சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழமே தமிழரின் விருப்பம் என்றும் அதற்கான போராட்டத்தை இனி முன்னெடுத்து தலைமையேற்று நடத்தும் பெரும் பொறுப்பும் கடமையும் அனைத்துத் தமிழ் பேசும் மக்களிடமும், குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இதே போன்றதொரு அறிக்கையை பிரித்தானிய தமிழர் பேரவையும் அதே காலப்பகுதியில் வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் மின்னஞ்சல் மூலம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
09.11.2009
சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளின் இனவாத உணர்வும், தமிழ் தேசிய இனத்தின் மீது கொண்டுள்ள வரலாற்று ரீதியான பழிவாங்கும் மனப்பான்மையும் ஒவ்வொரு காலகட்டங்களிலும் அதிகரித்துச் செல்வது வரலாற்றின் உண்மையாகும்.
காலத்திற்குக் காலம் ஆட்சி பீடம் ஏறுகின்ற சிங்கள அரசியல் தலைவர்கள் தமிழ் பேசும் மக்களின் நலன்களில் அக்கறை செலுத்தாது அவர்களது உரிமைகளைப் பறித்து தமிழ் தேசிய இனத்தைச் சிதைவடையச் செய்வதையே நோக்கமாகக் கொண்டிருந்தனர். அந்த வகையில் தொடர்ச்சியாக தமது அரசியல் உரிமைகளை இழந்த தமிழ் பேசும் மக்கள் அவ் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு போராட்டத்தை நிகழ்த்த வேண்டிய வரலாற்றுத் தேவை தோற்றுவிக்கப்பட்டது.
அதன் ஆரம்ப வடிவமாக அகிம்சை வழியிலும் அரசியல் முறையிலும் நடைபெற்ற போராட்டத்தை வன்முறை மூலம் அடக்க முற்பட்டதாலேயே தமிழ் மக்களின் போராட்டம் ஆயுதப்போராட்டமாகப் பரிமாணம் பெற்றது. ஈழத்தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் பல ஆண்டுகளாக தொடர்ந்துவரும் விஷயம் என்பதுடன் அதை அடையும் வரை தமிழ் மக்கள் ஒய்ந்துவிடப் போவதுமில்லை.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலான ஆயுதம் தாங்கிய வீரமிகு போராட்டம் முள்ளிவாய்க்கால் மானிடப் பேரவலத்தினைத் தவிர்ப்பதற்காக ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டன. அத்தகைய இன்றைய சூழலில் இப்போராட்டத்தைத் தொடர்ச்சியாகத் தலைமையேற்று நடத்த வேண்டிய பெரிய பொறுப்பும் கடமையும் அனைத்துத் தமிழ் பேசும் மக்களிடமும், குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசையான தமிழீழம் என்பது விடுதலைப் புலிகளின் விருப்பம் மட்டுமே என்று திரித்துக்கூறி, நியாயமானதும் ஈழத் தமிழரின் மிக நீண்டகாலப் போராட்டத்தின் எதிர்பார்ப்புமாகிய சுதந்திரத்தையும் இறைமையையும் மறுதலிக்கும் முயற்சிகள் பல்வேறு மட்டங்களிலும் நடைபெற்று வருகின்றன.
உண்மைக்குப் புறம்பான மாறுபட்ட செய்திகளையும், கருத்துக்களையும் பரவலடையச் செய்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைச் சிதைக்கும் நோக்குடனும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
ஆகவே, இன்றைய நிலையில் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத்திற்கான தமது விருப்பையும், தாம் அதற்கான தாயகமும் தேசியமும் சுயநிர்ணய உரிமையும் கொண்டவர்கள் என்பதையும் முழு உலகிற்கும் ஆணித்தரமாகச் சொல்ல வேண்டியதும், விடுதலைக்கான அரசியற் கட்டமைப்பை உருவாக்க வேண்டியதும், ஈழத் தமிழ் மக்களின் உடனடியான வரலாற்றுக் சடமையாகிறது.
இவ்வகையில், ஆயுதப் போராட்ட காலத்திற்கு முன்பாகவே தமிழ் பேசும் மக்கள் தமது அரசியல் அபிலாசையை மக்களாணை மூலம் வெளிப்படுத்தியமையும், முழுமையான சுதந்திர விருப்பைப் பிரகடனப்படுத்தியதுமான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீண்டும் வழிமொழிவது, ஐயத்துக்கிடமின்றி இன்றைய மக்களின் விருப்பும் அதுவே என்பது உலகிற்குத் தெளிவாகப் பறைசாற்றும் நிகழ்வாக அமையும்.
இந்த வழிமொழிவு இன்று ஈழத் தமிழரின் தேசிய அரசியற் போக்கைத் தீர்மானிக்கும் முதல் கட்டமாகும்.
அதேநேரத்தில் பன்னாட்டுப் பரிமாணம் பெற்றுவிட்ட இலங்கைத் தீவின் அரசியற் சூழலிலும் ஈழத்தமிழரின் தற்போதைய நிலையிலும் அவர்களது அரசியற் கட்டமைப்பாக ஜனநாயக வழியில் தெரியப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசு சர்வதேசரீதியில் தமிழ் மக்களது உரிமைகளை நியாயப்படுத்தி தனியரசு அமைய பாடுபடுவது இன்றைய காலகட்டத்தின் கட்டாய தேவையாகவும் உள்ளது.
அதேவேளை, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் உருவாக்கப்படுகின்ற மக்கள் அவைகள் ஜனநாயக முறையில் அமைவதானது மக்கள் பங்களிப்பை விரிவுபடுத்தவும், வல்லரசுப் பரிமாணங்களிலிருந்து தேசிய அரசியலைப் பாதுகாக்கவும், நாடு கடந்த தமிழீழ அரசின் அடிமட்டத்தை வலுப்படுத்தவும், இவ்வரசின் நடைமுறைச் செயற்பாட்டுக்கு உதவக்கூடியதாகவும் அமையும்.
மேற்கூறிய மூன்று அரசியல் முன்னெடுப்புக்களில் ஏதாவது ஒன்று குறைவுபடினும் அது எல்லாவற்றையும் பாதிப்பதாக அமையும், இவை ஒன்றுக்கொன்று இயைவாகவும் பாதுகாப்புத் தரக்கூடியவையாகவும் அமைதலே இலக்கை அடைவதற்கு வழிவகுக்கும்.
இன்றைய சூழலில் தமிழ் பேசுகின்ற மக்கள் தங்கள் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தாங்களே தலைமையேற்று நடத்துகின்ற ஜனநாயகம் தழுவிய போராட்டத்தை தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாங்கள் ஆதரிப்பதுடன் இச்செயற்பாடுகள் முழுமையான மக்கள் பங்களிப்புடன் செய்து முடிக்கப்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
தாயக விடுதலைக்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களையும், அளப்பரிய தியாகங்கள் புரிந்த மக்களையும் எங்கள் மனங்களில் நிலைநிறுத்தி தாயக வேட்கையுடன் விடுதலை பெறும்வரை ஒன்றிணைந்து உழைத்தலே மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
._._._._._.
பிரித்தானிய தமிழர் பேரவையின் அறிக்கை:
ஈழத்தமிழர் போராட்டம், புலம் பெயர் தமிழ்மக்களின் கரங்களுக்கு வந்தடைந்துள்ள நிலையில், அரசியல் மயப்படுத்தப்பட்ட தாயகம் நோக்கிய இந்த புனிதப் பணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இணைந்து வருகின்ற இந்த முக்கிய காலப்பகுதியில் இதனை சிதைக்கும் பல நடவடிக்கைகளும், சதிகளும் அரங்கேறத் தொடங்கியுள்ளன.
எமது மக்களின் ஒற்றுமையை எம்மவர்களையே வைத்து பிளவுகளை ஏற்படுத்தி போராட்டத்தை குலைக்கும் முயற்சியில் இலங்கை அரசும் அதனோடு சேர்ந்தியங்குபவர்களும் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த ஆறுமாதத்துக்குள் எமது மன உறுதியை குலைப்பதற்கும் போராட்டத்தினை பலவீனப்படுத்துவதற்காகவும் யாரும் எதிர்பாராத அளவிலான ஒரு பாரிய சதி உருவாக்கப்படுகின்றது.
மிகவும் அவதானமாக இலங்கை அரசியலை கவனித்து, சதிவலைக்குள் எமது விடுதலைப்போராட்டம் சிக்கிவிடாது பாதுகாப்பது, புலம்பெயர் மக்களது கடமையாகும் இற்றைக்கு ஐநூறு ஆண்டுகளுக்கு முன் தமிழீழம் அதன் இறையாண்மையை இழந்தது. தொடர்ந்து வந்த காலனித்துவ ஆட்சிகளுக்கு அடிமைகளாக தமிழினம் வாழவேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் சிங்கள அரசினால் எமது தேசிய இறையாண்மை, சுயநிர்ணய உரிமை பறிக்கப்பட்டது.
முப்பது வருட அறவழிப் போராட்டமும், முப்பது வருட ஆயுதப்போராட்டமும் மீண்டும் எமது தாயகத்தின் விடுதலைக்கும் அதன் மீதான நம்பிக்கைக்கும் அத்திவாரமிட்டது. ஆனால் இப்போது சர்வதேசத்தின் கூட்டுச் சதியினால் எமது தேசக்கட்டுமானம் சிதைக்கப்பட்டது மட்டுமல்லாமல் விடுதலை மீதான நம்பிக்கையையும் சிதைத்துள்ளது போன்ற ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நம்பிக்கைச் சிதைவின் வெளிப்பாடாகத்தான் பலர் பல தீர்வுத்திட்டங்களோடு செயற்பட ஆரம்பித்துள்ளனர். பல்லாயிரக் கணக்கான உயிர்த்தியாகத்தின் மூலம் கட்டப்பட்ட, காப்பாற்றப்பட்ட எமது தேசத்தின் இறையாண்மையை சமரசப்படுத்தும் எந்த நடவடிக்கைகளையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதேவேளையில் எமது மக்களின் இன்றைய துயரைத் தீர்ப்பதற்க்கு பல தளங்களிலும் வேலை செய்ய வேண்டியதன் அவசியத்தையும் மறுப்பதற்க்கில்லை.
தாயகம். தேசியம். இறமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை எனும் விழுமியங்களோடு பணியாற்றும் அனைவரோடும் பிரித்தானிய தமிழர் பேரவை இணைந்து பணியாற்றி வருகின்றது. ஆனால் அதேவேளை தமிழ்த் தேசியத்தை பலவீனப் படுத்தும் தரப்பினரோடோ அல்லது தமிழ்த்தேசியத்தை சமரசப்படுத்தும் தரப்பினரோடோ பேரவை ஒரு பொழுதும் சேர்ந்தியங்காது என்பதனைத் மீண்டும் தரிவித்துக் கொள்கின்றது.
பேரவை, பிரித்தானிய சட்டங்களுக்குட்பட்டு மிகவும் வெளிப்படையாக இயங்குகின்றது. எமது பிராந்திய கிளைகளின் ஊடாகவோ அல்லது தலைமையகத்துக்கோ தொடர்பு கொண்டு தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம். சமகாலத்தில் பேரவையின் சார்பாக பேசவல்லவர்கள் சர்வதேச ஊடகங்கள், தமிழ் ஊடகங்கள் ஆகியவற்றில் கிரமமான முறையில் தோன்றி பேரவையின் செயற்பாடுகள் குறித்தான விளக்கங்கள் அளித்து வருகின்றனர்.
அத்தோடு ஊடக தர்மத்தோடு இயங்கும் சகல ஊடகங்களோடும் தமிழர் பேரவை செயற்படுகின்றது. மக்கள் கட்டமைப்பை உருவாக்குதல், இதுவே எமது அரசியல் வேலைத் திட்டத்தின் அடித்தளமாகும். தற்போது பேரவைஇ மக்கள் அனைவரையும் உள்வாங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அது பேரவைக்கு ஓர் ஜனநாயக அடிப்படையிலான கட்டமைப்பை உருவாக்க உதவும்.
அத்தோடு மக்களே தமது பிரதிநிதிகளை தெரிவு செய்து இப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. இந்த இலக்குகளை முன்வைத்து பேரவையானது பல்வேறு செயல்த்திட்டங்களை முன்னெடுக்கின்றது. அத்தோடு எம் முன்னே காத்திருக்கும் பாரிய வேலைத்திட்டத்திற்கான ஆட்பலம் மற்றும் அனைத்து வளங்களையும் சீர் செய்ய உதவிடும். எம் அங்கத்தவர்கள் உங்கள் அனைவரினதும் வாசல் தேடி வருகின்றார்கள்.
எமது பணியில் நீங்களும் முழுமையாக இணைய வேண்டிய காலம் வந்துவிட்டது. அத்தோடு பின்வரும் செயற்திட்டங்களையும் பிரித்தானிய தமிழர் பேரவை முன்னெடுக்கின்றது. திறப்பு போராட்டம், மனித உரிமை கவுன்சிலுடனான பரப்புரை, இலங்கைக்கான ஐரோப்பிய வரிச் சலுகைக்கு எதிரான போராட்டம், இலங்கை உற்பத்தியையும் இலங்கையில் முதலீடுகளையும் எதிர்த்துப் போராடுதல். போரால் பாதிக்கப்பட்டோர் பதிவு, போர்க்குற்றத்தை நிருபித்தல், இனப்படுகொலையை வெளிக்கொணரல்.
எமது போராட்டம் சர்வதேச அங்கீகாரத்தை பெறவேண்டும். அதற்கு நாம் சர்வதேசத்தின் ஆட்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், சர்வதேச சமூகத்தினர் ஆகியோரின் மனங்களை வெல்லவேண்டும் . அதேவேளை ஈழத்தில் பெரும் துன்பங்களை அனுபவிக்கும் மக்கள் இயல்பு நிலைவாழ்க்கைக்கு திரும்ப வேண்டும், இந்த இலக்குகளை அடைய வேண்டிய பெரும் பணி நம் முன்னே இருக்கின்றது இதற்க்காக தமிழ் தேசிய தளத்தில் இயங்கும் அனைத்து அமைப்புக்களும் இணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இதேவேளையில் மக்களின்முன் வெளிப்படையாக அரசியல் பணிகளை முன்னெடுக்காது இரட்டைக் கொள்கையுடன் இயங்கும் அமைப்புக்கள், தனி நபர்களை மக்கள் உடனே இனங்கான வேண்டும் என பிரித்தானியத் தமிழர் பேரவை கேட்டுக்கொள்கின்றது.
நன்றி
பிரித்தானியத் தமிழர் பேரவை