உரிய காலத்துக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். ஜனாதிபதியின் இந்த தீர்மானம் குறித்து தேர்தல் ஆணையாளருக்கு நேற்று நண்பகல் சுப நேரத்தில் அறிவிக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சகல கட்சித் தலைவர்களையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று காலை சந்தித்தார். ஜனாதிபதித் தேர்தலை உடனடியாக நடத்தத் தீர்மானித்திருப்பதாக கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி இங்கு அறிவித்தார்.
ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தை கட்சித் தலைவர்கள் அனைவரும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டதாகவும் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டார். இந்தச் சந்திப்பில் சகல மாகாண சபை முதலமைச்சர்களும் கலந்து கொண்டனர். ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ 2005 நம்பவர் 18ம் திகதி இலங்கையின் 5வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அவரின் பதவிக் காலம் 2011 நவம்பர் 18 ஆம் திகதி நிறைவ டைய உள்ள நிலையில் ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டி நடத்த ஜனாதிபதி முடிவு செய்துள்ளார்.
ஜனாதிபதி தனது முடிவை முறைப்படி கடிதம் மூலமாக நேற்று (23) தேர்தல் ஆணை யாளருக்கு அறிவித்தார். இதன்படி ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்படும் திகதியை தேர்தல் ஆணையாளர் வெகுவிரைவில் அறிவிப்பார் என தேர்தல் செயலக வட்டாரங்கள் கூறின.
நான்காண்டுகள் முடிவடைந்த பின்னர் எந்த நேரத்திலும், மேலுமொரு தவணைக்குப் பதவி வகிப்பதற்காக தேர்தல் மூலம் ஆணையொன்றுக்கென மக்களை வேண்டி நிற்பதற்கான தமது முன்னத்தை பிரகடனம் மூலம் வெளிப்படுத்தலாம் என அரசியலமைப்பின் 31 (3) (அ) (1) இந்த சரத்து ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கிறது. இதன்படி முன்கூட்டி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.