26

26

க.பொ.த. உயர்தரப் பரீட்சை (A/L 2009) விஞ்ஞானப் பிரிவில் தமிழ் மாணவி அகில இலங்கை ரீதியில் முதலிடம்

mythili.jpgஇன்று வெளியாகியுள்ள கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளில், கொழும்பு சைவ மங்கையர் கழகத்தில் கல்வி பயின்ற மைதிலி சிவபாதசுந்தரம் என்ற தமிழ்மாணவி அகில இலங்கை ரீதியில் விஞ்ஞானப் பிரிவில் (A/L 2009) முதலிடம் பெற்று  சாதனை படைத்துள்ளார்.

இதேவேளை, அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள யாழ்.மாவட்டம், பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் மாணவனான, அன்டன் கிறிஸ்டர்ஸ் ஜோன் நிராஜ் கணிதப் பிரிவில், அகில இலங்கை ரீதியாக இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

விடுதலைப் புலிகளை வெற்றிகொண்டது பொன்சேகா மட்டுமல்ல – இராணுவத் தளபதி

jagath_jayasuriya.jpgவிடுதலைப் புலிகளை வெற்றிகொள்ள சரத்பொன்சேகா மட்டுமல்லாது அனைத்து உயர்நிலை அதிகாரிகளும் இராணுவ வீரர்களும் பாடுபட்டுள்ளனர் என்றும் பதவியுயர்வு மற்றும் இடமாற்றம் தொடர்பான பொன்சேகாவின் கூற்று ஏற்றுக்கொள்ளக்கூடியதன்று எனவும் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, இராணுவத்தின் 58ஆவது படையணியின் தலைமையத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பொது வேட்பாளராக சரத் பொன்சேகா- ஸ்ரீ.ல.சு.க.மக்கள் பிரிவு – ஐ.தே.க. தீர்மானம்

sara-pon.jpgஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக முன்னாள் கூட்டு படைகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகாவை நிறுத்துவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தீர்மானித்துள்ளன.

இன்று இடம்பெற்ற கட்சியின் உயர்குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

புலிகளின்குரல் வானொலியின் மாவீரர் நாள் சிறப்பு ஒலிபரப்பு

puli_kural.jpgபுலிகளின் குரல் வானொலி சேவையின் மாவீரர் நாள் சிறப்பு ஒலிபரப்பை சிற்றலை, செய்கோள் மற்றும் இணையம் ஊடாக கேட்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
 
இது தொடர்பில் புலிகளின்குரல் வானொலி சேவையினர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

மதிப்புக்குரிய தமிழீழ மக்களே! தமிழக உறவுகளே!  புலம்பெயர் வாழ் தமிழீழ மக்களே! உலகவாழ் எம்முறவுகளே! தமிழீழத்தின் தேசியக்குரலான புலிகளின்குரல் வானொலியின் மாவீரர் வார சிறப்பு ஒலிபரப்புக்களை அனைத்துலகத்திற்கும் ஒலிக்கும் வண்ணம் புலிகளின்குரல் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

அந்த வகையில் எமது இணைய தளத்திலும், செய்கோள் ஊடாகவும் 24மணி நேரமும் புலிகளின்குரல் வானொலியினை நீங்கள் கேட்கலாம். மாவீரர் வார சிறப்பு ஒலிபரப்புகளை தாயக நேரம் அதிகாலை 5.00 மணி தொடக்கம் 22.00 மணி வரை pulikalinkural.comல் ஒலிக்கவுள்ளது

செய்கோள்
அலைவரிசை விபரம்:
Name: NTR- Tamil
Satellite: Eurobird 9
Frequency: 11919
Polarization: Vertical
Symbol Rate : 27500
Fec : 3/4

அதே நேரம் புதன்,வியாழன்,வெள்ளி ஆகிய நாட்களில் சிற்றலையூடாக தமிழீழம், இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து ஆசிய நாடுகளுக்கும் ஒலிக்கவுள்ளது அதன் அலைவரிசை விபரம் இங்கு தரப்பட்டுள்ளது.

புதன்,வியாழன் ஆகிய நாட்களில் தாயக நேரம் 15.30மணி தொடக்கம் 18.30மணிவரை 17560 என்ற அலைவரிசையிலும், 18.30மணி தொடக்கம் 19.30மணிவரை 11510 என்ற அலைவரிசையில் எமது சிறப்பு ஒலிபரப்புக்களை கேட்கலாம்.

வருகின்ற மாவீரர் நாள் சிறப்பு ஒலிபரப்பினை பிற்பகல் 15.30மணி தொடக்கம் 18.30மணிவரை 17560 என்ற அலைவரிசையிலும்
18.30மணி தொடக்கம் 20.30மணி வரை 11510 என்ற அலைவரிசையிலும்
20.30மணி தொடக்கம் 23.30மணி வரை 6225 என்ற அலைவரிசையிலும் மாவீரர் நாள் ஒலிபரப்புக்கள் ஒலித்து நிறைவு பெறும்.

தமிழீழத்தின் தேசிய நாளான மாவீரர் நாள் சிறப்பு ஒலிபரப்புக்களை மேற்கூறப்பட்ட அலைவரிசைகள் ஊடாக நீங்கள் கேட்கலாம்

இவ்வண்ணம்
புலிகளின்குரல் நிறுவனம்
info@pulikalinkural.com

புதிய பிரதேச செயலகப் பிரிவுகள்!

sarath_amunugama.jpgஅரச நிர்வாகம் அபிவிருத்தி மற்றும் மக்கள் தேவைகளை அடிப்படையாகக்கொண்டு புதிய நிர்வாக அலகுகளை அமைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அரச நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

அதன்படி புதிய பிரதேச சபை பிரிவுகள் புதிய கிராம சேவகர் பிரிவுகள் போன்றவற்றை அமைக்கவும் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. மேலும் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட பிரிவுகள் தொடர்பாக வர்த்தமானி மூலம் அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

நபியவர்களின் பெயரில் பத்திரிகையில் படம் வெளியானமைக்கு ஜனாதிபதி ஆழ்ந்த கவலை! – பிரியதர்ஷன யாப்பா தகவல்

anura.jpgஇலங் கையின் தமிழ் தேசிய நாளிதல் ஒன்றில் கடந்த செவ்வாயன்று வெளியான முகம்மது நபி (ஸல்) அவர்களுடையதென பிரசுரிக்கப்பட்ட படம் ஒன்று தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிர்ச்சியடைந்ததாகவும் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது முஸ்லிம்களின் கலாசாரத்தில் உருவப்படத்துக்கு முக்கியத்துவமளிக்கப்படுவதில்லை. அதிலும் முகம்மது நபி (ஸல்) அவர்களின் உருவப்படத்தை எங்கும் காணமுடியாது.

இந்த உருவப்படம் வெளியான தகவல் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினாலும் மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள,  பிரமுகர்களினாலும் உடனடியாக ஜனாதிபதியின் கவனத்துகு கொண்டுவரப்பட்டபோதே ஜனாதிபதி இது தொடர்பில் தமது ஆழ்ந்த கவலையை வெளியிட்டார். அத்துடன் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டார்

அந்தப் பத்திரிகை நிறுவத்தின் தவறு காரணமாக இச்செயல் இடமபெற்றிருந்தாலும் அதனால் பாதகமான வேறு விளைவுகள் ஏற்படக்கூடாதென்ற காரணத்தினாலேயே ஜனாதிபதி உடனடி நடவடிக்கைகு உத்தரவிடடுள்ளார் என்றும் அமைச்சர் கூறினார்.

சுடச் சுடச் ஆற்றும் மாவீரர் தின உரை : ஈழமாறன்

maaverar_thinam_2009என் அன்பார்ந்த தழிழீழ மக்களே!

இந்த நாள் வரலாறு பொன் எழுத்துக்களால் பொறிக்க முடியாத நாள். தழிழ் மக்களிடம் இருந்த எல்லா நகைகளையும்  பறித்து தமிழீழ வைப்பகத்தில் வைத்திருந்த போது மகிந்தவின் கொள்ளையர் சூறையாடிச் சென்றுவிட்டதால் இந்த நாள் பொன் எழுத்துக்களால் பொறிக்க முடியாத நாள்.

இந்த நாள் ஒரு பொல்லாத நாள். புலம் பெயர் பொறிக்கிகள் சிலர் என் படத்தைப் போட்டு டயறி அடித்து, கார்த்திகைப் பூச் செய்து BTF உங்களுக்கு காதிலை பூச் சுத்தும் நாள்.  கலண்டர் தயாரித்து விற்கும் ஒரு காசுழைக்கும் நாள்.

இந்த நாள் வெண்புறா கட்டியவர்கள் கக்கூஸ் கட்டிக் கணக்கு காட்டும் ஒரு எளிய நாள்.

maaverar_thinam_2009என் அன்பார்ந்த தமிழீழ மக்களே!

புது மாத்தளனில் மகிந்தவின் ஆக்கிரமிப்பு படைகள் போட்டுத் தள்ளியது போக மிச்சம் மீதி இருக்கும் மக்களே! அந்த நாள் நான் வணங்கா மண் கப்பல் வரும் வந்து என்னையும், மனிசி பிள்ளைகளையும் ஏத்திக்கொண்டு போகும் என்று எண்ணிக் கொண்டிருந்த நாள். உந்த லண்டன் வரதர் கப்பல் விடுவார் என்று நான் பார்த்துக்கொண்டிருக்க ரீல் விட்ட நாள்.

நான் வருடம் தோறும் கார்த்திகை 27ஆம் நாளன்று நீச்சல் குளத்தில், என் குடும்பத்துடன் நீராடி விட்டு, உலகம் முழுக்க பரவியிருக்கும் அரைநாக் கொடி மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம். ஏன் நான் உங்களை தொப்புள் கொடி உறவுகள் என்று அழைக்காமல் அரைநாக்கொடி என்று அழைக்கிறேன் என பலர் கேட்பீர்கள் என்று எனக்குத் தெரியும். என்னை முள்ளி வாய்க்கால் தண்ணியில் தோய்த்தெடுத்து அம்மணமாகக் போட்டிருந்த படத்தில் காணப்பட்ட அரைநாக் கொடியைப் பாத்து தம்பிகள் லண்டன் சாந்தனும் றெஜியும் என்னை அழைத்து, அண்ணா அரைநாக் கொடியுடன் உங்கள் படத்தைப் பார்த்ததும் நாம் ஆனந்தத்தில் அழுது விட்டோம் அண்ணா என்றார்கள். இனி வரும் காலங்களில், நீங்கள் ஆற்றும் மாவீரர் செய்தியெல்லாம் தொப்புள் கொடி என்று வரக்கூடாது என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள். சுயபுத்தியில் எதுவுமே இன்றுவரை செய்துவராத நான் இந்த வாக்கிய மாற்றத்தையும் பிரக்ஞைபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளேன்.

Piraba_in_Swimmingpoolஎன் அன்பார்ந்த தமிழீழ மக்களே!

27ஆம் நாளன்று வெளிவர வேண்டிய செய்தி ஏன் 26ம் திகதியே தேசம் நெற்றில் வருகிறதே என்று நீங்கள் திகைத்துப்போய் இருப்பீர்கள். புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மாக்களே! நீங்கள் ஆனந்தவிகடன் புத்தகத்தை தவறாது வாங்கிப் படித்து அதன் மூலம் அறிவைப் பெருக்கி அந்த அறிவை வைத்து எனக்கு ஆலோசனை வழங்குவதும் அந்த ஆலோசனைகளை நான் நீச்சல் குளத்தில் இருந்தபடியே செவிமடுத்து செயலாற்றி வந்ததும் ஒரு பெரிய ரகசியம் அல்ல.

அந்த வகையிலே அண்மையில் ஆனந்த விகடன் சஞ்சிகையில் வந்திருக்கும் கட்டுரை புலம் பெயர் மாக்கள் எனக்கு நாசூக்காக கொடுத்த ஆலோசனை என்பதை நான் அறிவேன்.

PottuAmman_and_Pirabaharanபொட்டன் எனக்கு சுத்திப் போட்டு தான் தலைவனாகப் பாக்கிறான் என்று எனக்கு எப்போவோ தெரியும். ஆனால் ஆனந்த விகடன் புத்தகத்தில் அறிக்கை விட்டு விட்டு மாவீரர் செய்தியை அவனே வாசிக்க முற்படுவான் என்று வற்றாபழை அம்மனறிய நான் யோசிக்கவில்லை. ஆனால் உண்மையிலையே சொல்கிறேன். பொட்டன் மாவீரர் செய்தி வாசிக்கப் போறான் என்றதும் எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. நான் ஏன் சிரித்தேன் என்பது உங்களுக்குத் தெரியும்.  அவன் தனக்கென ஒரு படையே வைத்திருக்கிறான் என்பதால் அவனை சுலபத்தில் போட்டுத் தள்ளவும் முடியாது.  அதனால்தான் பொட்டனுக்கு முதல் மாவீரர் செய்தி வரவேண்டும் என்று என் குடும்பத்துடன் கலந்தாலோசித்து 26ம் திகதியே செய்தியை வெளியிட்டு பொட்டன் முகத்தில் கரியைப் பூசி உங்களை மகிழ்விக்கலாம் என்று முடிவு செய்தேன். உண்மையில் நானா யோசிச்சு இயக்கத்திலை எடுத்து செயல்படுத்திய ஒரே ஒரு முடிவு இதுதான்.

Piraba_Aliveஎன் அன்பார்ந்த தமிழீழ மக்களே!

நான் இறந்து விட்டேன் என்று ஒரு பிரிவும் நான் இறக்கவில்லை என்று ஒரு பிரிவும் சண்டை போட ஆரம்பித்து விட்டார்கள் என்று உளவு ஆய்வுகள் முன்னுக்குப் பின் முரணாக அறிக்கைகளை வெளியிடுகின்றன. எல்லா நாட்டிலையும் குளிரையும் பொருட்படுத்தாம எங்கள் தலைவர் பிரபாகரன் எங்கள் தலைவன் பிரபாகரன் என்று வாய் கிழியக் கத்திய உங்களுக்குத் தெரியும் எனக்கு என்ன நடந்தது என்று. வெளிநாட்டில் இருக்கும் சொத்துப் பத்தைச் சுருட்ட நினைக்கும் துலைவாருக்கும் தெரியும் எனக்கு மகிந்த அரசும், இந்தியாவும், சீனாவும், இன்னும் சில நாடுகளும் சேந்து என்ன செய்தன என்று.  இந்த வருடம் என் பிறந்த நாளை எப்படி எப்படியெல்லாம் கொண்டாட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். நினைச்சாலே அழுகை அழுகையா வருது. புலம் பெயர்ந்துபோன நீங்களும் எனக்கு கட்அவுட் கட்டி ஆளுயரத்திற்கு கேக்கும் வெட்டி காசு கலெக்ஷன் விழாவும் வைக்கும் திட்டத்தோடு இருந்ததiயும் நான் நன்கு அறிவேன்.

போன வருசம் என்ரை உரையிலை சொன்னனான் உவன் மகிந்த ஒரு சரியான ஆளெண்டால் இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு கொண்டு வரவேணும் எண்டு. யாரோ சொன்னாங்கள். உவன் மகிந்தவுக்கு நல்லாத் தழிழ் தெரியும் என்று. அந்த நம்பிக்கையில் மகிந்தா நீ ஒரு நேர்மையான ஆள் என்றால் இந்தப் பிரச்சனைக்கு இந்த வருடத்துக்குள் ஒரு முடிவு கொண்டு வா என்று எச்சரித்தது உண்மைதான். ஒரு முடிவு கொண்டு வரவேணும் எண்டதை பிழையா விளங்கியதால், நான் முள்ளிவாய்க்கால் வரைக்கும் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். நாசமாய் போன மகிந்த நான் சொன்ன முடிவை தாறுமாறா விளங்கி ஆகாயத்தாலை அடிச்சான். தரையாலை அடிச்சான். காரை முள்ளு குத்த, கரம்பை முள்ளுக் கால் கிளிக்க, நாயுருவி தோலுருவ, யங்கம் பத்தைக்குள் பதுங்கியதும், நாய் போல நான் ஓடியதும் இப்போது நினைத்தாலும் எனக்கு உடம்பெல்லாம் கிடு கிடுக்கிறது.

வன்னி மக்கள் எப்பிடித்தான் ஒன்றரை வருடங்களுக்கு மேல் இந்தத் துன்பத்தை எனக்காக தாங்கினார்களோ தெரியாது. ஒரு தலைவனைக் காப்பாற்றுவதற்கு எந்தவிதமான துன்பங்களையும் தாங்க வேண்டும். எந்த விதமான உயிர்த் தியாகங்களையும் செய்ய வேண்டும் என்று கார்ல் மாக்ஸ்சோ லெனினோ அல்லது எங்கட புலம்பெயர் பேப்பர் மார்க்ஸிட்டுக்களோ சும்மா மாவோயிஸ்டுக்களோ அல்லது கருணாநிதியாவது சொல்லியதற்கு இணங்க மக்கள் தாங்களாகவே விரும்பி அரச கட்டுப்பாட்டுக்குள் செல்லாது எனது உயிரைக் காப்பாத்த முயற்சி எடுத்தார்கள்.

நடேசனுக்குச் சொன்னன். இடம் பெயர்ந்த மக்களுக்கு என்று ஜ.நா குடுக்கிற எல்லா சாப்பாட்டையும் வாங்கி விழுங்கி ஏப்பம் விடுறதிலை இருக்காம, அவன் கோப்பத்தாயவுக்காவது போனடிச்சு சுடுறதை நிப்பாட்டு என்று கேள் என்றேன். நான் கேட்டதாகச் சொல்ல வேண்ணடாம் என்று கூடச் சொன்னேன். இந்த விசயம் வெளியில் தெரிந்தால் மலை போல நம்பியிருக்கும் தமிழ் மக்கள் துடிச்சுப் போயிடுவினம். தலைவர் பயமில்லாமல் துணிவோடதான் இருக்கிறார் என்று அடிக்கடி அறிக்கையும் விடச்சொன்னன்.

பசில் சொன்னானாம் உங்கட ஆள்தான் முடிவுக்கு கொண்டுவரச் சொன்னவர். விரைவிலை கொண்டுவாறம் என்று. எனக்கு தூக்கிவாரிப் போட்டுது. நாசமறுப்பார் தழிழ் மக்களின்ரை பிரச்சனைக்கு முடிவு கொண்டு வரச் சொன்னா என்ரை குடும்பத்துக்கு ஒரு முடிவு கொண்டுவாறாங்கள் என்று. என்ன செய்வது. பொட்டனிடம் கேட்டேன் இதுவரை எத்தினை ஆயிரம் மக்கள் இறந்து விட்டார்கள் என்று. அவன் சொன்னான் கிளிநொச்சி வரை எங்கட படை கிளிச்சுப் போடும் என்று நம்பியிருந்த மக்களிலை ஒரு 1 000 பேர் வரை செத்துப் போச்சினம். தெடர்ந்து நாங்கள் ஒடப் போறம் என்பதால் இன்னும் 25 அல்லது 30 ஆயிரம் பேர்வரை சாகக் கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு என்று. உடனே நான் வேதனையின் விளிம்புக்குச் சென்றேன். நான் மீண்டும் பொட்டனிடம் நிதானமாகக் கேட்டேன். அரச கட்டுப்பாட்டுக்குள் தப்பிச் சென்ற துரோகிகளை விட எங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வீர மிகு மக்கள் எத்தனை ஆயிரம் தேறும் என்று. பொட்டனின் பதில் கிட்டத் தட்ட மூன்று லட்சம் பேர் எஞ்சியுள்ளார்கள் என்பது.  

அப்போதுதான் லண்டனில் நீங்கள் எல்லாம் மக்கள் வெளியேற விருப்பமில்லாமல்தான் இருக்கிறார்கள். உவள் சீவரத்தினத்தின்ர பெடிச்சிக்கு நான் ரொம்ப கடமைப்பட்டிருக்கிறள். கலியாணம் காட்சி ஒன்றும் இல்லாதவள். எங்களுக்காக லண்டனில உரக்க உரக்க குரல் கொடுத்தவள். தனக்கு பிள்ளையல் இருந்தா தன்ரை பிள்ளையலை புலிப்படையில சேர்திருப்பன் என்று லண்டன் பார்லிமென்டிலேயே கதைச்சவள். ஆன அவளின்ர பிரெண்ட் அங்கையற்கண்ணி கடைசி நேரம் காலை வாரிப் போட்டு டக்ளஸ்சோட ஓடிப்போய் ஒட்டிவிட்டால். உவன் நாசமாப் போன டக்ளஸ்க்கு எத்தினைதரம் ரை பண்ணின்னான். அவனுக்கு ஆயுள்கெட்டி. அது போகட்டும்.

சருவதேசமே (தேசம்நெற் என்று நினைக்க வேண்டாம்) மக்களை அங்கே வைத்தே போரை நிறுத்து என்று கத்திக் கூத்தடித்தீர்கள். என் கட்டளையை மீறி சில தளபதிகள் மக்களை அவ்வப்போது திறந்து விட்டார்கள். அந்தத் தளபதிகளை எல்லாம் போட்டு மணலில் தாட்டேன். மீறி தப்பி ஓட நினைத்த மக்களையெல்லாம் மாடுகளைப் போல சுட்டுத் தள்ளச் சொன்னேன். நான் சொல்வது ஏதாவது பொய்யாய் இருக்குமோ என்று சந்தேகம் கொள்பவர்கள் வன்னி முகாம்களுக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் பேசிப் பாருங்கள்.

விசயத்துக்கு வருகிறேன். முடிவை மாத்துங்கோடா உங்களுக்கு புண்ணியமா கிடைக்கும் எண்டு எத்தினை தடவை கெஞ்சியிருப்பன். ஆண்ட பரம்பரையின் மிடுக்குடன் ஆயிம் தடவை போன் பண்ணியிருப்பன். கரிகால சோழனைப் போல் பங்கருக்குள் பதுங்கியிருந்து பாத்மநாதனை, போனிலை இந்த யுத்தத்தை நிறுத்து என்று நான் கேட்காத நாள் கிடையாது. அறுவார் கே.பி, ரூட் ரவி, தனத்தான், ரெஜி உவங்கள் அமெரிக்கா வருது. ஆபிரிக்கா கொதிக்குது. அண்டாடிக்கா எகிறுது. கெலி; வட்டமடிக்குது. டாக்குத்தர் ஜயா அனுப்பின வணங்கா மண் சுணங்காம வருது என்று உவங்கள் விட்ட கதைகள் ஏராளம்.

என் அன்பார்ந்த புலம்பெயர் மாக்களே!

ஒரு கட்டத்தில் எனக்குத் தெரிஞ்சு போச்சு. கிளிநொச்சியும் போச்சு. நான் போட்டிருந்த ரவுசரும் கிளிஞ்சு போச்சு. அப்பவும் பொட்டன் சொன்னவன். அண்ணை வெளிநாட்டிலை இருக்கிறவங்கள் உங்களை பப்பா மரத்திலை ஏத்திறாங்கள். ஒரு நாளைக்கு பொத்தெண்டு கீழை போடுவாங்கள். அது மட்டுமில்லை. போட்ட கையோட யாழ்ப்பாணத்திலை கோட்டல் கட்டவும் ரோட்டுப் போடவும் மகிந்த மாத்தையாவப் போல ஒரு மனுசன் கிடையாது என்று அறிக்கை விடவும் கோப்பி குடிக்கவும் கும்மாளம் அடிக்கவும் ஓடுவாங்கள் என்று.

உண்ணா விரதம் இருந்த இடைக்காடர் அம்சாவுக்கு இடையாலை சைக்கிளோடுவார், தூள் விநாயகர் செல்வராசா முதலைக் கண்ணீர் வடிப்பார், சிலர் கூட்டத்திற்கு லேற்றா போனாலும் ஜயின்ரைன் தியறி எல்லாம் சொல்லுவாங்கள். அக்காமார் மகிந்த மாத்தையாவை விட்டா உலகத்திலையே வேறை நல்ல ஆள் கிடையாது என்று அறிக்கை விடுவார்கள். சிலர் வன்னி முகாம் எல்லாம் சொர்க்க பூமி மாதிரி கிடக்கு என்று சொல்வார்கள். வெளிநாட்டுப் புலியும் குழுவை அனுப்பும். மகிந்தவைப் பற்றி புகழ்ந்து தள்ளும். திருமாவளவனுக்கு நீங்கள் குடுத்த காசிலையே பொன்னாடை வாங்கிக் கொண்டு போய் மகிந்தவுக்கு போர்ப்பாங்கள் என்று.  நான் யார் சொன்னதைக் கேட்டேன் இவன் சொல்வதைக் கேட்பதற்கு.

இப்ப எனக்குப் புரிகிறது. புளியங்குளம் புடிச்சிட்டான். நெடுங்கேணி நொருக்கிப் போட்டான். மல்லாவிலை புல்லுக் கூட இல்லை. ஒட்டுசுட்டானிலை எல்லாரையும் சுட்டுப் போட்டான். ஆனையிறவு போச்சுது. கிளாலி கிழிஞ்சுது. கல்லாறு அணைக்கட்டுக்கு குண்டு வைச்சு சுனாமி விளையாட்டுக் காட்டுவம் என்டா அதுவும் வாய்க்கேல்ல. கிளிநொச்சி மிஞ்சும் எண்டு பாத்தா அது பழஞ்சீலை போல சறக் எண்டு போச்சுது.

என் அன்பார்ந்த புலத்து மாக்களே!

தோல்வி நிச்சயம் என்று தெரிஞ்சும் ஏன் இந்த நாய் மக்களை விடாம அடைச்சு வைச்சிருக்கிறான் எண்டு நீங்கள் சில வேளைகளில் சிந்தித்திருக்கக் கூடும். சொல்றன் கேளுங்கோ. எனக்கு புலத்தில இருந்து அழைப்புகள் வந்தது. சனம் ஆயிரக்கணக்கில செத்தால்தான் வெள்ளைக்காரணுக்கு இரக்கம் வந்து உவன் மகிந்தவுக்கு ஒரு பாடம் புகட்டுவான்கள் என்றான்கள். எங்கட சனம் செத்து மகிந்தவுக்கு பாடம் படிப்பிக்கிறதோ சனத்தைக் கொல்லாம ஏதும் செய்யேலாதோ என்று நான் திரும்பவும் கேட்டனான். அதுக்கு அவங்கள் நான் பங்கரிலை இருக்கிறதாலை உலக விசயம் தெரியாதாம் என்று சொல்லிப்போட்டு என்னவோ கோதாரியோ கொசோவாவோ என்ற இடத்தில இப்படித்தான் நடந்ததாம் என்று அந்தத் துலைவார் சொன்னாங்கள். அப்பதான்  ஒரு தீர்க்கமான முடிவு செய்தேன். இன்னும் எத்தினை ஆயிரம் பேர் செத்தாலும் எத்தினையாயிரம் பேரைக் கொன்றாலும் பரவாயில்லை நானும், first ladyயும் குடும்பமும் தப்பும் வரை மக்களை வெளியேற அனுமதிக்க வேண்ணடாம் என்று. உந்த விசயத்தை கேள்விப்பட்ட என்ரை மூத்தவன் வந்தவன் போனவன் குஞ்சு குருமன் என்று பார்க்காம கொசாவோ மாதிரி எங்களுக்கும் தீர்வு வரும் என்று கொன்று குவிச்சம். நாங்கள் கொல்லுறதிலும் பார்க்க மகிந்தவின்ரை படையைக் கொண்டு வந்து கொன்று குவிக்க வைத்தம். அது தான் எங்கட மில்ரி ஸ்ரரர்ஜி. அதை உலகம் எதிர்பார்க்கவில்லை. எங்கட திறமையைக் கண்டு வயந்து போனார்கள். சனம் கூட்டமா இருக்கிற இடங்களில இருந்து எங்கட வீரப்படை கிறைனைட்டை கழட்டி எறியும். உடன மொக்குச் சிங்களவன் அந்த இடத்துக்கு செல்லடிப்பான். சனம் சாகும் நாங்கள் விடியோ பிடித்து அனுப்புவம் நீங்களும் பாத்து மகிழ்ந்திரப்பியல் தானே.

உங்களுக்குத் தெரியும் என்ரை உயிருக்கு ஆபத்தெண்டா படிச்சவன் படிக்காதவன் குஞ்சு குருக்கான் எண்டு பேதம் பாக்காமல் சுட்டுத் தள்ளத் தயங்க மாட்டன் எண்டு. அப்பிடி இருக்கும் போது உங்கட பெஸ்ற் லேடி இருக்கிறாள். என்ரை பிள்ளையள் வேறை பயந்து கொணடிருக்குதுகள். இப்பிடி என்ரை முழுக் குடும்பபே சாவுக்கு பயந்து சயனைட் குப்பிகளை கழற்றி வீசிவிட்டு வீராவேசத்தோடு என்னோடு கதறி அழுது கொண்டிருக்கும் போது மக்களாவது மண்ணாங் கட்டியாவது.

வீட்டுக்கு ஒரு புள்ளை எண்டு ஒரு காலத்திலை புடிச்சது என்னவோ வாஸ்தவம் தான். அதுக்காக கொள்கையை மாத்தக் கூடாதா என்ன. கலியாணம் கட்டக் கூடாது எண்டன் பிறகு மதியுடன் மயங்கிய பின் கலியாணத்துக்கு முன்பே கட்டிலைப் பரிமாறியபின் கொள்கையாவது மசிராவது என்று மாற்றிக் கொண்டேன். அரசுடன் சேந்தா துரோகி என்றேன் பின் நானே பிறேமதாசவுடன், மகிந்தவுடன் கூட்டு வைத்தேன். கோடி கோடியா பணம் புரட்டினேன். கொள்கை எண்டா என்ன? எனக்கு சரி எண்டா சரி யாகவும், பிழையெண்டா பிழையாகவும் எடுத்துக் கொள்வதுதானே. அதைப் புரிந்து கொள்ளாமல் வன்னி மக்கள் சேட்டை விட்டினம். நாங்கள் ஒழிச்சு வந்து இருக்கேக்குள்ளை சாப்பாடு தந்தவதான். பாதுகாத்தவை தான். அதுக்காக என்ரை குடும்பம் அழியும் போது வன்னியாற்ரை புள்ளையள் வாழுறது எந்த புத்தகத்திலை எழுதியிருக்கு சொல்லுங்கோ பாப்பம். வன்னியாக்களுக்குத் தெரியவேணும் நாங்கள் முஸ்லிம் மக்களைத் துரத்தும் போது என்ன செய்தனாங்கள் என்று. காதிலை கையிலை கிடந்த நகைகளையெல்லாம் எப்பிடிப் புடுங்கினோம் என்று.

யாழ்ப்பாணத்திலை இருந்து இடம் பெயரும் போது யாழ்ப்பாண மக்களுக்கு என்ன செய்தனாங்கள். மக்கள் எல்லாம் புலிகளோடுதான் என்று காட்டுவதற்காக மாடுகளை விடக் கேவலமா சாய்ச்சுக் கொண்டு வந்தனாங்கள். மூதூரிலை மட்டும் என்ன குறைவே. இதெல்லாம் தெரிஞ்ச பிறகும் நாங்கள் மனிதாபிமானமாய் நடக்கேல்லை எண்டா உதென்ன விளையாட்டு. உவங்கள் கொஞ்சப்பேர் சொல்லுவாங்கள் ஜரோப்பாவிலை அதென்னது? ஆ… பின்னவீனத்துவ விளையாட்டோ?

Piraba_in_Swimmingpoolநான்தான் சொன்னேன். வரமறுக்கிற பிள்ளைகள் எல்லாரையும் அந்த இடத்திலை சுடுங்கள். தடுப்பவர்கள் யாரும் வந்தால் வாகனத்தை விட்டு ஏத்துங்கள் என்று. பச்ச மட்டை வெட்டி பாடம் புகட்டுங்கள் என்று. அன்னம்மாவும் பொன்னமாவும் கந்தப்பனும் ஏரம்பனும் பிள்ளையை இழந்தா எனக்கென்ன. எனக்கு மதி டாலிங் உயிரோடு இருக்கவேணும். பாலச்ந்திரன் நீந்த நீச்சல் குளம் வேணும். அதனால் தான் தழிழீழ வரலாற்றில் போராட்டம் இக்கட்டான சூழலிலில் இருக்கும் போது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்தேன். அதுதான் எத்தினை ஆயிரம் வன்னி மக்களும் மாடுகளும் செத்தாலும் பரவாயில்லை. அமெரிக்காவின் கப்பல் வந்து என் குடும்பத்தை ஏத்தும் வரைக்கும் நோ எஸ்கேப் என்று.

இந்த இடத்தில் சில வெளிவராத வரலாற்று உண்மைகளை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். சும்மா சைக்கிளிலை போன என்னைக் கூப்பிட்டு துவக்கைத் தந்து துரையப்பாவைச் சுடச்சொல்லிப்போட்டு உவன் அமிர்தலிங்கம் பிறகு எனக்கு அரசியல் தெரியாது எண்டு சொன்னான். அதற்காகவே அவனைப் போட்டுத் தள்ள முடிவு செய்தேன். அது மட்டுமல்ல பக்கத்தில் படுத்திருந்த போது பாயில் வைத்துச் சுட்ட மைக்கல்,  களத்தில் விட்டுச் சுட்ட செல்லக்கிளி,  காட்டிக்குடுத்து கொன்ற குட்டிமணி, தங்கத்துரை, சுந்தரம், விக்ரர், இந்திய ராணுவத்துடன் பேச அனுப்பிய ஜொனி, எவ்வளவு பனைகள் முறியாமல் இருக்க முறிஞ்ச பனைகளைப் பற்றிப் புத்தகம் போட்ட ராஜினி,  கருணாநிதிக்கே ஆப்பு வைச்சுப் போட்டுச் சுட்ட பத்மநாபா, என்னைப் பற்றி கவிதை எழுதாமல் பெண்ணியம் கத்தரிக்காய் என்று எழுதிய செல்வி,  என்று நான் நேரடியாக போட்டது. என் உத்தரவில் போட்டது. உத்தரவு வந்திருக்கிறது என்று நினைத்து போட்டது என்று தழிழ் ஈழப் போராட்டத்தில் நான் சுட்ட பட்டியல் இந்த மாவீரர் உரையில் போட நினைத்தால் அது 1000 பக்கங்களை தாண்டிவிடும். சொந்தப் போராளிகளையே போட்டுத் தள்ளியிருக்கிறேன். மாற்றுக் கருத்தாளர்கள் எம்மாத்திரம். 

Hunger_Strikeஇந்த வகையில் லண்டன் தம்பி பரமேஸ்வரனுக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். தம்பி நீ எனக்காக விழுங்கு விரதம் இருந்தாய். நான் இங்கு மூன்று வேளை உண்டு உற்சாகமாய் இருந்தபோது நீ அங்கே ஒரு வேளை மட்டுமே விழுங்கி இருந்தாய். அதற்காக நான் பெருமைப் படுகிறேன். KFC கோழிக் கடையில் நீ சாப்பாடு வாங்காது McDonald இல் மட்டுமே சாப்பாடு வாங்கிச் சாப்பிட்டாய் என்ற ஆத்திரத்தில் கே.எவ்.சி கிளப்பிய புரளியைக் கண்டு நீ ஒன்றும் ஆடிவிடாதே. புலத்து அறளை பேந்ததுகளுக்கு நீ வழக்கு போடுவதாய் சொல்லியே காலத்தைக் கடத்து. வணங்கா மண் போகுது. வருகுது. இறக்குது ஏத்துது எண்டு மூத்தி அண்ணை விட்ட புலுடா வையே நம்பின மக்களுக்கு இது ஒன்றும் பெரிதாக இருக்காது.

என் அன்பார்ந்த புலம் பெயர்ந்த மாக்களே!
 
சருவதேசத்திற்கு குறிப்பாக அமெரிக்காவுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். பாலா அண்ணா அடிக்கடி சொல்லுவார். அமெரிக்கன் தனக்குத் தேவை எண்டா காலையும் பிடிப்பான் தேவை முடிஞ்ச கையோடை ஆளைப் போட்டும் தள்ளிப் போடுவான் எண்டு. எனக்குத் தெரியும் பாலா அண்ணைக்கு உந்த உள்ளநாட்டு உளவுஸ்தாபனங்கள் எல்லத்தோடையும் தொடர்பு இருக்கெண்டு.  என்னுடைய விசயத்திலையும் இதுதான் நடக்கும் எண்டு முன்கூட்டியே பாலா அண்ணை சொன்னவர். நான் சொன்னன் அமெரிக்கன்ரை காலிலை போய் என்னை விழச் சொல்லிறியா என்று. அதற்கு அந்த தேசத்தின் குதம் மன்னிக்கவும் குரல் (அதென்ன கீழே இருந்து வந்தா என்ன மேலை இருந்து வந்தா என்ன அந்தாளிட்டை இருந்து வாறது ஒண்டுதானை) சொன்னான் நீ எம்.ஜி.ஆரின் காலிலேயே விழுந்தனி. அமெரிக்கா எந்தப் பெரிய நாடு. அமெரிக்கான்ரை காலிலை விழுந்தா சர்வதேச அரசியலும் உனக்குத் தெரியும் என்று புலம் பெயர் சனம் பாராட்டும். அதனால தான் நான் அமெரிக்கா என்ன சொன்னாலும் செய்வதென்ற முடிவு செய்தேன். 

அமெரிக்காவே! இலங்கை இந்திய ஒப்பந்தத்தைக் கிழிக்கச் சொன்னாய். கிழித்தேன். இந்திய ஆமியுடன் அடிபடு எண்டாய். அடிபட்டடேன். ராஜீவ் காந்தியை கொல் என்றாய். கொன்றேன். நீ கேட்டு நான் எதைச் செய்யாமல் விட்டேன். நீ எனக்கு சத்தியம் செய்து கொடுத்தாய் தமிழீழம் எடுத்துத்  தருவதாய். உன்னை நம்பித்தானே கடைசிக்காசு அந்தக் காசு இந்தக்காசு என்று புலத்து மக்களிடன் வசூலிச்சேன். அதிலே தங்களுக்கு எண்டு எடுத்த காசு போக மீதி எல்லாம் உன் நாட்டு ஆயுதக் கொம்பனிகளுக்குத் தானே கொடுத்தேன். கப்பல் அனுப்பிறன் கப்பல் அனுப்பிறன் என்று கடசிலை மகிந்த மாத்ததையாவிட்டை கெஞ்ச விட்டிட்டாயே அமெரிக்கா. நீ நாசமா போக. நீ அழிஞ்சு சின்னா பின்னமாக. என் அம்மணச் சாபம் சும்மா விடாது.

என் அன்பார்ந்த தமிழீழ மக்களே

இந்த நாளில் நான் உங்களுக்கு ஒரு பெரிய ஆலோசனை வழங்க உள்ளேன். எதிர்காலத்தில் நான் கொண்டது போக தமிழ் மக்கள் ஏதேனும் மிச்சம் மீதி இருந்தால்இ மகிந்த அவர்களைப் போட்டுத் தள்ளாமல் இருந்தால் அவர்களுக்காக போராட நினைக்கும் எல்லோருக்கும் எனது புத்திமதி இதுதான். தனித் தமிழீழம் உருவாக வேண்டுமானால் நீங்கள் செய்யவேண்டியது ஒரு சின்ன வேலை தான். தயவு செய்து பிளேன் வாங்க வேண்டாம். வாங்கி விளையாட்டுக் காட்ட நினைச்சு நான் பட்ட பாடு உங்கள் எல்லாருக்கும் தெரியும். அப்படியானால் என்ன செய்தால் புரட்சி வெல்லும் என்று நினைக்கிறீர்கள்? மிகச் சுலபம். நான் என்ன என்னவெல்லாம் இந்த 35 வருடங்களாக செய்தேனோ அதை தயவு செய்து செய்வதற்கு கனவிலைகூட நினைக்காதையுங்கோ. அதாவது படுக்கiயிலை வைச்சுச் சுடுறது. படிச்சவனை சுடுறது. மாற்றுக் கருத்தாளர்களைப் போடுறது. உளவுப் படை கட்டிறது. கட்டின கையோடை சயனைட்டைக் குடுத்து சாவெண்டு சொல்லிறது. முக்கியமா மருந்தடிக்கிற பிளேனை வாங்கி பொசுக்கெண்டு குண்டு போடுறது. போட்ட கையோடை போட்டோ எடுத்து தமிழ்நெற்றிலை போடுறது போன்ற எந்த எழிய காரியங்களையும் செய்திடாதையுங்கோ. இன்னொரு செய்தி கடைசிவரைக்கும் புலம் பெயர்ந்த மகக்ளிட்டையும் குறிப்பா சீமான் மாதிரி இந்திய கூத்தாடிகளிட்டையும் அட்வைஸ் கேட்டு ஒரு முடிவும் எடுக்காதையுங்கோ. பிறகு முடிவு என்னவாய் இருக்கும் எண்டு தெரியும்தானை.   முக்கியமா என்படத்தை கட்டவுட் செய்து தமிழீழம் எங்கும் கட்டி வைப்பது மட்டுமல்லாமல் கீழே ஒரு வாசகத்தiயும் போட்டு வையுங்கள். “இவனைப்போல யாராவது இயக்கம் கட்ட நினைத்தால் உடனே அடித்துக் கொல்லுங்கள” என்று. “35 வருடங்கள் தயவு செய்து காத்திருக்க வேண்டாம்” என்று.   

டேய் மகிந்தா! நான் உனக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். நீ என்னைப் பிடிப்பாய் என்று எனக்குத் தெரியும். புடிச்சால் உடுப்பு உரிவாய் என்றும் எனக்குத் தெரியும். உரிஞ்சா போட்டோ எடுப்பாய் எண்டும் எனக்குத் தெரியும். எடுத்தா யூ ரியூப்பிலை போடுவாய் எண்டும் எனக்குத் தெரியும். ஆனால் புலம் பெயர் மக்களும் சீமானும் விசுக்கோத்தும் மன்னிக்கவும் வைகோவும் நான் ஆஸ்பத்திரி கட்டிக் கொடுத்த நெடுமாறனும் இது வெறும் கொம்பியூட்டர் விளையாட்டு எண்டு சொல்லி நம்ப மாட்டாங்கள். உனக்கு தகவல் தந்து கொண்டிருக்கும் பத்மநாதனை ஒருநாள் நீ இலங்கைக்கு கொண்டுவருவாய். கருணாவைக் கொண்டுவந்து என்ரை பிணத்தைக் காட்டுவாய். கண்ணாடி மறைவில் நின்று மகிந்தா நீ என்னை அம்மணமாக இருப்பதைப் பார்ப்பாய். ஆனால் பிரபாகரனைப் பிடித்தால் அந்த இடத்திலை நூறு வருசத்துக்கு புல்லு முளைக்காது எண்டு புலம் பெயர் மக்கள் நம்பிக் கொண்டே இருப்பார்கள். நான் வருவன் வருவன் எண்டு எண்ணிக் கொண்டே இருப்பார்கள்.

என் மகன் சாள்சை தலைவராக்க முயற்சிகள் எடுத்த போது உவன் பானு தலையிடப்பாத்தான். போட்டுத் தள்ளினேன். மணலுக்குள் புதைத்து வைத்திருந்த பிணத்தை எடுத்து மகிந்த அரசு கொக்கரிக்கிறது ஏதோ தாங்கள் தான் பானுவை போட்டோம் என்று.

டேய் மகிந்தா! நீ என்னை சுட்டோ அல்லது கோடரியால் கொத்தியோ கொல்வாய் என்று எனக்குத் தெரியும். ஆனால் என்றோ ஒருநாள் நீ யமலோகம் வரத்தான் போகிறாய். அங்கே ஒரு இயக்கம் கட்டி. அங்கும் ஒரு பொட்டனையும் கூட்டி. உனக்கு நான் வேட்டு வைக்கேல்லை. ‘வே’யன்னா ‘பி’னா இல்லை.

உவன் மகிந்த பரவாயில்லை எதிரி. ஆனா உங்க வெளிநாடுகளில இருக்கிற நெடியவன் கொடியவன், ரூட் ரவி, ஊத்தை ரவி, தனத்தான், ரெஜி உவங்கள் எல்லாம் துரோகிகள். என்னை வைச்சுப் பிழைக்கிற பிளான் போட்டுட்டான்கள். வெளிநாட்டுக்கு வந்து வேலை வெட்டிக்குப் போகாம சனத்தின்ர காசிலை ஏப்பம் விடுற இந்த கோஸ்டி ஒரு நாளைக்கு மேல வருவினம் தானே. அவைக்கு அப்ப ஊதுறன் சங்கு.

இந்த உரையை எல்லாருக்கும் விளங்கிற மாதிரித்தான் எழுதி இருக்கிறம். இதவும் விளங்காட் எங்கட கவிப் பேராசிரியர் சேரன் இப்ப சும்மா தான் இருக்கிறார். அவரைக் கொண்டு பொழிப்பெழுதச் சொல்லுங்கோ. அது நல்லா வந்த யப்னா கம்பஸ்ஸில உவன் டக்ளஸ் பிடிச்சு ஒரு வேலை வாங்கிக் குடுப்பம். அதுசரிவராட்டி உவன் பிள்ளையானுக்கு கொஞ்ச னெண்டாலும் விசுவாசம் இருக்கும் அவனைப் பிடிச்சு ஈஸ்ற் கம்பஸ்ஸில வேலை எடுத்துக் குடுக்கலாம்.

புலிகளின் தாகம் ஒரு ரம்ளர் நல்ல குடிதண்ணி.
(ஏனென்றால் புதுமாத்தளன் தண்ணி சரியா உப்புக் கசக்குது.)

வே பிரபாகரன்
தலைமைச் செயலகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்
மேல்லோகம்

._._._._._.

 பின் குறிப்பு:

ஒருவரின் மரணத்தில் ஆனந்தம் கொள்வது மிக மிக அபத்தமானது. பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் காவு கொண்ட லட்சத்தை தாண்டிய உயிர் பலிக்கு கொடுத்த விளக்கம் தமிழ் மக்களின் கௌரவமான வாழ்விற்கான இறுதித் தீர்வுக்கான போராட்டம் என்பதாகும். இன்று மரியாதை இழந்து சுய கௌரவம் போய் மிருகங்களைக் காட்டிலும் கேவலமாக அடைத்து வைக்கப் பட்டிருக்கும் தமிழ் பேசும் மக்களது வாழ்வும் அடிப்படைப் பிரச்சனையும் 83ம் ஆண்டு இருந்ததை விட பன்மடங்கு கூடியே இருக்கிறது. தமிழ்பேசும் மக்களின் விடிவுக்காக போராட்டம் பற்றிச் சிந்திக்கும் யாரும் பிரபாகரனை அருவருப்போடு நினைவு கொள்வது மீண்டும் தமிழ்பேசும் மக்கள் ஒரு புதுமாத்தளனை சந்திக்காமல் இருப்பதற்காகவே இந்த ஆக்கம் தரப்பட்டுள்ளது. பிரபாகரனும் அவருடன் கொலை புரிந்த தளபதிகளும் பிரபாகரன் போலவே சொந்தப் போராளிகளை கொன்று குவித்த உமா மகேஸ்வரன் போன்ற தலைவர்களையும்  தவிர்த்து தழிழீழ போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த அனைத்து சிங்கள- தமிழ் -முஸ்லிம் மக்களுக்கும் போராளிகளுக்கும்  என் இதய அஞ்சலிகளை சமர்ப்பிக்கிறேன்.

விக்ரமபாகு கருணாரட்ன ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளார்

karunaratne.jpgபுதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன, தாம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். கொழும்பில் (25) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், தாம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், போட்டியிடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
 
தேசிய இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படாமை மற்றும் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள கொடுமைகளை எதிர்த்தே தாம் இந்த தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கை விடயத்தில் இந்தியா உட்பட்ட ஏனைய நாடுகள் தலையிடுவதன் காரணமாக, நாட்டின் சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் இழக்கப்பட்டுள்ளன.
 
இந்தநிலையில் இந்திய மற்றும் உலகளாவிய இராணுவத்தினரை ஈடுபடுத்தி, தமிழ் மக்களை போராட்டத்தை இந்த அரசாங்கம், நசுக்கியுள்ளது. இதனை வெற்றியாக அரசாங்கம் தெரிவித்தாலும், அது தேசத்தை நாசமாக்கும் செயற்பாடு என விக்கிரமபாகு குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழர் தாயகக்கோட்பாட்டை, சீர்குலைத்து, தமிழ் மக்களை பிரித்தாளும் முறையை இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. இதன் காரணமாக, தமிழர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதுடன், பல்வேறுபட்ட இன்னல்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.
 
சிங்கள பிரதேசத்திலும் மக்கள் கொல்லப்படுவதுடன், தமிழர்களுக்காக குரல்கொடுக்க முடியாத நிலையும் தோன்றியுள்ளது. இந்தநிலையில் வாழ்க்கை சுமையும் அதிகரித்துள்ளமையால், சிங்கள இளைஞர்களே ஆயுதம் ஏந்தும் நிலை ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை அறிவித்தால் ஆதரவு வழங்க தயார் – மனோ கணேசன் எம்.பி.

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெளிவாகக் கூறுவாராயின் அவருக்குப் பூரண ஆதரவை வழங்கத் தயாராக உள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார். ஜனாதிபதி தனது நிலைப்பாட்டைத் தெளிவாக அறிவித்தால், அவருக்கு ஆதரவு வழங்குவதில் எந்தத் தடையும் கிடையாதென மனோ கணேசன் கூறினார்.

கொழும்பில் நேற்று முன்தினம் (24) மாலை நடைபெற்ற மேல் மாகாண தமிழ் சாகித்திய விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை அறிவித்தார்.

எமக்கு உள்ளது ஒரே நாடும் ஒரே அரசும்தான். நாம் தற்போது அரசாங்கத்தில் பங்காளர்களாக இல்லாவிட்டாலும் அரசில் இருக்கின்றோம். அனைவரும் ஒற்றுமையாக ஒன்றாக இணைந்து வாழவேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.

இனங்களின் தனித்துவத்தைப் பேணும் அதேநேரம் ஒற்றுமையாகவும் வாழவேண்டும். ஜனா திபதியின் தலைமையிலான அரசாங்கத் திற்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளோம். ஆனால், இனப் பிரச்சினை குறித்த உறுதியான நிலைப்பாட்டை ஜனாதிபதி அறிவிக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

மேல் மாகாண கலை, கலாசார அமைச்சின் ஏற்பாட்டில் மருதானை எல்பின்ஸ்ரன் அரங்கில் நடைபெற்ற நிகழ்வுக்கு மேல் மாகாண சபை உறுப் பினர் எஸ். இராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

க.பொ.த. (சா/த) டிச. 11 இல்: சகல ஏற்பாடுகளும் பூர்த்தி 5 இலட்சத்து 45 ஆயிரம் பரீட்சார்த்திகள்

sri-lankan-students.jpgக.பொ.த.  சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் 11 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை நடைபெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்தார்.

இம்முறை நடைபெறவுள்ள இப்பரீட்சைக்கு 5 லட்சத்து 45 ஆயிரத்து 132 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். நிவாரணக் கிராமம் மற்றும் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதி நீங்கலாக நாடு முழுவதும் 3215 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

4 லட்சத்து 05 ஆயிரத்து 257 பாடசாலை பரீட்சார்த்திகளும் எஞ்சியவர்கள் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் என்றும் பரீட்சைத் திணைக்களம் அறிவிக்கிறது. 4 லட்சத்து 10 ஆயிரத்து 274 மாணவர்கள் புதிய பாடத் திட்டத்தின் கீழும், 1 லட்சத்து 34 ஆயிர த்து 858 மாணவர்கள் பழைய பாடத்திட்ட த்தின் கீழும் தோற்றவுள்ளனர்.

3215 பரீட்சை நிலையங்களுக்கும் 504 ஒருங்கிணைப்பு நிலையங்கள் அமைக்கப்படுவதுடன் சுமார் 70,000 பேர் பரீட்சைக் கடமைகளிலும் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.