ஈபிஆர்எல்எவ் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாளின் மகள் நீலாம்பரி தென்னிந்திய திரையுலகிற்குள் காலடி வைக்கின்றார். உமமர் கரிகட் இயக்கும் ‘பொம்பே மிட்டாய்’ என்ற மலையாளப் படத்தில் நீலாம்பரி பெருமாள் அறிமுகமாகின்றார். இலங்கைத் தமிழர்கள் ஓரிருவர் தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்த போதும் ஒரு ஈழத் தமிழ் அரசியல் புள்ளியின் மகள் தென்னிந்தியத் திரைக்கு வருவது இதுவே முதற்தடவை.
மலையாளப் படத்தில் நடிக்கக் கிடைத்துள்ள வாய்ப்பையிட்டு மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ள நீலாம்பரி மலையாளப் படங்கள் சமூக அக்கறையுடையவையாகத் தரமானவையாக இருந்த போதும் அவை பரந்து பட்ட மக்களைச் சென்றடையும் நிலையை எட்டவில்லை எனத் இந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
வட இந்தியாவில் வாழும் இளம் பெண் ஊடகவியலாளர் தனது தாயகமான தென்னிந்தியாவுக்கு செல்கிறார். அங்கு ஒரு கொலைக்குப் பின்னுள்ள மர்மத்தை கண்டுபிடிப்பதே கதை.
சட்டப்படிப்பை முடித்துக்கொண்ட நீலாம்பரி பெருமாள் கலையில் நாட்டம் கொண்டவர். அரங்கியலில் ஈடுபட்டு வந்துள்ளார். அதன் தொடர்ச்சியாக இப்படத்தில் ஈடுபட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் தன்னை அதனுடன் இணைத்துக் கொண்ட ஒரு போராளியின் மகள் நீலாம்பரி. 1987ல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அடுத்து உருவாக்கப்பட்ட மாகாண சபையின் முதல்வராக இருந்தவர் நீலாம்பரியின் தந்தை வரதராஜப்பெருமாள். 1991ல் இந்திய இராணுவம் இலங்கையைவிட்டு வெளியெறியபோது அவர்களுடன் வரதராஜப் பெருமாளும் வெளியேற வேண்டிய நிலை உருவானது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலைப் பட்டியலில் முக்கிய புள்ளியாக இருந்த வரதராஜப்பெருமாளதும் அவரது குடும்பத்தினரதும் உயிரைப் பாதுகாக்க வேண்டிய கடமைப்பாடு இந்திய அரசுக்கு இருந்தது.
இலங்கை அரசியலில் செல்லாக்காசாகிப் போனாலும் வரதராஜப்பெருமாள் மற்றும் ஈஎன்டிஎல்எப் ராஜன் போன்றவர்களது உயிரைப் பாதுகாப்பது இந்தியாவை நம்பும் தலைமைகள் கைவிடப்படமாட்டாது என்பதை உறுதிப்படுத்த அவசியமாக இருந்தது.
இவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் முயற்சியில் நீலாம்பரியினது இளமைப்பருவம் பெரும்பாலும் பாதுகாப்பு நெருக்கடிகளுக்குள்ளேயே அமைந்தது. பெரும்பாலும் வட இந்தியாவிலேயே இவரது இளமைக்கால வாழ்வு அமைந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகள் பெரும்பாலும் அழிக்கப்பட்ட நிலையில் தென்னிந்திய சினிமாவினுள் இவரது நுழைவு அவருக்கு பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்றே கருத இடமுண்டு.