இப்பொழுது புயலுடன் பூகம்பமும் சுனாமியும் சேர்ந்து எமது ஈழத்து மக்களை நிர்க்கதியாக்கி விட்டு சென்று விட்டது. இதிலிருந்து எமது இனத்தை எப்படியும் நாம் காப்பாற்றியாக வேண்டும். முதலில் நல்ல மனிதர்கள், மக்களின் மேல் இரக்கமுடையவர்கள், பண்புடையவர்கள், நன்றியுணர்வுடையவர்கள் முன்வந்து தலைமை ஏற்று இந்த முட்கம்பி வேலிகளுக்குள் அடைபட்டுக்கிடக்கும் எமது சமுதாயத்தை காப்பாற்ற வேண்டும். சிங்கள இராணுவமும் இலங்கையின் இனத்துவேசமிக்க, அரசியல் தலைமைகளாலும் எமது இனம் கொஞ்சம் கொஞ்சமாக கொன்றொழிக்கப்பட்டு கொண்டு திட்மிட்டு உருத்தெரியாமல் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏவ்வகையான துரோகங்களை எமது மக்களுக்கு செய்கிறார்கள் என்பதையிட்டு நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
மக்களை பசி பட்டினி போட்டு சிந்திக்கும் ஆற்றலை மழுங்கடிக்கிறார்கள். ஒரு இடத்தில் நிம்மதியாக இருக்க விடாமல் செய்கிறார்கள். குடிப்பதற்கு தண்ணீர் ஒழுங்காக கொடுக்கிறார்கள் இல்லை. இளம் குழந்தைகளுக்கு போதிய உணவு வழங்குவதில்லை. பலரை கைது செய்து விசாரணை இல்லாமல் கொன்றொழித்து கொண்டிருக்கிறார்கள். இளம் பெண்களை இரகசியமாக நடு ராத்திரியில் வலுக்கட்டாயமாக கைது செய்து வல்லுறவுக்கு உட்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமக்கு நேரும் கொடுமைகளை பெண்களோ ஏனையவர்களோ வெளிப்படுத்தும் தைரியம் அற்றவர்களாக நாள் தோறும் மனதுள் அடக்கி குமுறிக் கொண்டிருக்கிறார்கள். புலியின் கொடுமைகளுக்குள் முடங்கி வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட மக்கள் அதற்கு ஈடான அரசின் அடக்குமுறைகளை முகம் கொடுத்து எதிர்க்க தைரியமற்றவர்களாக ஆக்கப்பட்டு விட்டனர். இவர்களைக் காக்க நாம் ஏதேனும் முயற்சிகள் செய்தோமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
பிரபாகரன் என்ற தனிமனிதன் இலங்கை ராணுவத்தின் இரும்பு பிடியில் சிக்கி தனது மரணத்தை எண்ணிக் கொண்டிருந்த வேளையில் குறிப்பாக லண்டனில் உண்ணாவிரதங்கள், ஊர்வலங்கள் என பல மாதங்களாக புலம்பெயர் தமிழர்கள் கொதித்தெழுந்து கொண்டிருந்தார்கள். இதற்கு தமிழ் தொலைக்காட்சிகளும் இருபத்தி நாலு மணிநேரமும் துணை நின்றன. இந்த போராட்டங்களில் புலியை தீவிரமாக எதிர்த்த நபர்களும் பங்கு பற்றினார்கள். சுhதாரண குடும்ப பெண்களும் கலந்து கொண்டார்கள். ஆனால் மூன்று லட்சம் மக்கள் சிங்கள அரசினாலும் அதன் ராணுவத்தாலும் மக்களின் சொந்த நிலத்தில் இருந்து துரத்தி அடிக்கப்பட்டு மிருகங்கள் போல் முட்கம்பி வேலிக்குள் முடக்கப்பட்ட போது இந்த தருணத்தில் எந்தவொரு உண்ணாவிரதமோ ஆர்ப்பாட்டமோ ஐரோப்பாவில் நிகழவில்லை. மக்களுக்காக போராடுகிறோம் மக்களுக்காக கலந்து கொள்கிறோம் என பதிலிறுத்தவர்கள் மௌனமாகினர். ஏன்? தமிழ் மக்களே இப்போதாவது நீங்கள் எல்லாம் புரிந்து கொண்டீர்களா? இந்த ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் ஏன் செய்தார்கள்? லண்டனில் இரண்டு லட்சம் தமிழர்கள் தாங்கள் பெரிய சாணக்கியர்கள்- நாங்கள் தெருவில் இறங்கினால் நாம் நினைப்பது நடக்கும் தானே என மிகவும் தேர்ந்த அரசியல் உணர்வாளர்களாய் எண்ணிக் கொண்டு தெருக்களில் நின்றார்கள். ஏன் என்பதை இப்பொழுதாவது புரிந்து கொள்ளுங்கள்.
எமது மக்கள் மழை, வெயில், பனி என்று பாராது திறந்த வெளி சிறையினில் அடிப்படை வசதிகள் கூட இன்றி அல்லல்படுகிறார்களே. ஆவற்றை மிகவும் இராஜதந்திர நோக்குடன் மிக நுண்ணியமாக செயற்பட்டு தீர்ப்பதற்கு யார் முன்வந்தார்கள்.? ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்.? குரங்கில் இருந்து மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்று எத்தனையோ யுகங்கள் கடந்து விட்டன. ஏன் இப்போதும் குரங்கின் புத்தியுடன் சுகபோகமாக வாழ்வதற்கு மற்றவர்களின் குருதியை தேடுகிறீர்கள். கூட்டமைப்பு சிறீகாந்தா வன்னியில் யுத்தத்தை நிறுத்த முற்பட்டிருந்தால் அது புலம்பெயந்தவர்களுக்கு அவமானமாகி போயிருக்கும் என பேட்டி கொடுக்கிறார்.
துடிக்கத் துடிக்க மக்கள் கொல்லப்படுவதைக் கண்டு ஒரு கணமேனும் உங்கள் மனங்கள் பதைபதைக்கவில்லை என்றால் யுத்தம் முடிந்து புலியின் பக்கமாகவோ அரசின் பக்கமாகவோ கிடைக்கப் போகிற சொகுசு வாழ்க்கைகாகவா காத்திருந்தீர்கள். கூட்டமைப்பு இதுவரை மக்களின் பெயரால் பெற்ற சம்பளம் எவ்வளவு.? இந்த சம்பளம் அவர்கள் படித்து பட்டம் பெற்று வேலை செய்ததற்காகவா கிடைத்தது? மக்களின் பிரதிநிதிகள் என்ற போர்வையில் தானே சுகபோகம் அனுபவிக்கிறார்கள். இவர்கள் தமது சம்பளத்தின் எத்தனை வீதத்தை இந்த நாதி இழந்த மக்களுக்கு கிள்ளிக் கொடுத்திருக்கிறார்கள். தங்கள் எம்பி பதவியை குறிப்பிட்ட காலங்கள் வரையில் தக்கவைத்து விட்டால் அதன்பிறகு வாழ்நாள் முழுதும் கிடைக்கப் போகின்ற அரச சலுகைகளுக்காகவும் தமது குழந்தை குட்டிகளுக்காகவும் வன்னிமக்களின் குருதியில் நீச்சலடித்த வெட்கங் கெட்ட இந்த கூட்டமைப்பு முதலில் அரசியலை விட்டு இனி வெயியேற வேண்டும். பணம் பதவிக்காக ஏன் தமிழினத்தை விற்கிறீர்கள்.
தமிழ் ஈழ மக்களே! இப்பொழுது மிகவும் நொந்து இருக்கிறீர்கள். உங்களுக்கு அறிவுரை கூற முடியாது. ஆனாலும் எச்சரிக்கையாய் சொல்கிறேன். இன்றைக்கு இருபத்தைந்து வருடங்களின் முன்பு இயக்கங்களின் தலைவர்கள் செய்த படுபாதகமான கொடூரங்களை நாம் பிரசுரமாக 1985 ம் ஆண்டு வெளிக் கொண்டு வந்தோம். அன்று நாம் புலிகளாகிய சுக்கிளா, ரவி போன்ற ஈன இரக்கமில்லா கொலைகாரர்களால் அச்சுறுத்தப்பட்டு நாட்டை விட்டு விரட்டப்பட்டோம். ஊண் உறக்கமின்றி, இரவு பகல், நேரம், காலம் என பார்க்காமல் விடுதலைக்காய் முழு மூச்சாய் நேர்மையாக உழைத்தவர்கள் அனைவரையும் இந்த கொலை வெறியர்கள் அடியோடு சாய்த்து மண்ணோடு மண்ணாக்கி விட்டார்கள். கிழக்கு மாகாணத்தின் விடிவெள்ளியாகி விட்ட கருணா செய்த கொடூரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு கணமேனும் கள்ளம் கபடமின்றி சிரிக்க முடியாத இந்த கருணாவை பிரபாகரனை எப்படி வெறுத்து ஒதுக்குகிறீர்களோ அப்படியே வெறுத்து ஒதுக்குங்கள். கருணா செய்த கொலைகளையும், கொள்ளைகளையும், பாலியல் வல்லுறவுகளையும் வெளியே விடுங்கள்.
எம்மையெல்லாம் முள்வேலிக் கம்பிகளுக்குள்ளும், அன்னிய தேசங்களிலும், ஆழ்கடலுக்குள்ளும் தள்ளியது போதாது என்று மீண்டும் எம்மை அழித்து இன்னொரு முள்ளிவாய்க்காலுக்கு தயார்படுத்த வேலை தொடங்கியுள்ளார்கள். நாடு கடந்த தமிழ் ஈழம் வட்டுக் கோட்டை தீர்மானம் என வரிந்து கட்டிக் கொண்டு புறப்படடுள்ள இந்த பேரவைகாரர்களிடம் ஒரு கேள்வியை முன்வைக்க விரும்புகிறேன்.
யார் இவர்கள்.? ஏப்படி இந்த தமிழர் பேரவையை உருவாக்கினார்கள்.? ஏவ்வளவு மக்கள் இவர்களை தேர்ந்தெடுத்தார்கள்.? என்ன சேவை செய்ததற்காக தேர்ந்தெடுத்தார்கள்.? இவர்களின் பின்னணி என்ன.? இவர்களை மேலும் கேட்கிறேன்.
1)நீங்கள் ஒவ்வொருவரும் யார் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.!
2)உங்களின் சமுதாய பின்னணி கடந்த காலம் முழுவதும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதையும் தெரியப்படுத்துங்கள்!.
3)உங்களது பொருளாதார பலம் என்ன. உங்கள் சொந்த உழைப்பில் எவ்வளவு எம் இனத்திற்காக செலவழித்திருக்கிறீர்கள்.!
4)இளமைக் காலத்தில் உங்களது சமுதாயச் செயற்பாடுகள் என்ன என்பதையும் தெரியப்படுத்துங்கள்.
தமிழ் மக்களே! இப்படியே நாம் தொடர்ந்தும் மௌனமாக இருந்தோமானால் மேலும் பல கொடியவர்கள் எமக்கு தலைவனாக தோன்றி மிச்சம் மீதி இருக்கின்ற எம் இனத்தை கூண்டோடு அழித்து விடுவார்கள். மிகவும் எச்சரிக்கையோடு இருங்கள். மனிதன் எப்போதும் போராடிக் கொண்டுதான் இருக்க வேண்டும். ஆனால் சரியான நல்ல வழிமுறைகளைப் பின்பற்றி எமது சமுதாயத்தை மற்றவர்கள் வெறுக்காதபடி போராட வேண்டும்.
உலக தமிழனமே எமது தேசத்தில் இவ்வளவு கொடூரமான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கையில் 25 கிலோ மீற்றருக்கு அப்பால் இருக்கும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளையும் மக்களையும் வேறுபடுத்தி முதலில் நாம் இனம்காண வேண்டும். கோடிக்கணக்கான பணத்தை வைத்துக் கொண்டு, தள்ளாடும் வயதில் இன்னமும் அரசியலில் வெல்வதற்காக எமது மக்களை அடகுவைத்தவர்ளை முதலில் தூக்கி எறியுங்கள்.
எமது போராட்டம் அதற்கான தீர்வுகள் என்பவற்றை நாம்தான் பெற்றுக் கொள்ள வேண்டும். மற்றவர்களை நம்பி மீண்டும் எனது இன மக்களை இன்னொரு தடவை பீரங்கிக் குண்டுகளுக்கும், செல்லடிகளுக்கும் இரை கொடுக்கும் நிலைக்கு உட்படுத்தாதீர்கள். வன்னி மக்களுக்கு உதவ விரும்பினால் ஒவ்வொருவரும் உங்கள் சொந்தங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஊடாக முயலுங்கள். அதை விடுத்து இங்கு வரும் உண்டியல்காரரிடமும் அரசியலில் நண்பன் யார்? பகைவன் யார்? என்ற அரிச்சுவடியே தெரியாத ஞான சூனியங்களிடமும் ஏமாறாதீர்கள்!