15

15

சரத் பொன்சேகா அரசியலில் ஈடுபட ஒருபோதும் நினைக்கவில்லை: அனோமா பொன்சேகா

mrs-sarathfonseka.jpgதமது கணவரான ஜெனரல் சரத் பொன்சேகா ஒருபோதும் அரசியலில் ஈடுபட எதிர்பார்க்கவில்லை என அவரது பாரியார் அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். பௌத்தர் என்ற ரீதியில் இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் களனி விஹாரைக்கு சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தாம் யாருக்கும் எவ்விதமான தீங்கும் இழைத்ததில்லை என அவர் திவயின பத்திரிகைக்கு அளித்துள்ள செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். பௌத்த மதத்தையே தாங்கள் முழுமையாக நம்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொங்கலுக்கு கேப்டன் டிவி

images-tv.jpgநடிகரும் தேமுதிக தலைவருமான விஜய்காந்த் புதிய தொலைக்காட்சி சேவையொன்றை ஆரம்பிக்கவுள்ளார். கேப்டன் டிவி என்ற இந்த தொலைக்காட்சி எதிர்வரும் பொங்கல் தினத்தன்று ஒளிபரப்பை ஆரம்பிக்கவுள்ளது.

இந்தத் தொலைக்காட்சிக்கு பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேவை என பெரிய விளம்பரமெல்லாம் கொடுத்திருக்கிறார் விஜய்காந்த்.

இந்த தொலைக்காட்சி மட்டுமல்லாமல், புதிய பத்திரிகையும் ஆரம்பிக்கவுள்ளாராம். இது வாரப் பத்திரிகையாக முதலில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் நாளிதழாக மாறும் என்கிறது தேமுதிக வட்டாரம். ஏற்கெனவே மூன்று இணையதளங்களைத் ஆரம்பித்துள்ளார் விஜய்காந்த்.

வன்னி செல்ல தமிழ்க் கூட்டமைப்புக்கு முதல் தடவையாக அரசாங்கம் அனுமதி

vau-camp-srilanka.jpgதமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்னார், கிளிநொச்சி, துணுக்காய் உட்பட நிவாரணக் கிராமங்களுக்கு செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது-

கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவரும், திருகோணமலை மாவட்ட எம்.பியுமான இரா. சம்பந்தன் உட்பட அனைத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களும் நாளை திங்கட்கிழமை காலை புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.

நாளை காலை 7.00 மணிக்கு இரத்மலானை விமான நிலையத்திலிருந்து விமானப்படை விமானம் மூலம் வவுனியா புறப்பட்டுச் செல்லும் இவர்கள் வவுனியா விமானப்படை தளத்திலிருந்து ஹெலிக்கொப்டர்கள் மூலம் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

முதலில் மன்னார் பகுதிக்கு விஜயம் செய்யும் இவர்கள் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதுடன் துணுக்காய் பகுதிக்கும் விஜயம் செய்வர். கிளிநொச்சி பகுதிக்கும் செல்லும் இவர்கள் வவுனியா செட்டிக்குளம் பகுதியிலுள்ள மெனிக்பாம் நிவாரணக் கிராமங்களுக்கும் செல்லவுள்ளனர்.

திங்கட்கிழமை காலை முதல் மாலைவரை இப்பகுதிக்கு விஜயம் செய்யும் கூட்டமைப்பினர் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுடனும் உரையாடுவர். வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களை பார்வையிட அனுமதி தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் நீண்டகாலமாகவே கோரிக்கை விடுத்து வந்ததும்தெரிந்ததே.

தமிழ்ப் பகுதிகளை கட்டியெழுப்பும் பணியில் புலம்பெயர்ந்தோர் யாழ். பல்கலைக்கழகத்தில் கலந்துரையாடல்

இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பிரதேசங்களை கட்டியெழுப்புவதற்கான செயற்திட்டங்களை புலம் பெயர்ந்து வாழ்பவர்கள் முன்னெடுக்கவுள்ளனர். இது தொடர்பாக புலம்பெயர்ந்த புத்திஜீவிகள் யாழ் பல்கலைக்கழகத்தில் கலந்துரையாடவிருக்கின்றனர்.

விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் கட்டிடக்கலைஞர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொள்ளவுள்ளனரென அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு ஜனவரி நடுப்பகுதியில் இந்தச் சந்திப்பு இடம்பெறும்.

அவுஸ்திரேலியாவில் மிக நீண்டகாலம் வாழும் டொக்டர் நடேசன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து, இதற்கான அழைப்பை அமைச்சர் விடுத்துள்ளார். இந்தக் கலந்துரையாடல்களுக்கு வருகைதரும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு தங்குமிடவசதி செய்து கொடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கருத்தரங்கு தொடர்பாக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் வதியும் டொக்டர் நடேசன் தலைமையிலான ஒரு தூதுக்குழு கடந்த காலங்களில் இலங்கை வந்து ஜனாதிபதியின் ஆலோசகர், அமைச்சர்கள், எம்.பிக்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.

இராணுவத்தினர் மீதான புகார்களை பிரிட்டன் மறுத்துள்ளது

britishtroops.jpgஇராக்கிலே பிரிட்டிஷ் இராணுவத்தினர் நடந்துகொண்ட விதம் தொடர்பில் புதிய புகார்கள் பெரும் எண்ணிக்கையில் வந்துகொண்டிருப்பதாக கூறப்படுவதை பிரிட்டிஷ் ஆயுதப் படைகளுக்கான அமைச்சக அதிகாரி பில் ரம்மெல் மறுத்துள்ளார். புதிதாக முப்பது புகார்கள் வெளிவந்துள்ளதாக முன்னதாக வழக்கறிஞர்கள் கூறியிருந்தனர். அமெரிக்க துருப்பினர் கைகொண்டதாக வெளிவந்திருந்த பாலியல் துன்புறுத்தல் வழிவகைகள் போன்றவையும் புதிய புகார்களிலே பலவற்றில் அடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் இந்தப் புகார்களில் பல புதியவையே அல்ல என்று கூறியுள்ள அதிகாரி ரம்மெல், புகார்களில் தெரிவிக்கப்பட்டிருப்பவைதான் நடந்த விஷயங்கள் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தினார். பிரிட்டிஷ் துருப்புகளைப் பொறுத்தவரை அவர்கள் பரவலாகவே துஷ்பிரயோகம் செய்தார்கள் என்பதற்கு ஆதாரம் கிடையாது; ஆனால் புகார்கள் ஒழுங்காக விசாரிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இன்று சுதந்திரக்கட்சி மாநாடு தேர்தல் அறிவிப்பு வெளிவரும்?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது. தேர்தல்கள் தொடர்பாக கட்சியின் தலைவரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடமிருந்து அறிவிப்பு வெளிவரலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் ஏப்ரலுடன் தற்போதைய பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவடைகிறது. இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தலா அல்லது ஜனாதிபதித் தேர்தலா முதலில் நடத்தப்படும் என்பது தொடர்பாக பல்வேறு ஊகங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.

இரு தேர்தல்களும் அடுத்த வருட முற்பகுதியில் இடம்பெறும் என்றும் ஜனாதிபதித் தேர்தல் முதலில் இடம்பெறும் என்றும் அமைச்சர்கள் அண்மைக்காலமாக சூசகமாகக் கூறிவருகின்றனர். தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னமும் இரு ஆண்டுகள் இருக்கும் நிலையில் இரு வருடங்களை தியாகம் செய்ய தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தமை ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை ஜனாதிபதி வெளியிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இதேவேளை பாராளுமன்றத் தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பான கருத்துகளும் வெளிவந்திருக்கின்றன. ஆனால் அது நடைமுறைச் சாத்தியமற்றது என்று தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையில் அரசியல் தீர்வால் மட்டுமே மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும் – முகர்ஜி

1411prafp.jpgஇலங்கையில் அரசியல் தீர்வு திட்டமொன்று ஏற்படுவதன் மூலம் மட்டுமே இன-மத அடையாளங்களால் வேறுபட்டுள்ள மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும் என்று தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற மறைந்த லக்ஷ்மண் கதிர்காமரின் நான்காவது நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு நினைவுரை ஆற்றிய போது அவர் இக்கருத்தைக் கூறியுள்ளார்.

பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க, வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகல்லாகம ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

5வயது குழந்தை கழுத்து நெரித்து கோரக் கொலை வென்னப்புவயில் சம்பவம்

வாசலில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது குழந்தையை கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்து கழுத்தை நெரித்து படுகொலை செய்த சம்பவமொன்று வென்னப்புவ பொலிஸ் பிரிவில் நடைபெற்றுள்ளது.குழந்தையின் தந்தையுடன் கூலித் தொழிலுக்கு செல்லும் நபரே இந்த படுகொலையை செய்துள்ளார். சந்தேக நபரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வைக்கால தெற்கு பகுதியில் வசிக்கும் குழந்தையின் தந்தையும் சந்தேக நபரும் ஆற்றில் மணல் அள்ளும் கூலித் தொழிலில் ஈடுபட்டுவந்துள்ளனர். சம்பவ தினம் மாலை குழந்தையின் தந்தையும், தங்கொட்டுவ பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரும் வைக்கால இல்லத்துக்கு வந்துள்ளனர். இருவரும் மது அருந்திய நிலையில் வீட்டில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் சந்தேக நபர் நேற்று முன்தினம் மாலை 6.00 மணியளவில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை தந்தைக்கு தெரியாமல் தங்கொட்டுவ வீட்டிற்கு கடத்திச் சென்றுள்ளார். அங்கு குழந்தையை கொடூரமான முறையில் துஷ்பிரயோகம் செய்து கழுத்தை நெரித்துக் கொலை செய்ததுடன் உடலை ரயில் பாதையருகே வீசியுள்ளார்.