அன்பான தமிழீழ மக்களே வழமை போல இந்த ஆண்டும் எங்கட தலைவரின்றை உரையிலை (சுடச் சுடச் ஆற்றும் மாவீரர் தின உரை : ஈழமாறன்) ஒளிச்சிருக்கிற சில விசியங்களை உங்களுக்கு இங்கை சொல்லப் போறன். இந்த ஈழமாறன் ஒரு மாறாட்டக்காறன். அவனுக்கு நான் அடிக்கடி சொல்லுறனான் எடேய் கவனமா எழுத்துப் பிழையளை பார் எண்டு! அவன் பாங்கோக்கிலை எங்கட பெடியள் பேச்சுவார்த்தை காலத்திலை கொடியிடை பெட்டயளை ஆவெண்டு பாத்தமாதிரி பாத்து நான் தலைவருக்கு சொன்ன உரையிலை ஒரு பெரிய பிழை விட்டுட்டான். வழமையா ரைப்பண்ணிற பெடியளை இந்த துலைவார் வன்னியிலையிருந்து அள்ளி கொண்டுபோய் எல்லா இடமும் தலையாட்ட வைச்சதிலை உவன் ஈழமாறனை ரைப்பண்ண தலைவர் சொன்னவர்! அவன் ஒரு பெரிய எழுத்துப்பிழை விட்டிட்டான். வெளிநாட்டிலை இருக்கிற நம்மட ஆட்கள் தயவு செய்து மன்னிச்சுக் கொள்ளுங்கோ. புலன்பெயர்ந்த மக்குகளாகிய உங்களை அவன் புலம்பெயர்ந்த மக்கள் எண்டு ரைப்பண்ணி உங்களை அவமதிச்சுப் போட்டான். ஆனால் தலைவர் அதுக்குள்ளையும் சூசகமா ஒரு செய்தி சொல்லியிருக்கிறது உங்களுக்கு தெரியம் தானே.
தலைவர் தன்றை உரையிலை யாழ்ப்பாணம் எண்ட சொல்லை ஒரு இரண்டு இடத்திலை மட்டும் தான் சொல்லியிருக்கிறார் எண்டு நீங்கள் கவலைப்படக் கூடாது. யாழ்ப்பணத்திலை வன்னி எவ்விடம் என்பது உங்களுக்கு தெரியும். நாங்கள் யாழ்ப்பாண ஆக்கள் படிச்ச ஆக்களா இருந்தாலும் அந்த வன்னி மக்களின்றை வீரத்தை வீச்சா காட்ட வேணும் எண்டுதான் தலைவர் வன்னி என்ற சொல்லை பல இடத்திலை பாவிச்சிருக்கிறார் எண்டதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தலைவர் தான் இறந்ததை பற்றியும், இறக்காததைப் பற்றியும் மிகவும் தெளிவாக சொல்லியிருக்கிறார். அதுக்குள்ளை இன்னுமொரு விசியம் ஒளிஞ்சிருக்கு. அதை நீங்கள் வலு கவனமாக பாக்கவேணும். முன்பு புலன்பெயர்ந்த மக்கள் “தலைவர் இருக்கிறார், இல்லை” என்ற விளையாட்டை விளையாடிச்சினம். இப்ப “ராம் (கிழக்கு மாகாண தளபதி) உள்ளே, வெளியே” விளையாட்டு விளையாடினம். இது எங்கட தலைவரின்றை துரதரிசனத்தை வடிவா காட்டிறதை நீங்கள் பாக்கலாம். இதிலை தலைவர் சொல்லுற முக்கிய விசியம் புலன்பெயர் மக்களுக்கு தமிழீழ போராட்டம் ஒரு விளையாட்டு! அவை எங்களை வைச்சு ஒரு காலத்திலை துரோகி, தியாகி என்ற விளையாட்டும் விளையாடுவினம் என்ட உண்மையையும் தலைவர் இதிலை கலந்திருக்கிறார். புலன்பெயர் நாட்டிலை இருக்கிற எங்கடை பெடியள் காசு விசியத்திலை வலு கவனம் எண்டதை தலைவர் சொன்னாலும் அவர் உண்மையிலை இந்த காசுக்காகத் தான் அவை குழி பறிச்சவை எண்டதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
மற்றது இவன் டக்கிளசை நாங்கள் எத்தனை தரம் கட்டிப்பிடிச்சு கொஞ்ச நினைச்சும் அவன் தப்பீட்டான். கட்டிப்பிடிக்கிற வெறியிலை கடைசியிலை நாங்கள் வன்னி மக்களை எப்படி கட்டப்பிடிச்சம் எண்டதையும் தலைவர் இஞ்சை சொல்லியிருக்கிறார். தோழரே துப்பாக்கியை உயர்த்தும் எதிரி தானே அது! குறி பார்த்து நல்லா சுடு. எதிரி இல்லையா இருக்கவே இருக்கிறான் சக போராளி! அவனும் இல்லையா இருக்கவே இருக்கிறார்கள் மக்கள். கடைசி நேரத்திலை நூற்றுக்கணக்கான மக்கள் எங்கட பிடியிலை இருந்து தப்பிச் செல்லேக்கை எங்கட இயக்கம் எவ்வளவு விசுவாசமாக குறி தவறாது சுட்டார்கள் என்பதை தலைவர் மிகவும் விலாவாரியாக விளக்கியுள்ளார்.
இந்தியா, பின்நவீனத்துவம், எம்ஜிஆர், சீனா, வணங்கா மண், அமரிக்கா என்று எங்கடை இயக்கம் அவையோடை செய்த அரசியலாலை மக்கள் என்ன பலன் பெற்றிருக்கினம் எண்டதை தலைவர் சொல்ல மறக்கேல்லை. அதிலை ஒரு செய்தி ஒளிச்சிருக்கிறதை நீங்கள் கவனிச்சிருக்க மாட்டியள். சீனா, இந்தியா மற்றும் பாகிஸ்தானை போன்ற எதிரும் புதிருமான நாடுகளை ஒரு குறைந்த பட்ச புரிந்துணர்வுடன் (புலி அழிப்பு) ஒரு வேலைத்திட்டத்தை போட்டுக்கொடுத்தவர் எங்கடை தலைவர் தான். இந்த கூட்டுக்குள்ளை அமரிக்காவையும் ஏன் சர்வதேசத்தையே புத்திசாலித்தனமாக இணைத்த பெருமை எங்கடை தலைவரைச் சாரும். உந்த சூழல் மாசடையிற விசியத்திலை கூட அடிபடுகிற சர்வதேசம் எங்கட தலைவரின்றை சிந்தனையாலை எப்பிடி ஒற்றுமைபட்டு இந்த ஒப்பிறேசன் பீக்கனை வடிவா முடிச்சிரிக்கினம் எண்டதை நீங்கள் வடிவாக இப்ப பாக்கிறியள். ஆனால் இந்த மாற்று இயக்க ஆக்கள் இன்னும் குறைந்த பட்ச புரிந்துணர்வில ஒரு தளம் அமைக்க படுகிறபாட்டை கிட்டடியிலை சுவிசிலை கூட பாத்திருப்பியள். எங்கட தலைவரின்றை கெட்டித்தனம் இப்ப இவைக்கு விளங்கியிருக்கும்.
மற்றது பாருங்கோ அமரிக்கன் கப்பல் அனுப்புவான் எண்டு ஆவெண்டு கொண்டு நில்லாமல் தலைவர் இந்தியா தேர்தல் முடிவை பாத்து ஏமாந்ததை தலைவர் தன்றை உரையில் சொல்லாததன் காரணத்தை நான் கட்டாயம் விளக்க வேணும். இந்த ஜெயலலிதா அம்மாவிலை தலைவருக்கு எப்பவும் ஒரு கண். அவா எம்ஜீஆருக்கு நல்லா பிடிச்ச ஒரு ஆள்தானே அதாலை தலைவருக்கும் அவாவை நல்லா பிடிக்கும். தயவு செய்து சும்மா எல்லாத்துக்கும் விசில் அடிக்காது இதை வடிவா கேளுங்கோ. இந்திய தேர்தலிலை அம்மா வெண்டிருந்தா பிறகு அவாவை கட்டிப்பிடிக்க பொட்டன்றை ஆட்களே அனுப்ப வேண்டி வந்திருக்கும். அம்மா முந்தி பகிடிக்கு சொன்ன விசியங்களை தலைவர் ஒரு காலமும் மறக்க மாட்டார். மற்றது அம்மாவும் சும்மா பம்மாத்துக்கு தானே தமிழீழத்திற்கு ஆதரவு எண்டு சொன்னவா. நல்ல காலம் அங்கை அம்மா வராதது.
தலைவர் புலன்பெயர் நாட்டிலை எங்களை காப்பற்ற நடைபெற்ற எல்லா போராட்டத்தை பற்றியும் கூறேல்லை எண்டு லண்டன் தவிர்ந்த மற்ற நாட்டு மக்கள் கோவிக்க கூடாது. சுவிசிலை ஒருத்தர் மணவறை போட்டு உண்ணாவிரதம் இருந்தது தான் தலைவருக்கு மிகவும் பிடிச்ச உண்ணாவிரதம். ஆனால் மக்டொனாலஸ் உண்ணாவிரதம் தலைவரின் அமரிக்க விசுவாசத்திற்கு கிடைத்த ஒரு பாராட்டாக நினைத்து தான் தலைவர் பரமேஸ்வரனுக்கு மட்டும் தன்றை நன்றியை தெரிவித்திருக்கிறார்.
தலைவர் தான் படிக்காட்டிலும் தமிழர்கள் நல்லா கணக்கு படிச்சவை எண்டு தான் வன்னியிலை இடம்பெயரந்த மக்கள் பற்றின கணக்கை கொஞ்சம் கொம்பிளிக்கேற்றா சொல்லீட்டர். நான் அதை கட்டாயம் உங்களுக்கு விளக்கவேணும். பொட்டனிடம் தலைவர் வேதனையுடன் எத்னை ஆயிரம் மக்கள் இன்னும் இருக்கினம் எண்டு கேட்டது தற்சமயம் நாங்கள் பலி கொடுக்க ஆட்கள் காணாட்டி பிறகு தலைவற்றை உயிருக்கு ஆபத்து என்பதை நல்லா புரிஞ்சுகொண்டார். அந்த பய கெலியிலைதான் எத்தனை ஆயிரம் மக்கள் இன்னும் வன்னியலை இருக்கினம் எண்டு கேட்டவர். 3 லட்சம் மக்களை வைத்து கடைசி ஒரு மூன்று மாதம் சமாளிக்க முடியும் என்று தலைவருக்கு தெரியும். ஆனால் அவர் கே.பியின்றை திட்டத்தை நம்பினதாலை தான் மோசம் போனதையும் வலு கிளியரா தலைவர் சொல்லியிருக்கிறார்.
தலைவரின் எதிர்கால சிந்தனை என்ற பெயரிலை வெகு விரைவிலை ஒரு புத்தகத்தை அடிச்சுவிட லண்டன் புலியள் இப்ப முடிவெடுத்திருக்கினம். அந்த சிந்தனையளை வடிவா தலைவர் உங்களுக்கு விளக்கியிருக்கறார். புத்தகம் வந்ததும் அதுக்கொரு விழா வைச்சு அங்கை வெளியிடேக்கை கண்ணை மூடிக்கொண்டு அன்பழிப்புகளை அள்ளி வழங்குங்கோ. தலைவரின் எதிர்கால சிந்தனையிலை தலைவர் ஒரு விசயத்தை சொல்லாமல் விட்டதை நீங்கள் கவனிச்சிருப்பியள். வட்டுக்கொட்டை தீர்மானம் மற்றது காலம் கடந்த தமிழீழ அரச. இதிலை வட்டுக்கொட்டையாலை தலைவர் இவ்வளவு காலமும் பட்ட கொதிவலியை தெரியாதவை கொஞ்சப்பேர் திரும்பவும் வட்டுக்கொட்டை பற்றி பறையினம். தலைவர் உள்ளுக்குள்ளை நல்லா சிரிச்சுப்போட்டு உவையும் தன்னை மாதிரி நல்லா அவதிப்படட்டும் எண்டு தான் அவர் ஒண்டும் சொல்லேல்லை.
மற்றது காலம் கடந்த தமிழீழ அரசு. உவர் உருத்திரர் வந்து என்றை பதவிக்கு பலநாளாக கண் வைச்சிருந்தவர். அது எங்கடை தலைவருக்கும் நல்லா தெரியும். அது தான் அவரும் அதைப்பற்றி பெரிசா கதைக்கேல்லை. உந்த காலங்கடந்த தமிழீழ அரசு என்ற பேரை மாத்தி புலன்பெயர் காசுபுடுங்கும் அரசு எண்டு மாத்தச் சொல்லி தலைவர் அவைக்கு கடும் உத்தவை போட்டிருக்கிறார். புலன் பெயர் மக்கள் தன்னை விட மிக முட்டாள்கள் எண்டதையும் தலைவர் இதிலை நல்லா விளக்கியிருக்கறார்.
அன்பார்ந்த புலன்பெயர் மக்குகளே!
அடுத்த வரியம் உங்களை சந்திக்க எலுமோ தெரியாது. ஆனால் தலைவர் தலைவர் எண்டு வரிக்கு வரி சொன்னதை நீங்கள் வலு கவனமாக கவனிச்சிருப்பியள். இல்லாட்டி நீங்கள் என்னையும் துரோகியாக்கி போடுவியள்.
புலியளின் தாகம் புஸ்வான தாயகம்!
டாக்டர் மதியுரைஞர்.