உபாலி குறேயின் ஞாபகார்த்த கருத்தரங்கு கனடா ஸ்காபுறோவில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. Canadians for Peace Sri Lankan Alliance என்ற அமைப்பு இந்நிகழ்வை ஏற்பாடு செய்தள்ளது. நவம்பர் 14ல் இடம்பெறும் இஞ்ஞாபகார்த்த நிகழ்வில்
சந்திரறட்ன பண்டார: என் நினைவில் உபாலி
கே தங்கவடிவேல்: புலம்பெயர் மக்களும் இடம்பெயர் மக்களும்.
அஜித் ஜினதாச: இன முரண்பாட்டின் காரணிகள்.
ராஜன் பிலிப்ஸ்: அரசியல் அடையாளமும் இலங்கையின் பன்முக சமூகமும்
ஆகிய தலைப்புகளில் பேச்சாளர்கள் தம் உரையை நிகழ்த்த உள்ளனர்.
காலம்: 14 th of November 2009, 2.30 PM
இடம்: Scarborough Civic Centre 150 Borough Drive Scarborough
._._._._._.
தோழர் உபாலி குரே: தமிழ் – சிங்கள உறவுப் பாலம்
தமிழ் – சிங்கள இனங்களிடையே பாலமாகச் செயற்பட்டு வந்த தோழர் உபாலி குரே நேற்று (ஓகஸ்ட் 21 2009) அதிகாலை காலமானார். தமிழ் – சிங்கள இன உறவுகள் மிகவும் பலவீனப்பட்டுப் போயுள்ள இன்றைய சூழலில் தோழர் உப்பாலி குரேயின் மறைவு மிகவும் வேதனையானதாக அமைந்துள்ளது. தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்த உப்பாலி குரே, அந்த ஓடுக்குமுறை அரசிடம் இருந்தோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்தோ யாரிடம் இருந்து வந்த போதும் அதனைக் கண்டிக்கத் தவறியதில்லை. தனது இறுதிக் காலங்கள் வரை தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்காக குரல் கொடுத்தும் எழுதியும் வந்தவர்.
தனது இளமைப் பராயத்தில் இலங்கை சுதந்திரமடைந்த காலப் பகுதிகளிலேயே தன்னை லங்கா சமசமாஜக் கட்சியில் இணைத்துக் கொண்டவர். சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டுவந்து இனவாதத்திற்குத் தூபமிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் 1964ல் லங்க சமசமாஜக் கட்சி (LSSP) இணைந்த போது அந்த இணைவை கடுமையாக எதிர்த்தவர்களில் உபாலி குரேயும் ஒருவர். தோழர்கள் எட்மன்ட் சமரக்கொடி, பாலாத்தம்பு, காராளசிங்கம், பரராஜசிங்கம், தமிழ்ரைம்ஸ் ராஜநாயகம் ஆகியோர் அப்போது லங்கா சமசமாஜக் கட்சியில் இருந்து வெளியேறினர். இவர்கள் இணைந்து புரட்சிகர லங்கா சமசமாஜக் கட்சியை (LSSP-R) உருவாக்கினர்.
தொடர்ந்தும் தொழிற்சங்க நடவடிக்கைகளுடன் தன்னை ஈடுபடுத்தி வந்த உபாலி குரே என்றும் தான் நம்பிய இடதுசாரி அரசியலில் இருந்து விலகி இருக்கவில்லை. 1970க்களின் முற்பகுதியில் லண்டனுக்கு புலம்பெயர்ந்த உபாலி குரே லண்டனிலும் தனது அரசியல் நடவடிக்கைகளைத் தொடர்ந்தார்.
1983 இனக்கலவரத்தின் போது இலங்கையில் இருந்த உப்பாலி குரே தனித்தும் கூட்டாகவும் தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை எடுத்திருந்தார். 1983ல் மரத்துடன் கட்டி உயிருடன் தீவைக்க முயன்ற கூட்டத்திடம் இருந்து ஒரு தமிழ்ப் பையனை காப்பாற்றி இருந்தார். இலங்கையில் இடம்பெற்ற இனக்கலவரங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக தன் கருத்துக்களை முன்வைத்து வருபவர். சிங்கள தேசியவாதிகளால் துரோகியாகக் கருதப்படுபவர்களில் உபாலி குரேயும் ஒருவர்.
இலங்கை அரசு மேற்கொள்ளும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் அண்மைக் காலமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பு அமைப்புகளால் தவறான வகையில் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் புலம்பெயர்ந்த மண்ணில் தமிழ் மக்களின் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களை முதலில் ஆரம்பித்தவர்களில் தோழர் உபாலி குரேயை மறக்க முடியாது. 1983 இனக்கலவரங்களுக்கு முன்னதாகவே இலங்கைச் சிறைகளில் அடைக்கபட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்காக இலங்கையில் உள்ள அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரும் போராட்ட அமைப்பு (Campaign for Release of Political Prisoners in Sri Lanka) தோழர் உபாலி குரே, சூரியசேகரம், டொக்டர் ஆறுமுகம், தமிழ் ரைம்ஸ் ராஜநாயம் போன்றவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வமைப்பு பின்னர் ஸ்ரீலங்கா சொலிடாரிற்றி கம்பைன் (Sri Lanka Solidarity Cambaign) என பெயர்மாற்றம் செய்யப்பட்டு 1983 இனக்கலவரத்திற்கு எதிராக அப்போது பெரும் ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் ஒழுங்கு செய்யப்பட்டது. பிற்காலங்களில் தமிழ் தேசியவாத அலையில் ஸ்ரீலங்கா சொலிடாரிற்றி கம்பைன் ஈழம் சொலிடாரிற்றி கம்பைனாக (Eelam Solidarity Campaign) மாற்றப்பட்டது.
அதன் பின்னர் கொமிற்றி போர் டெமொகிரசி அன் ஜஸ்டிஸ் (Committee for Democracy and Justice) என்ற அமைப்பை தோழர்கள் உபாலி குரே, வெஸ்லி முத்தையா, வி சிவலிங்கம், தமிழ் ரைம்ஸ் ராஜநாயகம் ஆகியோர் உருவாக்கினர். இவ்வமைப்பு தமிழ் தேசியவாத அலையைத் தாண்டி செயற்படும் பலத்தைக் கொண்டிருக்கவில்லை. அதன் செயற்பாடுகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே அமைந்தது.
லண்டனில் மாற்றுக் கருத்துச் சூழலில் நன்கு அறியப்பட்டவர் உப்பாலி குரே. ஒரு சட்டத்தரணியான இவர் எப்போதும் அவருடைய அரசியல் விடயத்திறகாகவே அறியப்பட்டவர். அவருடைய அரசியலுக்கு அப்பால் அவர் ஒரு மனிதநேயம் மிக்கவராக இருந்துள்ளார். அந்த மனித நேயப் பண்பே அவரை ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலை அவர் தேர்ந்தெடுக்க காரணமானது.
இலங்கை அரசின் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான வெற்றியை பெரும்பான்மைச் சிங்களச் சமூகம் வெற்றிக் கழிப்பில் கொண்டாடிக் கொண்டிருக்கையில் அந்த வெற்றிக் கழிப்பை தோழர் உபாலி குரேயின் உறவுக்காரப் பையன் ஒருவரும் தனது பேஸ்புக்கில் (facebook) பதிவிட்டிருந்தார். அந்த வெற்றிக் கழிப்பை விமர்சித்து அந்தப் பையனின் பேஸ்புக்கில் உபாலி குரே தனது விமர்சனத்தை ஆணித்தரமாகப் பதிவு செய்திருந்தார். அதன் பின்னர் தானும் தனது இருபது நண்பர்களும் யுத்தம் பற்றிய மனநிலையை மாற்றிக் கொண்டதாக அப்பையன் தோழர் உபாலி குரேக்கு தெரிவித்துள்ளார். இருபது அல்ல இருபது மில்லியன் இலங்கை மக்களுக்கும் இந்த யுத்தம் பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்த வேண்டிய தருணத்தில் உபாலி குரேயின் மரணம் சம்பவித்துள்ளது.
சிங்கள – தமிழ் – முஸ்லீம் மக்களிடையேயான உறவுகள் மிகக் கீழ் நிலைக்கு சென்றுள்ளது. இனங்களுக்கு இடையேயான நம்பிக்கையீனம் மிகவும் செல்வாக்குச் செலுத்துகின்றது. இந்த நம்பிக்கையீனத்திற்கு தூபமிடுகின்ற வகையில் இலங்கை அரசின் பேரினவாதப் போக்கும் அதற்கு எதிரான தமிழ் தேசியவாதத்தின் போக்கும் உள்ளது. இவற்றைக் கடந்து இன உறவுகளை வளர்த்துக் கொள்வதற்கான முன்னோடிகள் அனைத்து சமூகங்களின் மத்தியிலும் பலவீனமாகவே உள்ளனர். இவர்களைப் பலப்படுத்தி இன உறவுகளைக் வலுப்படுத்தி சகலவிதமான ஒடுக்குமுறைக்கும் முற்றுப்புள்ளி வைப்பதன் மூலமே இலங்கையில் நிரந்தரமான சமாதானத்தை நிறுவ முடியும். இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான அடிப்படை இனங்களிடையேயான உறவும் புரிந்துணர்வும்.
அந்த வகையில் தனது இறுதிக் காலம் வரை ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்து வந்தவர் தோழர் உபாலி குரே. இன்று இவர் போன்ற பல பாலங்கள் தமிழ் – சிங்கள மக்களை இணைக்க அவசியப்படுகின்ற போது அவர் எம்மைவிட்டுப் பிரிந்தது மிக மிக வேதனையானது. அவருடைய இறுதி நிகழ்வுகளில் இருந்து மற்றுமொரு இன உறவுப்பாலத்தை அமைப்பதே அவருக்கு செய்யும் அஞ்சலியாக அமையும்.
மேலதிக வாசிப்பிற்கு : Upali Cooray: The Unrepentant Marxist : P Rajanayagam
._._._._._.
தோழர் உபாலி குரேயின் இறுதி நிகழ்வுகள் செப்ரம்பர் 3ல்
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக வாழ்ந்த தோழர் உபாலி குரேயின் இறுதி நிகழ்வுகள் செப்ரம்பர் 3 வியாழக்கிழமை வெஸ்ட் லண்டன் கென்சல் கிறீன் மயானத்தில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது. இந்நிகழ்வு மிகவும் குறுகிய நிகழ்வாக அமைய உள்ளது. தோழர் உபாலி குரெ இன் பூதவுடல் 12:30ற்கு சப்பலில் இருந்து புறப்பட்டு வெஸ்ட் லண்டன் கென்சல் கிறீன் மயானத்தை மதியம் ஒரு மணிக்கு முன்னதாக வந்தடைய உள்ளது.
இறுதி நிகழ்வுகளுக்கு மலர்களோ மலர் வளையங்களோ எடுத்து வர வேண்டாம் என குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்நிகழ்வின் போது யுனிசெப் சர்வதேச மன்னிப்புச்சபை ஆகிய அமைப்புகள் தங்கள் பொது நோக்கங்களுக்காக நிதி சேகரிக்க குடும்பத்தினர் தங்கள் ஆதரவை நல்கி உள்ளனர்.
Funeral Service & Cremation:
Thursday, 3 September 2009
West London Crematorium,
Harrow Road,
Kensal Green,
London W10 4RA.
The service will be brief (approx. 30 minutes). The hearse will leave the chapel at 12.30 pm and arrive at the crematorium before 1.00 pm.
Map (Crematorium) :
http://www.streetmap.co.uk/map.srf?x=523796&y=182518&z=0&sv=W10+4RA&st=2&pc=W10+4RA&mapp=map.srf&searchp=ids.srf
Parking is available at the Crematorium. The nearest underground station is Kensal Green.