நவம்பர் 09ல் இடம்பெற்ற ஜனாதிபதியுடனான சந்திப்பில் பல அமைப்புக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சிறிரெலோ உறுப்பினர்கள் பதினொருவர் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டு தமது கருத்துக்களையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
இவர்கள் தமது முன்னைய அமைப்பான ரெலோ அமைப்பிலிருந்து என்ன குற்றச்சாட்டுக்களைக் கொண்டு பிரிந்து சிறிரெலோவை உருவாக்கினார்களோ, அதே குற்றச்சாட்டுக்களினால் பின்னர் சிறீரெலோவிலிருந்தும் வெளியேறி சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளனர்.
ரெலோ மற்றும் சிறிரெலோ அமைப்பினர் தமது உறுப்பினர்கள் மீது அக்கறையற்று இருப்பதாகவும் இவர்களும் கடந்தகால மிதவாத அரசியல்வாதிகள் போன்றே செயற்ப்படுவதாகவும் சுதந்திரக் கட்சியில் இணைந்தவர்கள் சார்பாக சிறீரெலோ சிவம் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார்.
”ரெலோ இயக்கத்திற்கு பல தோழர்கள் தமது வாழ்க்கையையும் உயிர்களையும் அளித்துள்ளனர். ஆனால் தற்போது இக்கட்சியின் தலைவர்கள் தமது சொந்த நலனிலேயே அக்கறையுடன் இருக்கின்றனர். நானும் இன்னும் பல தோழர்களும் ஒருவேளை சோற்றுக்குக் கூட வழியில்லாமல் அவஸ்தைப்படுகின்றோம். அதேவேளை ரெலோ தலைவர்கள் எனப்படுவோர் தமக்கென சொத்துக்களை வெளிநாடுகளிலும் தமது குடும்பங்களை வெளிநாடுகளில் குடியேற்றியும் உள்ளார்கள். சிலவேளை பாராளுமன்றப் பதவி பறிபோனால் இவர்கள் உடனடியாகவே வெளிநாடு சென்று அங்கு குடியேறி விடுவார்கள். அதிலும் சில தலைவர்கள் பாராளுமன்ற பதவிகளை பெற்றதே இதன் மூலம் தமது குடும்பங்களுக்கு சொத்து சேர்ப்பதற்கே தவிர மக்களுக்கு உதவிசெய்யும் நோக்கில் அல்ல. மேலும் இவர்கள் தமது அமைப்பின் கீழ்மட்ட உறுப்பினர்க்கும் எவ்வுதவிகளும் செய்பவர்களாக இல்லை, செய்யும் நோக்கமும் இல்லை” என்று சிவம் கூறினார்.
”போராட்டம் என்று கூறி தலைவர்களால் மக்களும் இயக்க உறுப்பினர்களும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஏமாற்றப்படுகின்றனர். இவர்கள் மக்களின் அரசியலை வென்றெக்க செய்தது ஒன்றுமில்லை. அல்லது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவாவது ஏதும் செய்தார்களா என்றால் ஒன்றுமில்லை. இவர்களால் மக்களுக்கு ஒருவித பிரயோசனமும் இல்லை. மக்களுக்கென இவர்கள் செய்த சேவைகள் என்ன என்று ஒருவிடயத்தை இவர்கள் எமக்கு தெரியப்படுத்தட்டும் நாங்களும் பதில் அளிக்க தயாராக உள்ளோம்.
இன்று ஜனாதிபதி ராஜபக்ச ஆட்சிக்கு வந்து பயங்கரவாதத்தை ஒழித்து உடனடியாகவே மக்களுக்கான உதவிகளை செயற்படுத்த ஆரம்பித்துள்ளார். ஆகவே எமது நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்லும் ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்துவதன் மூலமே நாமும் எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்து கொள்ள முடியும். கடந்த 40 வருடங்களாக அபிவிருத்தி நடைபெறாது போன எமது பிரதேசங்களை நாம் அபிவிருத்தி செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம்.
இவ்வளவு காலமாக இயக்கங்களின் கீழ்மட்ட உறுப்பினர்களை மட்டுமல்ல மக்களையும் மறந்து தனிநாடு என்ற கனவு கோசத்தின் பின்னால் திரிந்தவர்கள் இன்று மீண்டும் தேர்தல் நெருங்கியவுடன் மக்களுக்கு ஏமாற்றுக் கதைகள் சொல்வதற்கு வந்துவிட்டார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு இனியும் இடமளிக்கமாட்டோம்” என்றும் சிறீரெலோ சிவம் தெரிவித்தார்.
தாம் இந்த விடயங்களை – தமக்குள்ள பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் கூறியதாகவும் ஜனாதிபதி தமது பிரச்சினைகளை புரிந்து கொண்டுள்ளதாகவும் சிவம் தெரிவித்தார். தம்மோடு உள்ள பல தோழர்கள் சுதந்திரக்கட்சியில் இணைவதைவிட வேறு வழியில்லை எனவும் இதுவே இன்றுள்ள யதார்த்தம் எனவும் தமக்கு சுதந்திரக்கட்சியின் பல மூத்த தலைவர்களின் ஆதரவும் ஒத்தாசைகளும் கிடைக்கும் எனவும் சிவம் நம்பிக்கை கொள்கிறார்.
இன்று நாட்டிலுள்ள நிலைமையிலும் பெரும்பான்மை மக்கள் சுதந்திரக் கட்சியுடனேயே இணைய விருப்பமாக இருப்பதாகவும் சுதந்திரக்கட்சி மூலமே நாட்டில் தற்போது அமைதியான சூழ்நிலை உருவாக்கப் பட்டிருப்பதாகவும் இல்லையேல் இன்றும் இந்நாட்டில் தமிழர்களின் இரத்த ஆறு ஓடிக்கொண்டிருக்கும் என்றும் சிவம் தெரிவித்தார்.
சிறீரெலோவில் உள்ள பல தோழர்கள் சுதந்திரக்கட்சியில் இணையவுள்ளார்கள், இவர்களும் ரெலோ தலைவர்களால் கைவிடப்பட்டவர்கள். தற்போது ரெலோவினர் தமது வெளிநாட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் மீண்டும் தேர்தல் மூலம் தமது வருவாயீட்டும் தொழிலை ஆரம்பிக்க உள்ளனர். ரெலோ பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தொலைபேசி மூலம் அழைத்து தம்மை ஏன் சுதந்திரக்கட்சியில் இணைகிறீர்கள் என்று கேட்டபோது இவற்றையே தான் கூறியதாகவும் சிவம் தேசம்நெற்றுக்கு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பலர் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டதாகவும் மேலும் பலர் பல மாவட்டங்களிலிருந்தும் இணைய உள்ளதாகவும் இது ஒரு பாரிய மாற்றத்தை ரெலோவின் உறுப்பினர்களுக்கும் முன்னாள் உறுப்பினர்களுக்கும் கொடுக்கும் என்றும் சிவம் தெரிவித்தார்.
தாம் ஜனாதிபதியுடன் பேசும்போது திருகோணமலையில் நடைபெறும் அத்துமீறிய குடியேற்றங்கள் பற்றியும் கிழக்கு மாகாணத்து விதவைகள் பிரச்சினை பற்றியும் எடுத்து கூறியதாகவும் இப்பிரச்சினைகள் வெகுவிரைவில் தீர்த்து வைக்கப்படும் எனவும் கிழக்கு மாகாணத்தில் உள்ள பல தமிழ் மக்கள் தற்போது உறுதிகள் அற்ற அரச காணிகளிலேயே வாழ்வதையும் சிலர் பல வருடங்களாக அவ்வாறே வாழ்வதையும் தாம் ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறியபோது இவர்களுக்கான உறுதிகள் வழங்கப்படும் என ஜனாதிபதி தமக்குத் தெரிவித்தாகவும் கூறினார்.
வட கிழக்க மாகாணத் தமிழர்களின் அரசியல்ப் பிரச்சினைக்கு தீர்வு தனது அரசாட்சிக் காலத்தில் நிச்சயமாக வைக்கப்படும் எனவும் தான் அரசியல்த்தீர்வு முன்வைக்கும்போது எல்லா அரசியல் கட்சிகளும் இதை ஆதரித்து தனக்கு ஒத்தழைப்பு வழங்கும் இதை நம்புங்கள் என ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும் சிவம் தெரிவித்தார்.
சிறிரெலோ தமிழர்களில் பலர் இராணுவ பொலீஸ் பதவிகளில் சேர்வதை ஊக்குவிப்பதாகவும் இதன் மூலமே எமது தமிழ் பிரதேசத்தில் எமது நிர்வாகங்களை தமிழில் நடாத்த முடியும் எனவும் எமது பிரதேசங்களில் வழங்கப்படும் உதவிகள் வேலைவாய்ப்புக்களில் விதவைகளிட்கு ஒரு குறிக்கப்பட்ட விகிதம் ஒதுக்கப்படுவதை தாம் விரும்புவதாயும் சிவம் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி தான் கிளிநொச்சியில் தங்கியிருந்து, தமிழ் மக்களின் அந்தப் பிராந்திய மக்களின் அபிவிருத்தியில் கவனம் எடுப்பேன் இது மிக விரைவில் நடக்கும் என்று கூறியதாகவும் சிவம் தெரிவித்தார்.
இலங்கையில் உடனடியாக தேவையாக உள்ளது ஜனாதிபதி தேர்தலா அல்லது பாராளுமன்றத் தேர்தலா என்று வினவியதாகவும் பலரும் பல கருத்துக்களை முன்வைத்த போதும் சுதந்திரக் கட்சியின் கிழக்கு மாகாண செயலாளர் திரு புஞ்சிநிலமே இப்போதுள்ள பிரச்சினை வட – கிழக்கில் உள்ள மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளே என்றும் இவைகள் தீர்க்கப்பட்ட பின்பே தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என கருத்து முன்வைத்ததாகவும் சிவம் தெரிவித்தார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் கருணா தங்களுடன் நன்றாக உரையாடியதாகவும் தன்னுடன் சிறீரெலோவை கைகோர்த்து வேலைசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் சிவம் தெரிவித்தார்.
இந்த சந்திப்பு தனியாகவும் கூட்டாகவும் நடந்ததாகவும் சந்திப்பு முழுக்க முழுக்க தமிழிலேயே நடைபெற்றதாகவும் ஜனாதிபதி தமிழில் சரளமாக பேசியதாகவும் தெரிவித்தார்.
எது எப்படி இருப்பினும் தமக்கும் சிறீசபாரத்தினத்தின் மீதான மதிப்பும் மரியாதையும் என்றும் குறையாமல் இருக்கும் என்றும் சிவம் கூறினார்.
பிரிவுற்ற சிறீரெலோவின் இணைப்பாளராக பாரிசில் வதியும் திரு சாந்தகுமார் இயங்குகிறார்.