09

09

“மொத்த சனத்தொகையில் 17 சதவீத மக்கள் வறுமையால் பீடிக்கப்பட்டுள்ளனர்.” – எதிர்க்கட்சித் தலைவர்

எமது நாட்டில் இலட்சக்கணக்கான மக்கள் வறுமையால் பீடிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

லிர்னே ஆசியா நிறுவனம் வெளியிட்ட அண்மைய தரவு அறிக்கையை (9) இன்று நாடாளுமன்றத்தில் சமரப்பித்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

2019ஆம் ஆண்டிற்குப் பிறகு கிட்டத்தட்ட 40 இலட்சம் பேர்வரை அதாவது மொத்த சனத்தொகையில் 17 சதவீத மக்கள் வறுமையால் பீடிக்கப்பட்டுள்ளனர் எனவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், “40 இலட்சம் பேர் வறுமையில் வாடும் போது, ​நைட்ரஜன் உர மோசடி, மலக்கழிவு உர மோசடி போன்ற மோசடிகள் இடம்பெற்றுள்ளன.

 

இம்மோசடிகளில் ஈடுபட்ட சகலரையும் தகுதி தராதரம் பாராமல் சட்டத்தின் முன் நிறுத்துமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.” என்றார்.

“பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை உள்ளடக்க வேண்டும்.” – நாடாளுமன்றத்தில் அமைச்சர் டயனா கமகே !

பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை உள்ளடக்குவது அத்தியாவசியம் என இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

 

இன்று(9) இடம்பெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இதன் போது மேலும் உரையாற்றிய அவர்,

“இன்றைய மாணவர்களுக்கு பாலியல் பற்றிய உண்மைகள் தெரியாது. இதனால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.

சில பாடசாலை மாணவர்களுக்கு சமூக நோய் என்றால் என்ன என தெரியாது.

சில மாணவர்கள் இந்த பிரச்சினைகள் பற்றி அறியாததால் அவர்களுக்குத் தெரியாமல் பல்வேறு சமூக பிரச்சினைகளால் உள்வாங்கப்படுகின்றனர்.

இவ்வாறான பிரச்சினைகளில் இருந்து மாணவர்களை பாதுகாக்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும்.” என தெரிவித்தார்.

 

 

பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியின் கருக்கலைப்பு வழக்கு – 14 வயதில் குழந்தை பெறுவது சாதாரணமானது என தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!

14, 15 வருடங்களில் திருமணம் செய்து கொள்வதும், 17 வயதில் குழந்தை பெறுவதும் சாதாரணமானது என்று வழக்கு ஒன்றின் விசாரணையின் போது குஜராத் நீதிமன்றம் கூறியுள்ளது.

பாலியல் பலாத்காரத்தில் பாகிக்கப்பட்ட 16 வயது சிறுமியின் 7 மாத கருவை கலைக்க அனுமதி கோரி அந்த சிறுமியின் தந்தை குஜராத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிபதி சமீர் ஜே. டேவ் தலைமையிலான பெஞ்சு இந்த வழக்கை விசாரித்தது.

அப்போது விசாரணையின் போது தான் 14-15 வருடங்களில் திருமணம் செய்து கொள்வதும், அதைத் தொடர்ந்து 17 வயதை அடைவதற்குள் குழந்தை பெறுவதும் கடந்த காலங்களில் சாதாரணமானது என்று நீதிபதி தெரிவித்தார்.இ

இந்த வழக்கு விசாரணையில் நீதிமன்றம், “நாம் 21 ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம்.. ஆனால் உங்கள் வீட்டில் இருக்கும் அம்மா அல்லது பாட்டியிடம் கேளுங்கள். அப்போதெல்லாம் (திருமணம் செய்ய) அதிகபட்ச வயதே 14-15 வயது தான்.. 17 வயதிற்கு முன்பே குழந்தை பிறந்துவிடும். ஆண்களுக்கு முன்பே பெண்கள் முதிர்ச்சியடைகிறார்கள். 4-5 மாதங்கள் என்பதெல்லாம் பெரிய வித்தியாசம் இல்லை. மனுஸ்ம்ருதியில் இதை தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். இதை ஒருமுறை படியுங்கள்” என்று நீதிமன்றம் தெரிவித்தது.

அதேநேரம் கருவுக்கு 7 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் கர்ப்பத்தை கலைக்க முடியுமா என்பது குறித்து அவர் தனது அறையில் மருத்துவர்களுடன் ஆலோசித்ததாகவும் நீதிபதி தெரிவித்தார். மேலும், வழக்கின் சூழலை கருத்தில் கொண்டு, ராஜ்கோட் மருத்துவமனையின் மருத்துவர் அந்த சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனையை நடத்த உத்தரவிட்டார்.

மேலும், அந்த சிறுமிக்கு ஆசிஃபிகேஷன் பரிசோதனையை நடத்துமாறும், மனநல மருத்துவரிடம் பரிசோதனை செய்து அந்த அறிக்கையை பெறுமாறும் டாக்டர்கள் குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிபதி மேலும் கூறுகையில், “இந்த சோதனைகளை நடத்தி, அதன் முடிவுகளை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக கலைப்பது நல்லதுதானா என்பது குறித்து மருத்துவர்கள் குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.. மருத்துவ ரீதியாக கரு எப்படி இருக்கிறது என்பது குறித்த தகவல்களும் தேவை” என்று கூறி வழக்கு விசாரணையை ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

 

சிறுமிக்கு ஆகஸ்ட் 16ஆம் தேதி பிரசவம் நடக்கலாம் என மருத்துவர்கள் கூறுவதால் வழக்கை முன்கூட்டியே விசாரிக்கமாறு பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அதற்கு நீதிபதி, “தாய் அல்லது கருவில் ஏதேனும் கடுமையான நோய் இருந்தால், இந்த கோரிக்கையை நிச்சயம் பரிசீலனை செய்வோம். அதேநேரம் இருவரும் நலமாக இருந்தால் கருவை கலைக்க அனுமதிப்பது கடினம்” என்று நீதிமன்றம் தெரிவித்தது.

 

மேலும், கருவை கலைக்க உத்தரவிட்டாலும், அந்த செயல்முறையில்7 மாத கரு உயிருடன் பிறக்கும் சாத்தியம் குறித்தும் நீதிமன்றம் கவலை தெரிவித்தது. மேலும், தத்து கொடுக்கும் வழிகள் குறித்தும் பரிசீலனை செய்யுமாறு சிறுமியின் தந்தை தரப்பிற்கு நீதிமன்றம் அறிவுரை கூறியது.

கருக்கலைப்பு மருத்துவச் சட்டத்தின் படி, கருக்கலைப்புக்கான உச்சவரம்பு 24 வாரங்கள் ஆகும்.. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், கர்ப்பத்தால் பெண்ணின் உயிருக்கு அல்லது மன ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படும் என கருதினால் கரு கலைக்க அனுமதி தரப்படும். இருப்பினும், நீதிமன்றம் தனக்கு இருக்கும் பரந்த அதிகாரங்களைக் கொண்டு, பலாத்காரம் போன்ற சில அரிய வழக்குகளில் 24 வாரங்களுக்கு மேலும் கர்ப்பத்தை கலைக்க அனுமதி தர முடியும் என குறித்த இந்திய கருக்கலைப்பு  சட்டம் குறிப்பிடுகிறது.

2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் 11,604 கோடி ரூபா கடனாக பெற்ற இலங்கை அரசாங்கம்!

கடந்த 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள், உரிமம் பெற்ற நிதி நிறுவனங்களிடமிருந்து அரசாங்கம் 11,604 கோடி ரூபா கடனாகப் பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூடுதலாக, 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள், நாட்டின் முழு நிதி நிறுவன அமைப்பிலிருந்தும், அதாவது மத்திய வங்கி, உள்ளூர் வணிக வங்கிகள், கடன் வங்கிகள், பிராந்திய வளர்ச்சி வங்கி மற்றும் பிற நிதி நிறுவனங்களிடமிருந்து 846,863 கோடி ரூபாய் கடன்கள் பெறப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கடன் தொகை அரசின் மொத்த கடன் சுமையுடன் நிகர கடனாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர, பொது நிறுவனங்களின் அதிகாரம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்கு வணிக வங்கிகளில் இருந்து பெறப்பட்ட மொத்த கடன் தொகை 174,703 கோடி ரூபாய் என்று அறிக்கையின் தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

“அரசாங்கம் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடாது.” – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை தனியார்மயப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு இன்று (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

 

இந்த அறிக்கை, பல்வேறு விடயங்களை உள்ளடக்கியிருந்தாலும், அவதானம் செலுத்தப்பட்ட துறைகள் தொடர்பில் தர்க்க ரீதியான அல்லது அறிவியல் பூர்வமான தரவுப் பகுப்பாய்வின் அடிப்படையில் இல்லாமை, கடுமையான குறைபாட்டைக் காட்டுகிறது என்று அரசாங்கம் கருதுகிறது.

 

குறிப்பாக, இந்நாட்டில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் செயற்பாடு, அந்த நிறுவனங்கள் தற்போது எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகின்றன, தகவல் மற்றும் தொடர்பாடல் துறை தொடர்பான நிதித் தரவுகள், இத்துறை தொடர்பில் இலங்கையின் தேசிய இலட்சியம், அதனை அடைவதற்கான மூலதனத் திறன், அத்துடன் உலகப் போக்குகள் பற்றிய முறையான ஆய்வு மற்றும் பகுப்பாய்வும் அவசியம்.

 

மேலும், அரசாங்கம் எடுத்துள்ள இந்த கொள்கை ரீதியிலான முடிவின் காரணமாக, இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி, தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்பதை அரசாங்கம் உறுதி செய்துள்ளது.

 

எனவே, இந்த அறிக்கை மற்றும் தகவல் தொடர்பாடல் துறையின் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 

அரசாங்கம் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடாது, தனியார் துறையினருக்கு அந்த வாய்ப்பை வழங்குவதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்கள் நடத்த தடை – யாழ்ப்பாணத்தில் புதிய தீர்மானங்கள்!

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தில் தரம் ஒன்பது வரையான மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் தனியார் வகுப்புக்களை நடாத்துவதை நிறுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை கல்விக்கு மேலதிகமாக வாரத்தில் ஏழு நாட்களும் ஓய்வின்றிக் கல்விச் செயற்பாட்டில் ஈடுபடுவதனால் மாணவர்களுக்கும் சமுதாயத்திற்கும் ஏற்படும் சாதக மற்றும் பாதக விளைவுகளும் எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்களும் தொடர்பாக தனியார் கல்வி நிலையங்களுக்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரனின் தலைமையில் இன்று(09) காலை 09 மணி தொடக்கம் 1 மணிவரை கலந்துரையாடல் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடாத்தப்பட்டது.

இதில் மதத் தலைவர்கள், காவல்துறையினர் , தனியார் கல்வி நிலைய நிறுவனங்கள், பெற்றோார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

  • பெற்றோருக்கு முதலில் விழிப்புணர்வு கருத்தமர்வுகளை தனியார் கல்வி நிலையங்களையும் இணைத்து மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு பிரதேச செயலக மட்டங்களில் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
  •  ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் தரம் 9 வரையான மாணவர்களுக்கான பிரத்தியேக கல்வி நடவடிக்கை முற்றுமுழுதாக ஞாயிற்றுக்கிழமையும் வெள்ளிக்கிழமை மாலையும் நிறுத்தப்பட வேண்டும்.
  • தனியார் கல்வி நிலையங்கள் சுகாதார வசதி, வகுப்பறை பிரமாணம் கட்டடங்கள் போன்றவற்றுக்கமைய அமைந்திருக்க வேண்டும். 4. தனியார் கல்வி நிலையங்கள் உள்ளூராட்சி நிறுவனம், பிரதேச செயலகத்தில் பதிவு செய்தல் கட்டாயமாகும்.
  • தனியார் கல்வி நிலையங்கள் 15 தொடக்கம் 30 நிமிடம் வரை ஆன்மிகம், சமூகம் சம்பந்தப்பட்ட விடயங்களை போதிக்க வேண்டும்.
  • இந்த செயற்பாடுகள் ஒழுங்காக நடைபெறுதை அவதானித்து பிரதேசமட்டத்திலும், மாவட்ட மட்டத்திலும் குழு உருவாக்கப்படவுள்ளது.

இத் தீர்மானங்களை பின்பற்றாத தனியார் கல்வி நிலையங்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.

 

16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் !

16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட களுத்துறையில் ஆசிரியர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

களுத்துறையில் மேலதிக வகுப்புகளில் கலந்து கொண்ட மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியர், நீதிமன்றில் இன்று (09) மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து அவரை ஜூன் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

குறித்த உத்தரவை களுத்துறை பிரதான நீதவான் நிதா ஹேமலி பிறப்பித்துள்ளார்.

சந்தேகநபர் களுத்துறையைச் சேர்ந்த 30 வயதான திவங்க ஜயவிக்ரம எனும் கணித ஆசிரியராவார்.

இந்த வழக்கு ஜூன் 23 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

இதேவேளை கடந்த வருடம் முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் கொடுத்து குறித்த மாணவர்களின் துணையுடன் பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் விடுதலையாகி உள்ளதுடன் அவர் தொடர்ச்சியான கற்பித்தல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

“இனநல்லிணக்கம் பற்றி பேசிவிட்டு ஒரு தலைப்பட்சமாக செயற்பட்டால் தமிழ் மக்கள் எவ்வாறு சட்டம், ஒழுங்கு மீது நம்பிக்கை கொள்வார்கள்? – ஹரிணி அமரசூரிய கேள்வி !

இன நல்லிணக்கம் தொடர்பில் ஒருபுறம் கதைத்து விட்டு, பிறிதொரு புறம் தமிழ்ப் பிரதிநிதிக்கு எதிராகச் செயற்படும் போது தமிழ் மக்கள் எவ்வாறு சட்டம், ஒழுங்கு மீது நம்பிக்கை கொள்வார்கள் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய கேள்வியெழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (08) இடம்பெற்ற நிதி, பொருளாதார உறுதிப்படுத்துகை மற்றும் தேசிய கொள்கைகள் ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்கண்ட கேள்வியை அவர் எழுப்பினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அவர் கைது செய்யப்பட்ட விதம் முற்றிலும் தவறானது.

இதன் மூலம் தமிழ் மக்களுக்கு வழங்கும் செய்தி என்ன? இன நல்லிணக்கம் தொடர்பில் ஒருபுறம் கதைத்து விட்டு, பிறிதொரு புறம் தமிழ் பிரதிநிதிக்கு எதிராக செயற்படும் போது, தமிழ் மக்கள் எவ்வாறு சட்டம், ஒழுங்கு மீது நம்பிக்கை கொள்வார்கள்?

குற்றமிழைப்பவர்களை சமமாக நடத்த வேண்டும். நாடாளுமன்றத்தில் இந்த வித்தியாசத்தை அவதானித்தோம். ஆளும் தரப்புக்கு ஒரு சலுகையும் எதிர்க்கட்சிக்கு பிறிதொரு சலுகையும் என அரசாங்கம் மனம்போன போக்கில் செயற்படுகிறது” என்றார்.

“தவறு செய்து வெல்வதைவிட, நல்லது செய்துவிட்டு தோற்றால் கூட அது நிம்மதிதான்” – நாடாளுமன்றத்தில் ஜீவன் தொண்டமான் !

நான் வாக்கு வேட்டைக்காக அரசியல் நடத்தவில்லை. கௌரவமானதொரு அரசியல் கலாசாரத்தையே விரும்புகின்றேன். தவறு செய்து வெல்வதைவிட, நல்லது செய்துவிட்டு தோற்றால் கூட அது நிம்மதிதான்” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

எனவே, கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்துகொண்டு கல்லெறிய வேண்டாம் என எதிரணியில் உள்ள சில உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (09) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறினார் – எனது அமைச்சு தொடர்பில் எதிர்க்கட்சி தலைவரால் நேற்று கேள்வியொன்று எழுப்பட்டிருந்தது. அவ்வேளையில் நான் சபையில் இருக்கவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய இடம் பெற்ற முக்கிய கூட்டமொன்றில் கலந்து கொண்டிருந்தேன். நாட்டில் மின் கட்டணம் அதிகரித்துள்ள நிலையில் நீர்க்கட்டணம் அதிகரிக்கப்படாததால் மாதம் 425 மில்லியன் ரூபா இழப்பு ஏற்படுகின்றது. மக்களின் வரிப்பணத்தில் இருந்து தான் இதனை செலவிடுகின்றோம். இவ்விவகாரம் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளருடன் நேற்று கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

அந்த கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பட்டுள்ளது. பதில்களை நாம் சபையில் சமர்ப்பித்திருந்தோம். அப்படி இருந்தும் துறைசார் அமைச்சர் ஏன்? சபையில் இல்லை என கேள்வி எழுப்பட்டுள்ளதுடன், அரசியல் நாகரீகம் அற்ற வகையில் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

 

வாக்கு வேட்டைக்காக நான் அமைச்சு பதவியை ஏற்கவில்லை. நான் இந்த நாட்டை நேசிக்கும் ஒரு இளைஞன். நாட்டை முன்னோக்கி கொண்டுவரவே நாம் பாடுபட்டுக்கொண்டிருக்கின்றோம். எனவே, பொறுப்பில்லை என கூறுவதை ஏற்க முடியாது.

 

நாட்டில் கொரோனா தொற்று, பொருளாதார நெருக்கடி காலங்களில் நாம் மக்களுடன் இருந்தோம். மாறாக காட்டுக்கு சென்று மிருகங்களை படம் பிடிக்கவில்லை. எனவே, எல்லா விடயங்களையும் அரசியலாக்குவது கீழ்த்தரமான செயற்பாடாகும்.

 

நீர்க்கட்டணம் அதிகரிக்கப்படும், சமூர்த்தி பயனாளிகள், நலன்புரி உதவிகளை பெறுபவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். அதிகமாக நீரைப் பயன்படுத்தும் 20 வீதமானவர்களுக்குதான் விலை உயர்வு தாக்கமாக அமையும்.

 

பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பதுளையில் கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தார். மக்களும் பங்கேற்றிருந்தனர். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் அதில் பங்கேற்கவில்லை. மன்னிப்பு கோருமாறு வடிவேல் சுரேஷ் வலியுறுத்தினார். அந்த மன்னிப்பு இன்னும் கேட்கப்படவில்லை. ஆகவே கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கல்லெறிய முற்படக்கூடாது.

 

நல்லாட்சியில் வீடமைப்பு துறை அமைச்சராக சஜித் பிரேமதாச தான் பதவி வகித்தார். ஆனால் தோட்ட வீடுகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை செய்துகொடுப்பதற்கு அவர் முன்வரவில்லை.

 

நல்லாட்சியில் கட்டப்பட்ட வீடுகளுக்கு கூட நான் தான் உட்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்து வீட்டு திட்டத்தை முழுமைப்படுத்தினேன். தவறு செய்து வெல்வதற்கு பதிலாக சரியானதை செய்துவிட்டு தோல்வி அடைந்தால் கூட பரவாயில்லை.

 

அதேவேளை, அநாகரீகமான அரசியல் விமர்சனங்களை கைவிடுமாறு நான் கூறியிருந்தேன். ஆனால் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கு முத்திரை வெளியிடுவது வெட்கக்கேடு எனக் கூறியுள்ளார். 3 லட்சம் பேருக்கு முகவரி பெற்றுக்கொடுத்து, சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்த ஒருவரை இப்படி விமர்சிக்க கூடாது. என்று கருத்து தெரிவித்தார்.

நல்லிணக்கத்திற்கான செயற்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான சட்டங்கள் தயாரிப்பதைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை !

நல்லிணக்கத்திற்கான செயற்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான சட்டங்கள் தயாரிப்பதைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நல்லிணக்கத்திற்கான செயற்திட்டம் தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இங்கு சட்ட வரைவு, நிறுவன நடவடிக்கைகள், காணிப் பிரச்சினைகள், கைதிகளை விடுதலை செய்தல், அதிகாரப் பரவலாக்கம் ஆகிய 05 பிரதான பகுதிகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்டது.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துதல், தேசிய காணி சபையொன்றை நிறுவுதல் மற்றும் தேசிய காணி கொள்கையை உருவாக்குதல், காணாமற் போனோர் தொடர்பான அலுவலகத்தை மிகவும் திறம்பட செயற்படுத்துதல், அதன் டிஜிட்டல் மயமாக்கல் செற்பாடுகளை நிறைவு செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அத்தோடு, இதுவரை தகவல் சேகரிக்க முடியாத காணாமல் போனவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கும் பணிகளை விரைவுபடுத்துவது குறித்தும் இங்கு ஆலோசிக்கப்பட்டது.

மேலும், இழப்பீடுகளுக்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் என்பவற்றை ஸ்தாபித்தல் மற்றும் அது தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டது.

எதிர்வரும் இரண்டு மூன்று மாதங்களுக்குள் அவற்றைப் பூர்த்தி செய்து, அது தொடர்பான அறிக்கையை வழங்குமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இதன்போது பணிப்புரை விடுத்தார்.

இக்கலந்துரையாடலில், காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பொறிமுறைமை தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதுடன், இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம், அரச துறையினரால் பயன்படுத்தப்படும் தனியார் காணிகளை விடுவித்தல் மற்றும் மகாவலி காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

கைதிகளின் விடுதலை மற்றும் பொதுமன்னிப்பு தொடர்பாக நீதி அமைச்சின் ஊடாக விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு அறிவித்தார்.

அதிகாரப் பரவலாக்கம், மாகாண மட்டத்தில் அமுல்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மாகாண ஒம்புட்ஸ்மன் நியமனம் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம் உள்ளி;ட்டவர்கள் இந்தக்கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.