15

15

போருக்கு பின் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதானோர் எண்ணிக்கை 2500 ஐ தாண்டியது !

போருக்கு பின்னர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2500ஐ தாண்டி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2009 டிசம்பர் 31 முதல் 2022 டிசம்பர் 31 வரை 13 வருடங்களில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2793 என இலங்கை பொலிஸ்பிரிவின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

தடுப்பு காவல் உத்தரவுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2473 என்பதோடு, 184 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இதன்படி, “வோச் டோக் டீம்” உறுப்பினர் யுதன்ஜய விஜேரத்ன, பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாக கடந்த மார்ச் 13ஆம் திகதி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வு பிரிவுக்கு தகவல் கோரிக்கை ஒன்றை அனுப்பியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பொதுச் செயலாளர் கட்டடத்தின் ஆறாவது மாடி, கொழும்பு 01, இல, 101, சைத்திய பூசா தடுப்பு நிலையம்,  தங்காலை பழைய சிறைச்சாலை வளாகம், இல, 149 கிருலப்பனை மாவத்தை, கொழும்பு 05,  புடானி கெபிடல் கட்டடம், வவுனியா காவல்துறை அலுவலக வளாகம்,  ஓமந்தை அரசமுறிப்பு தடுப்புக் காவல் நிலையம் எனும் ஏழு இடங்களில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை பயங்கரவாத விசாரணைப் பிரிவுத் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பயங்கரவாத சட்டங்களில் கைது செய்யப்பட்டவர்கள் வெளியில் தெரியாத இடங்களில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகின்றனர் என்பதற்கான நம்பகமான ஆதாரங்கள் மனித உரிமை அமைப்புகள் பலமுறை வெளிப்படுத்தியிருந்தது.

சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் மற்றும் இலங்கையின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் இணைந்து  மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்ட அறிக்கையில் காவல்துறை, இராணுவம், கடற்படை மற்றும் பல்வேறு துணை இராணுவக் குழுக்களால் நாடு முழுவதும் சுமார் 220 இடங்கள் சித்திரவதை இடங்களாக பராமரிக்கப்பட்டு வருவதனை வரைபடமாக வெளிப்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“ஆஸ்திரேலியாவின் பாராளுமன்றம் பெண்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல.” – பெண் பாராளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு!

ஆஸ்திரேலியாவின் பெண் எம்.பி.யான லிடியா தோர்ப், ஆஸ்திரேலியாவின் பாராளுமன்றம் பெண்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல என தமக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து விவரிக்கும் பொழுது தெரிவித்துள்ளார்.

சுயேச்சை உறுப்பினரான லிடியா தோர்ப், கண்ணீருடன் செனட் சபையில் ஆற்றியுள்ள உரையில்,

“பலம் வாய்ந்த ஆண்களால் தாம், பாலியல் ரீதியான விமர்சனங்களுக்கு ஆளானதாகவும், மாடிப்படிகளில் நகர விடப்படாமல் பாலியல் தாக்குதலுக்குள்ளானதாகவும், அத்துமீறிய தொடலுக்கு ஆளானதாகவும், தமக்கு பாலியலுறவுக்கான அழைப்புகள் வந்ததாகவும் கூறியுள்ளார்.

முன்னதாக தன்னுடன் பணியாற்றும் செனட் உறுப்பினர் ஒருவர் மீது பாலியல் தாக்குதலுக்கான குற்றச்சாட்டை வைத்த தோர்ப், பின்னர் பாராளுமன்ற தடை வருவதற்கான ஆபத்து வந்ததும் அவற்றை திரும்பப் பெற்றுக் கொண்டார்.

தற்போது, தோர்ப் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த டேவிட் வான் என்பவர் மீது தாம் முன்பு தெரிவித்த குற்றச்சாட்டுகளை மீண்டும் தொடுத்துள்ளார். வான் வழக்கறிஞர்களை அமர்த்தியுள்ளதாக தெரிவித்த தோர்ப், பாராளுமன்ற விதிகளின்படி தமக்கு நேர்ந்ததை மீண்டும் கூற வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.

இது பற்றி தோர்ப் மேலும் கூறியுள்ளதாவது:- விடாமல் பின் தொடர்வது, தீவிரமாக பாலியல் உறவுகளுக்கு அழைக்கப்படுவது, தமது உடல் அத்துமீறி தொடப்படுவது போன்ற பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானேன். அலுவலக கதவுகளை திறக்கவே அஞ்சினேன். வெளியே செல்வதற்கு முன் மெதுவாக திறந்து எவருமில்லையென உறுதி செய்து கொள்வேன். கட்டிடத்தின் உள்ளே வரும் முன் பாதுகாப்பிற்காக என்னுடன் எவரையேனும் வைத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். என்னைப் போன்று மேலும் பலர் இருந்தாலும், தங்களுடைய நலனுக்காக அவர்கள் எதுவும் சொல்ல முன்வரவில்லை. இவ்வாறு தோர்ப் தெரிவித்தார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை உண்மையில்லை என மறுத்த வான், இதனால் தாம் மனதளவில் நொறுங்கி விட்டதாக தெரிவித்தார். இந்த விவகாரத்தில் கட்சியும் வான்-ஐ இடைநீக்கம் செய்து விட்டது. ஆஸ்திரேலியாவில், பாராளுமன்றத்திற்குள் பாலியல் அத்துமீறல்கள் சம்பந்தமான குற்றச்சாட்டுகள் 2021-ம் வருடத்திலிருந்து வரத் தொடங்கியுள்ளது. அரசியல் உதவியாளர் பிரிட்டனி ஹிக்கின்ஸ் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த அதிகாரி ஒருவர் ஒருவர் பாராளுமன்ற அலுவலகத்திற்குள்ளேயே தம்மை கற்பழித்ததாக குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கென தனித்தனியே 5 விசாரணைகள் நடைபெற்றன. ஹிக்கின்ஸ் வழக்கு நாடு தழுவிய எதிர்ப்புகளுக்கு வழிவகுத்தது. இதற்கென நடைபெற்ற ஒரு விசாரணை, முறையற்ற வகையில் நடந்ததாக கூறப்பட்டாலும், ஹிக்கின்ஸின் மனநலத்திற்கு பாதிப்பு வரக்கூடும் என்பதால் மறுவிசாரணை செய்யப்படவில்லை.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் பல பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு தொடர்ந்தார். குற்றச்சாட்டுகளை மறுத்த அவர் மேலும் தன் மீது குற்றஞ்சாட்டியவர் மீது வழக்கு தொடரப் போவதாகவும் எச்சரித்தார். மேலும் அவர், சம்மதமில்லாத பாலியல் உறவுக்கான குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் மறுத்தார். அரசாங்கம் நடத்திய 2021 விசாரணை ஒன்றும் ஆஸ்திரேலியா அரசியலில் உள்ள பெண்களுக்கெதிரான நிலையை கடுமையாக விமர்சித்துள்ளது.

அப்பொழுது, பாராளுமன்றத்தில் பணியாற்றும் 3-ல் 1 பங்கினர் பாலியல் துன்புறுத்தல்களுக்கும், தாக்குதல்களுக்கும் ஒரு முறையாவது ஆளானதாக தெரிவித்தனர். இவற்றில் அந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களில் 63% பெண் உறுப்பினர்கள் அடக்கம்.

 

‘மதுபான தன்சல் ‘ வழங்கிய ஆறு இளைஞர்கள் கைது !

பொசன் பூரணைத் தினத்தன்று ‘மதுபான தன்சல் ‘ வழங்கியதாக கருதப்படும், காட்சியை சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்ததாகக் கூறப்படும் ஆறு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுபானத்தை விளம்பரப்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்களை, பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இந்த காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதால், பொலிஸ்மா அதிபர், இது தொடர்பான விசாரணைகளை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து, கட்டுநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த 20 முதல் 25 வயதுக்குட்பட்ட 6 பேர், கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து காணொளி தொடர்பாக நீண்ட நேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இதன்போது, தங்களது உறவினர் ஒருவரால் கொண்டு வரப்பட்ட வெற்று வெளிநாட்டு மதுபான போத்தலில் தேநீரை ஊற்றி டிக்டோக்கில் காணொளி தயாரிப்பதற்காக தாம் இந்த செயலை செய்ததாக குறித்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர் இந்தநிலையில், குறித்த ஆறு பேரையும் கைது செய்த புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

இலங்கையில் 200 மில்லியன் சட்டவிரோதமான சிகரெட்டுகள் அழிப்பு !

15 பில்லியன் ரூபாய் பெறுமதியான 200 மில்லியன் சட்டவிரோதமான சிகரெட்டுகள் அழிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கெரவலப்பிட்டியவில் கடந்த 2021 ஆம் ஆண்டு சுங்கத் திணைக்களத்தினால் கைபற்றப்பட்ட குறித்த தொகை சிகரெட்டுக்களே இன்று அழிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் அரசாங்கத்திற்கு 13 பில்லியன் ரூபா சேமிக்கப்பட்டதாகவும் சுங்கத் திணைக்களத்தினருக்கு தனது நன்றியைத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சிகரெட்டுகளை விற்க முடியாததோடு இவற்றின் தரத்திற்கு எந்தப் பொறுப்பும் கூறமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் அதே பாடசாலையில் கற்கும் மாணவர்களுக்கு தனியார் கல்வி நிலையங்களில் வைத்து கற்பிக்க தடை !

மத்திய மாகாண அரச பாடசாலை களில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்க இதன்படி தீர்மானிக்கப்பட்டுள்ளது .

மத்திய மாகாண பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் வெளியில் தமது பாடசாலை மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகளை நடத்துவதை தடைசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . தமது பாடசாலை மாணவர்களுக்கு பணம் அறவிட்டு மேலதிக வகுப்புக்கள் நடத்துவதை தடை செய்வது தொடர்பான சுற்றறிக்கை மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவின் வேண்டுகோளுக் கிணங்க மத்திய மாகாண சுல்வி அமைச்சின் செயலாளரினால் வெளி விடப்பட்டுள்ளது . 2023.06.08 –  PDE / 2023 / 01 என்ற கொண்ட கற்றறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதேநேரம் இலவசமாக மாணவர்களுக்கு மேலதிக நேரங்களில் கற்பிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போக்கு வடக்கு மாகாண பாடசாலைகளில் இன்னும் அதிகமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. தமிழர் பகுதியின் பல பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் பிரபல ஆசிரியர்கள் மாணவர்களின் மேலதிக வகுப்புக்காக தங்களுடைய தனியார் கல்விக்கூடங்களுக்கு அழைக்கின்ற போக்கு தொடர்கின்றது. மேலும் தனியார் வகுப்புக்கு குறித்த பாடசாலை ஆசிரியரிடம் செல்லாத மாணவர்கள் இலக்கு வைத்து பாடசாலைகளில் தாக்கப்படுகின்ற சம்பவங்களும் – குறித்த பாடசாலை ஆசிரியரிடம் வகுப்புக்கு வராத மாணவர்களின் புள்ளிகள் குறைக்கப்படுகின்ற சம்பவங்களும் வடக்கின் பல பாடசாலைகளில் அரங்கேறுகின்றன.

இந்த நிலையில் மத்திய மாகாணத்தில் கொண்டுவரப்பட்டுள்ள பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் அங்கு தங்களிடம் கற்கும் மாணவர்களுக்கு  தனியார் கல்வி நிலையங்களில் பாடம் நடத்தக் கூடாது என்ற சட்டம் வடக்கு தனியார் கல்வி நிலையங்களிலும் கொண்டு வரப்பட வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பலரும் குறிப்பிட்டு வருகின்றமை கவனிக்கத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த இராணுவத்தினருக்கு அழைப்பு விடுத்த மாவட்ட அரசாங்க அதிபர் !

யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம் பெறும் சட்டவிரோத செயற்பாடுகள், குழு மோதல்கள், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்,  கால்நடைகளை வெட்டுதல், மணல் கடத்தல் போன்றவற்றை தடுப்பதற்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பு மிக அவசியம் என புதிதாக பதவியேற்றுள்ள யாழ் மாவட்ட இராணுவ கட்டளை தளபதியிடம் எடுத்துரைத்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரம் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியாக புதிதாக பதவியேற்றுள்ள மேஜர் ஜெனரல் சுஜீவ கெட்டியாராச்சி நேற்றைய தினம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடினார்.

இராணுவத்தினரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட காணிகள் பல அளவீடு செய்யப்படாது பொதுமக்களிடம் கையளிக்கப்படாமல் உள்ளது.

குறித்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே  மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெறும் சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பு தரப்பின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம்.

 

மேலும் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபன காணியிலிருந்து இராணுவத்தினர் வெளியேறிய நிலையில், சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பொருட்கள் களவாடப்படுவதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.எனவே இராணுவத்தினர் அதனை தடுத்து நிறுத்துவதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

இராணுவத்தினரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட காணிகள் பல அளவீடு செய்யப்படாது பொதுமக்களிடம் கையளிக்கப்படாமல் உள்ளது.

குறித்த காணிகளையும் விரைவில் அளவீடு செய்யும் நடவடிக்கையில் உரிய சம்பந்தப்பட்ட திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இராணுவத்தினர் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

குறிப்பாக மீள்குடியேறிய மக்களுக்கு இராணுவத்தினரால் 700ற்கும் மேற்பட்ட வீடுகள் இராணுவத்தினரின் பங்களிப்போடு கட்டி முடிக்கப்பட்டுள்ள அதேபோல் எதிர்வரும் காலத்திலும் மீள்குடியேறிய மக்களுக்கான வீட்டுத் தேவைகள் மற்றும் ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்ய இராணுவத்தினர் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் தான் கோரியதாகவும் தெரிவித்தார்.

 

“விதுர விக்ரமநாயக்கவை பதவி விலக்க வேண்டும்..” – ஜனாதிபதியிடம் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ். சாவகச்சேரியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் நேற்று (14) இடம் பெற்றது.

கடந்த சில தினங்களாக தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் பேராசிரியர் மானதுங்க ராஜினாமா செய்தமை தொடர்பாக வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.

ஜனாதிபதி எங்களோடு நடத்திய பேச்சு வார்த்தையிலும் கூட, அமைச்சரவை தீர்மானங்களை நிறைவேற்றுவதில் விருப்பம் இல்லாதவர் போல பேராசிரியர் மானதுங்க காட்டிக்கொண்டார்.

அது அமைச்சரவைக்கும் அவருக்கும் உள்ள பிரச்சனை! எங்களுக்குள்ள பிரச்சனை, வடக்கு, கிழக்கு வாழ் மக்களின் நிலங்கள் அபகரிப்பு பற்றியது.

அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, வடக்கு, கிழக்குக்கு பாரிய இராணுவப் பட்டாளங்களோடு சென்று வருகிறார்.

அவருடைய பணிப்புரையின் கீழ் தான் சட்ட விரோத காணி அபகரிப்புகள் இடம் பெற்று வருகின்றன. அதனால் ஜனாதிபதியிடம் நாங்கள் கேட்பது விதுர விக்ரமநாயக்கவை பதவி விலக்க வேண்டும்.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ரஷ்யாவின் அணுமின் நிலையம் – ஆய்வு நடவடிக்கையில் சர்வதேச அணுசக்தி நிறுவனம் !

இலங்கையில் அணுமின் நிலையத்தை அமைப்பதற்கான ரஷ்யாவின் திட்டங்களை சர்வதேச அணுசக்தி நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.

இந்தநிலையில் இந்தத் திட்டம், நாட்டின் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டு தற்போது சர்வதேச அணுசக்தி நிறுவன நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே தெரிவித்துள்ளார்.

அதன்படி அணுமின் நிலையத்தை மிதக்க வைப்பதா அல்லது நிலத்தில் நிர்மாணிப்பதா? என்பது பற்றிய விவாதம் தற்போது இடம்பெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அணுமின் நிலையங்களில் பணிபுரியும் நிபுணர்களுக்கான பயிற்சிகளை ரஷ்யாவின், ரஷ்ய அரச அணுசக்தி கூட்டுத்தாபனமான (Rosatom) வழங்கவுள்ளது.

இந்தநிலையில் குறித்த அணு மின்சார நிலையத்தின் உற்பத்தி நிலையத்தின் திறன் 300 மெகாவோட்டாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பம்!

இந்தியாவில் இருந்து ஒரு தொகுதி பயணிகளுடன் கப்பல் ஒன்று காங்கேசன் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் சனிக்கிழமை இந்த கப்பல் காங்கேசன் துறைமுகத்துக்கு வரவுள்ளது.

 

குறித்த கப்பலை வரவேற்பதற்கு துறைமுகங்கள், விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழு யாழிற்கு விஜயம் மேற்கொள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை காங்கேசன் துறைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இதன் முதற்கட்டமாக இந்த பரீட்சாத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.