January
January
கொரோனோ பெரும்பாலும் இந்த மேற்கு நாடுகளையெல்லாம் ஒரு உலுப்பு உலுப்பி விட நாளொன்றொக்கு இன்னமும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இறந்துகொண்டிருப்பதே இன்றைய சாதாரண நிலையாக வந்துவிட்டது. அதனை சர்வ சாதாரணமாக கருதும் அமெரிக்காவும் பிரித்தானியாவும் கொரோனாவை சீனாவோடு தொடர்புபடுத்தி மக்களின் பழியையும் பாவத்தையும் சீனா மீது திருப்பிவிட்டுவிட்டு இப்போது கூடுதலாகப் பேசுவது உக்ரைன் பற்றி. அமெரிக்காவில் ஜனாதிபதி பைடனும் பிரித்தானியாவில் பிரதமர் பொறிஸ்சும் உள்ளுரில் பெரும் நெருக்கடியை சந்தித்துக்கொண்டிருக்க அவர்களுக்கு அவல் கிடைத்தது மாதிரி அமைந்தது உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கப் போகின்றது என்ற கதையாடல்.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கின்ற விவகாரம், ரஷ்யா கிரேமியாவைக் கைப்பற்றியது முதல் இருக்கின்ற ஒரு விசயம். இதனை ஏதோ ரஷ்யா இப்ப தான் படையெடுப்பிற்கு தயாராகின்றது என்று அமெரிக்க பிரித்தானிய ஊடகங்கள் ரீல் விடுகின்றன. இந்நாடுகளின் உளவுத்துறைகளுக்கும் இந்த ஏழு வருடங்களில் தெரியாததெல்லாம் அமெரிக்க ஜனாதிபதி மீதும் பிரித்தானிய பிரதமர் மீதும் நம்பிக்யையீனம் ஏற்பட்ட பின் தான் புதிய புதிய தகவல்கள் தெரிய வருகின்றதாம். இப்போது இவ்விரு நாட்டுத் தலைவர்களும் தங்கள் உள்ளுர் நெருக்கடியை சமாளிக்க உக்ரைனை பந்தாட முற்பட்டு உள்ளனர்.
பிரித்தானிய பிரதமர் தனது வீட்டை திருத்தம் செய்வதற்கு விதிமுறைகளுக்கு விலக்காக நிதியைப் பெற்றுக்கொண்டது, தானே முன்னின்று அமுல்படுத்திய லொக்டவுன் விதிகளை அவரும் அவரது சகாக்களும் அவருடைய உத்தியோகபூர்வ அலுவலகமான நம்பர் 10 டவுனிங் ஸ் ரீற்றில் ஒன்றல்ல இரண்டல்ல 18 முறை மீறியது அம்பலத்திற்கு வந்துள்ளது. இது ஆளும் கொன்சவேடிவ் கட்சிக்கு உள்ளேயே பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் சிரேஸ்ட்ட அரசாங்க பணியாளர் சூ கிரேயின் அறிக்கையை மேலும் இழுத்தடித்து அதில் முக்கியமான விடயங்கள் எதுவும் இடம்பெறாமல் செய்யும் வகையில் ஸ்கொட்லன்ட் யாட் தாங்களும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டி இருப்பதால் முக்கிய தகவல்களை ஆதாரங்களை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நம்பர் 10 டவுனிஸ் ஸ் ரீற் கார்டனில் நடந்த பார்ட்டிகளை நேரடியாக சிசிரிவி இல் அதே நேரத்தில் பார்த்துக் கொண்டிருந்த ஸ்கொன்லன்ட் யாட் உத்தியோகத்தர்கள் யாரும் இதுவரை எந்த விசாரணையையும் மேற்கொள்ளாமல் இருந்தனர். இப்போது உண்மைகள் வெளியே வரப்போகின்றது என்றதும் தங்களையும் ஆளும் குழுமத்தையும் காப்பாற்ற துரித நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை உட்பட்ட ஆசிய நாடுகளில் சட்டத்தை உருவாக்குபவர்கள், சட்டம் ஒழுங்கை நிர்வகிக்க வேண்டியவர்கள், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியவர்கள் எல்லோரும் கூட்டாக இணைந்து ஊழலில் ஈடுபடுவது போன்ற ஒரு நிலையே இன்று ஜனநாயகத்தின் காவலர்களாக தங்களை அறிவிக்கும் பிரித்தானியாவில் நடைபெறுகின்றது.
இலங்கையில் ஜனாதிபதி சந்திரகா குமாரதுங்கா ஒரு இனவாதியாக இருக்கவில்லை. ஓராளவு லிபரலான தலைவராகவே இருந்தார். ஆனால் அவருடைய காலத்திலேயே நாட்டில் ஊழல்கள் அதிகரித்திருந்தது. அதற்கு அவருடைய தனிப்பட்ட பழக்கவழக்கங்களும் காரணமாக இருந்தது. இதே நிலையிலேயே பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் உள்ளார். இவரும் கொன்சவேடிவ் கட்சியாக இருந்தாலும் லிபரல் போக்குடையவர். ஆனால் தனிப்பட்ட முறையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு நேர்மையற்றவர். அரசியல் கொள்கையுடையவரும் அல்ல. மதில் மேல் புனையாக இருந்து எந்தப் பக்கம் சரிந்தால் தனக்கு அரசியல் ஆதாயம் வருமோ அப்பக்கம் சாய்பவர். ஜரோப்பாவில் இருந்து பிரித்தானியா பிரிய வேண்டும் என்ற அவரது முடிவும் அவ்வாறே எடுக்கப்பட்டது.
கோவிட் காலத்தில் அவருடைய விவேகமற்ற போக்குகளே பிரித்தானியா தனது சனத்தோகை விகிதாசாரத்தைக் காட்டிலும் பல்லாயிரக் கணக்காணோரை கோவிட்இல் பலிகொள்ளக் காரணம். மேலும் கோவிட் கால நெருக்கடிக்கு கடன் பெறப்பட்ட 200 பில்லியன் பவுண்களில் 10 வீதம் (20 பில்லியன் பவுண்கள்) லஞ்சம் மற்றும் ஊழலில் வீணடிக்கப்பட்டது. முகக்கவசம் மற்றும் பாதுகாப்பு அங்கிகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தங்களை தங்கள் ஆளும் குழுத்திற்குள் வழங்கி இந்த 20 பில்லியனை இந்த ஆளும் குழுமத்தை அண்டிப்பிழைப்பவர்கள் சுரட்டிக்கொண்டனர். இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் நடைபெறும் அதே மாதரியான லஞ்சம் ஊழல் பிரித்தினிய ஆட்சிபீடத்திலும் மிகச் சர்வசாதாரணமாக்கப்பட்டு உள்ளது.
20 பில்லியனை ஒரு காலாண்டில் ஏப்பம் விட்ட பொறிஸ் ஜோன்சன் தலைமையிலான அரசு வரும் ஏப்ரல் மாதம் முதல் சராசரி ஊதியமீட்டும் பல மில்லயன் கடும் உழைப்பாளர்களின் வரியை அதிகரித்து 12.5 பில்லியன் பவுணை அறவிடவுள்ளது.
இந்த நெருக்கடியில் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ள இன்னும் சில தினங்களில் பிரித்தானிய பிரதமர் உக்ரைன் சென்று போர்பறை முழங்க உள்ளார். கடந்த காலங்களில் அமெரிக்க – பிரித்தானிய கூட்டு மேற்கொண்ட யுத்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் உள்நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியே காரணமாக இருந்தது.
தற்போது கூட உக்ரைன் ஆட்சித் தலைவர் அமெரிக்க பிரித்தானிய நாடுகளின் போர் முழக்கத்தை தனக்கு விளங்கவில்லையென்றே தெரிவித்து வருகின்றார். ரஷ்யாவுக்கு எதிரான கடுமையான நிலைப்பாடுடைய அவர் ரஷ்யாவை வலிந்து யுத்ததிற்கு இழுக்க வேண்டாம் என்றே கேட்டுக்கொண்டுளார். ரஷ்யா உக்ரைன் நாட்டின் எல்லையோரமாகக் படைகளைக் குவிப்பது ஒன்றும் புதிதல்ல என்று குறிப்பிடும் அவர், ரஷ்யா தன் நாடுமீது உடனடியாகப் படையெடுக்கும் நிலையில்லை என்ற பாணியிலேயே நடந்துகொள்கின்றார்.
உக்ரைனில் அவ்வாறான ஒரு யுத்தப் பதட்டம் காணப்படவில்லை என்றே தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்யாவும் தனது படையணிகளை உக்ரைனில் குவித்திருந்த போதும் இது கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் ஒரு விடயமே என்றும் உக்ரைன் மீது படையெடுக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லையென்றுமே தெரிவித்து வருகின்றது. நேட்டோ தனது பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயற்படுவதனாலேயே தாங்கள் உக்ரைன் எல்லையில் படைகளைக் குவிப்பதாக ரஷ்யா தெரிவிக்கின்றது.
ஆனாலும் விளாடிமீர் பூட்டினுக்கு சோவியத் ரஷ்யாவை மீண்டும் கட்டியெழுப்பும் கனவு இல்லையென்று சொல்வதற்கில்லை. அதனை அவர் படைபலத்தின் மூலம் சாதிக்க முயற்சிக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் கலங்கிய குட்டையில் தங்கள் இருப்பைக் காப்பாற்றுவதற்கு அமெரிக்காவும் பிரித்தானியாவும் மீண்டும் கை கோர்த்துள்ளன. உக்ரைனில் ஆயதங்களை இவர்கள் குவிக்கின்றனர்.
ஆமை புகுந்த வீடு உருப்படுகிறதோ இல்லையோ அமெரிக்காவும் பிரித்தானியாவும் தலையிட்ட எந்த நாடும் உருப்படவில்லை. காலனித்துவ காலத்திற்குப் பின்னான நவகாலனித்துவ காலத்தில் அப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா என இவர்கள் தலையீடு செய்த நாடுகள் அத்தனையும் இவர்கள் தலையீடு செயவதற்கு முன்பிருந்த நிலையைக் காட்டிலும் மிக மிக மோசமான நிலைக்கே சென்றுள்ளன. அந்நாடுகளில் சாதாரண உயிர்வாழ்வே தற்போது மிக மோசமானதாக்கப்பட்டு உள்ளது.
இவ்விரு நாடுகளினதும் மிக நெருங்கிய நேசநாடான சவுதியரேபியாவின் மன்னன் துருக்கியில் உள்ள தங்கள் தூதராலயத்தில் வைத்து ஒரு ஊடகவியலாளனை கண்டதுண்டமாக வெட்டி படுகொலை செய்ததையே கண்டுகொள்ளாமல் தங்களை இன்னமும் மனித உரிமைக்காவலர்களாகக் காட்டிவருகின்றனர். சவுதியரேபியா, அமெரிக்க பிரித்தானிய ஆயதங்களைப் பயன்படுத்தி யேர்மன் நாட்டினை கடந்த சில ஆண்டுகளாகவே சின்னா பின்னமாக்கி வருகின்றது. அது பற்றி இந்நாடுகள் வாயே திறக்கவில்லை. இப்போது உக்ரைனை சின்னா பின்னமாக்க தயாராகிக் கொண்டுள்ளனர்.
இப்போது உலகின் பொருளாதார தொழில்நுட்ப படைப்பலச் சமநிலையில் பாரிய மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கையில் ஆண்ட பரம்பரைதான் ஆழ வேண்டும் என்ற திமிருடன் தொடர்ந்தும் இந்நாடுகள் உலகின் அமைதியைக் குலைத்து யுத்தத்தை உற்பத்தி செய்து வருகின்றனர். ரஷ்யாவுக்கு எதிராக இவ்வளவு துள்ளும் பிரித்தானியாவில் தான் ரஷ்யாவின் சட்ட விரோதப் பணத்தின் பெரும்பகுதி குவிந்துகிடக்கின்றது. அதைப் பற்றியும் பிரித்தானியா மௌனமாகவே உள்ளது.
பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்த வேண்டும் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கனிடம் பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தைவான் விவகாரத்தில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இது குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் போதும் எதிரொலிக்கும் என சீனா கருதுகின்றது.
ஏற்கனவே சீனாவின் மனித உரிமை மீறல்களால் குளிர்கால ஒலிம்பிக்கிற்கு அதிகாரப்பூர்வ குழுவை அனுப்பப்போவதில்லை என அமெரிக்கா கடந்த மாதம் அறிவித்திருந்தது.
இந்த நிலையிலேயே அமெரிக்காவுக்கு சீனா கடும் எச்சரிக்கையினை விடுத்துள்ளது.
சீனாவின் பீஜிங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி எதிர்வரும் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், 20ஆம் திகதி நிறைவடையவுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.
பெப்ரவரி இறுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் சர்வதேசத்தையும் எங்களையும் ஏமாற்றுவதற்காக வடக்கில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை இடம்பெறுகின்றது. இதில் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான நடவடிக்கையில் யாரும் பங்கேற்க வேண்டாமென யாழ் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் தெரிவித்திருந்ததது.
மேலும் நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை இன்றைய தினம் யாழ் மத்திய கல்லூரியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் ஆகியோரின் பங்குபற்றலுடன் கலாசார நிகழ்வுகள் சகிதம் சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில், நீதி அமைச்சின் நீதிக்கான அணுகல் நடமாடும் சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதி அமைச்சின் நடமாடும் சேவையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை உள்ளீர்க்கக்கூடாது என தெரிவித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த நிகழ்வுக்கு வந்த எந்த பிரதிநிதியுமே போராடிக்கொண்டிருந்த மக்களை கடமைக்கேனும் சந்தித்து பேச முன்வரவி்ல்லை என்பதே வேதனையான விடயம். நீதி பற்றி இம்மியளவும் சிந்திக்காத இந்த நாட்டில் இருந்து கொண்டு தான் – இவர்களிடம் தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை எதிர்பாரத்துக்கொண்டிருக்கின்றோம்.
வந்த தென்னிலங்கை அரசியல்வாதிகள் கூட பரவாயில்லை. ஆனால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களின் நடவடிக்கைகள் தான் இன்னும் வேதனையளிக்கின்றது. இதே டக்ளஸ் தேவானந்தா தான் கடந்த வருடம் காணாமலாக்கப்பட்டோரை பற்றிய தகவல்களை கேட்டு உறவுகள் போராடிய போது இரண்டு மாதங்களுக்குள் தீர்வு கிடைக்கும் என ஊடகங்களில் கூறியவர். அது உண்மை போலவும் தீர்வு கிடைக்கும் போலவும் தொடர்ந்தும் தெரிவித்துக்கொண்டேயிருந்தார். அவர் இதற்கு தீர்வு தருவாதாக கூறியே பல மாதங்கள் ஆகிவிட்டன. பாவம் டக்கர் மறந்து விட்டார் போலும்.
காணமலாக்கப்பட்டோர் விவகாரத்துக்கு தீர்வு இரண்டு மாதங்களில் கிடைக்கும் என கூறியிருந்தார். அவர் இதனை கூறி சில நாட்களிலேயே ஐ.நாவில் உரையாற்றிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ காணாமலாக்கப்பட்டோருக்கு மரணச்சான்றிதழ் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்தார். இந்த கருத்தை எதிர்த்து தீர்வு தருவதாக கூறிய டக்ளஸ் தேவானந்தாவோ – தமிழ் தேசியம் – விடுதலைப்புலிகள் என கூவிக்கொண்டிருக்கும் எந்த தமிழ் தலைமையுமே எதிர்ப்பு நடவடிக்கைகள் எவையுமே மேற்கொண்டிருக்கவில்லை. இவ்வளவு தான் இவர்களுடைய மக்கள் மேலான பற்று. இவர்களுடைய மக்கள் மீதான அக்கறை எல்லாம் தேர்தல் துண்டுப்பிரசுரங்களில் மட்டுமே.

தாய் நிலத்தில் நிகழ்வு நடந்த பாடசாலைக்கட்டடத்துக்கு வெளியே ஒரு மக்கள் கூட்டம் உறவுகளை தேடி தெருவில் நின்று போராடிக்கொண்டிருக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேடையில் நின்று கொண்டு ,
“அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்களுக்கான விடயங்களில் பாரபட்சங்களை காட்டப் போவதில்லை. இந்த அரசாங்கத்தை நம்பி அவர்களுடன் பயணிப்பதனூடாக எமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை விரைவாக பெற்றுக்கொள்ளவும் முடியும்.” என கூறுகின்றார். இவ்வளவு தான் தமிழர் தலைமைகளுடைய அரசியல் பார்வை.
இன்றைய தமிழ் அரசியல் பரப்பிலுள்ள எல்லா அரசியல்வாதிகளும் தம்மையும் தமது அரசியல் இருப்பையும் பாதுகாத்தால் மட்டும் போதுமானது என்பதாகவே தங்ககளுடைய அரசியலை நகர்த்திக்கொண்டிருக்கின்றனர்.
இந்த காணாமலாக்கப்பட்டோரை மீட்டு தரச்சொல்லி மக்கள் ஒரு தசாப்பதத்துக்கும் மேலாக போராடிக்கொண்டு தான் இருக்கின்றனர். அரசோ – அரசிலிருக்கும் தமிழ் பிரதிநிதிகளோ இதனை எப்போதும் செவியில் வாங்கிக்கொள்ளவில்லை. காணாமலாக்கப்பட்டோரை தேடிய மக்களின் போராட்டம் எப்போதெல்லாம் வலிமை பெறுகிறதோ அப்போதெல்லாம் அரசின் தமிழ்பிரதிகள் ஏதாவது சொல்லி – தீர்வு தருவதாக கூத்தாடி மக்களின் போராட்டத்தை குழப்பி விடுகின்ற சூழலே தொடர்கின்றது.
மாவீரர் தினம் – புலி அரசியல் – பிரபாகரன் கைகாட்டிய கட்சி என்றெல்லாம் கொடி பிடித்து தமிழ் மக்களின் ஓட்டுக்களை பெற்றுக்கொண்ட முக்கியமான தமிழ் தலைமைகள் யாரும் இந்த மக்களை கண்டுகொள்வதேயில்லை என்பதே நிதர்சனம். தொடர்பேயில்லாமல் இவ்வளவு நாளும் இல்லாமல் திடீரென சுடலை ஞானம் வந்ததது போல 13வது திருத்ததச்சட்டத்தை பிடித்து தொங்கிக்கொண்டு ஆளாளுக்கு போராட்டமும் – இந்திய பிரதமருக்கு கடிதமும் எழுதுவதை விட்டுவிட்டு இந்த மக்களுடைய பிரச்சினையை தீர்க்கும் வரைக்காவது ஒரு தொடர்ச்சியான போராட்டத்தை மேற்கொள்ள தமிழ்தலைமைகள் முன்வரவேண்டும்.
உறவுகளை தேடியலைந்து – கேட்டு போராடி போராடியே போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பலர் இறந்துவிட்டார்கள். எஞ்சியவர்களும் இறந்து போவதற்குள் சரி இவர்களுக்கான தீர்வு கொடுக்க கிடைக்க வேண்டும். அதற்காக இயங்க அனைத்து தமிழர் தரப்பு அரசியல் கட்சிகளும் இணைந்து செயலாற்ற முன்வர வேண்டும். முதலில் இந்த மக்களின் உறவுகள் தொடர்பான பிரசினைகளை தீர்த்து அவர்களும் எங்களை போல குடும்ப உறவுகளுடன் சந்தோசமாக வாழ நடவடிக்கைகளை மேற்கொள்வதே தமிழ்தேசியத்தை சொல்லி அரசியல் செய்வோர் இந்த மக்களுக்கு செய்யககூடிய பாரிய கைமாறாகும்.
இலங்கையை சேர்ந்த நபர் ஒருவரும் அவரது பிள்ளைகளும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய காவல்துறையினர் தந்தை தனது பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர். 40 வயது இந்திக குணதிலக நான்குவயது மகளையும் ஆறுவயது மகனையும் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்;டுள்ளனர்.
Essington Street in the southeast Perth suburb of Huntingdale. பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிள்ளைகள் தனியாக வசிக்கும் தாயை சந்திப்பதற்கு வருவதற்காக திட்டமிட்டிருந்தனர் எனினும் அவர்கள் வராததை தொடர்ந்து எச்சரிக்கை அடைந்த அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அந்த வீட்டிற்கு சென்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகள் இந்த மரணங்களுக்கும் வேறு எவருக்கும் தொடர்பில்லை என்பதை உறுதி செய்துள்ளன என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் இடம்பெறுவதற்கு இரண்டுநாட்களிற்கு முன்னர் கடற்கரையில் தான் பிள்ளைகளுடன் காணப்படும் படத்தினை குணதிலக வெளியிட்டுள்ளார். கிறிஸ்மஸிற்கு முன்னர் வெளியிட்ட வீடியோவொன்றில் தான் மனஉளைச்சலிற்கு ஆளாகியுள்ளதை அவர் உறுதி செய்துள்ளார்.
தன்னை மருத்துவரை பார்க்குமாறு பரிந்துரைத்துள்ளனர் தான் உளவியல்நிபுணர்களை சந்தித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மக்கள் ஆழமான கரும் துவாரத்தில் சிக்குண்டுள்ளனர் தற்கொலை செய்துகொள்பவர்கள் ஒருபோதும் தங்கள் வாழ்க்கையை முடிக்கவிரும்புவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் உண்மையில் தாங்கள் சிக்குண்டுள்ள தாங்கமுடியாத துயரத்திற்கு முடிவை காணவிரும்புகின்றனர் அதிலிருந்து மீள திரும்பமுடியாது மன அழுத்தமே மிகப்பெரிய கொலையாளி எனக்கு அது நன்கு தெரியும் என அவர் தெரிவித்திருந்தார். குணதிலக 2014 முதல் தனது சொந்த வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
லத்தீன் அமெரிக்க நாடான ஹோண்டுராஸின், முதல் பெண் ஜனாதிபதியாக சியோமாரா காஸ்ட்ரோ பதவியேற்றுள்ளார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற பதவியேற்பு விழாவில், அமெரிக்க துணை ஜனாதிபதி ; கமலா ஹாரிஸ் பங்கேற்றார்.
ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் உரையாற்றிய காஸ்ட்ரோ, நாட்டின் கடன் சுமையை சரிசெய்வதாக உறுதிமொழி அளித்தார். அத்துடன், சமூக நீதி மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பின்பற்றுவதாக உறுதியளித்தார்.
62 வயதான காஸ்ட்ரோ, சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சமாளித்து, கடுமையான கருக்கலைப்புச் சட்டங்களை தாராளமாக்குவதாக உறுதியளித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளின் படி, சியோமாரா காஸ்ட்ரோ 53 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றிப்பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான டெகுசிகல்பா மேயர் நஸ்ரி அஸ்ஃபுரா, 34 சதவீத வாக்குகளைப் பெற்றார்.
இதன் மூலம் 12 ஆண்டுகளுக்கு பின்னர் ஹோண்டுராஸில் இடது சாரி கட்சி ஆட்சியை பிடித்தது. மேலும் இந்த வெற்றியின் மூலம் ஹோண்டுராஸின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையையும் சியோமாரா காஸ்ட்ரோ பெற்றுள்ளார்.
சியோமாரா காஸ்ட்ரோ, முன்னாள் ஜனாதிபதி மானுவல் ஜெலயாவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
காஸ்ட்ரோவின் கணவர மானுவல் ஜெலயா, 2006 முதல் 2009 வரை நாட்டை ஆட்சி செய்தார்,. அவர் சதிப்புரட்சி மூலம் வெளியேற்றப்பட்டார். கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பு, அவர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு முறை பதவிக்கு போட்டியிட்டார்.










