1.0 கள நிலை
1.1 அகதிகளாக வாழும் காலப் பகுதி 26 ஆண்டுகள் (1983-2009)
1.2 முகாம்களின் எண்ணிக்கை: 26 மாவட்டங்களில் 115.
1.3 முகாம்களுள் வாழ்வோர் தொகை: 19,340 குடும்பங்களைச் சேர்ந்த 73,241 பேர். (2.11.2009)
1.4 முகாம்களுக்கு வெளியே 11,288 குடும்பங்களைச் சேர்ந்த 31,802 பேர். (2.11.2009).
1.5 காவல்துறையில் பதிவுபெற்ற ஏறத்தாழ 100,000 பேர் வாடகைக் குடியிருப்புகளில் தமிழகமெங்கும்.
1.4 யாவரும் ஈழத் தமிழர். 60 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் சிங்கள இன வெறித் தாக்குதல்களால் உயிரச்சம் மேவத் தப்பி வந்தவர்கள்.
1.5 இன்றுள்ள இலங்கை அரசியல் சூழ்நிலை தொடருமானால், அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தாமாக இவர்கள் இலங்கைக்குத் திரும்பும் வாய்ப்பே இல்லை.
2.0 வாழ் தகுதி
2.1 இவர்களுட் பலரிடம் முகாம் பதிவு அட்டை உண்டு. பிறப்புச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ், இலங்கையில் வாழ்ந்ததற்கான சான்றிதழ் என எதுவும் இல்லை. ஆதாரச் சான்றிதழ் கோரும் விதிகளைப் புறந்தள்ளி, கட்டணம் எதுவும் கேட்காமல், முகாம் பதிவு அட்டையைச் சான்றாகக் கொண்டு இவர்களுக்கு உடனடியாக 5 அல்லது 10 ஆண்டுகள் செல்லுபடியாகும். அனைத்துலகப் பயண இலங்கைக் கடவுச் சீட்டை (Sri Lankan passport valid for 10 years for all countries) சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம் வழங்க வேண்டும். இந்திய நடுவண் அரசு இதை இலங்கை அரசிடம் வலியுறுத்த வேண்டும்.
2.2 முகாம் வழங்கிய அட்டையைச் சான்றாகக் கொண்டு, அகதியாக வந்து சேர்ந்த நாள், பிறந்த நாள், பிறப்பிட முகவரி ஆகிய விவரங்களுடன் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் நிலையான வதிவுரிமை அட்டையை (Permanent Resident Card), இந்திய நடுவண் அரசு வழங்கவேண்டும். வாக்குரிமை, பெருந்தோட்ட நிலங்களையும் வேளாண் நிலங்களையும் மட்டும் விலைக்கு வாங்கும் சொத்துரிமை ஆகிய உரிமைகள் தவிர்ந்த அனைத்து உரிமைகளையும் கொண்ட தகுதியை இந்த அட்டை வழங்கும். இப்பொழுதுள்ள இந்தியச் சட்டங்களுள் இந்த அட்டையை வழங்கலாம். ஏற்கனவே இந்திய அரசு இத்தகைய அட்டைகளை (PIO), இதே உரிமைகளுடன் வெளிநாடு வாழ் இந்தியருக்கு வழங்கி வருகிறது.
2.3 முகாம்களிலுள்ள ஈழத் தமிழர், இலங்கைக் கடவுச் சீட்டுடன் இலங்கை தவிர்ந்த பிறநாடுகளுக்குப் பயணம் செய்தபின், நிலையான வதிவுரிமை அட்டை இருப்பதால் இந்தியாவுக்கு மீளலாம். புகலிடம் கொடுக்கும் பல நாடுகள் தம்மிடம் வரும் அகதிகளுக்கு இந்த வசதியைக் கொடுத்து வருகின்றன.
2.4 காவல்துறைப் பதிவுமுறையில் மாற்றம் கொணர்ந்து, புகைப்படம் ஒட்டிய காவல்துறைப் பதிவு அட்டையை வழங்க வேண்டும். பதிவுக்கு விண்ணப்பித்த ஒரு வாரத்துள் தகுதியெனில் காவல்துறைப் பதிவட்டை வழங்கும் நடைமுறை வேண்டும்.
3.0 வாழ்விடம் (கூழும் கூறையும் கூரையும்)
3.1 இந்த 30,000 குடும்பங்களுட் பலர், கடந்த 26 ஆண்டுகளாக முகாம்களுக்குள் வாழ்கின்றார்கள். இவர்களுக்கு அரச நிலங்களில் (சமத்துவபுரங்கள் போலக்) குடியிருப்புகள் அமைத்து, கழிவறை, குழாய் நீர், மின்சாரம், சமையல் வாயு இணைப்பு உள்ள 35,000 இரண்டு அறைக் கல்வீடுகளைக் கட்டிக் கொடுத்துக் குடியமர்த்தவேண்டும். இதற்காக ஐநாஅகதி ஆணையரிடம் (UNHCR) கேட்டாலோ, புலம்பெயர் ஈழத் தமிழரிடம் கேட்டாலோ நிதி கிடைக்கும். இத்தகைய வாழ்விட வசதிகள் அமையும் கால எல்லையாக 2010 ஆனி அமைய வேண்டும்.
3.2 அடைக்கலம் கேட்டுப் புதிதாக வருவோரும் 6 மாதங்களுக்கு மேல் முகாம்களுள் வாழாது இத்தகைய குடியிருப்புகளுக்கு மாறிவிடவேண்டும்.
3.3 நிலையான வதிவுரிமை அட்டையுள்ளோருக்குக் குடும்பப் பங்கீட்டு அட்டைகள் (Family ration card) வழங்க வேண்டும். அணித்தாக உள்ள பொதுவிநியோகக் கூடத்தில் (PDS Shop) பங்கீட்டு உணவுப் பொருள்களைக் குடியிருப்பாளர்களே காசு கொடுத்து வாங்குவர்.
3.4 குடியிருப்புகளுக்குப் போனபின்பு அடுத்த ஓராண்டு காலத்து, அரசு இப்பொழுது வழங்கி வரும் மானியத் தொகை (2.11.2009இல் குடும்பத் தலைவருக்கு ரூ. 400, குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்கு ஏற்ற தொகை) அக்கால விலைவாசிக்கு ஏற்பத் தொடர்ந்து வழங்க வேண்டும்.
3.4 பங்கீட்டு அட்டைகள் வைத்திருப் போருக்கான நலத்திட்ட வழங்கல்கள், (இலவசத் தொலைக்காட்சிப் பெட்டி போன்றவை) இவர்களுக்கும் கிடைக்க வேண்டும்
4.0 தொழில்
4.1 நிலையான வதிவுரிமை அட்டை உள்ளோர் தத்தம் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்புப் பெறும் சுதந்திரம் வேண்டும். இந்த வசதியை அனைத்து வெளிநாட்டவருக்கு இந்திய அரசு இப்பொழுது வழங்கியுள்ளது. இதற்கெனப் புதிய விதிகள் தேவையில்லை.
4.2 தத்தம் திறமை, அநுபவம், முதலீட்டு வலிமை கொண்டோர், தொழில் தொடங்கவும், குறுகிய கால முதலீட்டு மற்றும் செலவாக்க வங்கிக் கடன் பெறவும் சுதந்திரம் வேண்டும். இதற்கெனவும் புதிய விதிகள் தேவையில்லை.
4.3 தனி ஆற்றலருக்கு வாகன ஓட்டுநர் உரிமம் போன்ற ஆற்றலுரிமங்கள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். இருக்கும் விதிகளுள் வழங்கலாம்.
4.4 தொழில் தொடங்குவோருக்கு அரச நிலங்களைக் குத்தகைக்கு வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.
4.5 தொழில் முனைவோர் பயிலரங்குகள், சிறுதொழில் தொடங்க ஊக்குவிப்புகள், மகளிர் சுய உதவிக்குழுக்களாதல் போன்ற சுய முன்னேற்ற வழிகாட்டல்கள் வேண்டும்.
5.0 கல்வி
5.1 மழலையர் வகுப்புத் தொடக்கம் உயர்நிலைப் பள்ளிக் கல்வி வரையும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டம், மற்றும் முதுநிலைப் பட்டம் வரையும் இதுவரை காலமும் இருந்த சிறந்த அணுகுமுறை தொடரவேண்டும்.
5.2 பலதொழினுட்பப் பயில் நிலையங்களுக்கும் (polytechnic) இந்த அணுகுமுறையை நீட்டவேண்டும்.
5.3 1983இல் தொடங்கிய தொழிற்கல்வி (professional courses) அனுமதிக்கான இட ஒதுக்கீடுஇ 1991இல் தடையாகிப் பின்னர் 1996இல் மீளமைந்து, 2000களில் நீதிமன்றத் தீர்ப்பால் முடங்கியது. இந்திய நடுவண் அரசு ஒதுக்கீடாக அமைய வேண்டும் என்றதால் தேங்கி நிற்கிறது. இந்திய நடுவண் அரசின் அயலுறவுத் துறையின் மாணவர் பகுதியே (Students cell of the Minstry of External Affairs located at Shahstri Bavan, New Delhi) வெளிநாட்டு மாணவருக்கு இட ஒதுக்கீடு செயுமிடமாகும். அப்பகுதியினரே, வெளிநாட்டுவாழ் இந்தியருக்கான (NRI) ஒதுக்கீடுகளைச் செய்வோர்கள். மருத்துவக் கல்விக்கு 30, பொறியியல் கல்விக்கு 60, வேளாண் கல்விக்கு 40, விலங்கு மருத்துவக் கல்விக்கு 20, மீன்வளக் கல்விக்கு 10, சட்டக் கல்விக்கு 20 என இட ஒதுக்கீடுகளை அப்பகுதியினர் வழங்குமாறும் 2010 கல்வியாண்டில் நடைமுறைக்கு வருமாறும் இப்பொழுதிருந்தே முயலவேண்டும். புதிய விதிகள் எதுவும் இயற்றத் தேவை இல்லை.
5.4 உயிரச்சத்தால் தப்பி வருவோர் புகலிடம் தேடுகையில் பிறப்பு, பள்ளிமாற்ற, கல்வித் தராதரச் சான்றிதழ்களுடன் பயணிக்கார். இத்தகையோரிடம் சான்றிதழ் கோருவது மனித நேயமல்ல. முடிந்தவரை சான்றிதழ் பெறக் கோரலாம். முடியாதவிடத்து உறுதிச் சான்றிதழ் (Affidavit) பெற்றுக் கல்விநிலையங்களில் அனுமதிக்கலாம். இதற்கான அரச ஆணை தேவை.
5.5 ஈழத்தமிழர் அகதி மாணவர் புலமைப் பரிசில் நிதியத்தைத் (முதலமைச்சர் நிவாரண நிதியம் போன்றாதாக) தமிழக அரசு தொடங்கி. அரசு நிதி ஒதுக்கியும். புரவலர்களிடம் நிதிபெற்றும், வசதி குறைந்த மாணவருக்குக் கல்விக் கட்டணம், விடுதிக்கட்டணம் போன்ற செலவுகளுக்கு வழங்க வேண்டும்.
5.6 பட்ட மற்றும் பட்டமேற்படிப்பு மாணவருக்கு வங்கிக்கடன் வழங்கலாம் என்ற திட்டத்தையும் எடுத்து நோக்க வேண்டும்.
6.0 மருத்துவம்
6.1 கலைஞர் காப்பீட்டுத் திட்டத்துள் இந்த 31,000 குடும்பங்களுக்கும் மருத்துவ வசதிகிடைக்க வேண்டும்.