பதவிக்கு வரும் ஒருவரை மட்டும் ஆதரிக்க வேண்டும் என்ற கருத்தில் சிலவேளை ஒரு அரசியல் ஆதாயம் இருக்கலாம். ஆனால் ஒருவரை மீளவும் பதவிக்கு வரவைக்க கூடாது என்ற பழி வாங்கும் நோக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு தர எடுத்திருக்கும் முடிவு சரியானதா என்ற விவாதமே தற்போது மிகவும் சூடுபிடித்துள்ள விவாதமாகும். ஆனால் 30 வருட காலமாக தமிழ் பேசும் மக்கள் எந்த அரசியல் உரிமைக்காக போராடினார்களோ அந்த போராட்டத்தை நிவர்த்தி செய்ய குறைந்த பட்சம் விரும்பும் பிரதிநிதிகளையாவது ஆதரித்திருக்கலாம் என்ற ஆதங்கமும் பலர் மனதில் தோன்றியுள்ளது. 2010 ஜனாதிபதி தேர்தலில் தற்போது போட்யிடும் 20 பேரில் மிகவும் புதிய திட்டங்களுடன் ஒரு உண்மையான மாற்றத்தை தேடி நிற்கும் ஒரு வேட்பாளர் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கோ அல்லது தமிழ் பேசும் மக்களின் அரசியலில் அக்கறையுள்ளவர்களிற்கு தெரியாமல் போனது மிகவும் வேதனையான ஒரு விடயம். இங்கே தான் தனியே வெற்றி பெறும் வேட்பாளர்கள் நோக்கிய ஒரு பார்வை புலனாகிறது.
கட்சியில்லா மக்கள் அரசியலதிகாரம் என்ற கோஷத்தின் அடிப்படையில் சுவராஜ்ய என்ற அமைப்பு அரசியல் அதிகாரம் மக்களாகிய நமக்கே என்ற மாற்றத்தினை கொண்டு வருவதினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குறியீடாக இந்த ஜனாதிபதி தேர்தலில் ஒரு வேட்பாளரை சுயேட்சையாக நியமனம் செய்துள்ளது. இன்று தேர்தலில் நிற்கும் இரண்டு முக்கிய வேட்பாளர்களும் மீளவும் இனங்களுக்குள் பிளவுகளை ஏற்படுத்தும் பேச்சுகளை பேசி வருகிறார்கள். சிங்கள தேசிய வாதத்தை மிகவும் முனைப்போடு பேசும் அதேநேரம் சிறுபான்மை மக்களை திருப்திப்படுத்தும் சில சலுகைகளை இவர்கள் ஏலம் போடுகிறார்கள். ஆனால் மக்களின் உண்மையான விடுதலையை நேசிக்கும் வேட்பாளர்கள் வெல்ல முடியாதவர் என்ற ஒரு காரணத்திற்காக ஓதுக்கப்படுவதுடன் அவர்கள் சொல்ல வரும் செய்தியையும் இந்த ஊடகங்கள் இருட்டடிப்பு செய்வது மிகவும் வேதனையானது.
பிளவுகளை ஏற்படுத்தும் இந்த அரசியற் கட்சிகளுக்கு மாற்றாக சுதந்திரம் என்பது அடி மட்டத்திலிருந்து ஆரம்பமாக வேண்டும், ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவுடையதாகவும் தனது விவகாரங்களை தானே கையாளக் கூடிய ஆற்றல் மிக்கதாக வளரவேண்டும் என்ற காந்திய கொள்கையை பின்பற்றும் சுவராஜ்ஜியவின் சார்பில் போட்டியிடும் திரு யு. பி விஜேகோன் தமிழ் பேசும் மக்களிற்கு மிகவும் அறிமுகமானவர். சுவராஜ்யாவின் அரசியல் அமைப்பு இனவாதத்தால் பிரிந்து போயுள்ள நாட்டை மீள இணைப்பதுடன் மக்கள் தமது சொந்த தலைவிதியை தாமே நிர்ணயித்துக் கொள்வதற்கும் வழிவகுக்கும் புதிய திட்டம். இதில் அரசியல் கட்சிகள் கிடையாது! மாறாக 14500 கிராம சபைகளும் சுதந்திரமான சுயாட்சி அலகு முறைக்குள் உட்படுத்தப்படும். நிறைவேற்று மற்றும் நிர்வாக அதிகாரங்கள் தொடர்புடைய ஒவ்வொரு படிமுறையும் இந்த கிராம சபைகளில் இருந்தே ஆரம்பிக்கும்!
இவ்வாறு மக்களிடம் மீள ஆதிகாரங்களை கையளிக்கும் வகையிலான திட்டங்களை வெளிப்படுத்தும் இந்த அமைப்பு 60வருட காலமாக காலனித்துவ ஆட்சியார்கள் விட்டுச்சென்ற அரசியல் அமைப்பை உதறித் தள்ளி விட்டு நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற அரசியல் அமைப்பை மீள புதுப்பிக்க முனைகிறது. மக்களால் தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகள் தவறிழைக்கும் பட்சத்தில் மக்களால் திருப்பியழைக்கும் உரிமையையும் இது உத்தரவாதம் செய்கிறது. இது நடைமுறைக்கு சாத்தியம் அற்ற ஒரு அமைப்பு எனவே இதைப்பற்றி அக்கறை கொள்ளத் தேவையில்லை என்பதே அனேகரின் வாதம். ஆனால் புதிய அரசில் மாற்றம் ஒன்றை ஆரம்பிக்க எங்காவது ஒரு இடத்தில் ஆரம்பிக்க வேண்டுமல்லவா? அந்த ஆரம்பம் என் இந்த மாற்றமாக இருக்க கூடாது?
அரசியல் அதிகாரங்கள் குவிந்து போயுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது அல்ல யு பி விஜேக்கோனின் நோக்கம். அந்த புதிய மாற்றத்திற்கான அடித்தளத்தை நாட்டும் முகமாக ஒரு செய்தியாளனாகவே இவர் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். யு பி விஜேக்கோன் வெறும் வார்தை ஜாலங்களுக்காகவோ அல்லது புகழுக்காகவோ அல்லது ஒரு வேட்பாளரை தோற்க வைப்பதற்காகவோ இந்த தேர்தலில் நிற்கவில்லை. அரசியல் அதிகாரம் மக்களிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்ற தனது கொள்கையை இவர் மந்திரியாக இருந்தபோதே சிறிது சிறிதாக அறிமுகப்படுத்தியவர். கிராம சபைகள் கூடிய அதிகாரங்களை பெற இவர் அதிகாரத்தில் இருந்தபோதே பல வேலைத்திட்டங்களை செய்துள்ளார். பிரேமதாச ஆட்சிக் காலத்தில் இவர் கிராமசபைகளை மறு சீரமைத்ததுடன் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளை வலுவூட்டினார். அரசியல் அதிகாரம் அடிமட்ட மக்களிடமிருந்து வரவேண்டும் என்ற தன் கொள்கையை யுஎன்பி ஆட்சிக்காலத்திலும் அறிமுகப்படுத்திய ஒருவர். யு பி விஜேக்கோன் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் 1980களில் யாழ் மாவட்ட அமைச்சராக பதவி வகித்தவர். அமரர் திரு அமிர்தலிங்கத்தாலேயே பாராட்டப்பட்ட ஒரு மனிதர். அவரின் மனித பண்புகளுக்காக யாழ் மக்கள் அவரை கௌரவித்தனர்.
இவ்வாறு இலங்கை அரசியலில் உண்மையான மாற்றத்தை தேடும் ஒரு நேர்மையான மனிதர் தமிழ் பேசும் கட்சிகளின் கண்களுக்கு தெரியமால் போனதன் காரணம் என்ன? விஜேக்கோன் விரும்பும் மாற்றத்தால் இந்த அரசியல்வாதிகளிற்கு ஒரு இலாபமும் இல்லாமல் போய்விடும் என்பதாலா? அல்லது கட்சிகள் இல்லாது போனால் தங்கள் இருப்பே போய்விடும் என்பதாலா? மக்களின் விடுதலையை நேசிக்கும் எந்த ஒரு சக்தியும் இந்த மாற்றத்தை விரும்பும். கடந்த முப்பது வருட காலமாக தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைக்காக தமிழீழ தனியரசமைக்க முனைந்த தமிழ் தேசியம் கிராம ராஜ்யம் என்ற அமைப்பின் ஊடக அந்த மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியாதா? தேசிய விடுதலைப் போராட்டதில் புலிகளிற்கு எந்தவித நிபந்தனையும் இன்றி தமது ஆதரவை செலுத்திய இந்தக் கூட்டமைப்பினர் கண்களுக்கு மாநில சுயாட்சி தான் தெரியுமா? அதைவிட மக்களிடம் அதிகாரங்களை வழங்க கூடிய கிராமிய சுயாட்சி இவர்களின் கண்களிற்குத் தெரியாது போனதன் மர்மம் என்ன?
இந்த உலகத்தில் நீங்கள் காண விரும்புகின்ற அந்த மாற்றம் நீங்களேயாக வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் வாசகங்கள் பொறித்த சுவராஜ்ய அல்லது கிரமா ராஜ்ய என்ற அமைப்பின் தேர்தல் துண்டுப்பிரசுரம் நம்பிக்கை தருவதாக இருந்தாலும் இதை யாரும் கண்டு கொள்ளாது விட்டது நாம் தொடர்ந்தும் வெற்றிபெறக் கூடியவர்களை மட்டுமே ஆதரிப்பதாக முடிகிறது
sina
– சுதந்திரம் என்பது அடி மட்டத்திலிருந்து ஆரம்பமாக வேண்டும் ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவுடையதாகவும் தனது விவகாரங்களை தானே கையாளக் கூடிய ஆற்றல் மிக்கதாக வளரவேண்டும்
-4500 கிராம சபைகளும் சுதந்திரமான சுயாட்சி அலகு முறைக்குள் உட்படுத்தப்படும்.
-இவ்வாறு மக்களிடம் மீள ஆதிகாரங்களை கையளிக்கும் வகையிலான திட்டங்களை வெளிப்படுத்தும் இந்த அமைப்பு
-மக்களால் தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகள் தவறிழைக்கும் பட்சத்தில் மக்களால் திருப்பியழைக்கும் உரிமையையும் இது உத்தரவாதம் செய்கிறது.
எல்லோரும் ஆட்சிக்குவரும்வரை இப்டி எல்லாம் சொல்லுவார்கள் வந்தபின்பு இவைகளை கொடிகட்டி பறக்கவிடுவார்கள் இதுதான் இலங்கையின் வரலாறு மறக்க முடியுமா!!!