21

21

வவுனியா தமிழருக்கு நாம் தீண்டத்தகாதவர்கள்; முகாமிலிருந்து வெளியேறிய பெண்ணின் சாட்சியம்: ரி சோதிலிங்கம் & எஸ் குமாரி

Realesed from camps and reached to Vavuniyaகிளிநொச்சியில் வாழ்ந்த ஒரு குடும்பத்தினர் முகாம் வாழ்க்கையின் பின்னர் அங்கிருந்து வெளியேறி வவுனியாவிற்கு இம்மாதம் 5ம் திகதி வந்துள்ளனர். கிளிநொச்சியில் தமது உயர்தர வகுப்புப் படிக்கும் இரு பிள்ளைகளையும் புலிகளிடமிருந்து பாதுகாக்கப் போராடி, பின்னர் செல்லடிக்குள் உயிர் தப்பினால் போதுமென போராடி, மாசி மாதத்தில் ஒரு பிள்ளையைப் பிரிந்த நிலையில் இவர்கள் முகாமிற்கு வந்தனர். ஒரு மாதத்தின் பின்னர் மற்றைய பிள்ளையை உறவினர்களுடன் சந்தித்த போதிலும் அவர்களின் மகன் புலிகளின் வலுக்கட்டாய பயிற்சியில் 10, 15 நாட்கள் அகப்பட்டதால் தற்போது நலன்புரி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்களில் 2006ம் ஆண்டின் பின்னர் புலிகளால் கட்டாயப் பயிற்சிக்கு உட்படுத்தப் பட்டவர்களை ஒரு வருடத்தின்பின் தாம் விடுவிப்போம் எனக் கூறியுள்ளனர் எனவும் அவர் சொன்னார்.

தம்முன்னால் மகன் புலிகளால் இழுத்துச் செல்வதை கண்டு இருதய நோயால் பாதிக்கப்பட்ட கணவருடனும் மற்றைய பிள்ளையுடனும் முகாமினுள் அடுத்த போராட்ட வாழ்வை வாழ்ந்தார்கள். வெய்யில் என்றால் இருக்க முடியாத வெக்கை, மழை என்றால் ஈரம் ஊறும் நிலத்தில் பொலித்தீன் துணையுடன் படுக்கை, விடியமுதல் வரும் இலையான்கள், அட்டைகள் பாம்புகள் சுண்டெலிகள் இவற்றுடனும் ஒரு போராட்டம். தற்போது இவற்றைத் தாண்டி வவுனியா வந்தபோதும் தமது போராட்டம் ஓயவில்லை எனக்கலங்கினார்.

தாம் வவுனியாவில் எதிர்நோக்கும் வேதனைகளையும் எப்போது கிளிநொச்சி போவோம் எனகாத்திருப்பதன் காரணங்களையும் எம்முடன் உரையாடுகையில் வெளிப்படுத்தினார்.

நாம் வவுனியாவுக்குப் பதிவுசெய்து ஒருமாதிரி முகாமைவிட்டு வெளியேறிவிட்டோம். இங்கு வந்தால் நாங்கள் கிளிநொச்சிக்காரர் முகாம்காரர் அகதிகள் என்று வவுனியா மக்களுக்கு எங்களில் ஒரு கீழ்த்தரமான எண்ணம். முகாம்காரர் என்றால் ஏதோ குப்பைகள் கூளங்கள் என்றமாதிரி தாழ்வான எண்ணங்கள். எங்களோடு ஒட்டமாட்டினம்.

பள்ளிக்கூடம் போனால் முகாம்பிள்ளை என்று சுட்டிக் காட்டப்படுகிறார்கள். வித்தியாசமாய் நடத்துகிறார்கள். நாங்கள் அனுபவித்தமாதிரி வவுனியா மக்கள் அனுபவிக்கவில்லை. எங்களுக்கு இது சரியான தாக்கமாய் இருக்கிறது. எல்லாம் இழந்து வந்திருக்கிற எங்களை இவர்கள், வேறொங்கோ உலகத்திலிருந்து வந்த தீண்டத்தகாத ஆட்கள் மாதிரி நடத்துகிறார்கள்.

குடியிருக்க வீடு பார்க்கப் போனால் ஒரு இன்ரவியூவே நடத்துவினம். உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் என்ன வயது. பிள்ளைகள் எங்கே. ஒருபிள்ளை நலன்புரி முகாமில் இருக்கிறதென்று சொன்னாலும் பிரச்சினை. வீடு தரமாட்டாங்கள் என்ற பயம். சொல்லாவிட்டாலும் என்ன நடக்குமோ என்ற பயம். என்ன சொல்வது என்று தெரியாமல் தவிக்கிறோம். வசதியாக இருந்தவர்கள் என்று சொன்னால் வாடகை கூடக் கேட்பாங்களோ என்ற பயம். வசதி குறைந்தவர்கள் என்று சொன்னால் வீடு தரமாட்டார்களோ என்ற பயம். நேற்று முழுக்க வீடு பார்க்கப்போய் ஒவ்வொரு விதமான ஆட்களை சந்தித்து வந்தோம். ஜந்தாம் திகதி வந்தோம் இன்னும் ( Nov 18ம் திகதி) வீடு எடுக்க முடியாமல் அலைகிறோம்.

இரண்டு அறைகள் கொண்ட ஒரு மண்குடிசையில் ஒரு அறையில் நான்கு குடும்பம் இருக்கிறோம். இந்த வீட்டில் இருப்பவர்கள் எமக்கு உறவானவர்கள். எமக்கு சில மாதங்கள் முன்பாக வெளியேறினவர்கள். அட்வானஸ் றென்ட் என்று வீட்டுக்காரர் வாங்குவார்கள் ஆனால் மழைக்கு எல்லாப் பக்கத்தாலும் ஒழுக்கு ஒன்றும் செய்து தரமாட்டார்கள். எல்லாம் நாமே பார்த்துக்கொள்ள வேணும். புதிதாக ஒரு தட்டிகூட இறக்க விடமாட்டார்கள். நாங்கள் எவ்வளவு காலம் இருக்கலாம் என்று எதுவும் சொல்ல மாட்டினம் இருந்தாப்போல் எழும்பச் சொன்னால் எழும்ப வேணும் இதில் எதை நம்பி எந்தப் பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பது என்றும் யோசிக்க வேணும்.

ஆஸ்பத்திரிக்குப் போனால் நீங்கள் முகாம்காரரோ. கடைக்குப் போனால் நீங்கள் முகாம்காரரோ. எங்கை போனாலும் கிளிநொச்சிகாரரோ முகாம்காரரோ அகதிகளோ என்று தாழ்வான எண்ணங்களே.

இடம்பெயர்ந்து வந்தனாங்கள் கையில் ஒன்றும் இல்லாமல் வந்தனாங்கள் இங்கையெண்டாலும் பிள்ளைகளைப் படிப்பிப்பம் என்று போனால் ‘என்ன சீருடை இல்லாமல் வாறீங்கள்’ என்று கேள்வி. பிள்ளைகளுக்கு ரெஸ்ட் வைத்துத்தான் எடுப்பார்கள். 3ம் வகுப்புப் பிள்ளைக்கும் தேவாரம் பாடச்சொல்லி வாய்பாடு கேட்டார்கள். பாஸ் என்றால்தான் சேர்ப்பார்கள். பெயில் விட்ட பிள்ளையென்றால் எங்கு போகுமோ எனக்குத் தெரியாது. பிள்ளைகளுக்கு படிப்பு முக்கியம் என்று அங்கு போனால் ‘என்ன நீங்கள் நிறச்சட்டை போட்டுக்கொண்டு வந்திருக்கிறீங்கள்? என்ன ஒண்டும் தெரியாதனீங்களே வன்னியில் இருந்தனீங்கள். யூனிபோம் போடவேணுமெண்டு தெரியாதோ?’ என்று கேள்வி. ஆசிரியர்கள் அதிபர் இவர்கள் எல்லாம் படித்தவர்கள் பண்பானவர்கள் நாட்டுநிலைமை தெரிந்தவர்கள் இந்தப் பிள்ளைகள் எந்தச் சூழ்நிலையில் இருந்து வந்தவர்கள் என்று யோசிக்கவில்லைத்தானே. அன்பாக என்றாலும் அவர்களை வரவேற்று கைகுடுக்கத் தெரியவில்லை. டீசன்ட் டிசுப்பிளின் தெரியாதவர்களா இவர்கள்.

வவுனியாவில் பள்ளிக்கூடங்களிலும் வசதிகள் குறைவு. முகாமில் இருந்த படிப்பு இங்கு இல்லை. முகாமினுள் அங்கிருந்து வந்த ரீச்சர்மாரே படிப்பித்தாங்கள். மேசை கதிரை கூட இல்லை. ஒருசில பிள்ளைகளுக்குத்தான் மேசை கதிரை இருந்தது. பிள்ளைகள் நிலத்தில் இருந்து மடியில் வைத்து எழுதுவாங்கள். இருந்த வீடுகளுக்கு லைட் இல்லை. பிள்ளைகள் றோட்டு லைட் வெளிச்சத்தில்தான் படிப்பார்கள். றோட்டு லைட்டுக்கு கீழே பாயைப் போட்டுவிட்டு மடியில் புத்தகங்களை வைச்சுப் படிப்பாங்கள். ஏதோ அந்த நிலைமைகளுக்கேத்த மாதிரி உணர்ந்து அவங்களும் இருந்தாங்கள். இங்கை பள்ளிக்கூடத்திலும் முகாம் பிள்ளையைப் பாருங்கோ நல்லாசெய்யுது என்று மற்றப் பிள்ளைகளுக்கு ரீச்சர் சொன்னாவாம்.

எதற்கும் முகாம் பிள்ளை முகாம்பிள்ளை என்று பிரித்துத்தான் பார்ப்பார்கள். ஒருக்கா உழுக்குளம் பாடசாலையில் ஒரு பிள்ளைக்கு குளவி கடித்து விதையொன்று வீங்கிவிட்டது. பிள்ளைக்கு அதில் ஒப்பறேசனும் செய்த இடம். ரீச்சரிடம் பிள்ளை போய் தனக்கு இப்பிடி என்று சொல்ல அவ அதிபரிடம் அனுப்பிவிட்டா. அதிபர் இன்னும் ரெண்டு பிள்ளைகளைப் பிடித்து அவர்களுடன் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். பிள்ளைக்கு எங்கை நோகுது என்ன நடந்தது என்று ஒருத்தரும் பார்க்கவேயில்லை. இன்னொரு பிள்ளைக்கு கிபீர் சத்தம் கேட்டாலே மயக்கம் வரும். ஒருக்கா கிபீர் வருகுதென்று ஓடிப்போய் ஒழிக்கையில் பிள்ளையின் தலையில் அடிபட்டுவிட்டது. பிள்ளைக்கு கை கால் குளிர்ந்து மயங்கி ஒருமாதிரி வந்து மருந்தெடுத்தது. சில நேரங்களில் அவனுக்கு ஒருமாதிரி வரும். நல்லாய் படிக்கக்கூடிய பிள்ளை. அந்தப் பிள்ளையின் பிரச்சினை என்னவென்று தெரியாமல் அவனை பழக்கவழக்கம் தெரியாத பிள்ளை என்று பேசியிருக்கினம். எங்கடை பிள்ளைகளை எப்பவும் தாழ்வாய்த்தான் நடத்துவினம். சரியான கவலையாக இருக்குது. முகாமிலை தண்ணியதுகள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை முகாமிலேயே இருந்திருக்கலாம். வெளியாலை வந்து வவுனியாச் சனங்களோடை துன்பப்படுவது பெருங் கவலையாக இருக்கிறது.

நாங்கள் இங்கை படுகிறபாடு நீங்கள் இங்கை வந்து பார்த்தால்தான் தெரியும். என்னென்ன கஷ்டங்கள் எல்லாம் அனுபவிக்கிறம். என்ன வாழ்க்கையோ. புலிகளின் கட்டாயப் பயிற்சிக்காக சேர்க்கப்பட்ட எமது குழந்தைகள் இப்போது புலிப்பட்டம் சூட்டப்பட்டு உள்ளுக்கிருக்கினம். பொதுமக்கள் எங்களுக்கு அகதிப்பட்டமும் கம்பிவேலி வாழ்க்கையும். வவுனியா தமிழருக்கு நாம் தீண்டத்தகாதவர்கள். நாங்கள் வீடுவாசல் சொத்து சுகம் பிள்ளைகள் படிப்பு எதிர்காலம் எல்லாத்தையும் இழந்து போதாதற்கு வவுனியாவில் மரியாதையும் இழந்து நிக்கிறோம். முகாம் போன ஆட்கள் எல்லாம் பயிற்சி எடுத்த ஆட்கள் என்று பார்க்கினமோ என்னத்தை நினைத்துக்கொண்டு எங்களை இப்படி நடத்துகிறார்களோ தெரியவில்லை. இங்கையிருந்தும் ஒரு இடம்பெயர்வு வரும் என்றுதான் நான் நம்புகிறேன்.

இங்கு காசுக்குத்தான் முதலிடம். வன்னிக்குள் உறவினர்களுடன் நாங்கள் எப்பிடி வாழ்ந்தம். வன்னிக்குள் இருந்த எல்லாரும் ஒன்றாய்தான் இடம்பெயர்ந்து வந்தனாங்கள். ஆனால் இங்கை வந்து பார்த்தால் சொந்தக்காரரோ தள்ளி நிக்கிறாங்கள். வன்னிக்காரரோடை அண்டினால் பிரச்சினையாம். வீடுவாசல் கொடுப்பதற்குப் பஞ்சிப்படுகினம். சில சொந்தங்களுக்கு போன் பண்ணினால் எடுக்கிறாங்களேயில்லை. உங்களையெல்லாம் வைச்சிருந்து விட்டு பிறகு கோட்டு வழக்கு பொலிஸ் என்று நாங்கள் அலைய ஏலாது என்று சிலர் சொன்னார்கள். சொந்தங்களை வைத்திருந்தால் தமக்கு பொறுப்பு செலவு என்று வந்துவிடும் என்றும் யோசிக்கிறார்கள் போலிருக்குது. முகாமுக்குள் இருந்தவர்களை சொந்தச் சகோதரமே வந்து பார்ககாமலும் இருந்திருக்கினம். பிறகு தமக்கு ஏதும் தொல்லை வந்திடுமோ என்ற பயம். எனது தம்பி குடும்பம் முகாமில் இருக்கிறார்கள் அவர்களைப் பார்க்கப் போனபோது இங்கு நாங்கள் படுகிற கஷ்டம் எல்லாத்தையும் சொன்னோம். அங்கிருந்த அதிபர் ஒருவரையும் சந்தித்து கதைத்தேன். வவுனியா வந்து அடிமை வாழ்க்கை வாழுவதைவிட இங்கேயே இருந்துவிட்டு நாம் நேரடியாக கிளிநொச்சிக்கே போவோம் என்று முடிவெடுத்துள்ளார்கள். இந்த 54 வயதில் எதுவுமில்லாமல் வந்து இனிமேல்தான் புதிதாக எல்லாத்தையும் ஆரம்பிக்கவிருப்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது என்றார்.

‘கிளிநொச்சி போக விடுகிறாங்களில்லை. ஏன் என்றும் தெரியாது. நாங்கள் எல்லோரும் எப்பிடி ஒன்றாய்ச் சேர்ந்து புலிகளை மீறி இராணுவத்திடம் வந்து சேர்ந்தோமோ எப்படி உந்த செல்லடி குண்டடிக்குள்ளால அடிபிடிக்குள்ளால் வெளியே வந்தோமோ அதேமாதிரி இனி வவுனியாவிலிருந்து நாங்கள் எல்லோருமாக சேர்ந்து உந்த முள்ளுவேலி இராணுவத்தை தள்ளிப்போட்டு கிளிநொச்சிக்கு வெளிக்கிட்டுப் போவதுதான் ஒரே வழி போலுள்ளது’ என வேகத்துடன் சொன்னார்.

உள்ளுர் விமான சேவையில் புதிதாக 6 விமானங்கள் – அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவிப்பு

chamalrajapaksaa.jpgமஹிந்த சிந்தனையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஏற்ப உள்ளுர் விமான சேவையின் மேம்பாடு கருதி 6 புதிய சிறிய விமானங்களை விரைவில் சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

சுமார் 50 பேர் பயணம் செய்யக்கூடிய எம்.ஏ-60 என்ற இந்த சிறியரக விமானங்களை கொள்வனவு செய்ய 105 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் அமைதியான சுழ்நிலை நிலவுவதால் விமானப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.  சீன அரசாங்கம் 5 வருடங்களில் திருப்பச் செலுத்தக் கூடிய வகையில் கடனுதவியாக இந்த விமானங்களை வழங்க முன்வந்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்

நிவாரணக் கிராமங்களில் உள்ளோர் சுதந்திரமாக வெளியே நடமாடலாம்.

வன்னி நிவாரணக்கிராமங்களில் உள்ள மக்கள் எதிர்வரும் டிசம்பர் 01ஆம் திகதி முதல் சுதந்திரமாக நடமாட அனுமதி வழங்கப்படுமென ஜனாதியின் சிரேஸ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஸ சற்று நேரத்துக்கு முன் மெனிக் பாம் நிவாரண முகாமில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய மேற்படி முடிவு எடுக்கப்பட்டதாகவும் ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்பு அனைவரும் முகாம்களிலிருந்து சொந்த இடங்களில் குடியமர்த்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஏ (எச் 1 என் 1): புதிய தடுப்பூசிகள் உடனடியாக இறக்குமதி

influenza-a.jpgஉலக சுகாதார நிறுவனத்தால் சிபாரிசு செய்யப்பட்ட ஏ (எச்1 என்1) வைரஸ¤க்கான புதிய தடுப்பூசிகள் உடனடியாக இறக்குமதி செய்யப்படவுள்ளன. டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் புதிய தடுப்பூசிகள் இலங்கைக்குக் கொண்டு வரப்படும் என சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

ஏ (எச்1 என்1) வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவிவருகிறது. இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். 258 பேர் இவ் வைரஸினால் பீடிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இதனை உடனடியாகத் தடுக்கும் நோக்குடன் புதிய ஏ (எச்1 என்1)  தடுப்பூசியை இறக்குமதி செய்யுமாறு சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார். அமெரிக்காவிலுள்ள நோய்த்தடுப்பு நோய் அறிகுறி தொடர்பான ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி ஏ (எச்1 என்1) வைரஸ் பீடிக்கப்படும் நபர்கள் தொடர்பாக வயதெல்லைகள் பற்றி அறிவித்துள்ளது.

கர்ப்பிணித்தாய்மார், 6 மாதங்களுக்குக் குறைந்த குழந்தைகள், முதல் 24 வயதுடையவர்கள், 64 வயதுக்கு மேற்பட்டவர்கள், கோமா நிலையிலுள்ளவர்கள் போன்றோர் இவ்வைரஸால் பீடிக்கப்படக் கூடியவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடுமையான காய்ச்சல், இருமல், தொண்டைப்புண் உண்டாதல், மேல் வலி தலையிடி, என்பவற்றுடன் சிறுவர்களாயின் வயிற் றோட்டம், வாந்தி போன்ற நோய் அறி குறிகள் இருப்பின் உடனடியாக டொக்டர் ஒருவரின் ஆலோசனையைப் பெறுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்க ஜெனரல் பொன்சேகாவிடமிருந்து சமிக்ஞை

ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு சவாலாக நிறுத்தப்படுவாரென்று பரவலான ஊகத்தின் மத்தியில் தனது பதவியிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ள கூட்டுப்படைகளின் முன்னாள் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகா, மனித உரிமைகளுக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் போராடப்போவதாக நேற்று வெள்ளிக்கிழமை சூளுரைத்திருக்கின்றமை வேட்பாளராக தான் நிற்கப்போகிறார் என்பதை அவர் விரைவில் அறிவிக்கும் சாத்தியத்தை அதிகரித்திருக்கிறது.

படையினருக்கு ஜெனரல் பொன்சேகா எழுதியுள்ள பிரியாவிடைக் கடிதத்தில் நிழல்போன்று உங்கள் பக்கத்தில் இருப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தின் புகழுக்கு மாசு கற்பிக்க எவருக்கும் இடமளிக்காதீர்கள். அத்துடன் இராணுவத்தை அரசியல் மயப்படுத்தவும் இடமளியாதீர் என்று படைவீரர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் விலாசமிட்டு எழுதிய கடிதத்தில் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளதாக ராய்ட்டர் செய்திச் சேவை நேற்று குறிப்பிட்டுள்ளது.குறிப்பிட்ட சிலர் எம்மை அவமதிக்க முயற்சிக்கின்ற போதிலும் யுத்த வெற்றியின் உண்மையான உரிமையாளர்கள் நாங்களே என்பதை நாம் மனதில் கொண்டிருக்க வேண்டும் என்றும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் துரிதமாக இழந்து கொண்டிருக்கும் ஜனநாயக சுதந்திரங்களைப் பாதுகாப்பதில் நான் உறுதிப்பாட்டுடன் என்னை ஈடுபடுத்திக் கொள்வேன் என்று உங்களுக்கு உறுதியளிக்க நான் விரும்புகிறேன் என்று படையினருக்கு எழுதிய பிரியாவிடைக் கடிதத்தில் ஜெனரல் பொன்சேகா குறிப்பிட்டுள்ளதாக ஏ.எவ்.பி.செய்திச் சேவை நேற்றுத் தெரிவித்தது.

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பெருமழை, இடி, மின்னல் குறித்து எச்சரிக்கை

srilanka-today.jpgவடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. குறிப்பாக கிழக்குக் கரையை அண்மித்த கடல் பிராந்தியத்தில் கடுமையான காற்று வீசுவதுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

இன்று முழுவதும் சில இடங்களில் கடுமையான மழை பெய்வதுடன் மழை சற்று குறைந்து காணப்பட்டாலும் சில நாட்களுக்கு தொடர்ச்சியான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்படுகிறது. இக்காலங்களில் இடிமின்னல் அதிகமாகக் காணப்படுவதால் பொதுமக்கள் சற்று அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பு- கண்டி; கொழும்பு- கட்டுநாயக்க அதிவேக பாதை நிர்மாண பணிகள் விரைவில் ஆரம்பம்

உலக வங்கியின் நிதியுதவியுடன் நடை முறைப்படுத்தப்படவுள்ள கொழும்பு- கண்டி அதிவேக பாதை நிர்மாணப் பணிகள் விரை வில் ஆரம்பமாகுமெனவும் இது தொடர்பாக உலக வங்கியுடனான இறுதிப் பேச்சுவார்த்தை கடந்த வாரம் இடம்பெற்ற தாகவும் நெடுஞ் சாலைகள் அமைச்சர் டி. பி. ஏக்கநாயக்க தெரிவித்தார். இதன் சமகாலத்தில் கொழும்பு-கட்டு நாயக்க அதிவேக பாதை நிர்மாணப் பணி களையும் மேற்கொள்ளவுள்ளதாக அமை ச்சர் தெரிவித்தார்.

அமைச்சின் தற்காலிக ஊழியர்கள் 939 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற இந்த நான்கு வருட காலங்களில் சுமார் 12,000 பேர் நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி அமைச்சில் நிரந்தர நியமனம் பெற்றுள்ளனர். 2005ல் ஜனாதிபதி வழ ங்கிய வாக்குறுதிக்கிணங்க 2007ல் 5,000 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. அதற்கடுத்ததாக இன்று 939 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படுகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொழி லாளர்களின் உயர்வைப் பற்றிச் சிந்திக்கும் ஒரு உன்னதத் தலைவர். அதனால்தான் அவரது பிறந்த தினமும், நான்காவது சேவை பூர்த்தி நிறைவும் முடிவடைந்த கையோடு 939 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்குகிறார்

வடக்கிலிருந்து இன்று பசில் விசேட அறிவிப்பு முக்கியமான விடயம் என்கிறார் அமைச்சர் சமரசிங்க

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் இன்று சனிக்கிழமை வடக்கிற்குச் சென்று இடம்பெயர்ந்த மக்களை சந்திக்கும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, அங்கிருந்து விசேட அறிவிப்பொன்றை விடுக்கவிருப்பதாக இடர் முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்தத் தகவலை வெளியிட்ட அமைச்சர் சமரசிங்க, எனினும் வடக்கில் எங்கிருந்து பசில் ராஜபக்ஷ இந்த அறிவிப்பை விடுக்கவிருக்கிறார் என்பதை பாதுகாப்புக் காரணம் கருதி வெளியிட முடியாதென்றும் மறுத்து விட்டார்.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் பசில் ராஜபக்ஷ வடக்கு அபிவிருத்திக்கான விசேட செயலணியின் தலைவர் என்ற வகையில் நாளை (இன்று சனிக்கிழமை) வடக்கிற்குச் சென்று விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார். அங்குள்ள இடம்பெயர்ந்த மக்களை சந்தித்து பேசியதன் பின்னரே அவர் இந்த அறிவிப்பை விடுக்கவுள்ளார்.இடம்பெயர்ந்த மக்களுக்கு இந்தக் குறுகிய காலப் பகுதிக்குள் நினைக்க முடியாத அளவுக்கு உரிமைகளை வழங்கும் முக்கியமானதொரு அறிவிப்பாக இருக்கும். அவர் அந்த அறிவிப்பை விடுத்ததன் பின்னர் அதன் விபரங்கள் தெரியவரும் என்று மகிந்த சமரசிங்க இதன்போது கூறினார்.

இதேநேரம், மீள்குடியேற்றம் தொடர்பாக இங்கு விளக்கமளித்த அமைச்சர் வெள்ளிக்கிழமை வரை வவுனியா (127,495), யாழ்ப்பாணம் (2,034), மன்னார் (970), திருகோணமலை (2,762) முகாம்களிலும் மற்றும் 7 வைத்தியசாலைகளிலும் (தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருபவர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் 3,067 பேர்) மொத்தமாக உள்ள ஒரு இலட்சத்து 36 ஆயிரத்து 328 பேர் (136,328) இன்னும் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டியுள்ளனர்.கடந்த வாரத்தில் 143,161 ஆக இருந்த தொகை இவ்வாரம் 136,328 ஆக குறைவடைந்துள்ளது. ஒருவார காலப்பகுதியில் 6500 இற்கும் 7 ஆயிரத்திற்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கண்ணிவெடி அகற்றும் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த சில வாரங்களில் மீள்குடியேற்றம் மேலும் அதிகரிக்கும். அத்துடன் இலங்கை வந்திருந்த மனிதாபிமான விவகாரங்களுக்குப் பொறுப்பான ஐ.நா. உதவி செயலாளர் ஜோன் ஹோம்ஸ், அரசாங்கத்தின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதியிடம் திருப்தி வெளியிட்டுள்ளார். ஐ.நா.விடமிருந்து இம்மாதிரியான வார்த்தைகள் வெளிவருவது இதுவே முதற்தடவை. இதேநேரம், இடம்பெயர்ந்த மக்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அடுத்த ஓரிரு நாட்களில் 50 சதவீதத்தைத் தாண்டும் என்பதுடன், எதிர்வரும் ஜனவரி மாதம் 31 ஆம் திகதிக்குள் தெளிவாக பெரும்பான்மையானோர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருப்பர் என்றும் தெரிவித்தார்.

குடும்ப வன்முறையும் சமூகத் தனிமைப்படுத்தலும் தாயையே குழந்தைகளைக் கொல்வதை நோக்கித் தள்ளியது நீதிபதி பிரைன் பாக்கர் :

Sanjayan NavaneethanSarani Navaneethanகுடும்ப வன்முறை சமூகத் தனிமைப்படுத்தல்’ போன்ற காரணங்களே சசிகலா நவநீதன் தனது குழந்தைகளைக் கொலை செய்வதை நோக்கித் தள்ளியதாக வழக்கின் நீதிபதி பிரைன் பார்க்கர் தெரிவித்துள்ளார். ‘இது மிகவும் மனவருத்தமான கொடுமையான நிகழ்வு’ என்று தெரிவித்த நீதிபதி, ‘நீர் அந்த நேரத்தில் நீரும் உமது குழந்தைகளும் இறப்பதே மேல் என்று நம்பி உள்ளீர்கள். நீர் குடும்ப வருமானம், ஒழுக்கமற்ற உறுவு, குடும்ப வன்முறை சமூகத் தனிமைப்படுத்தல் ஆகியவற்றை கவனத்தில் எடுத்தள்ளீர். உம்முடைய மனக் குழப்பமும், நீர் எடுத்த நடவடிக்கையும் வெளியில் உள்ள ஒருவருக்கு விளங்கிக் கொள்ள முடியாது’ எனத் தெரிவித்தார். தாய்மைக்கால மன உளைச்சலால் தனது குழந்தைகளைக் கொலை செய்த சசிகலா நவநீதனின் வழக்கில் தீர்ப்பளிக்கையில் நீதிபதி அவ்வாறு தெரிவித்தார். காலவரையறையற்று சசிகலா நவநீதன் மனநோயாளர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு உடன்பட்டு உள்ளார்.

‘என்னைச் சுட்டுக் கொல்லுங்கள்’ தாய்மைக்கால மனஉளைச்சல் காரணமாக தன்னிரு குழந்தைகளினதும் தொண்டையில் வெட்டியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த தாய் சசிகலா நவநீதன் கதறினார். தான் தன் குழந்தைகளைக் கொலை செய்துவிட்டதாக நீதிமன்றத்தில் கூறிய அவர் தன்னைச் சுட்டுக் கொல்லுமாறு பொலிசாரை மன்றாடினார். சசிகலா நவநீதன் தனது குழந்தைகளான சன்ஞயன் (5), சாராணி (4), ரிசானா (6 மாதம்) ஆகிய தன் மூன்று குழந்தைகளையும் கொலை செய்ய முற்பட்டு இருந்தார். அதில் சன்ஞயன், சாரணி இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். இச்சம்பவம் லண்டன் புறநகர்ப் பகுதியான கார்ஸ்கால்ரன் என்ற இடத்தில் இருந்த அவர்களின் வீட்டில் சென்றவருடம் மே 30ல் இடம்பெற்றது.

மருத்துவர்களின் போராட்டத்தின் பின் ரிசானா உயிர் தப்பினார். ரிசானாவும் ஜனவரியில் நவநீதன் சசிகலாவின் நான்காவது குழந்தையும் அவர்களுடைய தந்தை நவராஜா நவநீதனுடன் வாழ அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

20 யூலையில் ஓல்ட் பெயிலி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த சசிகலா நவநீதன், சொந்தமாகக் கடை வைத்திருந்து அதில் பணியாற்றிய கணவர் நவராஜா நவநீதன் திருமணத்திற்குப் புறம்பான உறவை வைத்திருந்தார் என்றும் தன்னை அடிப்பதாகவும் தனது தலையில் ஒலித்த யாருடையதோ குரல்கள் அதனை தான் நம்பும்படி உணத்தியதாகவும் தெரிவித்தார்.

சன்ஞயன் சாரணி ஆகியோரின் கொலைகளை புரிந்ததாகவும் ஆனால் தன்னுணர்விற்கு அப்பாற்பட்டு (diminished responsibility) நடந்ததாகவும் ரிசானா மீதான கொலை முயற்சியையும் ஏற்றுக்கொண்டார்.

சம்பவம் இடம்பெற்றதற்கு ஒரு மாதத்திற்கு முன்னிருந்து குழந்தைகளைக் கொலை செய்யும்படியாக அந்தக் குரல்கள் தனது தலையில் ஒலித்து வந்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்த சசிகலா சம்பவதினமும் அந்தக் குரல்கள் மீண்டும் ஒலித்தாகவும் அன்று தான் அந்தக் குரல்கள் கூறியபடி நடந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

Funeral_of_the_Childrenசசிகலா சார்பில் ஆஜரான கியூசி டேவிட் எதரிங்ரன், ‘சசிகலா தனது காலாச்சார காரணங்களுக்காக தனக்கு ஏற்பட்ட உடற்காயங்களை மருத்துவருக்கு காட்டினார். ஆனால் தனது மனநிலையை வெளிப்படுத்தவில்லை’ எனத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ‘தனது வாழ்க்கையில் இனிமேல் எவ்வித அர்த்தமும் இல்லை என்ற முடிவுக்கு வந்த சசிகலா தனது குழந்தைகளை தனது கணவனுடன் விட்டுச் செல்லவும் விரும்பவில்லை’ என்று தெரிவித்தார். ‘தற்போது அவர் தான் மிகப் பயங்கரமான விடயத்தைச் செய்திருப்பதை அறிய வந்துள்ளது. அவர் அப்போதும் மிக நோயாளியாக இருந்தார். இப்போதும் அவர் மிகவும் நோயாளியாகவே உள்ளார்’ என கியூசி டேவிட் எடிங்ரன் நீதிமன்றில் தெரிவித்தார்.

சம்பவம் பற்றி நவநீதன் பொலிஸாருக்கு அவசர அழைப்பை விடுத்தார். தனது மனைவி குழந்தைகளைக் கொலை செய்துவிட்டதாகவும் தெரிவித்தார். பொலிஸார் வந்ததும் நவநீதன் மனைவி கொலைக்குப் பயன்படுத்திய கத்திகளை கட்டில் மெத்தைக்குக் கீழ் வைத்திருப்பதாகவும் கூறியிருந்தார். வீட்டைச் சோதணையிட்ட பொலிஸார் கட்டில் மெத்தைக்குக் கீழிருந்த 3 கத்திகளையும் ஒரு கடிதத்தையும் நவநீதன் சசிகலாவிற்கு தங்கள் திருமணத்தின் ஞாபகார்த்தமாக வழங்கிய நெக்லஸையும் கண்டெடுத்தனர்.

அக்கடிதத்தில் நவநீதனுக்கு ‘திருமணத்திற்குப் புறம்பாக இரு உறவுகள்’ இருப்பதாகக் குறிப்பிட்டு இருந்ததுடன் ‘நான் கண்ணீர் வர அழுது புலம்புகின்றேன்’, ‘உதவிக்கு யாரும் இல்லை’, ‘நாங்கள் எல்லோரும் இறப்பதே நல்லது’ போன்ற வரிகள் இருந்தது.

பொலிஸார் கைது செய்வதற்கு முன்னர் தனக்கு வாழ விருப்பமில்லை தன்னை கொலை செய்யுமாறு சசிகலா பொலிஸாரைக் கேட்டுக் கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தற்கொலை செய்யும் முயற்சியில் எலிகளைக் கொல்வதற்கு வைக்கின்ற மாத்திரைகளை தான் உட்கொண்டாதகவும் சசிகலா பொலிஸாருக்கு தெரிவித்து இருந்தார்.

1999ல் இங்கிலாந்து வந்த சசிகலாவை இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தமும் பாதித்து இருந்தது நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு யுத்தம் தொடர்பான கெட்ட கனவுகள் வந்து போயிருந்ததாகவும் பழைய சம்பவங்கள் மீண்டும் வந்து சென்றதாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டு இருந்தது.

சசிகலாவை பரிசோதணை செய்த மூன்று மருத்துவர்களும் அவர் மிகவும் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததை உறுதிப்படுத்தி இருந்தனர்.

Rita Ariyaratnam with her childrenஇச்சம்பவத்திற்குப் பின்னர் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற சம்பவத்திலும் தனது குழந்தைளுடன் தற்கொலை செய்ய முற்பட்ட தாய் தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றப்பட்டார். குழந்தைகள் உயிரிழந்தனர்.

இச்சம்பவத்திற்கு முன்னர் கனடாவைச் சேர்ந்த இளம்தாயொருவர் தனது கணவனது இறப்பைத் தாங்க முடியாமல் தனது பிள்ளைகளுடன் தற்கொலை செய்ய முயன்றார். இச்சம்பவத்தில் பிள்ளைகள் உயிரிழந்தனர். தாய் காப்பாற்றப்பட்டார்.