14

14

12 வயது பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை – கண்டுகொள்ளாத அதிபரும் – யாழ்ப்பாணத்து கல்விச் சமூகமும் !

யாழ்ப்பாணம் தீவகப் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு, பாலியல் தொல்லை வழங்கியமைக்காக 42 வயதான ஆசிரியரொருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

7ஆம் தரத்தில் கல்வி கற்கும் 12 வயதான மாணவிக்கே குறித்த ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது தொடர்பில் மாணவி தன் தாயாரிடம் முறையிட்டதையடுத்து, தாயார் அதிபரிடம் விடயத்தைத் தெரியப்படுத்தியுள்ளார்.

எனினும், ஆசிரியருக்கு எதிராக பாடசாலைச் சமூகத்தால் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து, இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டதைத் தொடர்ந்து ஆசிரியர் நேற்றுமுன் தினம் கைதுசெய்யப்பட்டார்.

அவர் நேற்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். இதனை தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

குறித்த விடயம் தொடர்பில் நெடுந்தியில் உள்ள சமூக ஆர்வலர் ஒருவரிடம் தேசம்நெட் மூலமாக விடயத்தை அறிந்து கொள்ள தொடர்பு கொண்ட போது “குறித்த ஆசிரியர் குற்றம் செய்தமை தொடர்பில் அதிபருக்கும் – ஏனைய ஆசிரியர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்ட போதிலும் கூட பாடசாலையின் நட்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிடும் என பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்களிடம் பாடசாலை சமூகத்தினர் கோரிக்கைகளை முன் வைத்ததாக ” குறித்த நபர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கைதான ஆசிரியர் ஏற்கெனவே வலிகாமம் பகுதி பாடசாலையொன்றில் கல்வி கற்பிக்கும்பொழுது சில மாணவிகளை பாலியல் கொடுமைக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.
எனினும், மாணவிகள் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க முன்வரவில்வை. இதையடுத்து அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, அவர் மீளவும் ஆசிரியர் சேவையில் இணைக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவலையும் குறித்த சமூக ஆர்வலர் தெரியப்படுத்தியிருந்தார்.

பாடசாலை ஆசிரியர்களால் பாடசாலை மாணவிகள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் வடக்கில் அண்மைய காலங்களில் அதிகரித்துள்ளது. சுய கௌவுரவம் குடும்பமான மானம், கல்வி சமூகத்தின் உயர்ந்த தரம், பாடசாலையின் பெருமை போன்ற விடயங்களை காரணம் காட்டி பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் குற்றவாளிகள் பலரும் பாதுகாக்கப்படுகின்ற ஒரு சூழல் தொடர்ந்தும் நீடிக்கின்றது. கடந்த வருடம் முல்லை தீவில் பாடசாலை ஆண் மாணவர்களுக்கு போதைப் பொருள் கொடுத்து சக மாணவிகளை குறித்த மாணவர்களின் துணையுடன் துஷ்பிரயோகம் செய்த தூண்டிய ஆசிரியர் அழுத்தத்தின் காரணமாக கைது செய்யப்பட்ட போதும் கூட இன்று விடுதலையாகி மீளவும் அவர் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். இது போலவே அண்மையில் பல சம்பவங்கள் யாழ்ப்பாணம் வவுனியா முல்லைத்தீவு உள்ளிட்ட பல பாடசாலைகளிலும் பதிவாகியுள்ளது. என்னிடம் இது தொடர்பாக இதுவரையில் இறுக்கமான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாத காரணத்தினால் குற்றவாளிகள் சுதந்திரமாக இதுபோன்றதான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் சமூக ஆர்வலர்கள் பலரும் அதிருப்தி வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

படம் :- கோப்பு

இலங்கை சிறைகளில் 259% ஆக எகிரிய நெரிசல்!

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் 11,762 கைதிகள் மட்டுமே அடைக்கப்படக்கூடிய சிறைச்சாலைகளில் தற்போது 26,791 கைதிகள் உள்ள நிலையில், சிறைச்சாலைகளில் நெரிசல் 259% ஆக அதிகரித்துள்ளதாக பாராளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.

சில சிறைகளில் நெரிசல் 300 முதல் 400% வரை அதிகரித்துள்ளதாக சமீபத்தில் கோபா குழு தெரிவித்துள்ளது.

அனைத்து சிறைச்சாலைகளிலும் 11,762 கைதிகளை மட்டுமே அடைக்க முடியும் என்ற போதிலும், 26,791 கைதிகள் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

17,502 கைதிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளடன் , 9,289 பேர் தண்டனைக் கைதிகளாக உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

1,309 கைதிகள் நீதிமன்றங்கள் விதித்த அபராதத் தொகையைச் செலுத்த முடியாமல் சிறைகளில் வாடுவதும் தெரியவந்துள்ளது.

பெண்களை திருமணம் செய்வதாக கூறி ஆபாச படங்களை உருவாக்கிய நபருக்கு ஆயுள் தண்டனை!

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்தவர் காசி (27) என்பவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நாகர்கோவில் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இவர், பல பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி ஆபாச காணொளி எடுத்துள்ளார். பின்னர் அந்த காணொளிகள், புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி அந்தப் பெண்களிடம் பணம் பறித்துள்ளார்.

இது தொடர்பான புகாரில் கடந்த 2020-ல் கைது செய்யப்பட்ட காசி பின்னர் குண்டர் சட்டத்திலும் கைதாகியுள்ளார். 120 பெண்களின் 400 காணொளிகள் மற்றும் 1900 ஆபாச படங்கள் காசியின் கணினியில் இருந்து கைப்பற்றப்பட்டன.

காசி மீது போக்சோ வழக்கு, பாலியல் பலாத்கார வழக்குகள் என பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் சிபிசிஐடி காவல்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் காசிக்கு ஆயுள் தண்டனை வழங்கி நாகர்கோவில் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள காசிக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.1.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இருபது வருடங்களில் எகிறியுள்ள சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கை – சர்வதேச தொழிலாளர் அமைப்பு தகவல் !

கடந்த இருபது வருடங்களில் முதன்முறையாக சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் 160 மில்லியன் சிறுவர்கள், தொழிலாளியாக இருப்பதாக, சர்வதேச தொழிலாளர் அமைப்பு சுட்டிக்காட்டியது.

 

குறிப்பாக 80 மில்லியன் சிறார்கள் உடல் மற்றும் உள ரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான தொழில்களில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவ்வமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

இந்நிலைமையானது அரிதானதாகும் என்றும் முறையான பெற்றோர்கள் இல்லாத பட்சத்தில் இவ்வாறான நிகழ்வுகள் பெரிதும் நிகழ்கின்றன என்றும் குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

வறுமையின் பொருட்டு சிறார்கள் வேலைக்குச் செல்வதைத் தடுப்பதற்கான வழி வயது வந்தவர்கள் தொழில்புரிவது மட்டுமே என்று தெரிவித்துள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்பு, இதன் ஊடாக சிறார்கள் பாடசாலைக்கு செல்லும் வீதத்தையும் அதிகரிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

வடக்கு – கிழக்கில் இராணுவத்தின் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படுவது தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அதிருப்தி !

வடக்கு கிழக்கில் படையினர் கையகப்படுத்தி வைத்துள்ள பொதுமக்களின் காணிகளை அரசியல் தேவை கருதி விடுவிக்கப்படுவதை தாம் எதிர்ப்பதாக முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பூகொட மண்டாவல, ரணவிரு கிராமத்தில் இடம்பெற்ற போர்வீரர் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

 

இன்று நாட்டை ஆட்சி செய்பவர்கள் மட்டுமன்றி பலர் போர் வீரர்களை மறந்து விடுகின்றனர். இப்போது சிலருக்கு போர் நடந்ததா என்று கூட தெரியாது. மொத்தத்தில் தற்போதைய அரசாங்கம் உட்பட எந்த அரசாங்கமும் போர்வீரர்களை கண்டுகொள்ளவில்லை.

வடக்கு கிழக்கில் இராணுவத்தின் தேவைக்காக கையகப்படுத்தப்பட்ட சில காணிகள் உள்ளன. இவ்வாறு கையகப்படுத்தப்பட்ட சில நிலங்களைத் திருப்பித் தரவும் வாய்ப்புள்ளது. ஆனால், அரசியல் நலன் கருதி அந்த நிலங்களை திருப்பி கொடுப்பதை ஏற்க முடியாது.

வடக்கு, கிழக்கில் வாக்குகளுக்காக பேராசை கொண்ட சக்திகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் மற்றும் தவறான இடத்தில் வைக்கும் போக்கு தற்போது காணப்படுகிறது. என்ன ஒரு கோழைத்தனமான செயல். நாங்கள் அவர்களுக்கு எதிரானவர்கள்.

தற்போதைய ஆட்சியே கோழைத்தனமானது. அருவருப்பானது. பலவீனமாக உள்ளது. அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடிய அறிவார்ந்த தலைவர் இந்த நாட்டிற்கு தேவை. அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று பலர் கேட்கிறார்கள், கேட்பது எளிது ஆனால் பதில் சொல்வது கடினம்.

சரியான தலைமையை தெரிவு செய்வதற்கு நாட்டு மக்கள் தியாகங்களைச் செய்தால் அதற்கான முன்மொழிவுகளை பரிசீலிக்க வாய்ப்பு உள்ளது. இருந்தாலும், வீட்டில் கண்ணாடி முன் பார்க்கும்போது, ​​எதிர்காலத்தில் நாட்டை வழிநடத்தக்கூடிய ஒரு தலைவரைக் காண்கிறேன்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு சல்யூட் அடிக்க முடியும் ஏனென்றால் தற்போதைய ஜனாதிபதி, ராஜபக்சவை போல ஊழல்வாதி அல்ல, ஆனால் வரும் ஜனாதிபதி தேர்தலில் நான் அவருக்கு எந்த வகையிலும் ஆதரவளிக்க மாட்டேன், அவர் மேதை அல்ல, பலவீனமானவர்.“ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.