16

16

முல்லைத்தீவு குருந்தூர் மலை விகாரைக்கு 3000 ஏக்கர் நிலம் – புதிய குழுவை நியமிக்கவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

முல்லைத்தீவு குருந்தூர் மலை விகாரைக்கும் திருகோணமலை திரியாய் விகாரைக்கும் தொல்பொருள் தேவைகளுக்காக 5000 ஏக்கர் காணி உரிமை கோரப்பட்டுள்ளது. இது தொடர்பில் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு நிபுணர் குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

முல்லைத்தீவு குருந்தூர் மலை விகாரைக்கு 3000 ஏக்கர் நிலமும் திருகோணமலை திரியாய் விகாரைக்கு 2000 ஏக்கர் நிலமும் கோரப்பட்டுள்ளது.

வனவளத் திணைக்களம், காணி திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றுக்குச் சொந்தமான பெருமளவிலான காணியை விஞ்ஞான ரீதியான காணி எனக் கூறுவதன் அடிப்படை என்ன என்பதை உடனடியாகக் கண்டறியுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் நிறுவப்பட்ட தொல்பொருள் செயலணியினால் இந்தப் பகுதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், தொல்பொருள் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இந்தப் பகுதி ஒதுக்கப்பட வேண்டுமென செயலணி முடிவு செய்துள்ளது.

பௌத்த தலைநகராக கருதப்படும் அனுராதபுரம் மகா விகாரை அல்லது தனித்துவமான நாகரிகத்தின் பாரம்பரியமிக்க சிகிரியாவுக்குக் கூட இல்லாத காணிகளை குருந்தூர் மலை விகாரையும் திரியாய் விகாரையும் ஏன் கோருகின்றன என்பதை விஞ்ஞான தரவுகளுடனும் ஆதாரங்களுடனும் ஆராய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தக் குழுவைநியமித்துள்ளார்.

 

பாடசாலைக்கு செல்வதாக கூறி காதலனுடன் சென்ற சிறுமி வன்புணர்வு – யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் 14 வயது மாணவியை வன்புணர்வுக்குட்படுத்திய 17 வயது காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் 14 வயது மாணவி ஒருவர் பாடசாலைக்கு செல்வதாக கூறி தனது காதலனுடன் சென்றுள்ளார்.

 

அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் கலாச்சார சீர்கேடுகள் அதிகம் இடம்பெறுவதாக பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்ட இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு மாணவியை காதலன் வன்புணர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மாணவியை காணவில்லை என்று தயார் காவல்துறையினரிடம் கொடுத்த முறைப்பாட்டிற்கு அமைய தேடுதல் நடத்திய காவல்துறையினர் குறித்த மாணவியை மீட்டுள்ளார்.

 

அவர் மருத்துவ பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இதன் போது அவர் காதலனால் வன்புணரப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து காதலன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விவசாயிகளுக்கு துப்பாக்கி வழங்க விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்பு !

பயிர்ச்செய்கைகளை பாதுகாப்பதற்காக விவசாயிகளுக்கு துப்பாக்கிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

விவசாய அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிர்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுப்பதற்காக வெடிமருந்துகளுடன் கூடிய துப்பாக்கிகளை வழங்குமாறு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், துப்பாக்கிகளை வழங்குவதற்கு அனுமதிக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கடிதம் ஒன்றினூடாக கோரிக்கை விடுக்குமாறு, விவசாய அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

வன விலங்குகளால் பயிர்ச்செய்கைக்கு பாரிய சேதம் ஏற்படுவதாக அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் விவசாய அமைச்சரிடம் சுட்டிக்காட்டியிருந்தனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர்கள் இருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு பல்கலைக்கழக மாணவர்கள் தூக்கில் தொங்கிய நிலையில் வெவ்வேறு இடங்களில் இன்று (16.06) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

நற்குணராசா குகதீஷ் (வயது 22)

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவன் நற்குணராசா குகதீஷ் (வயது 22) பல்கலைக்கழக மாணவர் விடுதியில் அவர் தங்கியிருந்த அறையின் கழிப்பறையிலிருந்து இன்று (16.06) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வடமராட்சி வரணி பகுதியை சேர்ந்த இவர் வரணி மத்திய கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் விக்னேஸ்வரன் அபிநஜன் (வயது 23) பல்கலைக்கழகத்தினால் வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்ட மாணவர் விடுதியின் தரைத்தளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை (16.06) சடலமாக மீட்கப்பட்

விக்னேஸ்வரன் அபிநஜன் (வயது 23)

டுள்ளார். ஊர்காவற்துறை நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லுரியின் பழைய மாணவன். அத்தோடு ஸ்ரீ ஜெயவர்த்தன பல்கலைக்கழகத்தின் ஆண்களுக்கான பழுதூக்கல் அணியின் உபதலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்கொலைகள் அதிகரித்துவரும் நிலையில் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மோதலில் ஈடுபட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் வகுப்பு தடை நீக்கம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் ஏற்பட்ட குழு மோதல் சம்பவத்தின் அடிப்படையில் உள் நுழைவுத் தடை விதிக்கப்பட்டிருந்த மாணவர்களில் 28 பேர் மீதான தடை பூர்வாங்க விசாரணைகளின் முடிவில் நீக்கப்பட்டுள்ளதுடன், அடையாளப்படுத்தப்பட்ட மூன்று மாணவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 

முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்களின் “மாகோஸ்” வார நிகழ்வுகள் கடந்த மாதம் 31 ஆம் திகதி புதன்கிழமை முதல் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் – இம்மாதம் 3ஆம், 4ஆம் திகதிகளில் இரண்டாம் வருட மாணவர்களுக்கும், மூன்றாம் வருட மாணவர்களுக்கும் இடையில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வில் ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறி மோதலில் முடிந்தது.

இதனால் மூன்றாம் வருட மாணவன் ஒருவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட இரண்டாம் வருட மாணவர்கள் 16 பேருக்கும், மூன்றாம் வருட மாணவர்கள் 15 பேருக்கும் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும், விடுதி உட்பட பல்கலைக் கழகத்தின் எந்தவொரு பகுதியினுள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

 

இந்தச் சம்பவம் தொடர்பிலான பூர்வாங்க விசாரணைகள் கடந்த வாரம் இடம்பெற்றது.

 

விசாரணைகளின் முடிவில் சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட இரண்டாம் வருட இரண்டாம் அரையாண்டு மாணவர்கள் 03 பேரைத் தவிர ஏனைய 28 பேர் மீது விதிக்கப்பட்டிருந்த உள்நுழைவுத் தடை விலக்கப்பட்டுள்ளது என்று முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் பா. நிமலதாசன் அறிவித்துள்ளார்.

75 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் வந்தது எப்படி..? – விமல் வீரவங்சவிடம் விசாரணை !

சுமாா் 75 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும் பணத்தை ஈட்டியமை தொடா்பான தகவலை வெளியிடத் தவறியதாக குற்றம்சாட்டி முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுப்பதற்கான திகதியை அறிவிக்குமாறு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, கொழும்பு மேல் நீதிமன்றத்திடம் கோரியுள்ளது.

 

இது தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் இன்று (16) அழைக்கப்பட்ட போதே இந்த கோாிக்கை முன்வைக்கப்பட்டது.

 

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆயிஷா ஜினசேன, 2017ஆம் ஆண்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள போதிலும் அது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டினாா்.

 

இந்த வழக்கு இன்று அழைக்கப்பட்ட போது , ​​பிரதிவாதியான விமல் வீரவன்ச நீதிமன்றில் ஆஜராகவில்லை என்பதுடன், அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது கட்சிக்காரருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

இதன்படி, இந்த வழக்கை எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதி மீண்டும் அழைப்பதற்கு உத்தரவிட்ட மேல் நீதிமன்ற நீதிபதி, அன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகுமாறு விமல் வீரவன்சவுக்கு அழைப்பாணை விடுத்தாா்.

 

2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை அமைச்சராக கடமையாற்றிய காலப்பகுதியில், விமல் வீரவங்ச, சுமாா் 75 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்து மற்றும் பணம் ஈட்டியமை தொடர்பிலான தகவலை வௌியிடத் தவறியமையால் இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்ததாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.

காங்கேசன்துறையில் நவீன பயணிகள் முனையம் திறப்பு !

இலங்கை துறைமுக அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட காங்கேசன்துறை நவீன பயணிகள் முனையம், இன்றைய தினம்(16) கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவினால் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது.

 

குறித்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர், யாழ் இந்தியத் துணைத் தூதுவர், கப்பல்துறை அமைச்சின் செயலர், துறைமுகங்கள் அதிகார சபையின் அதிகாரிகள், வட பிராந்திய கடற்படை தளபதி,யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், கடற்படை உயர் அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

 

மேலும், இன்றையதினம் இந்தியாவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் ஒரு கப்பல் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.

 

கப்பலில் வந்தடைந்த இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளை அமைச்சர் அடங்கிய குழாம் வரவேற்றதோடு, கப்பலின் கெப்டனுக்கு நினைவுப் பரிசிலும் கையளிக்கப்பட்டது.

 

குறித்த நிகழ்வில் கருத்து தெரிவித்த கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, காங்கேசன்துறைக்கும் இராமேஸ்வரத்துக்கு இடையில் பயணிகள் கப்பல் சேவையினை ஆரம்பிப்பது தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றது.

 

எனினும் இராமேஸ்வர பகுதியில் சில வேலைத்திட்டங்கள் கப்பல் சேவை ஆரம்பிக்க முன்னர் முன்னெடுக்க வேண்டிய தேவையும் உள்ளது.

 

இதன் காரணமாக தற்போதைய சூழ்நிலையில் உடனடியாக கப்பல் சேவையினை ஆரம்பிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.

 

எனினும் இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களின் தொடர் முயற்சியின் பயனாக விரைவில் கப்பல் சேவை ஆரம்பிக்க கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.