அந்த அழகிய கண்கள் இன்னமும் என் மனதை உறுத்துகிறது! உன் மரணம் என்னை உறைய வைத்துவிட்டது! முன்பொருமுறை உன்னை நிதர்சனம் தொலக்காட்சியில் உன் அழகைப்பார்த்து பார்த்து என் நண்பனுக்கு மணிக்குட்டி என என் ஆண்மைக்கே உரிய வக்கிர புத்தியுடன் கூறியது இன்னமும் நினைவிருக்கிறது! ஆனால் நீ இன்று இல்லை! நீ ஏன் கொல்லப்பட்டாயோ தெரியவில்லை. ஆனால் நீ கொல்லப்பட்டு ஒன்றரை ஆண்டுகளை கடந்த நிலையில் உன் சடலத்தின் புகைப்படங்களை பார்க்கிறோம்! உன் சடலத்தை இணையங்களில் புலிவியாபாரிகள் ஏலம் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்! உற்றுப் பார்க்கிறேன். ஆம் நீ சுடப்பட்டுதான் இறந்திருக்கிறாய்! ஆனால்.. ஆனால்… அப்போது என் மனம் சஞ்சலப்படுகிறது நீ எப்படி கொல்லப்பட்டாய் என்பது புலனாகிறது.
ஆனால் 1991ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30திகதி புலிகளால் கைது செய்யப்பட்ட செல்வி எப்படி கொல்லப்பட்டிருப்பாள் என்ற கேள்வி என்னை இப்போ உறுத்தத் தொடங்கிறது! அகில உலக பென் விருது பெற்ற ஒரு பெண் கவி! இவளைக் கடத்திய புலிகள் இவளை சுட்டுக் கொன்றிருப்பாரகளா? அடித்துக் கொன்றிருப்பாரகளா? அல்லது உயிருடன் தான் புதைத்திருப்பார்களா? 1991இல் மோபைல் கமரா கிடையாததால் தான் அவளின் படங்களும் இணையத்தில் உலா வரவில்லையோ என்னவோ! யாரும் அதைப்பற்றி கதைப்பதும் கிடையாது! இன்று மனித உரிமைகள் பற்றி கூவுபவர்கள் தயவு செய்து சொல்லுங்கள் செல்வியை எப்படிக் கொன்றீர்கள்? ரவைகள் வீணாகிவிடும் என்று உயிருடன் தான் புதைத்திருந்தாலும் பரவாயில்லை! தயவு செய்து கூறுங்கள்! அவளின் சொந்தங்கள் உங்களை இன்னமும் மன்னிக்க தயாராவே உள்ளார்கள்!
நேற்று முன்தினம் மீளவும் இசைப்பிரியா வருகிறாள். இந்த முறை சனல் 4 தொலைக்காட்சியில் வருகிறாள். அவளின் தோழி, கொல்லப்பட்டது இசைப்பிரியா தான் என உறுதியளித்து விட்டு அவள் ஒரு போராளி அல்ல, ஒரு ஊடகவியலாளினி மற்றும் அவள் ஒரு சிறந்த கலைஞி என்று கூறுகிறாள். எனக்கு கோபம் மீளவும் வருகிறது! ஆயுதம் தரிக்காது ஒரு பெண்! என்னைப் போன்ற ஒரு கலைஞி அவளை எப்படி இப்படிக் குரூரமாக கொலை செய்யலாம்? ஆனால் மீளவும் என்மனம் எங்கோ போகிறது! இன்று தொலைக்காட்சியில் பார்த்த அந்தக் குரூரத்தை நேரில் பார்த்த அந்தக் கணங்களை நோக்கி என் மனம் மீளவும் போய்விடுகிறது! செப்டெம்பர் 21, 1989 அன்று மதியம் திருநெல்வேலியில் நண்பன் வீட்டில் இருந்து மானிப்பாய் செல்ல சைக்கிளில் போகையில் பட், பட் என்று துப்பாக்கி சத்தம். சனங்கள் அல்லோல கல்லோலப்பட்டு ஓடுகிறார்கள்! ஒரு பெட்டையை யாரோ மண்டையில் போட்டு விட்டார்கள்! நான் சைக்கிளில் அந்த இடத்தை கடந்து தான் போக வேண்டும்! ஒன்றரை ஆண்டுகள் யாழ் வைத்தியசாலையில் துப்பாக்கி சூட்டு காயத்துடன் அவதியுற்றதாலோ என்னவோ இரத்தம் என்றால் எனக்கு மயக்கம் வரும். இருந்தாலும் விரைவாக நான் அந்த இரத்தம் சொட்டும் உடலைக் கடந்து தான் போக வேண்டும்!
ஆமி வரமுன் போக வேண்டும். இதயம் வேகமாக துடிக்க எழுந்து நின்று சைக்கிளை மிதிக்கிறேன். சடலத்தை கடக்கும் போது திரும்பி பார்க்கிறேன்! இரத்த வெள்ளத்தில் ஒரு பெண்! அந்த சிவப்பு ரத்தம் என் தலையை கிறுகிறுக்க வைக்கிறது, மயக்கம் வருவது போல் உள்ளது, இருந்தும் வேகமாக சைக்கிளை மிதிக்கிறேன், சிறிது தூரம் போனதும் திரும்பி பார்க்கிறேன், எதுவும் தெரியவில்லை. ஆனால் அந்த பெண்ணில் இருந்த வடிந்த குருதிச் சிவப்பு மட்டும் மின்னல்போல் கண்களுக்கள் பளிச்சிடுகிறது. அவள் இறந்து விட்டாளா? இல்லையா கேள்விகள் வர கூடியிருந்த மக்கள் கூட்டத்தில் விடுப்பறிய சைக்கிளை நிறுத்தினேன்! ஆரோ காட்டிக் கொடுக்கிறவளாம் என்றார் ஒருவர்! இல்லை அவள் புலி என்றார் இன்னொருவர்! பின்னர்தான் தெரிந்து கொண்டேன் அது ஒரு பல்கலைக்கழக மருத்துவ விரிவுரையாளர் ராஜனி திரணகம என்று! அவளும் ஒரு எழுத்தாளி! கலைஞி எல்லாவற்றிற்கும் மேலாக உயிர் காக்கும் ஒரு மருத்துவ கலாமணி! தெருவேராத்தில் ஒரு தெரு நாயை கூட இப்படி சுட்டுக் கொன்றிருக்க மாட்டார்கள்! அவளை யார் கொன்றார்கள் என்ற விவாதமே இன்னும் தொடர்கிறது! தயவு செய்து யாராவது கூறுங்கள்! யார் கொன்றீர்கள் ஏன் கொன்றீர்கள்? விசாரணை தான் வேண்டாம்! ஒரு உண்மையை கூறும் கவுன்சிலாவது அமைத்து நடந்த உண்மைகளை கூறுங்கள்!
1984 என்று நினைக்கிறேன்! யாழ் நவாலி கல்லுண்டாய் வெளிக்கு அருகில் ஒரு புதை குழியிலிருந்த இரு சடலங்கள் அந்த பகுதி மக்களால் தோண்டி எடுக்கப்படுகிறது! ஒரு ஆண். ஒரு பெண்! அந்த பெண்ணும் கிட்டத்தட்ட இசைப்பிரியா போன்றே தோற்றம் கொண்டவள்! ஓழுங்காக புதைக்காமையல் துர்நாற்றம் வீச சந்தேகத்தில் மக்கள் தோண்டியபோது கண்டுபிடிக்கப்பட்ட அந்த சடலங்கள் அடையாளம் காணாமலே புதைக்கப்பட்டன. அந்த காலப் பகுதியில் இராணுவம் நிலை கொண்டிருக்கவில்லை. இயக்கங்களே அந்த பிரதேசங்களை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இவைபோல் இன்னும் எத்தனை புதைகுழிகளில் எத்தனை இசைப்பிரியாக்கள் உறங்குகிறார்களோ தெரியாது! இந்த உண்மைகளை கூற யாராவது முன்வருவார்களா?
விடுதலைப் புலிகளின் புலேந்திரன் அம்மான் திருமலையில் இருந்த போது சிங்கள் குடியேற்றங்கள் அடிக்கடி தாக்கப்படும்! அங்கு பெண்கள் குழந்தைகள் என்று பாராது பல்வேறு கொலைகள் அன்று நடைபெற்றது! அந்த கொலைகளை நடாத்திய ஒரு நபர் யாழ் வந்திருந்தபோது தங்கள் வீர பிரதாபங்களை கதைகதையாக சொல்வார்கள். அதில் கேட்கவே மனம் பதைபதைக்கும் ஒரு விடயம். பெண்களை கொல்கையில் அவர்கள் கால்களுக்கிடையில் வாளை எப்படி சொருகினார்கள் என்று நேர்முக வர்ணனை செய்வது! அழகான அந்த பெண்களின் அழகினை அவர்கள் அன்று வர்ணித்தபோது அவர்களும் இந்த இசைப்பிரியா போல் அழகாக இருந்திருப்பார்கள் என்ற கற்பனையே என்முன் இன்று வருகிறது! ஆனால் இதைப்பற்றி இப்போது கதைத்தால், ‘அது பழைய கதை. செய்தவர்கள் எல்லாம் செத்து விட்டார்கள். அதைக் கிளறாது வன்னயில் நடந்த கொடுமைக்கு நியாயம் வேணும்’ என்று கூறுகிறார்கள்! ஆனால் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறரர்கள். அவர்களிற்கும் அந்த பெண்கள், இசைப்பிரியாகள் தானே! செய்தவர்கள் பலர் இன்றும் உயிருடன் உள்ளார்கள்! செய்தவர்களிற்கு தண்டணைதான் வேண்டாம், குறைந்தபட்சம் நடந்த உண்மைகளாவது தெரிய வேண்டாமா? இனிவரும் காலங்களில் தமிழ் தரப்பு இப்படிச் செய்யாது என்பதற்கு இந்த உண்மைகள் உத்தரவாதம் தராதா?
வன்னி யுத்தத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டமை மறுக்க முடியதா உண்மைகள்! புலிகள் இராணுவம் இரண்டுமே மனித உரிமைகளை மீறியுள்ளனர். வெறுமனே இராணுவத்தின் மனித உரிமைகளை சுட்டிக்காட்டும் தமிழ் அமைப்புகள் புலிகளால் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மனித உரிமை மற்றும் போர்க்குற்றச் சாட்டுகளை மறுதலிப்பது தான் மிகவும் மோசமான அராஜகம்! இன்று இராணுவத்தில் உள்ள சில அதிகாரிகளே தமது தரப்பு பிழை விட்டுள்ளதை ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்களே இந்த ஆதரங்களை கசியவும் விட்டுள்ளார்கள். ஆனால் இசைப்பிரியாக்களை வைத்து இன்னமும் புலிகளை புனிதர்களாக காட்டுவதில் முழுக்கவனம் செலுத்துவதுடன் தங்கள் சொந்த இலாபங்களிற்காகவே இன்று இசைப்பிரியா போன்ற பெண்களின் மரணத்தை காவித்திரிகிறார்கள்! இந்த இசைப்பிரியாவையும் இன்னும் நூற்றுக்கணக்கான இசைப்பிரியாக்களையும் இந்த புலம்பெயர் சமூகம் நினைத்திருந்தால் அன்று காப்பாற்றியிருக்க முடியம்! புலிகளை உசுப்பேத்துவதை நிறுத்தி மக்களை கேடயங்களை பாவிப்பதை நிறுத்தி புலிகளை ஆயுதங்களை கீழே போடவைத்திருந்தால் மனிதக் கேடயங்களாகப் பாவிக்கப்பட்ட மக்களை விடுவிக்கும்படி கோரியிருந்தால் இந்த இசைப்பிரியா காப்பற்றப்பட்டிருப்பாளோ என்னவோ?
எல்லாம் நடந்து முடிந்து ஒன்றரை ஆண்டுகள் போன பின்னர் பழிக்கு பழி ரத்தத்திற்கு ரத்தம் என்று புலிக்கொடியுடன் இன்னமும் ஒரு கூட்டம் ஓடித்திரிகிறது! கேட்டால் வன்னி மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டுமாம்! மகிந்தாவையும் அவர் கூட்டாளிகளையும் கூண்டில் ஏற்ற என்று புலம்பெயர் சமூகத்திடம் ஆயிரக்கணக்கில் பெற்ற காசை வங்கியில் வைப்பிலிட்டு விட்டு ஒரு 3000 பவுண்களுடன் இறுதி நேரத்தில் கிழக்கு லண்டன் இமிக்கிறேசன் லோயரை பிடித்த இந்த கூட்டமா வன்னியில் இறந்த மக்களிற்கு நீதி பெற்றுக் கொடுக்கப் போகிறார்கள்? நீங்கள் அவர்களிற்கு நீதி வாங்கி கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, அவர்களை நிம்மதியாக இனியாவது இருக்கவிடுங்கள்! இதுபற்றி அங்குள்ள மக்கள் மிகத்தெளிவாகவே இருக்கிறார்கள்! புலிகளால் நாம் பட்டதுபோதும்! புலம்பெயர் மக்கள் புலிப்பூச்சாண்டி காட்ட காட்ட இங்குதான் நாம் வேதனைப்படுகிறோம். ஏற்கனவே வெள்ளம் வந்து தகர குடியிருப்புகளை அள்ளிச்சென்ற நிலையிலும் இன்னமும் அதைப்பற்றி அக்கறை காட்டாத புலம்பெயர் தமிழ் சமூகம் மாவீர்தின வெற்றி, மகிந்தா வெற்றியென்று தம் ஈகோக்களை திருப்திப்படுத்தியபடி உள்ளனர். இவர்களா அந்த மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள். இவர்களின் ஒரே கவலை வன்னி மக்களை இன்னமும் இராணுவம் கொல்லவில்லையே என்பது தான்! இன்னமும் இசைப்பிரியாக்கள் இறக்கிறார்கள் இல்லை என்பதே இவர்களின் கவலை!
கடந்த சில வாரங்களாக தமிழ் இணையங்கள், தொலைக்காட்சிகளை ஆக்கிரமிக்கும் இறந்த பிணங்களின் உடலங்களில் வக்கிரமானவை பெண்கள் பற்றிய படங்கள்! எமது கலாச்சரம் பற்றி தம்பட்டம் அடிக்கும் தமிழர்கள் ஒரு வக்கிர புத்தியுடன் இணைக்கும் இந்த படங்கள் இறந்த அந்த பெண்களை இன்னமும் மானபங்கப்படுத்துகிறது! போர் குற்றம் என்று குற்றம் சுமத்துபவர்கள் இன்று மனித நேயத்தை தொலைத்து விட்டு பிணங்களை வைத்து வியாபாரமும் விபச்சாரமும் செய்கிறார்கள்! மேற்குலகில் பல பெண்கள் மிகவும் கொடூரமாக கொல்லப்பட்ட போதும் அவர்களின் புகைப்படங்களை ஊடகங்கள் வெளிவிடுவதே கிடையாது! விசாரணைக்கு அவை சம்பந்தபட்டவர்களிடம் கொடுக்கப்படுவதுடன் அந்தப் படங்கள் வெளிவருவதே கிடையாது! ஆனால் எம்மவர்கள் மிகவும் கேவலமாக இந்த பெண்களின் படங்களை தங்கள் சுயநல விளம்பரங்களிற்கும் பணத்திற்கும் இன்று விற்பதை நான் விபச்சாரம் என்று கூறாது என்னவென்று கூறுவது!
நடந்து முடிந்த யுத்தம் பல உண்மைகளை மறைத்து நிற்கிறது! இங்கே குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்படுவது தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வாகாது! அனைவரும் ஏதோவகையில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மாறாக மேலும் குரோதங்களை வளர்க்கும். உண்மைகள் வெளிவரவேண்டும்! குற்றம் இழைத்தவர்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும்! பொது மன்னிப்பு அனைவருக்கும் வழங்கப்பட்டு மீளவும் தவறுகள் நடைபெறாத வகையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்! திரும்ப திரும்ப இசைப்பிரியாக்களை தொலைக்காட்சியிலும் வானொலியிலும் கொல்வது அவர்களின் ஆத்மாக்களையும் கொன்று புதைப்பதற்கு ஒப்பானது!