11

11

“சம்புத்த சாசனத்தைப் பாதுகாப்பதும் மேம்படுத்துவதும் நம் அனைவரினதும் பொறுப்பாகும்.” – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

சம்புத்த சாசனத்தைப் பாதுகாப்பதும் மேம்படுத்துவதும் நம் அனைவரினதும் பொறுப்பாகும் எனவும், இதற்காக புத்தசாசன அமைச்சு,பௌத்த நிதியம் மற்றும் பல சாசன ஊக்குவிப்பு நடவடிக்கைகள் எமது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட எமது நாட்டில், பல்வேறு காரணிகளால் தற்போது சம்புத்த சாசனம் சில பின்னடைவுகளைச் சந்தித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்த உன்னதமான சாசனத்தைப் பாதுகாப்பது அனைத்து பக்தர்களினதும் புரோகிதர்களினதும் பொறுப்பாகும் எனவும், மதமும் ஆட்சியும் ஒன்றாகக் கலக்கக் கூடாது எனவும்,பௌத்தத்தை ஒரு அரசியல் ஆயுதமாக்குவதில்,மதம் பெற வேண்டிய உயர்வான அந்தஸ்து குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படுவதாகவும், சம்புத்த சாசனத்தைப் பாதுகாப்பது வெறும் வார்த்தைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படமால் நடைமுறைச் செயல்களால் அமைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள விகாரைகளில் பல்வேறு தியாகங்களைச் செய்வது, கடினமானதொரு பயணத்தில் ஈடுபட்டுவரும் சம்புத்த சாசனத்தின் காவலர்களாக கருதப்படும் மரியாதைக்குரிய மகா சங்கரத்தினரைப் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும் எனவும்,அதை நடைமுறை யதார்த்தமாக்குவதற்கு அனைவரும் ஒன்றித்து சமமாக பங்களிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (10) தெரிவித்தார்.

புத்தபெருமான் போதித்த தசராஜ தர்மத்தின் பிரகாரம் அரசாட்சி நடத்தப்பட்டால் நாடும்,இனமும்,மதமும்,சம்புத்த சாசனமும் பாதுகாக்கப்படும் எனவும்,அந்த இலக்கை அடைவதற்கு செயற்படுவது அனைவரின் பொறுப்பாகும் எனவும்,தற்போது பொய் கோலோட்சி உண்மை மூடிமறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

காலி தங்கேதர ஸ்ரீ ஜயவர்தனராம மகா விகாரை, காலி ஜம்புகெட்டிய சிறி சுகதராமய,காலி சாமிவத்த அபிநவரம,துன்போதி விபச்சனா மையம்,ஹக்மன பல்லாவெல தெற்கு பிடல்கமுவ நிக்ரோதாராமய விகாரைகளின் விகாராதிபதி,ஓய்வுபெற்ற பிரதி அதிபரும்,ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முன்னாள் வருகை தரு விரிவுரையாளருமான சாஸ்த்ரபதி பல்லாவெல சுமேதவன்ச தேரருக்கு,காலி மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை பிரிவுகளுக்கான நீதிமன்ற சங்கநாயக்க பதவிக்கான சன்னஸ் பத்திரம் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வைத்தியர் பற்றாக்குறை தொடர்பில் நடவடிக்கை எடுக்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை !

நாட்டில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறை தொடர்பில் சுகாதார அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த வாரம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம். நாளை திங்கட்கிழமை கூடவுள்ள மத்திய குழு கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவிக்கையில்,

நாட்டில் பாரியளவு வைத்தியர்களுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் நோயாளர்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். எனவே, இந்த சந்தர்ப்பத்தில் மனித வலுவைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும். வைத்தியர்களுக்கான தட்டுப்பாடு நிலவுகின்ற போதிலும், தகுதிகளை நிறைவு செய்துள்ளவர்களுக்கான நியமனத்தை வழங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

வைத்தியர்களுக்கான தகுதிகளை நிறைவு செய்துள்ள 400 பேர் தமக்கான நியமனத்துக்கான காலம் கடந்தும் அவற்றை பெறாமல் உள்ளனர். சிரேஷ்ட வைத்தியர்கள் ஓய்வு பெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னரேனும் புதியவர்களுக்கு நியமனம் வழங்கப்பட வேண்டும். அரசாங்கமும், இலங்கை மருத்துவ சபையும் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

இவ்வாறானதொரு நிலைமை மே மாத இறுதியில் ஏற்படும் என்பதை நாம் இதற்கு முன்னரே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு அறிவித்திருக்கின்றோம்.

2014 மற்றும் 2015இல் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை நிறைவு செய்து, வைத்திய பட்டப்படிப்பையும் நிறைவு செய்து காத்திருக்கின்ற மாணவர்களுக்கான நியமனங்களே தாமதப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

சுமார் 8 ஆண்டுகளாக மனத வளங்கள் வீணடிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ள, ஆனால், மேற்கூறப்பட்டவர்களை விட தகுதி குறைவானவர்களுக்கு நியமனம் வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளே நியமனம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

எனவே அடுத்த வாரத்துக்குள் சுகாதார அமைச்சு இதற்கான தீர்க்கமான முடிவொன்றை எடுக்காவிட்டால், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் என்ற ரீதியில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு நாம் தயாராக உள்ளோம். அதற்கமைய, நாளை திங்கட்கிழமை அவசர மத்திய குழு கூட்டம் கூடவுள்ளது. இதன்போது எடுக்கப்படும் தீர்மானத்தை நாளை அறிவிப்போம். தீர்க்கமான முடிவொன்றையே நாம் எடுப்போம் என்பதை சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கு அறிவித்திருக்கின்றோம் என்றார்.

இந்தியாவை 209 ஓட்டங்களால் வீழ்த்தி சம்பியனானது அவுஸ்திரேலியா  அணி !

உலக டெஸ்ட் சம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியின் இறுதி நாள் ஆட்டத்தில் இந்தியாவை 209 ஓட்டங்களால் வீழ்த்தி அவுஸ்திரேலியா  அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட அவுஸ்திரேலியா அணியை பணித்திருந்தது.

அந்தவகையில், தனது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 469 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு தனது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 296 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

173 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்த அவுஸ்திரேலியா அணி தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்தது. தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 270 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தியது.

அதன்பின்னர், 443 என்ற வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இந்தியா அணி போட்டியின் இறுதி நாளான இன்று ஆஸ்திரேலிய அணியின் அபாரமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 234 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இந்திய அணி சார்பில் விராட் கோலி 49 ஓட்டங்களையும், ரஹானே 46 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர். இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா 43 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் நாதன் லியோன் 4 விக்கெட்டுக்களையும், ஸ்கொட் போலன்ட் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் இரண்டாவது டெஸ்ட் சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றும் அணி என்ற பெருமையை ஆஸ்திரேலிய அணி பெற்றுக்கொண்டது.

முதலாவது உலக டெஸ்ட் சம்பியன் கிண்ணத்தை நியூசிலாந்து அணி கைப்பற்றியிருந்தது.

இரண்டு தடவைகளும் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு வந்து உலகக்கிண்ணத்தை இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

“இலங்கையில் 75 லட்சம் பேர் தீவிர உணவுப் பிரச்சினையில்.”- பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார விஞ்ஞான மற்றும் புள்ளிவிபரவியல் ஆய்வு !

இலங்கையில் 75 லட்சம் பேர் தீவிர உணவுப் பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருவதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு உலக உணவு பாதுகாப்பு தொடர்பாக மேற்கொண்ட புதிய ஆய்வில் வெளிப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார விஞ்ஞான மற்றும் புள்ளிவிபரவியல் ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் வசந்த அதுகோரள தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு உலக உணவு பாதுகாப்பு தொடர்பாக மேற்கொண்ட புதிய ஆய்வு அறிக்கை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் 75 லட்சம் பேர் தீவிர உணவுப் பிரச்சினைக்கு (உணவு பாதுகாப்பற்ற நிலைக்கு) முகங்கொடுத்து வருவதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு உலக உணவு பாதுகாப்பு தொடர்பாக மேற்கொண்ட புதிய ஆய்வில் வெளிப்பட்டுள்ளது. இது எமது நாட்டின் மொத்த குடும்பங்களின்  எண்ணிக்கையில் நூற்றுக்கு 33 வீதமாகும்.

அத்துடன், ஆசிய பசுபிக் வலயத்தில் உணவு பாதுகாப்பற்ற 23 நாடுகளில் இலங்கை 20ஆவது இடத்தில் இருப்பதாகவும் குறித்த ஆய்வின் போது தகவல் வெளிவந்துள்ளது.

அதேநேரம் எமது நாட்டில் மொத்தமாக 57 இலட்சம் கும்பங்களில் 37 இலட்சம் குடும்பங்கள் அரசாங்கத்தின் ஏதாவது ஒரு நிவாரணம் அல்லது உதவியை கேட்டிருக்கின்றன.

அத்துடன், மொத்த குடும்பங்களில் நூற்றுக்கு 65 வீதமானவர்கள் அவர்களின் வாழ்க்கைச் செலவை சமாளித்துக்கொள்ள பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருவதாகவும் குறித்த ஆய்வின் மூலம் வெளிப்பட்டுள்ளது என்றார்.

“கள் விற்பனை நிலையத்தை மையமாக வைத்து போதைப்பொருள் விநியோகம்.” – மன்னாரில் மக்கள் போராட்டம் !

மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேட்டையா முறிப்பு கிராமத்தில் அமைந்துள்ள ‘கள்’ விற்பனை நிலையத்தை இடமாற்ற கோரி மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) காலை கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

அப்பகுதியில் உள்ள ‘கள்’ விற்பனை நிலையத்தினால் குடும்பங்களுக்குள் நிலவும் வன்முறைகள், சமூக சீர்கேடு, சிறுவர்கள் மது போதைக்கு அடிமையாவது போன்ற பிரச்சினைகளை கருத்திற்கொண்டு, பொறுப்பு மிகுந்த உரிய அதிகாரிகள் ‘கள்’ விற்பனை நிலையத்தை அப்பகுதியிலிருந்து அகற்றி, வேறோர் இடத்துக்கு இடமாற்றுமாறு கோரி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கள் விற்பனை நிலையத்தை மையமாக வைத்து அப்பகுதியில் வேறு போதைப்பொருள் வியாபார நடவடிக்கைகளும் மேற்கொள்ளபடுகின்றன என்றும் இதனால் கள்ளச் சாராயத்தின் விற்பனையும் அதிகரித்துள்ளது என்றும் அப்பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

 

இதனையடுத்து, அப்பகுதிக்கு சென்ற அடம்பன் பொலிஸாரின் உடனடி அழைப்பின் அடிப்படையில் குறித்த இடத்துக்கு வந்தடைந்த அடம்பன் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்க முகாமையாளர் மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்ததோடு, இன்று ஞாயிற்றுக்கிழமை (11) முதல் ‘கள்’ விற்பனை நிலையம் மூடப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், ‘கள்’ விற்பனை நிலையம் மூடப்படுவதனால் தங்களது வாழ்வாதாரம் முற்றுமுழுதாக பாதிக்கப்படுவதாக ‘கள்’ சார்ந்த தொழிலை நம்பி, அதனையே வாழ்வாதாரமாகக் கொண்டு இயங்கும் 10க்கும் மேற்பட்ட கள் சீவும் தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

 

இந்நிலையில், கள் விற்பனை நிலையத்தை அகற்றுமாறு கோரி போராடுபவர்கள், கள் விற்பனைக்கு அல்லது கள் சீவும் தொழிலாளர்களுக்கு எதிராக நாங்கள் செயல்படவில்லை; இப்பகுதியில் உள்ள கள் விற்பனை நிலையத்தை வேறிடத்துக்கு மாற்றும்படி கோரிக்கை விடுத்தே போராடுகிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

 

யாழ்ப்பாணத்தில் LGBTQIA+ சமூகத்துக்கு எதிரான பாகுபாடுகளை எதிர்த்து சுயமரியாதை நடைபயணம் !

சகல விதமான ஒடுக்குமுறைகள் மற்றும் LGBTQIA+ சமூகத்துக்கு எதிரான பாகுபாடுகளை எதிர்த்து சுயமரியாதை நடைபயணமொன்று யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை (10) இடம்பெற்றது.

சுயமரியாதை மாதத்தை முன்னிட்டு ‘யாழ். சுயமரியாதை வானவில் பெருமிதம் – 2023’ நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக ‘இச்சமூகத்தில் வாழும் அனைவருமே சமூக பொறுப்புடையவர்கள்’ என்பதை வலியுறுத்தும் முகமாகவும், LGBTIQA+ சமூகத்தினரையும் சக மனிதர்களாக கருதுவதுடன் அவர்கள் தமது வாழ்வை வாழ்வதற்கான உரிமைகளை மதிப்பதுடன் ஒடுக்குமுறைகளுக்கு உட்படுத்தாத வாழ்தலை நோக்கிய பயணத்தின் முக்கிய நிகழ்வாக இந்த நடைபவனி அமைந்தது.

May be an image of 8 people and text

இந்த நடைபவனி இன்று காலை 9.30 மணியளவில் யாழ். பேருந்து நிலையம் முன்னால் இருந்து ஆரம்பமாகி, சத்திரச் சந்தியை நோக்கி பயணித்து, பண்ணை வீதியூடாக பொது நூலகத்தை அடைந்து, வைத்தியசாலை வீதியூடாக நகர்ந்து, ஆரிய குளத்துக்கு முன்பாக நிறைவடைந்தது.

யாழ்ப்பாணம் கே.கே.பி. இளைஞர் கழகத்தின் ஆதரவில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடைபவனியில் பலரும் தன்னார்வத்தோடு கலந்துகொண்டனர்.

லண்டனில் போலிச்சாமியார் கைது !

லண்டன் Barnet பகுதியில் ஆலயம் ஒன்றை நிறுவி தமிழ் மக்களை ஏமாற்றி வந்து கேரளாவை சேர்ந்த போலிசாமியாரான முரளிகிருஸ்ணன் என்கிற சரவணசாமி, இலங்கை தமிழர்கள் மூவர் பொலிசார்க்கு வழங்கிய முறைப்பாட்டினை தொடர்ந்து Colindale பொலிஸ்சாரல்

மதியம் மூன்று மணிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு அதிக நிதிகளை வழங்கியதாக சந்தேகிக்கபடும் லைக்கா தொலைபேசி நிறுவன உரிமையாளர் மற்றும் உணவு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தகர் உட்பட நிதிவழங்கிய பல தமிழ் வர்த்தகர்கள் விசாரணைக்கு உட்படுத்த படலாம் என தெரியவருகிறது.

இந்தச் சாமியாரை மையப்படுத்திய தீவிர பாலியல் முறைகேட்டுக் காணொளிக் காட்சிகள் வெளியாகி பெரும் பரப்பை ஏற்படுத்தியிருந்தன.

அந்தக் காணொளிகளை அவரது தரப்பு மறுத்திருந்தது.

இந்தநிலையில் இலங்கை தமிழர்கள் மூவர் காவல்துறைக்கு வழங்கிய முறைப்பாட்டைத் தொடர்ந்து கொலின்ல் பகுதி காவல்துறை நேற்று இவரை கைதுசெய்து கடந்த 24 மணிநேரமாக விசாரணைக்கு உட்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

இவரது கைதை அடுத்து அவரது ஆச்சிரம பக்தர்களிடம் பதற்றமும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.

தற்போது இவருக்கு அதிக நிதியுதவியை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் சிலரும் விசாரணைக்கு உட்படுத்தப்படலாமென்பதால் இவரை பிணையில் எடுப்பதற்கு அவருக்கு நெருக்கமான சிலர் தீவிர முயற்சியெடுத்து வருவதாக தெரியவருகிறது.

அதேவேளை, கடந்த சில வாரங்களாக குறிப்பிட்ட அந்தச் சாமியரது காணொளிகள் என்று கூறப்பட்டு, சில ஆபாச காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகிவந்தன.

தென்னிந்திய தொலைக்காட்சிகள் சிலவும்  அந்தச் சாமியார் பற்றிய பல்வேறு குற்றச்சாட்டுக்களை தமது செய்தி அறிக்கைகளில் வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.