தளபதி ராமின் மாவீரர் நாள் (2009 கார்த்திகை 27) உரை

LTTE LOGOதமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்
27. 11. 2009

எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே !

இன்று 2009 ஆம் ஆண்டு கார்த்திகை 27 ஆம் நாள். இந்த மண்ணின் விடிவிற்காகவும், சுதந்திர வாழ்விற்காகவும் இரும்பையொத்த இலட்சிய உறுதியோடு களத்தில் நின்று போராடி மடிந்த புனிதர்களை நெஞ்சினில் நிறுத்தி நினைவுகூரும் நன்நாளாகும்.

கடந்த முப்பது ஆண்டுகளாக எமது மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்று வழிநடத்தி வந்த எமது அன்பிற்கும், மதிப்பிற்கும், கௌரவத்திற்குமுரிய மேதகு தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை- பிரபாகரன் அவர்களையும் இந்த விடுதலைக்காக மடிந்த மாவீரர்களின் வரிசையில் இணைத்து நினைவுகூரும் ஒரு தேசிய எழிச்சி நாளாகவும் இந்நாளை நான் பிரகடனப்படுத்துகின்றேன்.

எமது இந்த விடுதலைப் போராட்டத்தை வழிநடத்தி வழிகாட்டியாக இருந்த எமது தலைவரினுடைய எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுப்பேன் என இந்நாளில் எமது மக்களுக்கு உறுதியாக கூறுகின்றோம். இதுவரை எமது விடுதலைப் போராட்டத்தில் முப்பத்தியிரண்டாயிரத்திற்கும் அதிகமான மாவீரர்கள் தங்களின் இன்னுயிர்களை எமது தேசத்தின் உயர்ந்த இலட்சியத்திற்காக அர்ப்பணித்துள்ளதுடன் இப்போரட்ட காலத்தில் இவர்களுடன் தோளோடு தோள்நின்ற நாட்டுப்பற்றாளர்கள், ஆதரவாளர்கள், அப்பாவிபொதுமக்கள் ஆகியோரையும் இந்நாளில் நினைவுகூருகின்றேன்.

இந்த மாவீரர்களை ஈன்றெடுத்த பெற்றோர்களே!

உங்களின் குழந்தைகள் சாகவில்லை, அவர்கள் ஓர் உன்னத இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை உகந்தளித்து அவர்கள் என்றென்றும் எங்களின் உள்ளங்களில் உயிர் வாழ்கின்றார்கள். இந்த உயர்ந்த இலட்சியத்திற்காக நீங்கள் உங்களின் குழந்தைகளை உகந்தளித்தீர்கள் இதற்காக உங்களை நாம் பெருமைக்குரியவர்களாக கௌரவிக்கின்றேன். இந்த விடுதலை வீரர்கள் எமது விடுதலைப் போராட்ட வரலாற்றிலே தரையிலும் கடலிலும், வானிலும் எதிரியை நிலைகுலையவைத்து பற்பல சாதனைகளைப் படைத்தார்கள். என்றென்றும் இவர்களே எமது வழிகாட்டிகளாக உள்ளனர்.

ஒவ்வொரு வீரனதும் சாவு ஒவ்வொரு சரித்திரம் படைத்து நிற்கிறது. எந்த இலட்சியத்திற்காக இந்த வீரர்கள் தங்களின் இன்னுயிர்களை ஆகுதியாக்கிக் கொண்டார்களோ அந்த இலட்சியம் நிறைவேறும்வரை அவர்கள் விட்டுச்சென்ற பாதையில் தொடர்ந்து பயணிப்போம் என இவர்களின் கல்லறைகள் மீது உறுதியெடுத்துக் கொள்வோமாக.

அன்பிற்கினிய மக்களே!

இலங்கைத்தீவு பிரிட்டிஸ் காலனித்துவ ஆதிக்கத்தில் இருந்து 1948 ஆம் ஆண்டு விடுதலை பெற்ற பின்னர் இலங்கைத்தீவின் பெருன்பான்மை இனம். சிறுபான்மை இனமான எமது தமிழ்த் தேசிய இனத்தை அடக்கி ஆளும் கொள்கையை கடைப்பிடித்து வந்தது. இந்த கொள்கையை எதிர்த்து எமது முன்னைய தழிழ்த்தலைவர்கள் பல அகிம்சை போராட்டங்களை நடாத்தினார்கள். இந்த அகிம்சை போராட்டங்கள் அனைத்தையும் ஆயுத வன்முறை கலாச்சாரத்தின் மூலமாக அடக்குவதையே சிங்கள பேரினவாத அரசு தனது கொள்கையாக கடைப்பிடித்து வந்தது. அதேவேளையில் தமிழர்கள் எழிச்சிகொள்ளும் போது ஒப்பந்தங்கள் செய்வதும், எழிச்சிகள் தனிந்தபின் ஒப்பந்தங்களை கிழித்து எறிவதும் தழிழர்களின் வரலாற்றில் ஒரு நிகழ்வாக மாறியது.

இந்த நிகழ்வுகளினால் பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் இழக்க நேரிட்டது. அத்துடன் பல பெறுமதி மிக்க சொத்துக்களையும் இழக்கநேரிட்டது. அத்தோடு நின்றுவிடாது தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களையே இழந்து அரசியல் அனாதைகள் ஆக்கப்பட்டனர். இந்த துன்பியல் நிகழ்வுகளின் பின்பே எமது இனம் தங்களின் உயிர் வாழ்விற்காக ஓரு புரட்சிகர ஆயுதப் போராட்டபாதையை தெரிவு செய்தனர். இந்தகால கட்டத்தில் தான் எமது ஆயுதப்போராட்டம் வடிவம் பெற்றது.ஓரு கைத்துப்பாக்கியோடு ஆரம்பிக்கப்பட்ட எமது விடுதலைப்போராட்டம் முப்படைகளையும் கொண்டு பரினாமவளர்ச்சி கண்டு நின்றது.

இந்த காலகட்டத்தில் எமக்கென ஒரு நிலப்பரப்பும் எமது பூரண கட்டுப்பாட்டில் இருந்ததோடு மட்டுமின்றி ஒரு தனியரசிற்கு இருக்கவேண்டிய அனைத்து கட்டுமானங்களும் உருவாக்கப்பட்டிருந்தது என்பது உலகம் அறிந்த உன்மையாகும். இந்த காலகட்டத்திற்குள் நடந்து முடிந்தவற்றை நான் மீண்டும் விபரிக்க வேண்டியதேவை இல்லையென்று நினைக்கின்றேன்.

இரண்டு தசாப்த காலமாக எமது விடுதலைப் போராட்டம் உலகமயமாக்கல் கொள்கைகளுக்கு அமைவாகவே செயல்பட்டு வந்தது அந்த வரலாற்றுக் காலங்களில் உலகில் உள்ளபல நாடுகளில் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுபான்மை இனங்கள் நடத்திய புரட்சிகர ஆயுதப்போராட்டங்களை உலகநாடுகள் ஏற்றுக்கொண்டன இதன்விளைவாக பல சிறுபான்மை இனங்கள் விடுதலைபெற்றன. ஆனால் மூன்றாவது தசாப்தகாலத்தினுள் எமது விடுதலை இயக்கம் காலடிஎடுத்து வைத்த வேளையில் உலகநாடுகளினுடைய கொள்கைகளும் மாற்றம் பெற்றன இதன் விளைவாக உலகில் விடுதலைக்காக போராடிய பல விடுதலை இயக்கங்கள் பயங்கரவாத இயக்கமென சித்தரிக்கப்பட்டனர். இந்த வரலாற்று சூழலிலே எமது விடுதலைப் போராட்டமும் சிக்கிக்கொண்டது.

ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடிய எமது இயக்கமும் விதிவிலக்கல்ல என்றரீதியில் எமது இயக்கத்திற்கும் பயங்கரவாதம் எனும் முத்திரை குத்தப்பட்டது. இருந்தபோதும் எமது தேசியத்தலைவர் அவர்கள் எங்களினுடைய விடுதலைப் போரட்டத்தின் உன்மைத்தன்மையை உலகிற்கு பலவடிவங்களிலும், பல கோணங்களிலுமாக எடுத்துரைத்தார். தன்னாதிக்கம் பிடித்தஉலகம் எங்களின் உண்மைநிலையை விளங்கிக் கொள்ளவில்லை. இதன் விளைவே எமது விடுதலை இயக்கமும் பயங்கரவாத பட்டியலில் இணைக்கப்பட்டது. இந்த பூதாகரமான சவாலை எதிர்கொள்ள எமது தேசியத்தலைவரும் தயாரானார். எமது தலைவர் எமது மக்களினுடைய இலட்சியத்தை எந்த சந்தர்ப்பத்திலும், எந்தச் சூழ்நிலையிலும். விட்டுக்கொடுக்காமல் தன்நம்பிக்கையோடு களத்தில் நின்றார். இதன் விளைவு ஒரு பாரதூரமான பின்னடைவை ஏற்ப்படுத்தியுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

இந்த விளைவின் தாக்கங்கள் இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் அதி தொழிநுட்ப வளர்ச்சி பல்கி பெருகியுள்ள இந்த உலகில் முற்கம்பி வேலிகளுக்குள் மனித வாழ்க்கையில் அடிப்படை தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாத நிலையில் வாழ்கின்றனர். அத்தோடு பல ஆயிரக்கனக்கான மக்கள் உயிர்களை இழந்துள்ளனர். பல நூற்றுக்கணக்கானோர் தங்களின் உடல் உறுப்புக்களை இழந்து அங்கவீனர்களாக்கப் பட்டுள்ளனர். இதனை விட தாயை இழந்த குழந்தையும், குழந்தையை இழந்த தாயும், கனவனை இழந்த மனைவியுமாக பலர் அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர். பல நூற்றுக்கணக்கானோருக்கு என்ன நடந்தது என்று தெரியாத புதிராகஉ ள்ளது. இதனைவிட எமது மக்கள் பொருளாதார ரீதியாக சகல உடைமைகளையும் இழந்து உடுத்த உடைமையுடன் மட்டுமே உள்ளாக்கப்பட்டனர் இவைதான் இன்றைய நிலையாகும்.

இன்றைய உலக ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக நாம் ஓர் தேசிய இனம் என்றரீதியில் ஒரு உருக்கமான வேண்டுகோளை முன் வைக்கின்றோம். உலகில் அடக்கு முறைகளுக்கு உள்ளாகும் சிறுபான்மை இனங்கள் எல்லாம் ஜனநாயக ரீதியாக தங்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இன்றய உலக ஒழுங்காகும். எனவே உலகிலேயே அடக்குமுறையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட இனம் என்றால் அது இலங்கைத்தீவில் உள்ள தமிழ் பேசும் சமூகமாகும்.

இந்த சமூகத்தின் அரசியல் அபிலாசைகளை பெற்றுத்தருவதர்க்கு சர்வதேச நாடுகள் முன்வரவேண்டும். இதற்காக நாம் எந்த விட்டுக் கொடுப்புக்களையும் செய்வதற்கு தயாராக உள்ளோம். அத்துடன் ஆயுத வன்முறைகளையும் முற்றாக கைவிட தயாராக உள்ளோம். இந்த யதார்த்த நிலையை உலகில் ஜனநாயகம் நிலைக்க வேண்டும் என நினைக்கும் நாடுகள் எல்லாம் காலம் தாழ்த்தாது எமது இந்த விடையத்தில் கவனம் செலுத்தி பல தசாப்தகாலமாக இலங்கைத் தீவில் நிலவிவரும் மனித அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு முன்வருமாறு மிகவும் அன்புரிமையுடன் வேண்டி நிற்கின்றேன்.

புதிய உலக ஒழுங்குகளுக்கு அமைய இலங்கைத்தீவில் ஆயுதப்போராட்டம் அழிக்கப்படுவதை விரும்பிய உலக நாடுகள் எல்லாம் இலங்கை அரசிற்கு துணைபுரிந்தமையால் இலங்கை அரசு அதில் வெற்றிபெற்றது. இதே உலகத்திடம் நாம் எதிர்பார்ப்பது எமது மக்களினுடைய அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய உரிமையை பெற்றுத் தருவதற்கும், இந்த ஆயுதப்போராட்டம் அழிக்கப்பட வேண்டும் என கங்கனம் கட்டிநின்று ஒத்துழைப்பு வழங்கிய எல்லா நாடுகளும் அதே வேகத்தோடு எமது மக்களின் ஜனநாயக உரிமைகளை பெற்றுத்தருவதற்கும் விரைந்து செயலாற்றுமாறு வேண்டி நிற்கின்றேன்.

இலங்கைத்தீவில் சிறுபான்மை இனத்தை பிரதிநிதுத்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு இதனோடு இணைத்த ஒரு செய்தியை கூறுகின்றேன். மேற்கூறப்பட்ட விடயங்களை கவனத்தில் கொண்டு அதிகாரப் போட்டிகளை கைவிட்டு எமது இனத்தின் விடிவிற்காக விவேகமாகவும், விரைவாகவும் ,துணிச்சலோடும் பணியாற்ற வேண்டிய வரலாற்றுக் கடமை உங்களுக்கு உள்ளதென்பதனை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். இன்றைய வரலாற்றுக் காலகட்டத்தில் சிறிலங்கா அரசாங்கமும் யதார்த்தத்தை புரிந்துகொண்டு எமது தாயகத்தில் எமது மக்களின் கௌரவமான, சுதந்திரமான, பாதுகாப்பான வாழ்விற்கு ஒரு உறுதியான நிரந்தரத்தீர்வை முன்வைக்கவேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அன்பிற்கினிய புலம்பெயர் வாழ் தழிழ்பேசும் மக்களே!

எமது விடுதலைப் போராட்ட வரலாற்றிலே புலம்பெயர் வாழ் மக்களினுடைய தார்மீக ஆதரவு எமது விடுதலைப் போராட்ட வளர்ச்சிக்கு பேருதவியாக அமைந்தது இன்று வித்தியாசமான சூழலுக்கு எமது இயக்கமும், எமது மக்களும் தள்ளப்பட்டுள்ளனர். உதாரணமாக தந்தையை இழந்த குடும்பம் போன்று எம்மை வழிநடத்தி, வழிகாட்டிய தேசியத் தலைவரை இழந்து நிற்கின்றோம். இந்த நெருக்கடியான சூழ்நிலையில் தலைவர் அவர்களினுடைய கனவை நினைவாக்குவதற்க்கு நம்பிக்கையோடும் உறுதியோடும் எமது தாய்மண்ணிலே நானும் எஞ்சியுள்ள ஏனைய தளபதிகளும், வீரம்மிக்க போராளிகளும் கால் பதித்து நிற்கின்றோம். உலகவரலாற்றில் இலட்சியவாதிகள் அழியலாம் அவர்களினால் உருவாக்கப்பட்ட இலட்சியங்கள் அழிந்ததாக வரலாற்றில் இல்லை. எனவை உங்கள் கடமைகளை நம்பிக்கையோடு தொடர்ந்தும் செய்யுங்கள் நாம் மீண்டெழுவோம் வெற்றி பெறுவோம். இது உறுதி.

கடந்த காலங்ளில் பல்வேறு வழிகளிலும் நிதிஉதவி வழங்கிய அன்புள்ளங்களுக்கும், தார்மீக உதவிகள் வழங்கிய அன்புள்ளங்களுக்கும், தொடர்ந்தும் அந்த உதவியை வழங்குமாறு கூறிக்கொள்ளும் அதேவேளையில் எனது சார்பிலும், எனது தளபதிகள் சார்பிலும், போராளிகள் சார்பிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். இன்றைய சூழ்நிலையில் உலகில் எந்தநாட்டிலும் இல்லாதவாறு எமது மக்கள் பொறுளாதார ரீதியாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு செய்வது அறியாமல் தங்களின் எதிர்காலத்தை நினைத்து பரிதவிக்கும் நிலை காணப்படுகின்றது. இம்மக்களின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான பொறுப்பும் உங்களது கைகளிலும் தங்கியுள்ளது. புலம்பெயர் வாழ்நாடுகளில் வாழ்கின்ற புத்தியீவிகள் இன்றைய காலகட்டத்தில் நீங்கள் வாழ்கின்ற நாடுகளில் உள்ள அரசுகளுக்கு எமது மக்களின் உரிமைகள் பற்றி தெளிவுபடுத்தும் கடமைகள் உங்களைச் சார்ந்து நிற்கின்றது. இந்த தேசத்திற்காக உழைத்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகள் சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள் இவர்களின் மறுவாழ்விற்காகவும் உரத்தகுரல் கொடுக்குமாறும் வேண்டி நிற்கின்றேன்.

இந்திய தமிழ் உறவுகளுக்கு!

கடந்தமுப்பது ஆண்டுகளாக எமது மக்களின் விடுதலைக்காக பல வகையிலும் குரல் கொடுத்த நீங்கள் எமது போராட்டம் மிகவும் நெருக்கடியைச் சந்தித்த வேளையிலும் தீவிரமாக குரல் கொடுத்து துணைநின்றதோடு எமது விடுதலைக்காக உங்கள் நாட்டிலேயே பல தழிழ்உறவுகள் தங்களின் உயிர்களையும் தியாகம் செய்தனர் என்பதையும் நாம் அறிவோம். தொடர்ந்தும் தங்களின் தார்மீக ஆதரவை எதிர்பார்த்து நிற்கின்றேன்.

தழிழக அரசியல் தலைவர்களில் சிலர் எமது விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்து செயல்படுகின்றார்கள்.சில அரசியல் தலைவர்கள் எமது விடுதலைப் பயணத்தில் தடைகளை ஏற்படுத்தி தங்களின் சுயநல அரசியல் லாபத்திற்காக செயல்படுகின்றனர். புதுமாத்தளன் வெள்ளான் முள்ளிவாய்க்கால் பகுதியில் எமது மக்களும், விடுதலை இயக்கமும் பெரும்சவாலை எதிர்கொண்டு நின்ற வேளையில் குறிப்பாக தமிழ்நாட்டுத் தலைவர்கள் சிலர் உணவு தவிர்ப்பு போராட்டம் என்றும் ஈழத்தில் போர் ஓய்வு ஏற்பட்டுள்ளது என்று தங்களின் ஊடகங்கள் ஊடாக செய்திகளை பரப்பி மாபெரும் வரலாற்றுத்தவறை இழைத்து மக்களை அழிவுப்பாதைக்கு இட்டுச்சென்றதில் அவர்களுக்கும் பங்கு உண்டு. எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் இவ்வாறன வேதனைக்குரிய சம்பவங்களை நினைத்து நாமும் எமது மக்களும் வேதனை அடைகின்றோம்.

எனது அன்பிற்கினிய மக்களே!

எமது விடுதலை இயக்கமும், மக்களும் புதுமாத்தளன், வெள்ளான் முள்ளிவாய்க்கால் பகுதிக்குள் இராணுவ முற்றுகைக்குள் உள்ளாக்கப்பட்ட வேளையில் முப்பது வருடகால போராட்டத்தை இந்த மாபெரும் முற்றுகைக்குள் இருந்து மீழ்வதற்காக தேசியத்தலைவர் அவர்கள் தீர்க்கமான முடிவை எடுத்திருந்தார். அந்த முடிவானது மூன்றாம் தரப்பினூடாக ஆயுதங்களை ஓப்படைத்துவிட்டு உலகமயமாக்கல் புதிய கொள்கைக்கு அமைவாக ஜனநாயக வழியில் எமது விடுதலைப் பயணத்தை தொடர முடிவெடுத்ததுடன் இச்செய்தியை சர்வதேசத்திற்கும் தெரிவித்து இருந்தார். சர்வதேசம் இச்செய்தியை பரிசீலித்து முடிவுக்கு வருவதற்கு முன்னரே களநிலமைகள் மிகவும் மோசமான நிலையை அடைந்துவிட்டது. வெள்ளான் முள்ளிவாய்க்கால் பகுதியில் 400 சதுர மீற்றர் பகுதிக்குள் எமது தலைமை முடக்கப்பட்டது. இந்த முற்றுகைக்குள் இருந்து தேசியத்தலைவர் அவர்கள் 17-05-2009 அன்று பிற்பகல் இறுதியாக எனக்கு ஒரு செய்தியை கூறினார்.

இச்சூழலில் இருந்து நாம் மீழமுடியாத நிலையில் உள்ளதனால் இறுதிக்கணம் வரை போராடி எம்மை அழித்துக்கொள்ள முடிவெடுத்துள்ளேன். எனவே இந்த முப்பது வருடகால போராட்டத்தின் தொடர்ச்சியையும், எமது மாவீரர் விட்டுச்சென்ற பணியையும் தொடர்ந்து முன்எடுத்துச் செல்லுமாறு எனக்குப்பணித்தார். இத்தொடர்ச்சியை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்ற திட்டத்தையும் என்னிடம் கூறியிருந்தார். அதற்கு அமைவாகவே நான் தற்போது எனது பணியை தாயகத்தில் இருந்து தொடர்கின்றேன்.

தேசியத்தலைவர் அவர்களின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுப்தோடு இந்த மாவீரர்களின் கனவை நினைவாக்குவோம் என இந்நாளில் உறுதியெடுத்துக் கொள்கின்றேன்.

– நன்றி-

“ புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ”

இப்படிக்கு

ஏ.ராம்
தளபதி
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழிழம்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 Comments

  • kovai
    kovai

    சரியான மாவீரர் உரையைத்தான் போட்டிருக்கீறீர்கள்.
    நன்றி.

    Reply
  • அறிவழகன்
    அறிவழகன்

    //இந்த மாவீரர்களின் கனவை நினைவாக்குவோம் என இந்நாளில் உறுதியெடுத்துக் கொள்கின்றேன்.//

    தளபதி ராமிற்கு வாழ்த்துக்கள்

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //இந்த முற்றுகைக்குள் இருந்து தேசியத்தலைவர் அவர்கள் 17-05-2009 அன்று பிற்பகல் இறுதியாக எனக்கு ஒரு செய்தியை கூறினார்.//

    தலையைப் பலிகொடுத்து தன்னைக் காப்பாற்றிய ராம், தற்போது தன்னை தலைமையாக்கியுள்ளாரா?? ராம் தப்பிச் செல்ல வழியிருந்திருந்தால் தன்னைப் பலி கொடுத்தாவது தலைமையை காப்பாற்றியிருக்க வேண்டும். சதி செய்து தப்பியவர்களெல்லாம் தற்போது கதையளக்க வெளிக்கிட்டதே சந்தர்ப்பவாதம். 30 வருடங்களுக்கு மேலாக பிரபாகரனின் சதிவலைக்குள் மாட்டுப்பட்டு தம்மை சீரழித்த தமிழ்மக்கள், இனி தன்னையும் நம்பி சீரழியுமென ராம் கனவு காணுகின்றார். தமிழ் மக்கள் இனியும் விழித்துக் கொள்ளாவிட்டால், தமக்குத் தாமே கல்லறை அமைத்துக் கொள்வதற்கே வழிவகுக்கும்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    சரியாக ஆண்டுகள் நினைவு இல்லாவிட்டாலும் 84-86 ஆண்டுப் பகுதியாக இருக்கலாம். படம்கள் கலர்படத்தில் அச்சிடப்பட்டு “புலியின் குரல்” புலம்பெயர் நாடுளில் வினிநோகிக்கப் பட்டது. அதில் பத்துவயது முஸ்லீம் சிறுவன் ஏ.கே. 47 துப்பாக்கியுடன் மன்னார் பகுதியில் இராணுவத்துடனான சண்டையில் இறந்து கிடந்த காட்சி பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு அவன் சமூகத்திற்கு தான் என்ன நடந்தது என்பது தெரியுமே!.

    1986 ல் இன்னொரு படம் வெளிவந்திருந்தது. அது டெலோ அழிப்பில் ஈடுபட்டிருந்தபோது புலிபோராளிகள் புகைப்படத்திற்கு போஸ் குடுக்கிறார்கள். அதில் ஒருவர் வைத்திருக்கும் ஆயுதம் தான் என்னை வியப்பில் ஆழ்த்தியது. தோள்ளின் இருபக்கத்திலும் விரல் அளவு நீளமுள்ள தோட்ட பட்டிகளை மாறிமாறி போட்டிருந்தார்.கையில் வைத்திருந்தது துப்பாக்கியல்ல. ஒரு சாதாரமனிதன் தூக்க முடியாத யந்திரம் (யந்திரதுப்பாக்கி) இது யாருக்கு? எதிரிக்கா? எமக்கா?

    புலம்பெயர் உறவுகளே!ஈழமக்கள் தம்மை சுற்றிப்பிண்னப் பட்ட மாயை வலையறுந்து விட்டது.ஆயுதம் அரசியல்வாழ்வுக்கு தீர்க்கமான ஒரு அம்சம் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். எஞ்சியிருப்பது மனிதசாரம் புரியாத சிறுதளவு அப்பாவிக்கூட்டமும் தமிழக சினிமாஉலகத்தின் ஒரு பகுதியுமே அவர்கள் நோக்கம் பணம்புடுங்குவது மட்டுமே!. தமிழ்மக்களின் அரசியல் வாழ்வுஅல்ல.

    ஆகவே இத்தால் அறியத்தருவது என்னவென்றால் முப்பது வருடமாக புலிகள் செய்த வேலைகள் அரசியலா? ரெளடித்தனமா?? என்பதைப் புரிந்து கொள்வதில்தான் தமிழ்மக்களின் அரசியல்உரிமையை அடைவதற்கான ஆரம்பவழியையோ தொடக்கத்தையோ அடையமுடியும். ராம் சொல்லுகிற தலைவர் தமிழ்ழருக்கு தலைவரா? மாபியா கூட்டத்திற்கு தலைவரா? என்பதை முடிவெடுப்பதிலேயே எதிர்காலத்தில் ஒருசரியான இடத்தைக் கண்டடைய முடியும்.

    Reply
  • BC
    BC

    //கடந்த காலங்ளில் பல்வேறு வழிகளிலும் நிதிஉதவி வழங்கிய அன்புள்ளங்களுக்கும்…. தொடர்ந்தும் அந்த உதவியை வழங்குமாறு கூறிக்கொள்ளும்//

    இது உண்மையான புலி அறிக்கை தான்.

    Reply
  • BC
    BC

    ராம் சொல்லுகிறதை கேட்டால் மறுபடியும் அடிமட்டத்தவர்களுக்கு சயினட்டும் உயர்மட்டதவர்களுக்கு வெள்ளைக் கொடியும் தான்.

    Reply
  • kalai
    kalai

    பிசி,
    நிதியை எங்கே கொடுக்கவேனுமாம் எண்டு ஒருக்கால் அறிந்து சொல்லுங்கோ

    Reply
  • palli
    palli

    கலை;
    இலங்கை தூதரகத்தில் என சொன்னாலும் நாம் ஆச்செரிய படதேவையில்லை;

    Reply
  • sumithra
    sumithra

    ராமின் உரையிலிருந்து பிரபாகரன் இறந்தது தெளிவாகின்றதா? அப்படியென்றால் வேலுப்பிள்ளை ஐயா மகனின் இறப்பு அட்தாச்சி பத்திரத்திற்கு மனு செய்யலாமா?
    என்னமோ நடக்குது-மர்மமாய் இருக்குது-ஒண்ணுமே புரியலே ஈழத்திலே.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    பழைய பாட்டையே திருப்பிப் பாடியிருக்கிறார் ராம். ராமா ராமா! எங்கே கொண்ட தலையை மோதுவது என்று யோசித்துக் கொண்ட இருக்கிறேன். மாவீரர் பெற்றோர்களுக்கு நன்றி சொல்லும் போது சொல்கிறார் ” பிள்ளைகளை உகர்ந்தளித்தீர்கள்” எந்தப பெற்றோரும் தம்பிள்ளை உகந்தளிக்கவில்லை. பிரபாகரனின் பெற்றாரையும் சேர்த்துத்தான். மற்றவன் பிள்ளைகள் சாவதை ஆதரிக்கும் எந்தப் பெற்றோரும் தம்பிள்ளைகளைக் கொண்டு ஒழித்துத்தான் திரிந்தார்கள்.

    //இந்த காலகட்டத்தில் எமக்கென ஒரு நிலப்பரப்பும் எமது பூரண கட்டுப்பாட்டில் இருந்ததோடு மட்டுமின்றி ஒரு தனியரசிற்கு இருக்கவேண்டிய அனைத்து கட்டுமானங்களும் உருவாக்கப்பட்டிருந்தது என்பது உலகம் அறிந்த உன்மையாகும்.// ஒரு அரசுக்குரிய கட்டுமானமோ படையே புலிகளிடம் என்றும் இருந்ததில்லை. ஏன் கெறில்லா யுத்தத்துக்கான தன்மையும் பல தாக்குதல்களில் இருந்ததில்லை. உ.ம் மாங்குள தாக்குதல். 40 ஆமியைக் கலைப்பதற்கு உயிர்கொடுத்த புலி கொடுத்த உயிர்பலி 100 மேல். இது மரபுவளிப் போராட்டத்தில் கூட இருக்காது. போராளிகள் கெறில்லா யுக்திகளை ஏன் கைக்கொள்கிறார்கள் என்றால் பெரும் சேதாரத்தை எதிரிக்கு ஏற்படுத்தும் அதேவேளை சிறிய குழுக்களாக இயங்கி தம்பக்கத்திலுள்ள இறப்புகளைக் குறைக்கலாம் என்பதே. முக்கியமாக மக்களுக்காக மக்களின் விடிவுக்காகப் போராடும் எந்த இயக்ககும் தம் இறப்புக்கள் தொகையை மக்களின் இறப்புத் தொகையுடன் சேர்த்தே கூறவேண்டும். புலிகள் இதை என்றும் செய்ததில்லை. மக்கள் வேறு தாம் வேறு என்று தான் என்றும் நின்றார்கள். இவர்களா மக்களுக்காகப் போராடினார்கள்?? 2 தட்டிவான் மாதிரியான காற்றாடி அதாவது பட்டம் இரண்டை வைத்துக் கொண்ட வான்படை என்று காது குத்துவதை நம்பவும் அதைக் கேட்ட கைதட்ட புலத்தில் பினாமிகள் இருக்கும் வரை தமிழினத்தில் காதில் பூதான். இன்று கூட தாம்விட்ட பிளைகளை உணர்ந்து ராசதந்திர முறையில் எம்பிரச்சனையை அணுக முடியாமல் இருக்கும் நீங்கள் ஜனநாயகம் சவநாயகம் என்று திரிகிறீர்கள்.

    /தசாப்தகாலத்தினுள் எமது விடுதலை இயக்கம் காலடிஎடுத்து வைத்த வேளையில் உலகநாடுகளினுடைய கொள்கைகளும் மாற்றம் பெற்றன/ இந்த மாற்றைத்தைக் கூட உணர்ந்தும் புரிந்தும் கொள்ள முடியா நீங்களும் தலையும் அரசியல் பேச வந்துவிட்டீர்கள்./ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடிய எமது இயக்கமும் விதிவிலக்கல்ல/ செய்த பிழைகளுக்கு நியாம் கற்பிக்காதீர்கள்./எமது தலைவர் எமது மக்களினுடைய இலட்சியத்தை எந்த சந்தர்ப்பத்திலும், எந்தச் சூழ்நிலையிலும். விட்டுக்கொடுக்காமல் தன்நம்பிக்கையோடு களத்தில் நின்றார்/ சொந்தமக்களையே நாய்சுட்டமாதிரி சுட்டுத்தள்ளிய நீங்கள் மக்களைப்பற்றி எப்படிப் பேச முடியும். கம்பிவேலிகளின் பின்னால் நின்ற மக்களின் குரல்களை நாம் சோதிலிங்கம், குமாரியின் கட்டுரையூடு பார்த்தோம் தொடர்பு கொண்டும் கேட்டோம். திரும்பவும் படங்காட்ட வருகிறீர்களா?

    Reply
  • Kusumpu
    Kusumpu

    கடந்த காலங்ளில் பல்வேறு வழிகளிலும் நிதிஉதவி வழங்கிய அன்புள்ளங்களுக்கும் தார்மீக உதவிகள் வழங்கிய அன்புள்ளங்களுக்கும் தொடர்ந்தும் அந்த உதவியை வழங்குமாறு கூறிக்கொள்ளும் / வந்திட்டாங்கடா இடத்துக்கு என்னடா காசுக்கதையைக் காணவில்லை என்ற எண்ணினேன். இன்னும் முட்டாள் சமூகமே புரியவில்லையா?/ ஈழத்தில் போர் ஓய்வு ஏற்பட்டுள்ளது என்று தங்களின் ஊடகங்கள் ஊடாக செய்திகளை பரப்பி மாபெரும் வரலாற்றுத்தவறை/ உங்கள் தலைவர்தான் சொன்னார் எந்தநாட்டையும் நம்பி போராடவில்லை என்று இப்போ என்ன புதிதாக இந்தியத்தமிழ் தலைவர்களைப்பற்றி பேசுகிறீர்கள்./அந்த முடிவானது மூன்றாம் தரப்பினூடாக ஆயுதங்களை ஓப்படைத்துவிட்டு உலகமயமாக்கல் புதிய கொள்கைக்கு அமைவாக ஜனநாயக வழியில் எமது விடுதலைப் பயணத்தை தொடர முடிவெடுத்ததுடன் இச்செய்தியை சர்வதேசத்திற்கும் தெரிவித்து இருந்தார்/ இதை நீங்கள் கிளிநொச்சியில் செய்திருக்கலாமே. உங்களால் கொல்லப்பட்டு எம்மக்களாவது இன்று உயிர் வாழ்ந்திருப்பார்கள்.

    ராம் எமக்கு நாமம் போட முயற்சியாதையும் உமக்கு நீரோ போட்டுக்கொள்ளும். இன்று உங்கள் பேடித்தலைவன் இறந்ததை கூறும் உம்மால் அன்று ஏன் சென்ற 6 மாதங்களுக்குள் இந்தச் சரியான தகவலை மக்களுக்கு உம்மால் கொடுக்க முடியவில்லை. உலக இலங்கை உளவுப்படையின் கையாளான கே.பி தலைவர் உயிருடன் இருக்கிறார் என்று சொன்னபோது ஏன் உம்மால் மறுத்துரைக்க முடியவில்லை.
    /இச்சூழலில் இருந்து நாம் மீழமுடியாத நிலையில் உள்ளதனால் இறுதிக்கணம் வரை போராடி எம்மை அழித்துக்கொள்ள முடிவெடுத்துள்ளேன்/ இது இன்னும் பகிடியான விசயம் இறுதிக்கணம் வரை சயனைட்டுக் கடிக்கப்படவில்லை. தலையில் கோடாலிக்கோத்தோ அல்லது பக்கத்திலுள்ளவன் சத்தாருக்குச் சுட்டமாதியல்லவா இருக்கிறது. போதும் உங்கள் போலிகள். எம்மக்களை விட்டுவிட்டுப் போய்விடுங்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சுமித்திரா,
    பிரபாகரனின் இறப்பை உறுதி செய்ய ஏன் ராமின் உரை வரை காத்திருந்தீர்கள்?? மாவீரர் தினத்தில் புலிகளால் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தி தேனிசை செல்லப்பாவால் பாடப்பட்ட பாடலுடன் ஒரு ஒளிப்பதிவு Youtube இல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் இணைப்பு:

    http://www.youtube.com/watch?v=fKbd3E7jYRQ&feature=player_embedded#

    Reply
  • Kulan
    Kulan

    மீண்டுமோர் பேரழிவுக்கான சிவப்புச் சமிஞ்ஞை விளக்கு இந்த மாவீரர் உரை. இந்த உரையை வைத்து முக்கியமான சில விடயங்களை மக்களின் பார்வைக்குக் கொடுப்பது அவசியம் தேசம் இடம்தந்தால் இப்பணியைச் செய்வேன். மரங்களாகவும்;மடுக்களாகவும்;காடுகளாகவும்; மலைகளாகவும் புலிகளுக்கு அரணமைத்து நின்ற மக்கள் மாவீரர்களா? அன்றிப் புலிகள் மாவீரர்களா? புலிகளின் பேடித்தனமான போராட்ட வரலாற்றில் புலிகளும் மக்களும் பிரிந்தே இருந்து வந்திருக்கிறார்கள். பொங்குதமிழ் எல்லாம் வெறும் வேடிக்கையின் விஞ்ஞாபனமே. உலகநாடுகள் சேர்ந்து புலிகளை அழிக்கவில்லை. புலிகள் தமது முட்டாள்தனத்தாலும் அரசியல் அறிவின்மையாலும் முரட்டுத்தனமான பிடிவாதத்தாலுமே அழிந்தார்கள் என்பதற்கு புலிகளின் ஒவ்வொரு அடிச்சுவடும் ஆதாரமாக இருக்கிறது. தயவு செய்து மீண்டும் புலிகளின் சதியில் விழுந்து போகாது தீர்க்க தரிசனத்துடனும் புத்திப்பலத்துடனும் மக்கள் நேயத்துடனும் எம்மக்களிடையே இருந்து எழுந்து வரவிருக்கும் தலைமைக்கு வழிவிடுங்கள். பாதிக்கப்பட்ட முக்கியமாகப் புலிகளால் பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்தும் நீங்கள் எதிர்பார்க்கும் இரட்சகம் வருவான். காலத்துக்கான காத்திருப்பும் சந்தர்பத்துக்கான அடைகாத்தலும் தயார்படுத்தலுமே எம்மக்களைக்கான சரியான விடுதலையைத் தேடித்தரும். இந்தமாவீரர் உரையின் பின்னால் பிளந்து நிற்பது பணம் தேடும் புலிவாய்.

    Reply
  • Mayu
    Mayu

    DEFINITLY HE WILL GVET A PORTOFOLIO IN THE CABINET!. LIKE KARUNA AMMAN AS HE IS NOWE PATRIOTIC

    Pirabaharan is not the problem or issue. Tamils rights and their self determination is the matter. Now there may be any Rams claim many things. We need to wait until the dust to settle to hear the real voice.

    Reply
  • Asees
    Asees

    It is a great joke in 2009.

    Reply