தமிழ் கட்சிகளின் மாநாட்டில் கலந்துகொள்ள சுவிற்சர்லாந்திற்கு வந்திருக்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவுடனான சந்திப்பு நவம்பர் 20ல் சுவிஸில் நடைபெறவுள்ளது. ‘சுவிஸ் வாழ் புலம்பெயர் உறவுகளை சந்தித்து மனம் திறந்த கருத்து பரிமாற்றங்களை நடத்துவதற்கான நிகழ்வு’ இதுவென இச்சந்திப்பினை ஏற்பாடு செய்துள்ள அக்கட்சியின் செய்திக் குறிப்புத் தெரிவிக்கின்றது. இச்சந்திப்பில் ‘சமகால மற்றும் எதிர்கால அரசியல் நிகழ்வுகள் குறித்தும் தமிழ் பேசும் மக்களுக்கான சாத்தியமான எதிர்கால அரசியல் தீர்வு குறித்தும் புலம்பெயர் உறவுகளின் கருத்துக்களும் ஆரோக்கியமான விமர்சனங்களும் எதிர்பார்க்கப்படும்’ எனவும் அச்செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
நாளை (நவம்பர் 20ல்) ஆரம்பமாக உள்ள மாநாட்டிற்கு நேற்று (நவம்பர் 18ல்) பெரும்பாலான தமிழ் முஸ்லீம் கட்சிகளின் உறுப்பினர்கள் சுவிஸ் வந்தடைந்தனர். இவர்களுக்கு மாநாட்டினை ஆரம்பித்து வைக்கு முன்னர் இன்று மாலை (நவம்பர் 19) விருந்துபசாரம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. (தமிழ் பேசும் கட்சிகளின் மாநாட்டின் திரைக்குப் பின்னால்: த ஜெயபாலன்)
இம்மாநாட்டுக்கு வந்திருந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனுடனான சந்திப்பு ஒன்று நவம்பர் 18ல் இடம்பெற்றது. கிழக்கு மாகாணம் வந்து அபிவிருத்தியில் பங்கெடுக்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட அழைப்பிற்கு புலம்பெயர்ந்த மக்கள் சற்றுத் தள்ளி நிற்பதாக முதலமைச்சர் குறைப்பட்டுக் கொண்டுள்ளார் எனத் தெரியவருகிறது. கிழக்கு மாகாண வரவுசெலவுத் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருப்பதால் முதலமைச்சர் தமிழ் கட்சிகளின் மாநாடு முற்றுப்பெறுமுன் இலங்கைக்குத் திரும்புவார் எனத் தெரியவருகிறது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சந்திப்பில் தேசம்நெற் வாசகர்கள் கேட்கும் கேள்விகளும் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டு அதற்கான பதில்கள் பெறப்பட்டு தேசம்நெற்றில் பிரசுரிக்கப்படும். ஆகவே தேசம்நெற் வாசகர்கள் தங்கள் கேள்விகளைப் பதிவு செய்யவும்.
அமைச்சரைச் சந்திப்பதற்காக லண்டனில் இருந்தும் கட்சி உறுப்பினர்கள் பலர் சுவிஸ் சென்றுள்ளனர்.
சந்திப்பு நடைபெறவுள்ள காலம்
மாலை 6:00 நவம்பர் 20 2009
சந்திப்பு நடைபெறவுள்ள இடம்
Katholische Universitätsgemeinde (AKI)
Alpeneggstrasse 5
3012 Bern