எமது அடுத்தகட்ட காத்திரமான பேச்சுகள் அடுத்துவரும் சில நாட்களில் நடைபெறும்.

நாம் அரசில் அங்கம் வகிக்கும் போதும் கணிசமாக பணி செய்தோம். இன்று அரசில் அங்கம் வகிக்கவில்லை என்பதற்காக நாம் அங்கம் வகிக்கும் எமது அரசு மீண்டும் உருவாகும் வரை சும்மாவே இருக்கவும் மாட்டோம்.

எதிரணியில் இருந்தபடி பணி செய்கிறோம். எமது இந்த கொள்கையை கவனத்தில் எடுக்க நமது மக்களையும், சமூக முன்னணியாளர்களையும் கூட்டணி தலைவர் என்ற முறையில் நான் வேண்டுகிறேன் என்றார்.

“மலையக மேம்பாட்டுக்காக அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும்.” – அமெரிக்க தூதுவர் ஜூலி சங்

மலையக மேம்பாட்டுக்காக அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும் – என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்துக்கு களப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க தூதுவர், பல தரப்பு சந்திப்புகளில் ஈடுபட்டதுடன், மக்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்களையும் சந்தித்து பேச்சு நடத்தினார்.

இவ்விஜயத்தின் போது அட்டனில் உள்ள தொண்டமான் தொழில் பயிற்சி நிலையத்துக்கு சென்ற அமெரிக்க தூதுவருக்கு, வரவேற்பளிக்கப்பட்டது.

அதன்பின்னர் அதிகாரிகள் மற்றும் அங்கு பயிற்சிபெறும் மாணவர்களுடன் தூதுவர் கலந்துரையாடியதுடன், இருதரப்பு உறவுகளுக்கான நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி காந்தி சௌந்தர்ராஜன், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, அமைச்சர் ஜீவன் தொண்டமானின் இணைப்புச்செயலாளர் அர்ஜுன் ஜெயராஜ் ஆகியோருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்ட அமெரிக்க தூதுவர் ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்ப கல்விக்கு உதவிகள் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

அத்துடன், கல்வி, சுகாதாரம் என மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் இணக்கம் தெரிவித்தார்.

மேலும், ‘ நுவரெலியா மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மலையக பெருந்தோட்ட மக்கள் கடந்த காலங்களில் பல சவால்களை எதிர்கொண்டனர். பல தடைகள் இருந்தன. இதனை நான் அறிவேன். எனவே, மலையக பெருந்தோட்ட மக்களின் எதிர்காலத்துக்கான பாதையை மாற்றுவதற்கான சிறந்த தருணமே இது.

இலங்கை தற்போது மீண்டெழுகின்றது. வர்த்தகம் மற்றும் முதலீடுகளை கொண்டு வருவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். உங்களுக்கு உதவுவதற்கான பங்காளியாக நாம் இருப்போம்’ என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளில் காலதாமதம் – சிறுவர், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் !

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளின் விசாரணைகளில் ஏற்படும் காலதாமதங்களைத் தவிர்ப்பது தொடர்பில் சிறுவர், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

இவ்வாறான காலதாமதத்தினால் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படும் சமூக, மன மற்றும் உடல்ரீதியான பாதிப்புக்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்த நிலைமையைத் தவிர்ப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயவும் குழு தீர்மானித்தது.

 

சிறுவர், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி கௌரவ தலதா அத்துகோரள தலைமையில் அண்மையில் கூடியபோதே இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

 

2015 முதல் 2020 வரை நடைபெற்ற சிறுவர், பெண்கள் மற்றும் பாலின சமத்துவம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவால் எடுக்கப்பட்ட முடிவுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் இங்கு பரிந்துரைக்கப்பட்டது. கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டபோதும் இறுதி தீர்மானம் எட்டமுடியாமல் போன விடயங்கள் குறித்து மீளவும் கவனம் செலுத்தக் குழு தீர்மானித்தது.

 

பாடசாலை பாடநெறிகளில் சட்டம் ஒரு பாடமாக உள்ளடக்கப்பட வேண்டும் என்பது இக்குழுவில் அடையாளம் காணப்பட்டது. இதற்கு அமைய இந்த விவகாரத்தை கல்விக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தவும் இங்கு பரிந்துரைக்கப்பட்டது.

 

பெண்கள் வீட்டு வேலைக்கு வெளிநாடு செல்வதால் நாட்டுக்கு அந்நிய செலாவணி கிடைத்தாலும், பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவதால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் சமூக பிரச்சினைகளால் மறைமுகமாக அரசுக்கு ஏற்படும் செலவு குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. மேலும் பெண்களை வீட்டு வேலைக்கு அனுப்பாமல், அவர்களுக்கு தொழில்சார் பயிற்சி அளித்து, சிறந்த தொழில் துறைகளுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

 

அதுமட்டுமல்லாமல், வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்களின் சட்டப்பூர்வ பிரச்சினைகள் மற்றும் தூதரகங்களில் உள்ள முறைகேடுகள் காரணமாக உரிய முறையில் தீர்வு காணப்படாத வெளிநாட்டு ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்தும் மேலும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான செயல்முறையை ஒழுங்குபடுத்த ஒரு வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. சில நாடுகளில் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு நிலையங்கள் இன்மையினால் இலங்கை தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து குழுவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. எதிர்காலத்தில் இந்தப் பிரச்சினைகளைக் கண்காணிப்பதற்கும் குழுவின் உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்தனர்.

 

இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹினி குமாரி விஜேரத்ன, உத்திக பிரேமரத்ன, ராஜிகா விக்கிரமசிங்ஹ, மஞ்சுளா திஸாநாயக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பெண்களுக்கான தேசிய ஆணைக்குழுவொன்றை அமைக்க விசேட குழு நியமனம் !

பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டல் மற்றும் பெண்களுக்கான தேசிய ஆணைக்குழுவொன்றை அமைப்பது தொடர்பான சட்ட மூலத்தின் முன்னேற்றம் குறித்து சம்பந்தப்பட்ட பங்குதாரருடன் இணைந்து பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தில் மீளாய்வு செய்யப்பட்டது.

 

ஒன்றியம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்திய கலாநிதி) சுசுதர்ஷினி பர்னாந்துபுள்ளே தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் (01) கூடிய போது ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) பிரதிநிதியால் சட்ட மூலம் தொடர்பில் முன்வைப்பு மேற்கொள்ளப்பட்டது.

 

இந்த சட்ட மூலங்கள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கு நிபுணர்கள் குழுவொன்றை அமைக்குமாறு ஒன்றியத்தின் தலைவர் (வைத்திய கலாநிதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே கோரிக்கை விடுத்தார்.

 

அதற்கமைய, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் செயலாளரின் தலைமையில் நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டது. பேராசிரியர் வசந்தா செனவிரத்ன, கலாநிதி றோஸ் விஜேசேகர, கலாநிதி ரமணி ஜயசுந்தர, கலாநிதி விஜய ஜயதிலக்க, விசேட வைத்திய நிபுணர் லக்ஷ்மன் சேனாநாயக்க மற்றும் உதேனி தெவரப்பெரும ஆகியோர் இந்தக் குழுவில் அடங்குகின்றனர்.