தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையை ஏற்றுள்ள தளபதி ராமின் மாவீரர் தின உரை (தளபதி ராமின் மாவீரர் நாள் (2009 கார்த்திகை 27) உரை)புலம்பெயர் புலி ஆதரவாளர்களாலும் அவர்கள் சார்ந்த ஊடகங்களாலும் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது. தளபதி ராமின் மாவீரர் தின உரை என்று கூறி சில ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்ட உரை தளபதி ராமினது உரையல்ல. அவ்வுரை தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவால் அவர்கள் சார்ந்த ஊடகங்களால் மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டு இருந்தது. அவ்வுரை தவறுதலாக தேசம்நெற் இலும் சில நிமிடங்கள் பிரசுரமாகி இருந்தது. அத்தவறிற்காக வருந்துகிறோம். தற்போது தளபதி ராமின் முழுமையான உரையை இங்கு பிரசுரிக்கின்றோம்.
வே பிரபாகரனது மாவீரர் தின உரையும் தளபதி ராமினால் வழங்கப்பட்ட மாவீரர் தின உரையும் ஒரே நபரினால் தயாரிக்கப்பட்டு உள்ளதைப் போன்ற தோற்றத்தையே வழங்குகின்றது. அல்லாவிட்டால் பிரபாகரனின் மாவீரர் தின உரைகளை ஆராய்ந்து அதே பாணியிலேயே இந்த மாவீரர் தின உரையும் தயாரிக்கப்பட்டு உள்ளது. ஆனால் வே பிரபாகரனது மாவீரர் தின உரைக்கு மாறாக இந்த மாவீரர் தின உரை யதார்தத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.
தளபதி ராமின் மாவீரர் தின உரையின் முக்கியமான அம்சங்கள்:
1. கடந்தமுப்பது ஆண்டுகளாக எமது மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்று வழிநடத்தி வந்த எமது அன்பிற்கும், மதிப்பிற்கும்,கௌரவத்திற்குமுரிய மேதகு தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களையும் இந்த விடுதலைக்காக மடிந்த மாவீரர்களின் வரிசையில் இணைத்து நினைவுகூரும் ஒரு தேசிய எழிச்சி நாளாகவும் இன்நாளை நான் பிரகடனப்படுத்துகின்றேன்.
2. எமது தலைவர் எமது மக்களினுடைய இலட்சியத்தை எந்த சந்தர்ப்பத்திலும், எந்தச் சூழ்நிலையிலும். விட்டுக்கொடுக்காமல் தன்நம்பிக்கையோடு களத்தில் நின்றார். இதன் விளைவு ஒரு பாரதூரமான பின்னடைவை ஏற்ப்படுத்தியுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். இந்த விளைவின் தாக்கங்கள் முற்கம்பி வேலிகளுக்குள்… பல ஆயிரக்கனக்கான மக்கள் உயிர்களை இழந்து…. பல நூற்றுக்கணக்கானோர் தங்களின் உடல் உறுப்புக்களை இழந்து…… இதனை விட தாயை இழந்த குழந்தையும், குழந்தையை இழந்த தாயும்.. கனவனை இழந்த மனைவியுமாக….
3. இந்த சமூகத்தின் அரசியல் அபிலாசைகளை பெற்றுத்தருவதர்க்கு சர்வதேச நாடுகள் முன்வரவேண்டும். இதறக்காக நாம் எந்த விட்டுக்கொடுப்புக்களையும் செய்வதற்கு தயாராக உள்ளோம். அத்துடன் ஆயுத வன்முறைகளையும் முற்றாக கைவிட தயாராக உள்ளோம்.
4. எமது விடுதலை இயக்கமும், மக்களும் புதுமாத்தளன், வெள்ளான் முள்ளிவாய்க்கால் பகுதிக்குள் இராணுவ முற்றுகைக்குள் உள்ளாக்கப்பட்ட வேளையில் முப்பது வருடகால போராட்டத்தை இந்த மாபெரும் முற்றுகைக்குள் இருந்து மீள்வதற்காக தேசியத் தலைவர் அவர்கள் தீர்க்கமான முடிவை எடுத்திருந்தார். அந்த முடிவானது மூன்றாம் தரப்பினூடாக ஆயுதங்களை ஓப்படைத்துவிட்டு உலகமயமாக்கல் புதிய கொள்கைக்கு அமைவாக ஜனநாயக வழியில் எமது விடுதலைப் பயணத்தை தொடர முடிவெடுத்ததுடன் இச்செய்தியை சர்வதேசத்திற்கும் தெரிவித்து இருந்தார். சர்வதேசம் இச்செய்தியை பரிசீலித்து முடிவுக்கு வருவதற்கு முன்னரே களநிலமைகள் மிகவும் மோசமான நிலையை அடைந்துவிட்டது.
5. வெள்ளான் முள்ளிவாய்க்கால் பகுதியில் 400 சதுர மீற்றர் பகுதிக்குள் எமது தலைமை முடக்கப்பட்டது. இந்த முற்றுகைக்குள் இருந்து தேசியத் தலைவர் அவர்கள் 17-05-2009 அன்று பிற்பகல் இறுதியாக எனக்கு ஒரு செய்தியை கூறினார். இச்சூழலில் இருந்து நாம் மீளமுடியாத நிலையில் உள்ளதனால் இறுதிக்கணம் வரை போராடி எம்மை அழித்துக் கொள்ள முடிவெடுத்துள்ளேன். எனவே இந்த முப்பது வருடகால போராட்டத்தின் தொடர்ச்சியையும், எமது மாவீரர் விட்டுச்சென்ற பணியையும் தொடர்ந்து முன்எடுத்துச் செல்லுமாறு எனக்குப் பணித்தார். இத்தொடர்ச்சியை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்ற திட்டத்தையும் என்னிடம் கூறியிருந்தார். அதற்கு அமைவாகவே நான் தற்போது எனது பணியை தாயகத்தில் இருந்து தொடர்கின்றேன்.
இவ்விடயங்களே தளபதி ராமின் உரையில் இருந்த முக்கிய அம்சங்கள். இதில் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய பல்வேறு விமர்சனங்களுக்கும் அதில் பதில் இல்லாவிட்டாலும் தற்போதைய நிலையில் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய அவசரமான அவசியமான செய்திகளை தளபதி ராமின் மாவீரர் தின உரை கொண்டிருந்தது.
ஆனால் தளபதி ராமின் உரையில் இருந்த முக்கிய விடயங்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களிடம் இருந்து பொருளாதார நன்மைகளைப் பெற்று வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தலைமைக்கு பெரும் எரிச்சலாக அமையும் என்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. குறிப்பாக ‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் வீரமரணம் அடைந்துவிட்டார்’, ‘தலைவர் லட்சியத்தில் உறுதியாக நின்றது பாரிய பின்னடைவை ஏற்படுத்தி விட்டது’, ‘ஆயுத வன்முறையை முற்றாகக் கைவிடத் தயாராக உள்ளோம்’, ‘முற்றுகைக்குள் இருந்து மீள தேசியத் தலைவர் ஆயுதங்களை மூன்றாம் தரப்பினூடாக ஒப்படைக்க முடிவெடுத்தார்’, ‘எமது மாவீரர் விட்டுச்சென்ற பணியையும் தொடர்ந்து முன்எடுத்துச் செல்லுமாறு எனக்குப் பணித்தார்’ போன்ற விடயங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தலைமையின் நிதி வசூலுக்கு எவ்விதத்திலும் உதவப் போவதில்லை. இதுவரை தாயகத்தில் உள்ள போராளிகளை வீரசாகசங்களுக்கு உள்ளாக்கி வசூல் ராஜக்கள் ஆன இத்தலைமைகள் தற்போது அங்குள்ள போராளிகளது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க மறுப்பதுடன் அவர்களுக்கு துரோகிப்பட்டமும் சூட்டி உள்ளன.
தளபதி ராமின் தலைமையை ஏற்காத புலம்பெயர்ந்து வாழும் கஸ்ரோ அணியைச் சேர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தலைமை ராம் இலங்கை இராணுவத்துடன் இணைந்து பணியாற்றுவதாக செய்திகைளக் கசிய விட்டனர்.
தளபதி ராமுடன் இணைந்து பணியாற்ற விரும்பிய கேணல் கிட்டுவின் நெருங்கிய சகாவான ‘ஜக்’ என்பவரை துரோகி எனக் குற்றம்சாட்டி எக்சல் மண்டபத்திலிருந்து வெளியேற்றி உள்ளனர். ‘கமல்’ ‘தனம்’ என்றழைக்கப்படும் நபர்கள் மண்டப காவலாளிகள் பலரை வரவழைத்து ‘ஜக்’ என்ற முன்னால் போராளியை வெளியேற்றினர். இச்சம்பவம் மாவீர்ர தினத்திற்கு முதல்நாள் நவம்பர் 26ல் ஏற்பாட்டு ஒழுங்குகளின் போது இடம்பெற்றது.
இவ்வாண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் பெரும்பாலும் அழிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் தலைவர் வே பிரபாகரன் சரணடைந்த நிலையில் கொல்லப்பட்டார் என்ற செய்திகள் உறுதிப்படுத்தப்பட்டிருந்த போதும் அதனை ஏற்றுக்கொள்ளாத நிலையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் புலன்பெயர்ந்த ஆதரவுத்தளமும் உள்ளது. நம்பர் 27ல் தலைவர் உரையாற்றுவார் பொட்டம்மான் உரையாற்றுவார் போன்ற கதைகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவு திட்மிட்டுப் பரப்பி வந்தது. அதனால் இவ்வாண்டு மாவீரர் தினத்தில் பங்கேற்க தலைவரின் அல்லது பொட்டம்மானின் உரையைக் கேட்க பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் எக்சல் மண்டபத்தில் கூடி ஏமாற்றத்தைச் சந்தித்தனர்.
இதற்கிடையே மண்டபத்தில் இலங்கையில் இருந்து தனது மாவீரர் தின உரையை வழங்கிய தளபதி ராமின் உரையை ஒலிபரப்பும்படி சில கோரிக்கைகள் ஏற்பாட்டாளர்களுக்கு விடுக்கப்பட்டது. ஆனால் இலங்கையில் உள்ள தளபதிகளின் உரையை ஒலிபரப்புவது பயங்கரவாதமாகக் கருதப்படும் என்பதால் அவ்வுரையை ஒலிபரப்ப முடியாது என ஏற்பாட்டாளர்களில் ஒருவரான ‘தனம்’ கோரிக்கை விட்டவர்களுக்குத் தெரிவித்ததாக எக்சல் மண்டபத்தில் இருந்து தேசம்நெற்க்கு தொலைபேசியில் தெரிவித்தனர்.
தாயகத்தில் பல்லாயிரக் கணக்கான போராளிகளும் போராளிக் குடும்பங்களும் தங்கள் அன்புக்குரியவர்களையும் அங்கங்களையும் இழந்து தங்கள் அடிப்படைப் பொருளாதார வருவாய்களையும் இழந்து அல்லல் உறுகையில் அவர்களுக்கு உதவ தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தலைமையும் அதன் ஆதரவு சக்திகளும் முன்வரவில்லை. அவர்களின் பொறுப்பில் இருந்த 300 மில்லியன் ஆண்டு வருமானத்தைப் பெற்றுக்கொடுக்கும் ஒன்று தொடக்கம் ஐந்து பில்லியன் டொலர் அசையும் அசையாச் சொத்துக்களுக்கும் என்ன நடந்தது என்பதும் மர்மமாகவே உள்ளது. ஆனால் உயிருடன் உள்ள போராளிகளை, போராளிக் குடும்பங்களை விதியின் கையில் விளையாட விட்டுவிட்டு உயிர்நீத்த போராளிகளுக்கு விழா எடுத்து தங்கள் பாவத்தை கழுவ நாடகமாடுகிறது தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தலைமையும் அதன் ஆதரவு சக்திகளும்.
‘அண்ணை இருக்கும் மட்டும் விழுந்து விழுந்த செய்தாங்கள். இப்ப ஏன் நாயே என்றும் கேக்கிறான்கள் இல்லை. அப்பாவை இழந்த குடும்பத்தைப் போல் ஆகிவிட்டது எங்களுடைய நிலைமை’ என மனவருத்தத்துடன் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார் தாயகத்தில் உள்ள போராளி ஒருவர். இவ்வாறான சோகமான பல சொந்தக் கதைகள் பல முன்னாள் போராளிகளிடம் உள்ளது. புலம்பெயர்ந்த முன்னாள் போராளிகள் அப்போராளிகளுக்கும் பாதிக்கப்பட்ட போராளிக்கு குடும்பங்களுக்கும் உதவ முன்வருவார்களா?
இன்று நவம்பர் 27ல் லண்டன் எக்சல் மண்டபத்தில் மிகப்பெரும் செலவில் மாவீரர் தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு மணித்தியாலத்திற்கு 4300 பவுண்கள் கட்டணம் செலுத்த வேண்டிய மண்டபத்தை 36 மணி நேரங்களுக்கு வாடகைக்குப் பெற்று இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர். மண்டபத்தை விட ஒலி, ஒளி, பாதுகாப்பாளர்கள் என அதற்கெனத் தனியான கட்டணங்கள். இவை மட்டுமே 200 000 பவுண்களைத் தொட்டுவிடும். இதற்கு அப்பால் இன்னும் எத்தினை செலவுகள். எத்தனை நாடுகளில் இவ்வளவு நிதிச் செலவில் மாவீரர் தினம் கொண்டாடப்பட்டு இருக்கும். இவர்கள் ஒருநாள் மாவீரர் தினத்திற்கு செலவிடும் இத்தொகை இறுதியாக நடத்த யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் (போராளிகள் பொது மக்கள் உட்பட 20 000 பேர்) வழங்கப்பட்டு இருந்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 50 000 ரூபா முதல் ஒரு இலட்சம் ரூபாவரை வழங்கியிருக்க முடியும். இது உயிரிழந்த அன்புக்குரியவர்கைள அவர்களுக்கு மீட்டுக் கொடுக்காவிட்டாலும் அவர்களது எதிர்காலத்திற்கு ஒரு காத்திரமான பங்களிப்பைச் செய்திருக்கும். அதனையே உயிரிழந்த ஒவ்வொரு போராளியும் விரும்பி இருப்பான்.
மாவீரர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள். நினைவு கூரப்பட வேண்டியவர்கள். அதற்கு இவ்வளவு நிதிச் செலவில் விழா எடுக்க வேண்டியது தேவையல்ல. மாவீரர்களை நினைவு கூரும் ஒவ்வொருவரும் ஒரு மாவீரர்களது படத்தைத் தாங்கி மெழுகு வர்த்தியுடன் அமைதியாக அவரவர் வாழும் தலைநகர் வீதிகளுக்கு வந்து சில மணிநேரம் தங்கள் மெழுகுதிரிக்கு ஒளியேற்றி இருந்தால் அச்செய்தி சர்வதேசத்திற்கே சென்றிருக்கும்.
ஆனால் மூடிய மண்டபத்திற்குள் பணத்தை வாரி இறைத்துச் செய்யும் சம்பிரதாயச் சடங்குகள் மூலம் பணம் மட்டுமே பண்ண முடியும். அதனையே தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தலைமைகள் செய்கின்றன. அவர்களது நோக்கத்திற்குத் தடையாக இருக்கும் எதனையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இவர்கள் தாயக மக்களது பெயரில் தங்களை வளர்த்துக்கொள்ளத் தயங்கப் போவதுமில்லை.
._._._._._.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தாயகத்தில் இருந்து இயங்கும் தலைமைச் செயலகம் வெளியிட்டுள்ள மாவீரர் தின உரை: தளபதி ராமின் மாவீரர் நாள் (2009 கார்த்திகை 27) உரை