வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் துரித மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் காரணமாக வட மாகாணத்தைச் சேர்ந்த முஸ் லிம்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி சமாதானம், சுபீட்சம் நிறைந்த புதிய வாழ்க்கையை மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தையிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-
இலங்கை உட்பட உலகெங்கிலுமுள்ள இஸ்லாமிய சமூகத்தவர்களால் கொண்டாடப்படும் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். ஹஜ் யாத்திரையையும் தியாகத்தையும் நினைவூட்டும் இப்பெருநாள் உலக முஸ்லிம்களின் மிகப் பெரிய வருடாந்த நிகழ்வாகக் காணப்படுகின்றது.
இன்றைய நாளில் இலங்கையி லிருந்து சுமார் 500 பேர்கள் உட்பட சுமார் நான்கு மில்லியன் முஸ்லிம்கள் புனித மக்கா நகரில் ஒன்றுகூடி ஹஜ் கடமையை நிறைவேற்றுகின்றனர். ஹஜ் யாத்திரையானது பல்வேறு தேசங்களைச் சேர்ந்த பல்வேறு மொழிகளைப் பேசுகின்ற பல்வேறு கலாசாரங்களை உடைய இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து ஐக்கியத்தோடும் சகோதரத்துவ உணர்வுடனும் தமது கிரியைகளை மேற்கொள்வதை அடையாளப்படுத்தி நிற்கின்றது. இந்த ஐக்கியம் அவர்களது வாழ்க்கையில் நீடித்து நிலைத்திருப்பதோடு அவர்கள் அதனை ஏனைய சமயங்களைச் சேர்ந்த சகோதரர்களுடனும் மானிட சகோதரத்துவ உணர்வுடன் பரிமாறிக் கொள்கின்றனர்.
இலங்கை முஸ்லிம்கள் எமது நாட்டின் முன்னேற்றத்திற்கும் எமது மக்களின் மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளனர். அவர்கள் வரலாற்று நெடுகிலும் எமது நாட்டிலுள்ள ஏனைய சமூகங்களோடு ஐக்கியத்துடனும் நட்புறவுடனும் வாழ்ந்து வந்துள்ளதுடன் அதனைத் தொடர்ந்தும் கடைப்பிடித்தும் வருகின்றனர். மூன்று தசாப்தகால பயங்கரவாதம் முற்றுப் பெற்றுள்ள இச் சூழ்நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்களோடு அச்சமின்றி வாழுகின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நாளில் முஸ்லிம்கள் தமது விசேட சமயக் கிரியைகளின் போது கேட்கின்ற பிரார்த்தனைகளில் எம் எல்லோருக்கும் கெளரவமான சமாதானம் கிடைப்பதற்காக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் எமது முஸ்லிம் சகோதரர்களுக்கு மகிழ்ச்சியும் சமாதானமும் மிக்க நன்நாளாக இருக்க எனது நல்வாழ்த்துக்கள்.