தென் மாகாண சபையின் முதலாவது கூட்ட அமர்வு நேற்று இடம்பெற்றபோது சபையின் தவிசாளரை தெரிவு செய்வதில் பலத்த சர்ச்சை ஏற்பட்டது. தவிசாளர் பதவிக்கு பிரேரிக்கப்பட்ட ஒரு உறுப்பினர் சபையின் நடுவில் நின்று சட்டபூர்வமாக தவிசாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர் அவரது பதவிக்குரிய ஆசனத்தில் அமரவிடாது தடுத்ததுடன் கூச்சல் குழப்பத்திலும் ஈடுபட்டார். இதனையடுத்தே சர்ச்சை நிலை ஏற்பட்டது.
தென்மாகாண சபையின் முதலாவது கூட்ட அமர்வு நேற்றுக் காலை 9.30 மணிக்கு மாகாண சபையின் அவைச் செயலாளர் தயானந்த தலைமையில் கூட்டப்பட்டது. மாகாண சபை கூட்ட அறிவித்தலை அவைச் செயலாளர் சபைக்கு அறிவித்தார். அத்துடன், ஆறாவது தென் மாகாண சபைக்கான புதிய தவிசாளர் ஒருவரை தெரிவு செய்யும் படி அவர் கேட்டுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து தென்மாகாண சபையின் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, மாகாண சபையின் புதிய தவிசாளர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி உறுப்பினர் மொஹான் பீ. சில்வாவை நியமிக்குமாறு பிரேரித்ததுடன் அதனை மாகாண சபை உறுப்பினர் அருண குணரத்ன ஆமோதித்தார்.
மாகாண சபைக்கு புதிய தவிசாளர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி உறுப்பினர் நிசாந்த முதுஹெட்டிகமவை நியமிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் மனுச நாணயக்கார பிரேரித்ததுடன், அதனை அதே கட்சியைச் சேர்ந்த மைத்ரி குணரத்ன ஆமோதித்தார். இதனையடுத்து சபையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
தென்மாகாண சபையின் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா சபையில் எழுந்து முதுஹெட்டிகம இதுவரையில் சட்டரீதியாக சத்தியப் பிரமாணம் செய்யவில்லை என்பதால் அவரது பெயரை ஒதுக்கி விட்டு, மோஹான் பீ சில்வாவை மாகாண சபையின் புதிய தவிசாளராக தெரிவு செய்துள்ளதாக அறிவிக்குமாறு அவைச் செயலாளரிடம் கேட்டுக் கொண்டார்.
அதனையடுத்து மொஹான் பீ சில்வா தென்மாகாண சபையின் புதிய தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பிரகடனம் செய்யப்பட்டது.
புதிய தவிசாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள மொஹான் பீ சில்வா மாகாண சபையின் தவிசாளர் ஆசனத்துக்கு செல்ல முற்பட்டதும் நிசாந்த முதுஹெட்டிகம ஓடிச் சென்று தவிசாளர் ஆசனத்தில் பலாத்காரமாக அமர்ந்து கொண்டார்.
இந்நிலையில் மாகாண சபையின் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் பலர் மிகவும் கஷ்டப்பட்டு முதுஹெட்டிகமவை தவிசாளர் ஆசனத்திலிருந்து ஒதுக்கியதுடன் கூச்சல்களுக்கு மத்தியில் புதிய தவிசாளர் அவரது தவிசாளர் பதவிக்கான தலைமை ஆசனத்தில் அமர்ந்து சபையின் நடவடிக்கைகளை முன்னெடுக்க முற்பட்டார்.
அப்போது நிசாந்த முதுஹெட்டிகம அவரது ஆசனத்திலிருந்த ஒலிவாங்கியை உடைத்தெடுத்த வண்ணம் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவையும் மாகாண சபையின் அவை செயலாளரையும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார். அப்போது அங்கு பொலிஸாரும் வரவழைக்கப்பட்டனர்.
இக்கூச்சல்களுக்கு மத்தியில் மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் மாத்தறை மாவட்ட உறுப்பினர் திரு விஜய தஹநாயக்காவின் பெயரை முதலமைச்சர் பிரேரித்தார். அதனை, அம்பாந்தோட்டை மாவட்ட ஆளும் தரப்பு உறுப்பினர் ஆனந்த விதானபத்திரண ஆமோதித்தார்.
இந்நிலையில் மீண்டும் பிரதித் தவிசாளர் பதவிக்கு நிசாந்த முதுஹெட்டிகமவின் பெயரை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் மனுஷநாணயக்கார பிரேரித்ததுமே முதுஹெட்டிகம சபையில் சப்தமிட்டு சபையை விமர்சிக்கத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து ஜே.வி.பி. உறுப்பினர் நலின் ஹேவகே சபையில் உரையாற்றிக் கொண்டிருக்கையில் மீண்டும் மீண்டும் கூச்சலும் குழப்பமும் அதிகரித்தது.
தவிசாளர், மொஹான் டி சில்வா மாகாண சபையின் பிரதி தவிசாளராக விஜய தஹநாயக்கா தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சபைக்கு அறிவித்ததுடன் கூட்ட அமர்வை எதிர்வரும் 19ம் திகதி வரை ஒத்திவைத்தார். நேற்றைய தினம் தென் மாகாண சபையின் கட்டடம் அமைந்துள்ள காலி கலேகான், போபே வீதி உட்பட அப் பிரதேசமெங்கும், பொலிஸாரும், இராணுவத்தினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
நிஷாந்த முதுஹெட்டிகம, ஜனாதிபதியின் ஆலோசகரும் பிரபல ஜோதிடருமான சுமனதாஸ அபேகுணவர்தன (அகில இலங்கை சமாதான நீதவான்) முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டிருந்தார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என சபையில் தெரிவிக்கப்பட்டது. இறுதியாக தென்மாகாண சபை தவிசாளரின் உத்தியோகபூர்வ அறையில் நிஷாந்த முதுஹெட்டிகம தென்மாகாண சபை உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.