02

02

தமிழர்களுக்கு என்ன தேவை? அவர்களுக்கு என்ன வேண்டும்?

சிறு பிள்ளைகளோடு உரையாடல் நடத்தினால் “நீங்கள் யாரைப் போல் வரப்போகின்றீர்கள்? என்னவாக வரப் போகின்றீர்கள்?” அவர்களும் தங்களுக்கு தெரிந்ததைச் சொல்வார்கள். ஊரில் கேட்டால் டொக்டர், என்ஜினியர் என்பார்கள். அன்று அப்படித்தான் இருந்தது. இன்றும் அப்படி இருக்கும் என நம்புகிறேன். புலம்பெயர் நாடுகளில் கேட்டால் புட்போல் ப்பிளேயராக, யூரியூப்பராக, விடியோ கேம் டிசைனராக என்று சொல்வார்கள். ஏனெனில் இத்தொழில்களில் வருமானம் அதிகம். அவர்கள் வளர்ந்து பதின்ம வயதை அடையும் போது தங்கள் உண்மைநிலையை உணர்ந்து அதற்கமைய தங்கள் தெரிவுகளை மேற்கொள்வார்கள். ஒவ்வொருவரும் தங்களுடைய தேவை என்ன என்பதை அடையாளம் கண்டுகொண்டால் தான், அத்தேவையை நிறைவேற்றுவதற்கான திட்டங்களை வகுத்துச் செயற்பட முடியும். இது தனிப்பட்டவர்களுக்கு மட்டுமானதல்ல.

சமூகத்திற்கும் இதே பிரச்சினை இருக்கின்றது. ‘தமிழர்களுக்கு என்ன தேவை?’ என்பதில் இதுவரை எந்தத் தெளிவும் உடன்பாடும் இல்லை. ஆனால் ஜனவரி முதலாம் திகதி நேற்று பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரனின் வீட்டில் வைத்துத்தான் தமிழ் பேசும் தலைவர்களின் ஒருமித்த நிலைப்பாடு இறுதி செய்யப்பட்டதாம். அப்படி என்றால் 2021 டிசம்பர் 31 வரை இவர்களிடம் ஒருமித்த நிலைப்பாடு இருக்கவில்லை. தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்றதும் தெரியாது. டிசம்பர் 31 கொழுத்திப் போட்ட வெடிச்சத்ததில் எழும்பி சனிக்கிழமை ஒரு நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறார்கள். அந்த நிலைப்பாடு என்ன என்பது தமிழ் சனத்துக்கு தெரியாது.

இந்தத் தமிழ் பேசும் தலைவர்கள் யார் என்பதிலேயே தெளிவில்லை. ரிஎன்ஏ யும் முஸ்லீம் காங்கிரஸ்ம் தான் தமிழ் தலைவர்கள் என்று யார் சொன்னது? முதலில் இந்தச் சொல்லாடல்களை வைத்து ரீல் விடுகின்ற அரசியலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.

சுதந்திர இலங்கையில் மலையகத் தமிழர்களுடைய வாக்குரிமை பறிக்கப்பட்ட போது அதற்குத் துணை போனவர்கள் இன்று தமிழ் மக்களுடைய உரிமைகளுக்காக தங்கள் கறள்கட்டிய சைக்கிளை எடுத்து ஓடுகின்றனர். தனிச்சிங்களச் சட்டத்தை பண்டாரநாயக்க கொண்டு வந்தது சிங்கள மக்களின் நலனுக்காக அல்ல. அதேபோல் அதனை எதிர்த்தவர்கள் தமிழர்களுடைய நலன்களுக்காக மட்டும் அதை எதிர்க்கவில்லை.

எழுபதுக்களில் தரப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்ட போது அப்பிரச்சினை தமிழ் மக்களுடைய பிரச்சினையாக்கப்பட்டது. உண்மையில் அது யாழ்ப்பாணத்தில் இருந்த படித்த சமூகத்தின் ஒரு பிரச்சினையே. ஏனைய தமிழ் மாவட்டங்களைப் பொறுத்தவரை இந்த மாவட்டரீதியான தரப்படுத்தல் ஏனைய தமிழ் மாவட்டங்களில் இருந்த மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் செல்வதற்கான வாய்ப்பாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து தேர்தலில் தோல்வியடைந்த தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரஸ்ம் இணைந்து தமிழிர் விடுதலைக் கூட்டணியாக ‘தமிழீழம்’ என்ற கோசத்தை தங்கள் வாக்கு வங்கியை தக்க வைக்கும் செயற்திட்டமாக முன்வைத்தனர். அதில் மிகப்பெரிய வெற்றியும் கண்டனர். ஆனால் ‘தமிழீழம்’ அமைப்பது கூட்டணியின் எண்ணமாக ஒருபோதும் இருக்கவில்லை.

அதனை உணர்ந்த இளைஞர்களான வே பிரபாகரன் உட்பட்டவர்கள் தாங்கள் தமிழீழத்தை பெறுகிறோம் என்று கூறிக்கொண்டு சின்னதும் பெரிதுமாக ஆளுக்கொரு ஆயத இயக்கத்தைக் கட்டினர். பாராளுமன்ற அரசியல் கட்சிகளை ஓரம்கட்டிவிட்டு இளைஞர்கள் முன்னுக்கு வந்தனர். உடைந்தும், சேர்ந்தும், திருப்பியும் உடைந்தும் ஐந்து இயக்கங்கள் நாற்பது இயக்கங்களாகி எதற்காகவோ சண்டை பிடித்தனர். வே பிரபாகரன் உட்பட இவர்களுக்கும் ‘தமிழீழம்’ நோக்கமாக இருக்கவில்லை. தங்களின் தலைமையின் தாகங்களை, வெறிகளை தமழர்களின் தாகமாகக் கற்பிதம் செய்துகொண்டு தங்களையும் அழித்து சுற்றியிருந்த மற்றவர்களையும் அழித்து தமிழ் மக்களையும் அழித்தனர். தமிழீழத்திற்காக அல்ல தமிழீழத்தின் பெயரால்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் சர்வதேசத்தினதும் ஆதரவோடு இலங்கை அரசு வே பிரபாகரன் கேட்ட தமிழீழத்திற்கு அவரோடு சேர்த்து சங்கூதியது. வரலாற்றை சரியாகக் கற்றுக்கொள்ளாவிட்டால் அதன் திசையை மாற்றி அமைக்காவிட்டால் வரலாறு இன்னொரு சுற்று அதே ஓட்டத்தில் ஓடும். இப்போது ஆயதம் தாங்கியவர்கள் எல்லாம் ஆயதத்தை தூக்கிப் போட்டுவிட்டு மாறு வேசத்தில் வந்து மீண்டும் தமிழ் மக்களுக்கு தலைமை கொடுக்கின்றனர். இப்போது மீண்டும் பாராளுமன்ற அரசியல்.

தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சினை? என்ன தேவை? என்று இவர்கள் யாரும் அன்றும் தமிழ் மக்களிடம் சென்று கேட்டறியவில்லை. இன்றும் கேட்டறிய முயற்சிக்கவும் இல்லை. அது அவர்களுக்கு தேவையானதொன்றும் அல்ல. அவர்கள் தங்களுடைய நலன்களும் அபிலாசைகளும் என்னவென்பதை சரியாக அடையாளம் கண்டு அதற்கான திட்டத்தை மிகச் செம்மையாக வகுத்துள்ளனர். தங்களுடைய நலன்களையும் அபிலாஷைகளையும் தமிழ் மக்களினதாக மாற்றி விட்டுள்ளனர். அதனால் அவர்கள் நல்ல வாழ்க்கை வாழ்கின்றனர்.

கோயிலில் பிள்ளையார் சிலை திருட்டு முதல் வடக்கு கிழக்கு இணைவு வரை ஒரு கதையைச் சொல்லி இடையில் புத்தரையும் பிக்குவையும் செருகி அவர்கள் மக்களை வேறொரு மாயைக்குள் வைத்துள்ளனர். உலக நாணய நிதியம் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும், சீனாவுக்கு எதிராக இந்தியாவையும் அமெரிக்காவையும் உசுப்பிவிட்டு இடையால தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்பம் என்றெல்லாம் தமிழ் பேப்பரிலேயே நாலு எழுத்து வாசிக்காத தமிழ் பாராளுமன்ற சீவன்கள் அறிக்கைவிடுகின்றன.

அல்வாயில் வாழ்ந்தால் என்ன அந்தாட்டிக்காவில் வாழ்ந்தால் என்ன நாம் சுவாசிக்கும் காற்று எவ்வளவு சுத்தமாக இருக்கின்றது என்பது முதல் என்ன உணவை உட்கொள்கின்றோம் என்பது உட்பட நாம் அகற்றும் கழிவுகளுக்கு என்ன நடக்கின்றது என்பது வரை அனைத்துமே அரசியல் தான். தமிழ் மக்களுக்கும் அரசியல் பிரச்சினை இருக்கின்றது. ஆனால் அது இந்த தமிழ் பேசும் தலைமைகளின் ஒருமித்த சுத்துமாத்து கதையளப்புகள் அல்ல.

இலங்கையில் வாழும் இந்த தமிழ் மற்றும் தமிழ் பேசும் மக்களது பிரச்சினைக்கும் தமிழ் பேசாத மக்களுடைய பிரச்சினைக்கும் இடையே பாரிய வேறுபாடுகளும் இல்லை. மேலும் தமிழ் பேசும் மக்களுக்கு இடையேயும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் இருக்கின்றது. ஆகையால் தமிழ் பேசும் மக்களும் தமிழ் பேசாத மக்களும் தங்களுடைய பொதுப் பிரச்சினைகளை அடையாளம் கண்டுகொண்டு அதற்கான தீர்வுக்கான செயற்திட்டங்களை இணைந்து வகுக்க வேண்டும். ஒரு தரப்பினரை இன்னொரு தரப்பினர் மீது ஏவிவிட்டு தமிழ் – சிங்கள அரசியல் தலைமைகள் நடாத்தும் கூட்டுக்கலவியை தமிழ் பேசும் தமிழ் பேசாத இலங்கை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

“அமெரிக்கா தண்டிக்கப்பட வேண்டும்.” – ஐ.நாவிடம் ஈரான் வேலியுறுத்தல் !

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 3ம் திகதி அமெரிக்க இராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஈரானின் இராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி டிரம்பின் உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க இராணுவம் கூறியது.
ஈரானின் மூத்த மத தலைவர் அயத்துல்லா அலி காமெனிக்கு அடுத்தபடியாக உச்ச அதிகாரம் படைத்த தலைவராக இருந்த காசிம் சுலைமானி கொலைக்கு பழி தீர்ப்பதாக ஈரான் சூளுரைத்தது. அதன்படி, காசிம் சுலைமானியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாளே ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 80 வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் கூறியது. இதனையடுத்து ஈரான் மீது அமெரிக்க புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதன்பின்னர் இரு நாடுகளுக்கிடையிலான மோதல் மேலும் வலுத்தது.
இந்நிலையில், காசிம் சுலைமானியை படுகொலை செய்ததற்காக அமெரிக்காவிற்கு எதிராக முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா. சபைக்கு ஈரான் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக ஐ.நா. சபைக்கு ஈரான் அதிபரின் அலுவலக சட்டத்துறை கடிதம் அனுப்பி உள்ளது. அதில், அமெரிக்க அரசாங்கத்தை கண்டித்தும், எதிர்காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளை ஆதரிக்காமல் இருக்கவும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுதல் உட்பட அனைத்து சட்ட முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அமெரிக்க அரசு பல ஆண்டுகளாக, சர்வதேச சட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகளை மீறி ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என்றும் ஈரான் குற்றம்சாட்டி உள்ளது.
சுலைமானி கொல்லப்பட்டதன் 2ம் ஆண்டு நினைவுதினம் நாளை அனுசரிக்கப்பட உள்ள நிலையில், ஈரான் இந்த கடிதத்தை அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பேருந்து விபத்தில் 22 பேர் பலியான சம்பவம் – சாரதிக்கு 190 ஆண்டுகள் சிறைத் தண்டனை !

இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலம் மதலா மலைப்பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 4-ந் தேதி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 65 பயணிகள் பயணம் செய்தனர். இதில் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக காணப்பட்டனர்.

பேரூந்தை சம்சுதீன் (வயது 47) என்பவர் ஓட்டிச் சென்றார். அவர் பேரூந்தை தாறுமாறாக ஓட்டினார். இதை பார்த்த பயணிகள் மெதுவாக செல்லும்படி கூறினார்கள். ஆனாலும்  சாரதி அதை கேட்கவில்லை. அப்போது திடீரென அந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து தண்ணீர் இல்லாத கால்வாய்க்குள் கவிழ்ந்து தீப்பிடித்தது.

இதனால் பயணிகள் அவசர வழியாக வெளியேற முயன்றனர். ஆனால் அந்த கதவில் இரும்பு கம்பி பொருத்தப்பட்டு இருந்ததால் திறக்க முடியவில்லை. இந்த விபத்தில் தீயில் கருகி 22 பயணிகள் பலியானார்கள். ஏராளமானோர் தீக்காயம் அடைந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மத்தியபிரதேச மாநில கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பஸ்சை தாறுமாறாக ஓட்டிச் சென்று 22 பேர் பலி வாங்கியதால் சாரதி சம்சுதீனுக்கு 190 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மேலும் பஸ் உரிமையாளர் ஜிதேந்திர பாண்டேவுக்கு 19 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

“ஒரு பெண்ணுக்கு எதிராக எவ்வளவு வன்முறையைத் தான் இந்த உலகம் கட்டவிழ்க்கும்.?” – போப் பிரான்சிஸ்

ஒரு பெண்ணை துண்புறுத்துவது கடவுளை அவமதிப்பதற்கு சமம் என போப் பிரான்சிஸ் தனது புத்தாண்டு உரையில் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமையன்று ரோம் நகரில் புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் புத்தாண்டு சிறப்புப் பிரார்த்தனையில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசிய அவ்,

தாய் தான் நமக்கு உயிர் கொடுக்கிறார். பெண் தான் இந்த உலகை இணைத்து வைத்திருக்கிறார். ஆகையால் நாம் அனைவரும் தாய்மார்களை மேம்படுத்தவும், பெண்களை பாதுகாக்கவும் இணைந்து செயல்படுவோம். ஒரு பெண்ணுக்கு எதிராக எவ்வளவு வன்முறையைத் தான் இந்த உலகம் கட்டவிழ்க்கும். ஒரு பெண்ணைக் காயப்படுத்துவது கடவுளை அவமதிப்பதற்கு சமம். இவ்வாறு போப் பிரான்சிஸ் கூறினார்.

கடந்த மாதம் இத்தாலிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய போப் பிரான்சிஸ், பெண்கள் மீது வன்முறையைக் கடத்துபவர்கள் சாத்தான் போன்றவர்கள் என்றார்.

கரோனா பெருந்தொற்று தொடங்கிய காலந்தொட்டு போப் பிரான்சிஸ் குடும்ப வன்முறை குறித்துப் பலமுறை பேசியிருக்கிறார். ஏனெனில் கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்து உலகம் முழுவதும் குடும்ப வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.