24

24

“ நான் தமிழன். என்னிடம் நாடு வராது.” – மனோ கணேசன்

“சஜித் பிரேமதாசவும், பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் முரண்பாடுகளை மறந்து கரங்கோர்த்தால் மட்டுமே  இந்த காட்டாட்சியை வீழ்த்த முடியும் .” என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்  தெரிவித்துள்ளார்.

பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் 43ஆவது படையணியின் மாநாடு கொழும்பில் நேற்றையதினம் நடைபெற்றுள்ளது. இம்மாநாட்டில் கலந்துகொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் கலந்துகொள்ள கூடாது என கட்சியினால் அறிவறுத்தல் வழங்கப்பட்டடிருந்தது.  எனினும் நேற்றைய தினம் மனோ கணேசன், தலதா அத்துக்கோரளை மற்றும் குமார வெல்கம ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இந்த விடயம் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மனோ கணேசன் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டிருந்தார்,

நான் மனோ கணேசன். நான் ஒரு யதார்த்தவாதி. கொள்கைக்கும், நடைமுறைக்கும் இடையில் சமநிலை பயணம் செய்பவன். நான், இருப்பதை விட்டு விட்டு, பறப்பதை பிடிக்க அலைபவன் அல்ல. அன்றும், இன்றும், சமீப எதிர்காலம் வரைக்கும் இந்நாட்டில் பெரும்பான்மை ஆட்சிதான்.

அதற்குள் நாம் எப்படி எமது காரியங்களை செய்வது என்பதை நான், முயன்று, செய்து வருகிறேன். ஏதோ, நாட்டில் நான்தான் சர்வ அதிகாரம் கொண்ட அரச தலைவராக இருந்தது – இருப்பது போல் என்னிடம் கேள்வி கேட்பவர்களை கண்டால் எனக்கு சிரிப்புதான் வருகிறது.

முடியுமானால், என்னிடம் நாட்டை கொடுத்து பாருங்கள். மாற்றி காட்டுகிறேன். ஆனால், நான் தமிழன். என்னிடம் நாடு வராது. அதுதான் யதார்த்தம். நான் சுதந்திரமாக முடிவுகளை தைரியமாக எடுப்பதால்தான் எனக்கு எங்கும் அழைப்பு இருக்கிறது. எந்தவொரு பெரும்பான்மை கட்சிகள் – அரசியல்வாதிகள் நடத்தும் கலந்துரையாடல்களிலும் நான் கலந்துக்கொள்வேன்.

ஒருகாலத்தில் அதிகார பரலாக்கலுக்கு எதிராக இருந்த நண்பர் சம்பிக்க ரணவக்க இன்று அதுபற்றி சாதகமாக பேசுகிறார். அதுபற்றி பொது முடிவு எடுக்க வேண்டும் என்று என் பெயரை குறிப்பிட்டு கூறுகிறார். அது எமது வெற்றி. நாம் முன்னோக்கி செல்வோம். சஜித் பிரேமதாசவும், சம்பிக்க ரணவக்கவும் முரண்பாடுகளை மறந்து கரங்கோர்க்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி விரும்புகிறது. அதன்மூலமே இந்த காட்டாட்சியை வீழ்த்த முடியும் என நம்புகிறது.

தமிழ் முற்போக்கு கூட்டணி, எவருக்கும் எடுபிடி வேலை செய்யாத, ஒரு பலமான சுதந்திரமான கட்சி. இது காட்சி அல்ல, மக்களின் கட்சி. அதை இன்னமும் பலமாக நாம் வளர்ப்போம். அது ஒன்றே எமது பலம். அதன் மூலமே எம்மால் சாதிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானின் வரலாற்றில் உச்சநீதிமன்றத்தில் ஒரு பெண் நீதிபதியாக நியமனம் !

பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக ஆயிஷா மாலிக் நியமிக்கப்பட்டுள்ளாா். பாகிஸ்தானின் வரலாற்றில் உச்சநீதிமன்றத்தில் ஒரு பெண் நீதிபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
இதுகுறித்து பாகிஸ்தான் நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு அரசமைப்புச் சட்டத்தின் 177-ஆவது பிரிவின்படி, லாகூா் உயா்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் ஆயிஷா மாலிக், பாகிஸ்தான் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார். இதற்கான நியமனத்தில் அதிபா் ஆரிஃப் ஆல்வி ஒப்புதல் அளித்துள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஆயிஷா மாலிக், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். 20 ஆண்டுகள் வரை லாகூர் உயர்நீதிமன்ற நீதிபதியாக செயல்பட்டு வந்தார். சொத்துக் குவிப்பு வழக்கு மற்றும், விவாசாயிகள் பிரச்சனையில் சிறப்பான தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார்.
ஆயிஷா மாலிக்கை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்குமாறு பாகிஸ்தான் நீதித் துறை ஆணையம் கடந்த மாதம் பரிந்துரை செய்தது. இதையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களுக்கான நாடாளுமன்ற குழு இதை பரிசீலித்தது.
லாகூா் உயா்நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கான தேர்வில் 4-வது  இடத்தில் ஆயிஷா மாலிக் இருந்தார் . ஆனாலும், பணி மூப்பை கருத்தில் கொள்ளாமல் ஆயிஷா மாலிக்கைத் தோ்வு செய்து, அதிபரின் ஒப்புதலுக்கு அந்தக் குழு அனுப்பி வைத்தது. இதை தொடா்ந்து, ஆயிஷா மாலிக்கை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அதிபா் ஒப்புதல் அளித்தார்.

இலங்கையில் விரைவில் நடைமுறைக்கு வருகிறது டிஜிற்றல் பணப்பை !

டிஜிற்றல் தேசிய அடையாள அட்டை´ அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் நாட்டின் சகல பிரஜைகளுக்கும் டிஜிற்றல் பணப்பை ( digital wallet ) மென்பொருளை அறிமுகம் செய்ய எதிர்பார்த்துள்ளதாக இளைஞர் விவகார அமைச்சரும் டிஜிற்றல் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கையடக்க தொலைபேசி மூலம் பணத்தை செலுத்துவதற்காக இலங்கை மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்ட லங்கா கியூ ஆர்(LANKA QR )குறியீட்டை கம்பஹாவில் மக்கள் மயப்படுத்தும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் அவ்வாறு குறிப்பிட்டார்.

கடவுச்சீட்டு, பிறப்பு, விவாகச் சான்றிதழ்கள், பரீட்சைப் பெறுபேறுகள் உட்பட அத்தியாவசிய தனிப்பட்ட ஆவணங்களை தமது கைத்தொலைபேசியில் களஞ்சியப்படுத்துவதற்கான டிஜிற்றல் கட்டமைப்பு வசதி இதன் மூலம் கிடைக்கும்.

தேவையான சந்தர்ப்பங்களில் எந்தவொரு சிக்கலும் இன்றி உரிய ஆவணங்களை டிஜிற்றல் முறையின் கைத்தொலைபேசி ஊடாக வழங்கும் வாய்ப்பு சகல பிரஜைகளுக்கும் கிடைக்கும் எனவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

உலகில் சுற்றுலாவுக்கு ஏற்ற 5 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கம் !

சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்போது வெகுவாக அதிகரித்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பாரிய பின்புலமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உலகில் சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்வதற்கு பொருத்தமான ஐந்து நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தடுப்பூசி விடயத்தில் இலங்கை பெரும்பாலும் முன்னணியில் காணப்படுகின்றதென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹெரோயின் போதைப் பொருளுடன் சிக்கிய திருகோணமலை மாவட்ட முன்னாள் பிரதி அமைச்சரின் மகன் !

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அஹமட் லேன் பகுதியில் ஹஸீஸ் போதைப் பொருள் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று (23) மாலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்

முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்பின் மகன் கைது! - தமிழ்வின்

திருகோணமலை மாவட்ட முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் என்பவரின் மூத்த மகனான முஹம்மட் மஹ்சூம் அப்துல்லா (31வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் திருகோணமலை பிராந்தியத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த சந்தேகநபரை சோதனையிட்டபோது அவரிடமிருந்து ஹசிஸ் என்றழைக்கப்படும் போதைப்பொருள் ஒரு கிரேம் 170 மில்லி கிராம் மற்றும் ஹெரோயின் 150 மில்லி கிராம் கைப்பற்றப்பட்டதாகவும் பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

 

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை போதைப்பொருளுடன் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். குறித்த சந்தேக நபரை இன்றையதினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் – ஐ.நாவுக்கு செல்ல தயாராகும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை !

ஈஸ்டர் தாக்குதல் வழக்கை சர்வதேச அளவில் எடுத்துச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராந்துவருவதாக கொழும்பு பேராயர், கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு நீதி கிடைக்க தங்களால் முடிந்தவரை முயற்சித்ததாவும் இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துவிட்டன என்றும் அவர் கூறினார். எனவே சர்வதேசத்திற்குச் செல்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாகவும் அதற்கும் அர்த்தம் ஐக்கிய நாடுகள் சபைக்கு செல்வது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த வழக்கை முன்னெடுத்துச் செல்வதற்காக இலங்கையுடன் தொடர்பு வைத்திருக்கும் சக்தி வாய்ந்த நாடுகளையும் தாம் அணுகவுள்ளதாக கொழும்பு பேராயர் குறிப்பிட்டார்.

இவ்வளவு நாட்களாக உள்நாட்டில் நீதி கிடைக்கும் என நமபியமை காரணமாக மேற்கூறிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் கொழும்பு பேராயர் குறிப்பிட்டார்.

வியாழேந்திரனின் கையடக்க தொலைபேசி அழைப்பு தொடர்பில் விசாரணை செய்ய கோரிக்கை !

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டின் முன்னால் சுட்டுக்கொல்லப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரம் கொலை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் கையடக்க தொலைபேசி அழைப்பு தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டின் முன்னால் சுட்டுக்கொல்லப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரம் படுகொலை தொடர்பில் நகர்த்தல் பத்திரம் மூலம் குறித்தவழக்கானது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சட்டத்தரணி என். கமலதாஸ் ஆஜராகியிருந்தனர். குறித்த வழக்கானது நீதிவான் நீதிமன்றில் நீதிபதி ஏ.சி. றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சம்பவம் நடைபெற்ற வேளையில் இராஜாங்க அமைச்சர் தன்னுடைய வீட்டிலிருந்தார் என்றும் அதன் பின்னரே அவர் அங்கிருந்து வெளியேறிச் சென்றார் என்ற தகவலும் இருக்கும் காரணத்தினால் இரண்டு விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்க வேண்டும் என்று நீதிவானிடம் கோரியிருக்கின்றோம்.

இராஜாங்க அமைச்சர் எப்போது வீட்டைவிட்டு வெளியேறினார் என்பதை அறிவதற்காக வீதிகளில் உள்ள சிசிரிவி காட்சிகள் விசாரணை செய்யப்பட வேண்டும். குறித்த வழக்கு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முறையாக முன்னெடுக்காத காரணத்தினால் குறித்த வழக்கானது கரடியனாறு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நீதிவான் தெரிவித்ததாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு முதன் முதலில் தொடர்பினை ஏற்படுத்திய இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அந்த அழைப்பை எடுத்த இடம் மற்றும் வழியில் இருந்த சிசிரிவி காணொளிகளை உடன் பரிசீலனை செய்யவேண்டும் என்ற கோரிக்கை சட்டத்தரணிகளினால் முன்வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த வழக்கானது எதிர்வரும் 03 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் போராட்டம் !

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் இன்று  வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கவனயீர்ப்பில் ஈடுபட்ட தொண்டர் ஆசிரியர்கள் தெரிவிக்கையில்,

நாங்கள் பல இன்னல்களுக்கு மத்தியில் பல வருடங்களாக தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றி வருகின்றோம். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட, கணவனை இழந்த மற்றும் விசேட தேவையுடையவர்களை கொண்ட குடும்பத்தில் இருந்து தான் நாங்கள் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றி வருகின்றோம்.

இந்நிலையில் கடந்த 21.01.2022 அன்று அமைச்சினால் கல்வி வலயங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் 60 தொண்டர் ஆசிரியர்கள் வடக்கு மாகாணத்தில் உள்ளார்கள் என்றும் அவர்களது நியமனம் தொடர்பாக ஆராயுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் வடக்கு மாகாணத்தில் 210 தொண்டர் ஆசிரியர்கள் உள்ளோம். 60 தொண்டர் ஆசிரியர்கள் என குறித்த கடிதத்தில் எவ்வாறு வந்துள்ளது என எமது வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கத்தினை வினவிய போது அவர்கள் தமக்கு இது தொடர்பாக எதுவும் தெரியாது என்று கூறுகின்றனர். நாங்கள் இது தொடர்பாக அமைச்சினை வினவியபோது, வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கம் அனுப்பிய பெயர் விவரங்களின் அடிப்படையிலேயே தாங்கள் குறித்த கடிதத்தை அனுப்பியதாக தெரிவிக்கின்றனர்.

மிகுதி 110 பேருடைய பெயர்களும் அந்த கடிதத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என நாங்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். எனவே உரிய அதிகாரிகள் எமது நிலையை கருத்தில் கொண்டு எமக்கான நியமனத்திற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் – என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.