12

12

“அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குவது மிகவும் கவலைக்குரியது.” – நாமல் ராஜபக்ஷ

இலாபம் ஈட்டிக் கொண்டிருக்கும் அரச நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சிகள் குறித்து தனது கருத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ வெளிப்படுத்தியுள்ளார்.

அதன்படி நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை இலாபகரமான வணிகங்களாக மாற்றுவதற்கு அவற்றை தனியார் மயமாக்குவது பற்றி சிந்திக்கக்கூடியதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்,

அதேவேளை இலாபம் ஈட்டிக் கொண்டிருக்கும் அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

மேலும் இலாபகரமான அரச நிறுவனங்களை தனியார்மயமாக்க ஒரு முடிவு எடுக்கப்பட்டிருந்தால், அத்தகைய முடிவின் பின்னணியில் உள்ள காரணத்தைப் புரிந்துகொள்வது அவசியம் என்றும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டமை தொடர்பில் தேசிய சமாதானப் பேரவை விசனம் !

“யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டமை தொடர்பில் தேசிய சமாதானப் பேரவை விசனம் வெளியிட்டுள்ளது.

நாட்டில் தனிமனிதர்களும் சமூகங்களும் அசமத்துவமான முறையில் நடத்தப்படுகிறார்கள் என்ற உணர்வை வலுப்படுத்தும் இன்னொரு சம்பவமாக யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைது அமைந்திருக்கிறது. பொலிஸ் அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்வதற்கு இடையூறு விழைவித்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.

பொது மைதானம் ஒன்றில் பொன்னம்பலம் தனது ஆதரவாளர்களுடன் நடத்திய கூட்டத்துக்கு முன்கூட்டியே அறிவிக்காமல் சிவில் உடையில் வந்த இருவர் தங்களை அடையாளப்படுத்த மறுத்ததையடுத்து அவர்களுக்கும் பொன்னம்பலத்துக்கும் இடையில் வாக்குவாதம் மூண்டது. இந்த சம்பவம் தாங்கள் வேறுபட்ட முறையில் தாங்கள் நடத்தப்படுவதாக தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள உணர்வை மீளக்  கிளறியிருக்கிறது.

நாட்டின் வடக்கிலும் கிழக்கிலும் அரசியல் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவது வழமையான ஒரு நடைமுறை. தங்களை அவமதிப்பதாகவும் அச்சுறுத்துவதாகவும் அந்த நடைமுறை இருப்பதாக அந்த மக்கள் கருதுகிறார்கள்.

உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து 14 வருடங்கள் கடந்துவிட்ட பின்னரும் கூட துப்பாக்கிகளுடனும் கமராக்களுடனும் சீருடையில் படையினர் பெருமளவில் பிரசன்னமாக இருப்பது அந்த மக்கள் மத்தியில் ஒரு அநாதரவான உணர்வை ஏற்படுத்துகிறது.  தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் அக்கறையாக இருந்தால்  அவர்களின் மனங்களை வென்றெடுக்கவேண்டிய அவசியத்தை உணர்த்தும் அறிகுறியாக இந்த நிலைமை இருக்கிறது.

நாட்டின் ஏனைய பாகங்களில் வாழும் மக்களை விடவும் வேறுபட்ட முறையில் வடக்கு,கிழக்கு மக்களை நடத்தவேண்டாம் என்று தேசிய சமாதானப் பேரவை அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறது. அந்த மக்களும் ஏனைய மக்களைப் போன்று சமத்துவமான உரிமைகளுக்கு உரித்துடையவர்களே.

பாராளுமன்றத்தில் உள்ள ஏனைய சமூகங்களின் பிரதிநிதிகள் தவறாக நடந்துகொள்கின்ற போதிலும்  மரியாதையாக நடத்தப்படும் அதேவேளை சிறுபான்மை இனத்தவர்களான தமிழ்ச் சமூகத்தின் ஒரு தலைவர் கைதுசெய்யப்படுவது  இலங்கையின் அரசியல் கட்டமைப்புக்கு நீண்டகாலமாக பெரும் பாதிப்பாக அமைந்த இனத்துவ பரிமாணத்தை மீண்டும் வெளிக்காட்டி நிற்கிறது.

பாராளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலத்தின் கைது பாரபட்சமான முறையில் பிரயோகிக்கப்படுகிறது என்பதன் வெளிப்பாடாகும். இது ஒரு நாடு ஒரு சட்டமா அல்லது ஒரு நாடு இரு சட்டங்களா என்ற கேள்வியைக் கிளப்புகிறது.

உலகின் முதன்மையான மனித உரிமைகள் சாதனமான குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையை ( International Covenant  on Civil and Political Rights — ICCPR) நடைமுறைப்படுத்துவதற்கென்று கொண்டவரப்பட்ட சட்டத்தை அரசாங்கம் தவறாக பயன்படுத்திவருகின்ற போக்கில் இந்த தோற்றப்பாட்டை காணக்கூடியதாக இருக்கிறது.

அதாவது பெரும்பான்மை இனத்தவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக இந்த சட்டம் பயன்படுத்தப்படுகின்ற அளவுக்கு சிறுபான்மை சமூகங்களின் உணர்வுகளை புண்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக பயன்படுத்தப்படுவதில்லை.

சமூக வாழ்வின் சகல அம்சங்களிலும் பாரபட்சம் காட்டப்படாமல்  சகலரும் சமத்துவமான முறையில் நடத்தப்படுவதை உறுதிசெய்வதற்கு அரசியலமைப்புக்கான 21 வது திருத்தத்துக்கு இசைவான முறையில் சமத்துவம் மற்றும் பன்மைத்துவ ஆணைக்குழு (Equality and Pluralism Commission) ஒன்றை நிறுவுமாறு அரசாங்கத்தை நாம் வலியுறுத்துகிறோம்.

நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கும் மாகாணசபைகளுக்கான தேர்தல்களை நடத்துமாறும் அரசியலமைப்பின் பிரகாரம் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் பரவலாக்கப்படக்கூடியதாக அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும் இன,மத அடிப்படையில் அரச அதிகாரிகள் அடாத்தான முறையில் நடந்துகொள்ளும் சாத்தியத்தைக் குறைப்பதற்கு சகல சமூகங்களையும் அரவணைக்கும் அணுகுமுறையுடன் சேவைகளை வழங்குவதற்கும் பன்மைத்துவ பண்புகளை விளங்கிக்கொள்வதற்கும் பொலிசார் உட்பட அரசாங்க அதிகாரிகளுக்கு பயிற்சிகளை வழங்குமாறும் அரசாங்கத்தை நாம் வலியுறுத்துகிறோம்.

அத்தகைய நிறுவனரீதியான ஒரு ஏற்பாட்டின் மூலம் அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான நம்பிக்கையை அதிகரிக்க முடியும் என்பதுடன் வெளியுலகில் எமது நாட்டின் விழுமியங்களை பிரதிபலிக்கக்கூடியதாகவும் இருக்கும்.

“இந்தியாவின் பிரதமராக தமிழர்.” – பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அறிவிப்பு !

இந்தியாவின் தமிழகத்தில் இருந்து பிரதமர் ஒருவர் தேர்வாக வேண்டும் என்ற பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் அமைச்சருமான அமித் ஷாவின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு டெல்லி சென்று விட்டார்.

முன்னதாக, டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அமித் ஷா, கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில், தமிழகத்தின் பல்வேறு துறைகளை சார்ந்த முக்கிய பிரமுகர்களை சந்தித்தாா்.

அதன் தொடர்ச்சியாக, சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், தென் சென்னை மக்களவைத் தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் அமித் ஷா கலந்துரையாடினார்.

அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் இருந்து 2 பிரதமர்களை கடந்த காலங்களில் தவறவிட்டுள்ளோம். அதற்கு காரணம் திமுகதான். வரும் காலங்களில் ஒரு தமிழரையாவது பிரதமராக்க உறுதி எடுப்போம் என பேசியதாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து, தமிழகத்தில் இருந்து பிரதமர் ஒருவர் தேர்வாக வேண்டும் என்ற அமித் ஷாவின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி பிரதமராக வர வேண்டும் என அவரது தரப்பினர் கூறி வருகின்றனர், அண்ணாமலை பிரதமராக வர வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் பேசி வருகின்றனர்.

ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த தலைவர்களை இதுபோன்று கூறி வருகின்றனர்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் கூறுகையில்,

“தமிழரை பிரதமராக்குவோம் என்ற அமித்ஷாவின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அதன் உள்நோக்கம் புரியவில்லை. வெளிப்படையாக இந்தக் கருத்தை அவர் கூறி இருந்தால் உரிய விளக்கம் அளிக்கப்படும்.

பிரதமர் மோடி மீது அமித் ஷாவுக்கு என்ன கோபம் எனத் தெரியவில்லை. 2024ம் ஆண்டில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக தமிழர் வர வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகன் ஆகியோர் உள்ளார்கள். ஒரு வேளை இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.” என்றார்.

வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்தார் எம்.ஏ.சுமந்திரன் !

வடக்கு மாகாண ஆளுநராகப் பதவியேற்ற பி.எஸ்.எம். சார்ள்ஸை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (12) நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது வடக்கில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள், நிர்வாக நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

வடக்கு மாகாண ஆளுநராக இருந்த ஜீவன் தியாகராஜா ஐனாதிபதியால் நீக்கப்பட்டு புதிய ஆளுநராக சார்ள்ஸ் நியமிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் முதல் தடவையாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளின் பட்டியலில் நான்கு இலங்கையர்கள் !

ASIAN SCIENTIST 100 இதழின் 2023 பதிப்பில் நான்கு இலங்கையர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

Asian Scientist Magazine என்பது ஒரு விருது பெற்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இதழாகும், இது ஆசியாவின் R&D செய்திகளை உலகளாவிய பார்வையாளர்களுக்கு எடுத்துரைக்கிறது.

Biocon on Twitter: "Congratulations @kiranshaw for being recognized as  India's First Lady of #Biotech and representing #India in the Biomedical  Sciences sector in the Top 100 Asian Scientists Report of the prestigious

ஆசியாவின் முன்னணி STEM மற்றும் ஹெல்த்கேயார் மீடியா நிறுவனமான சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட வைல்ட் டைப் மீடியா குழுமத்தால் இந்த இதழ் வெளியிடப்படுகிறது.

Oceanswell இன் ஸ்தாபகரான Asha DeVos, மற்றும் Dr. Rohan Pethiyagoda ஆகியோர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இருந்து சதுரங்க ரணசிங்க மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் இருந்து அஷானி சவிந்த ரணதுங்க ஆகியோருடன் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

ஆஷா டிவோஸ் ஒரு கடல் உயிரியலாளர், கல்வியாளர் மற்றும் நீல திமிங்கல ஆராய்ச்சி துறையில் முன்னணியில் உள்ளார். கடல் பாலூட்டி ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இலங்கையர் மற்றும் நாட்டிலிருந்து முதல் தேசிய புவியியல் ஆய்வாளர் ஆவார். இத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காகவும், இலங்கையில் இளம் விஞ்ஞானிகளுக்கு வழிகாட்டியதற்காகவும், கள உயிரியலுக்கான மேக்ஸ்வெல்-ஹன்ரஹான் விருது, வனிதாபிமான வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் உலகளாவிய ஆசிரியர் பரிசு உள்ளிட்ட பல விருதுகளை DeVos பெற்றுள்ளது. TED ஃபெலோவாகவும் இருக்கும் டி வோஸ், இலங்கையின் முதல் கடல்சார் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனமான Oceanswell ஐ நிறுவினார்.

கலாநிதி ரோஹான் பெத்தியகொட விலங்கியல் துறையில் 2022 லின்னியன் பதக்கத்தை வென்றார், மேலும் பதக்கம் பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமையைப் பெற்றார். இலங்கையில் பல்லுயிர் பாதுகாப்பில் அவரது நிலையான ஆராய்ச்சி, எழுத்து மற்றும் வாதிட்டதற்காக அவர் அங்கீகரிக்கப்பட்டார்.

சதுரங்க ரணசிங்க 2022 ஆம் ஆண்டில் 7ஆவது ஷேக் ஃபஹாத் ஹிரோஷிமா-ஆசியா விளையாட்டு மருத்துவம் மற்றும் அறிவியல் விருதைப் பெற்றார். இந்த விருது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசியாவைச் சேர்ந்த மருத்துவ நிபுணருக்கு விளையாட்டு மருத்துவத்தில் அவர்களின் பங்களிப்புக்காக வழங்கப்படுகிறது.

அஷானி சவிந்த ரணதுங்க, கைத்தொழில் மற்றும் விவசாய கழிவுகளை பெறுமதி கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றியமைக்கும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நிர்மாண மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்கு மூலப்பொருட்களாக பயன்படுத்துவதற்கும் 2022 OWSD-Elsevier அறக்கட்டளை விருதைப் பெற்றுள்ளார்.

“எனக்கு வரலாறு கற்பிக்க முயற்சிக்கிறீர்களா “ என கேட்ட ஜனாதிபதி ரணில் – பதவியை இராஜினாமா செய்த தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் !

தொல்பொருள் இடமொன்றுக்கு காணி ஒதுக்கீடு தொடர்பான பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை கடுமையாக சாடியுள்ளார்.

ஜனாதிபதி தொல்பொருள் திணைக்கள அதிகாரியிடம் “நீங்கள் எனக்கு வரலாற்றை கற்பிக்க முயற்சிக்கிறீர்களா? அல்லது நான் உங்களுக்கு கற்பிக்க விரும்புகிறீர்களா?”

அண்மையில் ஜனாதிபதி மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.

குறித்த தொல்பொருள் இடத்திற்காக சுமார் 270 ஏக்கர் காணியை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்கள அதிகாரி தெரிவித்த போது, ​​அது மகா விகாரையை விட பெரியதா என ஜனாதிபதி அவரிடம் கேட்டுள்ளார்.

“உங்களுக்கு ஏன் 275 ஏக்கர் தேவை? இது மகாவிகாரையை விடப் பெரியதா? மகா விகாரை, ஜேதவனாராமயம் மற்றும் அபயகிரி மூன்றுமே 100 ஏக்கரை எடுக்காது,” எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க தனது இராஜினாமா கடிதத்தை அமைச்சின் செயலாளரிடம் கையளித்ததாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

“தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் தனது இராஜினாமா கடிதத்தை அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளதுடன், கடிதத்தின் பிரதியும் எனக்குக் கிடைத்துள்ளது. பதவி விலகலுக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

பேராதனை பல்கலைக்கழகத்தில் பழுதடைந்த  உணவை உண்ணச்செய்து பகிடிவதை !

பேராதனை பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் 11 பேர், புதிய மாணவர்களைப்  பகிடிவதைக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இடைநிறுத்தப்பட்ட மாணவர்கள்  புதிய மாணவர்களை கடந்த 5ஆம் திகதி விடுதிக்கு அழைத்துச் சென்று  பழுதடைந்த  சோற்றை ஊட்டச் செய்து அவர்களைக் கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வகுப்புத்தடை நேற்று முன்தினம் (10) முதல்  அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், முறையான விசாரணை நடத்தப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறித்த பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்தார்.

இலங்கையில் வேகமெடுக்கும் டெங்கு நோய் பரவல் – நோயாளர்களில் 25 சத  வீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் !

பாடசாலைகள் திங்கட்கிழமை (12) ஆரம்பமாகியுள்ள நிலையில், பிள்ளைகளை படாசாலைகளுக்கு  அனுப்பும்போது, டெங்கு நோய் பரவல் தொடர்பில் பெற்றோர்கள் விசேட கவனம் செலுத்துவது மிகவும் அவசியமானது என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு  தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக  டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாகவும் சுகாதார அதிகாரிகள்  67 பிரிவுகளை டெங்கு அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தியுள்ளதாகவும்  அவர் கூறினார்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் (ஞாயிற்றுக்கிழமை 11ஆம் திகதி வரை) 42,961 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும்  அக்காலப் பகுதியில் 25 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 25 சத  வீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் (2022) நாடு  முழுவதும் 76,689 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்ததுடன், அந்த ஆண்டில் 72 டெங்கு மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.