23

23

நியூசிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா – மக்களுக்காக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா செய்த செயல் !

கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்ட தலைவர் என்ற பெருமையை நியூசிலாந்து நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் பெற்றார். அங்கு இதுவரை அந்நாட்டில் மொத்தமாக 15,550 கொரோனா தொற்று மட்டுமே பதிவாகியுள்ளது. 52 பேர் மட்டுமே பலியாகி உள்ளனர், 1,096 பேர் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்னுக்கும் அவரது நீண்ட கால நண்பரான கிளார்க் கேஃபோர்ட்டுக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்னா் நிச்சயதாா்த்தம் ஆனது.
வரும் பெப்ரவரி மாதம் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாக ஜெசிந்தா அறிவித்தார். அதற்கான ஏற்பாடுகளும் தற்போது செய்யப்பட்டு வந்தன. அந்நாட்டு மக்களும் தங்கள் பிரதமரின் திருமணத்திற்காக காத்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது ஒமிக்ரோன் வைரஸ் நியூசிலாந்தில் பரவ தொடங்கியுள்ளது. இதனால் தினசரி தொற்று அந்நாட்டில் 70-ஐ தாண்டியுள்ளது.  இதனால் அங்கு மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. பிப்ரவரி இறுதிவரை அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து தன் திருமணத்தை நிறுத்தப்போவதாக ஜெசிந்தா ஆர்டர்ன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
என் திருமணம் இப்போதைக்கு நடைபெறபோவதில்லை. இது தான் வாழ்க்கை. நாம் எதிர்பார்ப்பது எப்போதும் நடைபெறும் என்று சொல்ல முடியாது. எனக்கும் கொரோனாவால் வாடும் நியூசிலாந்து பொது மக்களுக்கும் வித்தியாசம் இல்லை.
பலர் கொரோனா காரணமாக வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். பலர் தாங்கள் விரும்பும் நபர்களிடம் பக்கத்தில் இருக்கும் வாய்ப்பு கூட இல்லாமல் இருக்கின்றனர். அவர்களிடம் நாம் அன்பு செலுத்த வேண்டும். மீண்டும் நாம் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். அதன்பின் திருமணம் பற்றி யோசிப்பேன்.” இவ்வாறு ஜெசிந்தா ஆர்டர்ன் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்சில் கட்டாயப்படுத்தப்பட்டது தடுப்பூசி அட்டை – அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் !

பொது இடங்களுக்கு பிரவேசிப்பதற்கு தடுப்பூசி அட்டை கட்டாயம் என்ற பிரான்ஸ் அரசாங்கத்தின் உத்தரவுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அங்கு 3 ஆவது கொவிட் அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், 4 ஆவது கொவிட் அலை எந்த நேரத்திலும் உருவாகலாம் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அந்நாட்டு அரசாங்கம் நாடு முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்தி வருகின்றது. கொவிட் பரவலுக்கு எதிராக தடுப்பூசி மிக சிறந்த முறையில் செயற்படுவதாக உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசி திட்டத்தை விரைவுப்படுத்தி வருகின்றதுடன், பிரான்ஸில் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இந்த கட்டுப்பாடுகள் தங்களின் சுதந்திரத்தை பறிப்பதாக கூறி அந்த நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

16 வயதிற்கு மேற்பட்டவர்கள் நாளை (24) முதல் பொது இடங்களுக்கு பிரவேசிக்கும் போது கட்டயாமாக தடுப்பூசி அட்டையை கொண்டு செல்ல வேண்டும் என அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவுக்கு எதிராக பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.