November

November

ஜனாதிபதி தேர்தலில் சம்பந்தன் போட்டி?

Sambanthan_Rஎதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் போட்டியிடக் கூடுமென பிரபல ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனநயாக மக்கள் முன்னணியுடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகளின் பின்னர் இது குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சியின் இறுதித் தீர்மானம் இன்னும் ஒரு வார காலத்தில் அறிவிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அறிவித்துள்ளது.

இலங்கைப் பொருட்களைப் புறக்கணிக்கும் புலம் பெயர் தமிழர்கள்

000000.jpgபுலம் பெயர் தமிழர்களிடம் ஈழ விடுதலைப் போராட்டத்தை கையளித்திருப்பதாக சில தினங்களுக்கு முன் விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தது. புலம் பெயர் தமிழர்கள், அமெரிக்க வாழ் தமிழர்கள் என பலரும் இன்று ஒரு வித்தியாசமான, ஆனால் இலங்கைக்கு வலியைத் தருகிற ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் என இணையத்தள செய்திகள் குறிப்பிடுகின்றன.

அதுதான் இலங்கைத் தயாரிப்புகளைப் புறக்கணிக்கும் போராட்டம். அமெரிக்காவின் முக்கிய நகரங்களான வாஷிங்டன் டிசி, நியூயார்க், அட்லாண்டா, மியாமி, சான்பிரான்ஸிஸ்கோ, டல்லாஸ், பிரின்ஸ்டன், நியூஜெர்ஸி, சிகாகோ, ரேலி, சார்ல்ஸ்டன், கொலம்பஸ், ஒஹியோ மற்றும் பாஸ்டனில் ஒரே நேரத்தில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளதாக இணையச் செய்திகள் குறிப்பிடுகின்றன. .

இலங்கையில் ஆடைகள் தயாரித்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்து விற்கும் முதன்மை நிறுவனங்களான விக்டோரியா சீக்ரட் (Victoria’s Secret)  மற்றும் GAP ஆகிய நிறுவனங்களின் சில்லறை விற்பனைக் கடைகள் முன்பாகவே இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

அமெரிக்கத் தமிழ் அரசியல் செயல்அவையின் (United States Tamil Political Action Committee – USTPAC) ‘இலங்கை தயாரிப்புக்கள் புறக்கணிப்புப் போராட்டக் குழு’ (Sri Lankan Products Boycott Committee)  இந்தப் போராட்டங்களை ஒழுங்கமைத்து நடத்தி வருகிறது.

“நண்பர்களே… உங்களை இந்தக் கடைகளுக்குச் செல்ல வேண்டாம் என நாங்கள் தடுக்கவில்லை. தாராளமாகச் செல்லுங்கள். ஆனால் எந்தத் தயாரிப்பிலாது ‘Made in Srilanka’  என்று இருந்தால் அதை அங்கேயே போட்டுவிடுங்கள். அதில் இனப்படுகொலை செய்யப்பட்ட பல ஆயிரம் தமிழரது ரத்தம் தோய்ந்திருக்கிறது!” டாக்டர் எலீன் ஷாண்டர், டாக்டர் சோம இளங்கோவன், சிவநாதன் போன்றோர் இந்தப் போராட்டத்தை ஒழுங்கமைத்து சட்டரீதியாக வழிநடத்தி வருகின்றனர் எனக் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக நான்கு சர்வதேச அமைப்புக்களுக்கு அழைப்பு!

dayananda_disanayake.jpgதேர்தல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு நான்கு சர்வதேச அமைப்புக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய கண்காணிப்பாளர்கள் ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்கள் ஆசிய கண்காணிப்பாளர்கள் மற்றும் ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டில் 12 வீதமானோர் தேசிய அடையாள அட்டை இன்றி காணப்படுவதாகவும் அவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல்களை சுதந்திரமானதும் நியாயமானதுமான முறையில் நடத்துவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்கத் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் 

தமிழ், முஸ்லிம்களை புறக்கணிக்கவில்லை என்மீது அவர்கள் நம்பிக்கை வைக்கலாம் ஜெனரல் பொன்சேகா

sarath-pon.jpgஇந்த நாட்டில் வாழும் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களை தான் ஒருபோதும் புறக்கணிக்கவில்லை எனத் தெரிவித்துள்ள முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, பெரும்பான்மை சிங்கள மக்கள் தமிழ், முஸ்லிம் மக்களை அரவணைத்துச் செயற்பட வேண்டுமென்றே கூறியதாகவும் ஒருஊடகமே தனது கருத்தை திரிபுபடுத்தி வெளியிட்டதாகவும் குறிப்பிட்டார்.

நாட்டின் அரசியல் யாப்பின்படி சிங்களவருக்கு உள்ளது போன்றே தமிழ்,முஸ்லிம் மக்களுக்கும் சம உரிமை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஜெய்க்ஹில்டன் ஹோட்டலில் நடத்திய முதலாவது செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இராணுவத்தளபதியாக பதவிவகித்த காலத்தில் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில்;இலங்கையில் வாழும் தமிழ் மக்களும், முஸ்லிம்களும் உரிமை கோர முடியாதெனவும் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு கீழ்ப்படிந்தே நடக்க வேண்டுமென்றும் நீங்கள் தெரிவித்ததாக குறிப்பிட்டிருந்தது. இதன் காரணமாக சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களிடம் உங்கள் மீதான தப்பெண்ணமும், அதிருப்தியும் நிலவி வருகின்றது. இதற்கு நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கையில் கூறியதாவது; நான் ஒருபோதும் அவ்வாறு தெரிவிக்கவில்லை. அந்த ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் இந்த நாட்டில் சிங்கள மக்கள் பெரும்பான்மையினர்களாக உள்ளனர். அதேபோன்று சிறுபான்மை தமிழ்,முஸ்லிம் மக்களும் இங்கு வாழ்கின்றார்கள். அவர்களைப் புறந்தள்ளிவிட முடியாது. சிங்கள மக்கள் இந்த இரு சமூகங்களையும் அரவணைத்தே செயற்பட வேண்டுமென்றுதான் தெரிவித்தேன்.

ஆனால், எனது பேட்டியை அந்த ஊடகம் திரிபுபடுத்தியே வெளியிட்டது.எமது நாடு ஒரு ஜனநாயக நாடு. இங்கு நாம் எந்தச் சமூகத்தையும் தள்ளி வைத்துப் பார்க்க முடியாது. பெரும்பான்மைச் சிங்கள சமூகத்துக்கு இருக்கும் அதே உரிமை சிறுபான்மை தமிழ்,முஸ்லிம் சமூகங்களுக்கு இருக்க வேண்டியது கட்டாயமானதாகும். அவர்களும் இந்த நாட்டு மக்களே.அரசியல் யாப்பின் படி சகல சமூகத்தவர்களும் சமமானவர்களாகவே வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே, பெரும்பான்மை சிங்கள மக்கள் சிறுபான்மைச் சமூகங்களை அரவணைத்தே செயற்பட வேண்டும். இந்தக் கடப்பாட்டிலிருந்து எவரும் விடுபட முடியாது. தமிழ்,முஸ்லிம் மக்களை நான் ஒருபோதும் வேறுபடுத்திப் பார்க்க முற்பட்டதில்லை. எதிர்காலத்திலும் அவர்களைப் பிரித்துப்பார்க்க மாட்டேன்.

இந்த நாட்டின் பிரஜையான நான் அரசியலமைப்புக்கு கட்டுப்பட்டவன். அதன் பிரகாரம் அரசியலமைப்பில் வலியுறுத்தப்பட்டுள்ள விதப்புரைகளை மதித்து நடப்பவனாக இருப்பேன்.தமிழ்,முஸ்லிம் மக்கள் என்மீது நம்பிக்கை வைக்கலாம். நான் சகல இன மக்களையும் சமமாகவே மதிக்கின்றேன். நான் ஒரு பௌத்தன். ஆனால், சகல மதங்களையும் மதிப்பவன். எந்தவொரு மதத்தினரும் இனத்தினரும் என்னை நம்பலாம். அந்த நம்பிக்கைக்கு நான் ஒருபோதும் துரோகமிழைக்கமாட்டேனென்றும் தெரிவித்தார்.

முள்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, சிறுபான்மையினங்களுக்கு எதிரானவர் -அசாத்சாலி

sali.jpgஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவிலிருந்து கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் ஆசாத் சாலியை நீக்கியமைக்கு அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கட்சி மேற்கொண்ட தீர்மானம் தவறானதென்றும் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.  ஆசாத்சாலியை ஐ. தே. க. நீக்கியது தொடர்பாக நேற்று (29) அவரது தலைமையில் கூடி ஆராயப்பட்டது. இதன் போது தமது ஆதரவாளர்கள் இந்த முடிவுக்கு வந்தாக அசாத்சாலி தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியில் அசாத் தொடர்ந்து இருந்து செயற்படுவதற்கான சூழல் இல்லாதபட்சத்தில், அவர் அரசியலைவிட்டு விலகி விடாமல், அரசியலில் தொடர்ந்து நீடிப்பதற்காக மேற்கொள்ளும் எந்தத் தீர்மானத்தையும் ஆதரிக்கத் தயாரென நேற்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. முள்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, சிறுபான்மையினங்களுக்கு எதிரானவர் என்பதால், அவரைவிடுத்து ஐ. தே. க.வின் சார்பில் வேறொருவரை தேர்தலில் நிறுத்தும்படி ஆசாத் சாலி ஐ. தே. க.வைக் கோரியிருந்தார். ஆனால், இந்த கருத்து ஏற்கப்படாமல் கட்சியிலிருந்து அசாத் சாலியை நீக்கியமை தவறானதென்பது அவரின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜெனரல் சரத் பொன்சேகா கடந்த காலங்களில் தமிழ் பேசும் சிறுபான்மை மக்கள் தொடர்பில் நடந்து கொண்ட விதமும் அந்த மக்கள் குறித்து உள்ளூரிலும் சர்வதேச ரீதியாகவும், தெரிவித்து வந்த கருத்துகளும் ரகசியமானவை அல்ல.இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவை நியமிப்பதென அறிவித்திருப்பது வேடிக்கையானதொரு விடயமே என்று தெரிவித்த சாலி,

சிறுபான்மை மக்களுக்கு எதிரான ஐக்கிய தேசியக் கட்சியின் விரோதப் போக்கையே காட்டுகிறது. ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக ஒருவரை நிறுத்துவது ஆராயந்தபோது ஜெனரல் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்துவதென கட்சியின் உயர்பீடம் தெரிவித்தது. ஆனால் நானும் மேலும் இருவரும் இந்த முடிவை வன்மையாக எதிர்த்தோம். தமிழ் பேசும் சிறுபான்மை மக்களுக்கெதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள சரத் பொன்சேகாவை பொதுவேட்பாளராக நிறுத்தினால் ஐக்கிய தேசியக் கட்சி மீது சிறுபான்மையின மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்களென்றும் அந்த மக்கள் நிச்சயமாக ஜெனரலை ஆதரிக்க மாட்டார்களென்றும் தெரிவித்தேன்.

இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை. பயங்கரவாதப் பிரச்சினையே நிலவுகிறது. அதனை இல்லாமல் செய்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும். அதன் பின்னர் எந்தப் பிரச்சினைக்குமே தீர்வு காண வேண்டிய அவசியமில்லை. தமிழர்கள் இலங்கைக்குச் சொந்தமானவர்களல்லர் என்றெல்லாம் தமிழ் மக்கள் விரோதக் கருத்துக்களைப் பரப்புரை செய்து வந்த ஒருவரை ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி பொது வேட்பாளராக தெரிவு செய்வதனை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதென வலியுறுத்தினேன்.

ஆனால் நடந்தது என்ன? தமிழ் பேசும் மக்கள் சார்பில் என்னால் முன்வைக்கப்பட்ட கருத்துகள் புறந்தள்ளப்பட்டதுடன் என்னையும் கட்சியின் செயற்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கினர். தமிழ் பேசும் சிறுபான்மை மக்களுக்காகக் குரல் கொடுத்த எனக்கு ஐக்கிய தேசியக் கட்சி தந்த பரிசுதான் இது.

ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா வெற்றி பெறவே மாட்டார். அவருக்குத் தமிழ் பேசும் சிறுபான்மை மக்கள் வாக்களிக்கப் போவதுமில்லை. அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை அந்தக் கட்சி சிறுபான்மை மக்ககளின் நம்பிக்கையை இழந்து விட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

சரத் பொன்சேகாவின் கூற்றுக்கு எதிரான அறிக்கையில், நான் (அசாத் சாலி) மங்கள சமரவீர, திஸ்ஸ அத்தநாயக்க, ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் ஆகியோரும் கைச்சாத்திட்டோம். ஆனால், இன்று அவர்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டார்கள் என்றார்.

பொதுநலவாய அமைப்பு நாடுகளின் மாநாட்டை நடத்தும் வாய்ப்பினை இலங்கை இழந்தது அவுஸ்திரேலியாவில் நடக்கிறது

2011 ஆம் ஆண்டில் பொதுநலவாய நாடுகளின் (கொமன்வெல்த்) மாநாட்டை நடத்தும் வாய்ப்பை இலங்கை இழந்துள்ளது. இந்த மாநாட்டை அவுஸ்திரேலியாவில் நடத்துவதென நேற்று முன்தினம் சனிக்கிழமை ரினிடாட் அன்ட் டுபாக்கோவில் பொதுநலவாய அமைப்பு நாடுகளின் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டில் பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்துவதென ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மிக மோசமான மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி இந்த மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு பிரிட்டன்,அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து உட்பட சில நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. அதேநேரம், பொதுநலவாய நாடுகளில் அங்கம் வகிக்கும் 53 நாடுகளில் 45 நாடுகள் இந்த மாநாட்டை அடுத்த வருடம் இலங்கையில் நடத்த ஆதரவு வழங்கின.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்திலேயே இலங்கைக்கு இந்த ஆதரவு கிடைத்தது.எனினும், பிரதான நாடுகளான பிரிட்டன்,அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து போன்ற நாடுகள் தெரிவித்த கடும் எதிர்ப்பையடுத்து இந்த விடயம் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அடுத்த ஆண்டு இந்த மாநாட்டை அவுஸ்திரேலியாவில் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. அதேநேரம்,2013 இல் பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணக்கப்பாட்டு அரசியலால் மக்களுடைய பல பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும் – அமைச்சர் டக்ளஸ்

011109dag.jpgஎதிர்ப்பு அரசியலை நடத்துவதினை விட்டு இணக்கப்பாடு அரசியலை நடத்துவதின் மூலம் எமது மக்களுடைய பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியுமென சமூக சேவைகள் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வவுனியாவில் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்வதன் மூலம் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணமுடியும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

தனது அமைச்சு நிதியிலிருந்து வவுனியா பாடசாலைகளுக்கு புத்தகங்கள், கணனி மற்றும் தேவைப்படும் முக்கிய உபகரணங்களை வழங்கும் வைபவத்தில் அவர் உரையாற்றினார். தெற்கு வலயக் கல்வி பணிமனையில் நடைபெற்ற வைபவத்தில் அமைச்சர் மேலும் பேசுகையில் கூறியதாவது :-

இனம் தெரியாதவர்களினால் கடத்தல் என்பதை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது. கடத்தல் சம்பந்தமாக எதுவும் நடைபெற்றால் தெரியப்படுத்துங்கள். நடவடிக்கை எடுக்கப்படும்.

திருமலையில் காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு. கடற்படையினருக்கு தொடர்பில்லை – பேச்சாளர்

திருமலை கொட்பே மீனவர் துறைமுகத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்டு பின்னர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் இளைஞனுக்கும் கடற்படையி னருக்கும் எதுவித தொடர்பும் இல்லையென கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் அத்துல செனரத் தெரிவித்துள்ளார்.

குடிபோதையிலிருந்த மேற்படி சிங்கள இளைஞனை அன்றைய தினம் துறைமுகத்தில் கடமையிலிருந்த கடற்படை வீரரே கடத்திக் கொலைசெய்ததாக மீனவ சமூகத்தினால் முன்வைக்கப்படும் கூற்றை மறுக்கும் கடற்படைப் பேச்சாளர் கொலைக்கும் கடற்படையினருக்கும் எவ்வித தொடர்புமில்லையென தினகரனுக்குக் கூறினார்.

கஜேந்திரன் எம்.பி. நாடு திரும்பினார்

kajenthiran-empe.jpgவெளிநாட்டில் தங்கியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினரான செல்வராஜா கஜேந்திரன் நேற்று முன்தினம் சனிக்கிழமை நாடு திரும்பியுள்ளார். யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இவர் கடந்த மூன்று வருடங்களாக ஐரோப்பிய நாடுகளில் தங்கியிருந்தார். இறுதியாக நோர்வேயில் தங்கியிருந்து அங்கிருந்து நேரடியாக நேற்று முன்தினம் நாடு திரும்பியுள்ளõர். ஏற்கனவே வெளிநாடுகளில் தங்கியிருந்த அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் சில வாரங்களுக்கு முன் நாடு திரும்பியிருந்தனர். தற்போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான எஸ்.ஜெயானந்தமூர்த்தி மட்டுமே தொடர்ந்தும் வெளிநாட்டில் (லண்டன்) தங்கியிருக்கின்றார்.

மட்டு, கிளிநொச்சி, முல்லை பகுதிகளில் பெருந்தொகை வெடிபொருட்கள் மீட்பு

கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இராணுவம், கடற்படை, பொலிஸ் ஆகியன தனித்தனியே மேற்கொண்ட தேடுதலின்போது நேற்றைய தினம் பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக் குடியிருப்புக் கிழக்கில் எட்டாம் அதிரடிப்படையும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது 20 கிலோ நிறைகொண்ட சி 4 வெடி பொருட்கள், 69 – நிலக்கண்ணி வெடிகள், 13 புலிகளினால் தயாரிக்கப்பட்ட குண்டுகள், 125 டெட்டனேட்டர்கள், 1231 – 5.56 ரவைகள் ஆகியன கைப்பற்றப் பட்டுள்ளன.

இதேவேளை, புதுக்குடியிருப்புக் கிழக்கில் இராணுவத்தினரும் கடற்படை யினரும் இணைந்து நடத்திய தேடுதலின் போது மேலும் ஒரு தொகுதி வெடிபொருட்களான ரி-81 ரக ஆயுதம், 03 கிலோகிராம் சி4 வெடிபொருட்கள், 400 – 12.7 ரக ரவைகள், 700 எம். பி. எம். ஜி. ரவைகள், 2.5, 5 மற்றும் 10 கிலோ நிறைகொண்ட மூன்று கிளேமோர்கள், 08 – “தமிழன்” கைக்குண்டுகள், 01 – எம். பி. எம். ஜி. இணைப்பு, 2000 – எம். பி. எம். ஜி. ரவைகள், 2250 – ரி – 56 ரக ரவைகள் ஆகியனவும் மீட்கப்பட்டு ள்ளன.

கிளிநொச்சி, அடம்பன் பகுதியில் கண்ணிவெடியகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஹேலோ ட்ரஸ்ட் அமைப்பு அப் பகுதியிலிருந்து ஒரு நிலக்கண்ணி வெடியினையும் இரணைமடுவிலிருந்து இராணுவத்தின் பொறியியல் பிரிவு ஏழு கண்ணி வெடிகளை கண்டுபிடித்திருப்ப தாகவும் ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.