29

29

போர் பீதியை உருவாக்க வேண்டாம் – மேற்கத்தேய நாடுகளிடம் உக்ரைன் கோரிக்கை !

உக்ரைனின் எல்லைகளைச் சுற்றி ஒரு லட்சம் ரஷ்ய இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், போர் மூளுவதை தடுக்க அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் போர் பீதியை உருவாக்க வேண்டாம் என்று மேற்கத்திய நாடுகளுக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் போரின் விளிம்பில் உள்ளது என்ற தவறான கருத்து என்றும் உக்ரைனில் இருந்து அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து குடும்பங்களை திரும்பப் பெறுவதற்கான முடிவுகளை அந்நாட்டு தூதரக ஊழியர்கள் எடுத்திருக்க கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போர் அச்சம் காரணமாக உக்ரைன் பொருளாதாரம் நிதித்துறை பாதிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத வன்முறை மற்றும் 2014 இல் கிரிமியாவை ஆக்ரமித்த ரஷ்யாவினால் ஏற்பட்டுள்ள சைபர் தாக்குதல் உள்ளிட்ட பாதிப்பு சூழலில் நாங்கள் எட்டு ஆண்டுகளாக இருந்து வருகிறோம் என்றும் என்றும் அவர் கூறினார்.

ஆட்களுக்குப் பதிலாக வேலைக்கு ரோபோ என எலன் மஸ்க் கூறியதால் வந்த விபரீதம் !

எலன் மஸ்க் இன் டெஸ்லா எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது. அந்த நிறுவனத்தின் பங்குகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ. எலான் மஸ்க், டெஸ்லா இந்த வருடம் எலக்ட்ரிக் கார்களை வெளியிடாது. ஆட்களுக்குப் பதிலாக வேலைக்கு ரோபோக்களை ஈடுபடுத்துவதில் கவனம் செலுத்துகிறோம் என்றார்.
எலன் மஸ்க் இவ்வாறு கூறி மறுநாளே நியூயார்க் பங்குச்சந்தையில் டெஸ்லாவின் மதிப்பு 12 சதவீதம் குறைந்தது. இதனால் அந்த நிறுவனத்தின் மதிப்பு 100 பில்லியன் டொலர் அளவிற்கு சரிந்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்த வேண்டும் – சீனா

பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்த வேண்டும் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கனிடம் பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தைவான் விவகாரத்தில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இது குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் போதும் எதிரொலிக்கும் என சீனா கருதுகின்றது.

ஏற்கனவே சீனாவின் மனித உரிமை மீறல்களால் குளிர்கால ஒலிம்பிக்கிற்கு அதிகாரப்பூர்வ குழுவை அனுப்பப்போவதில்லை என அமெரிக்கா கடந்த மாதம் அறிவித்திருந்தது.

இந்த நிலையிலேயே அமெரிக்காவுக்கு சீனா கடும் எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

சீனாவின் பீஜிங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி எதிர்வரும் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், 20ஆம் திகதி நிறைவடையவுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

‘நாடு என்ற வகையில் இந்த சவாலை சமாளிப்பதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டிய அவசியம் உள்ளது.” – சுமந்திரன்

“நாடு என்ற வகையில் இந்த சவாலை சமாளிப்பதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டிய அவசியம் உள்ளது.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில்,

இலங்கை முன்னெப்போதும் இல்லாத அளவு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. உழைக்கும் மக்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் கடுமையாக கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு முக்கிய பொறுப்புள்ளது. நாடு என்ற வகையில் இந்த சவாலை சமாளிப்பதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டிய அவசியம் உள்ளது. எவ்வாறாயினும், நெருக்கடியைத் தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் அணுகுமுறை சில முக்கிய கேள்விகளை எழுப்புகின்றது.

அரசாங்கம், வெளிநாட்டு கடன்களை செலுத்துவதில் மாத்திரம் அவதானம் செலுத்துகின்றது. நாட்டு மக்களுக்கு அவசியமான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான டொலரை இது மட்டுப்படுத்துகின்றது. அத்துடன், வெளிநாட்டு கடன்களை வழங்குவதில் மாத்திரம் ஒரு நாடு பெருமையடைந்து விடாது. நாட்டு மக்கள் பசியின்றி வாழ்வதனை உறுதி செய்வதிலும் நாட்டின் பெருமை அடங்குகின்றது .

இந்த இக்கட்டான சூழ்நிலையை உணர்ந்து நாட்டிலுள்ள முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர் மூடிய அறையில் கடந்த தினத்தில் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.மக்கள் வழங்கிய பொறுப்புக்கு அமைய, நெருக்கடி சூழ்நிலையில் இருந்து வெளியேறுவதற்கான மூலோபாயங்களை ஆராய்வதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தாகவும் அரசாங்க நிதி பற்றிய குழுவின் முன்னாள் தலைவர் என்ற வகையில் தானும், இந்த சந்திப்பில் பங்கேற்றதாகவும் குறித்த அறிக்கையில்  எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“அங்கஜன் இராமநாதன் பகிரங்கமாக மன்னிப்புக்கோர வேண்டும்.” – வடமாகாண ஜனநாயக போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர்

இ.போ.ச வடபிராந்திய முகாமையாளரை அவமதித்தற்கு, வடபிராந்திய தொழிலாளர்களிடம் அங்கஜன் இராமநாதன் பகிரங்கமாக மன்னிப்புக்கோர வேண்டும் என இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண ஜனநாயக போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

அங்கஜன் இராமநாதன் பகிரங்கமாக மன்னிப்புக்கோர வேண்டும் என கோரிக்கை!

யாழ்ப்பாணத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,

“கச்சேரியில் கடந்த 25ஆம் திகதி யாழ் மாவட்ட செயலகத்தில் வீதிப் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. அதில் இ.போ.ச வடபிராந்திய முகாமையாளரும் அழைக்கப்பட்டார். ஆனால், அக் கூட்டத்தில் சம்பந்தமில்லாத விடயம் கலந்துரையாடப்பட்டிருக்கின்றது.

தற்போது நடைமுறையில் இருக்கின்ற பிரச்சினை யாழ். மத்திய பேருந்துக்கு அருகில் பஸ் நிலையமொன்று கட்டப்பட்டது. இக் கலந்துரையாடலில், அங்கே செல்லும்படியாக முகாமையாளர் வற்புறுத்தப்பட்டுள்ளார். அதற்கான காணொளி ஆதாரங்களும் உள்ளது.

அங்கே, தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி அங்கஜன் இராமநாதன், முகாமையாளரை கடுமையாக அவமதித்தது, ஒட்டுமொத்த வடபிராந்திய தொழிலாளர்கள் மத்தியில் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அக்கூட்டத்திலே, முகாமையாளருக்கு இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியிருந்தார். அந்த அழைப்பை எடுத்து பேசுவதை கூட அவர் கண்டித்துள்ளார்.

நாங்கள் எத்தனையோ கூட்டங்களில் கலந்து கொள்கின்றோம். இன்றைய நடைமுறை சூழலில் ஒரு தொலைபேசி அழைப்பு வரும்போது, அது கதைப்பது இயல்பு. அதைக் கூட அவர் கண்டித்திருக்கின்றார். அதுமாத்திரமின்றி, பேருந்து நிலையப் பிரச்சினையை கொண்டு வந்து, நாங்கள் அங்கே செல்லவேண்டும் என்ற பிரச்சினைக் கொண்டு வந்து, அங்கே செல்லா விட்டால் பிறிதொரு முகாமையாளரை நியமித்து, இதை நான் செய்து காட்டுவேன் என சொல்லி, அனைத்து தொழிற்சங்கங்களையும் அவமதித்துள்ளார்.

கலந்துரையாடலுக்கு தொழிற்சங்கங்களை அவர் அழைத்திருந்தார். அதிலே சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்கங்கள் மட்டுமே சென்றிருந்தது. ஏனைய தொழிற்சங்கங்கள் செல்லவில்லை. ஏனெனில் முகாமையாளருக்கே இந்த நிலைமை என்றால் எங்களுக்கு என்ன நிலைமை என்று தெரியாததால் நாங்கள் அந்த கூட்டத்திற்கு செல்லவில்லை.

ஆகவே, அவரின் அதிகாரத்தைப் பிரயோகித்தமையானது, தொழிலாளர்கள் மத்தியில் சங்கடத்தை ஏற்படுத்தியமையால், அவர் பகிரங்கமாக வடபிராந்திய தொழிலாளர்களிடம் மன்னிப்புக்கோர வேண்டும்.

வடபிராந்திய முகாமையாளரை நாங்கள் நியமிக்கும்போது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவரின் நியமனத்தை நிறுத்தியிருந்தார். இதனால் வடக்கில் பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

வடபிராந்தியத்தில் ஒவ்வொரு சாலைகளிலும் ஆளணிப் பற்றாக்குறை, பேருந்துப் பற்றாக்குறை போன்ற பல பிரச்சினைகளை எதிர்நோக்கும், நேரத்தில் மும்மொழிகளும் தெரிந்த முகாமையாளரை நியமித்த போது அவர் அதை இடைநிறுத்தினார். பின்னர் நாங்கள் ஒரு போராட்டத்தை ஏற்பாடு செய்த போது, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி மொழி தந்ததன் பிற்பாடே போராட்டம் கைவிடப்பட்டது. குறித்த முகாமையாளர், வந்த பிற்பாடு மேன்முறையீட்டு சபை உட்பட தொழிலாளர்களின் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளது. இலங்கைப் போக்குவரத்து சபையில் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றது. ஆனால் அவை தீர்க்கப்படவில்லை.

இப்போது எங்களுடைய தொழிலாளர்களின் வருமானம் யாழ் பஸ் நிலையத்தில் தான் தங்கியுள்ளது. மக்களுக்கு சேவை செய்ய நாங்கள் தயார். ஆனால், தரப்படுகின்ற பேருந்து நிலையங்களை எங்களுக்கு இரண்டாகப் பிரித்து, ஒரு கட்டமைப்புடன் எங்களுக்குத் தர வேண்டும். அதுதான் எங்களுடைய கோரிக்கை.

இன்று எத்தனையோ கோடி செலவில் வவுனியா பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், சேவையாற்றுகின்ற அனைத்துப் பேருந்துகளும் அந்த நிலையத்திற்குள் செல்வதில்லை. இதனால், பொதுமக்கள், கர்ப்பிணிகள், பாடசாலை மாணவர்கள், வயோதிபர்கள் வெயிலிலும், மழையிலும், பனியிலும் நின்று பயணம் செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

வவுனியா பஸ் நிலையமும் எங்களுக்கு இரண்டாகப் பிரித்து தரப்படும், நீங்கள் சிறப்பாக சேவை செய்யலாம் என்று சொல்லியும், அதற்காக நீதிமன்ற உத்தரவும் இருந்தும் அதற்கான தீர்வு இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.

அதேபோல், மன்னார் பேருந்து நிலையமும் எங்களிடம் இருந்து பறிக்கப்பட்டு விட்டது. அதற்கான தீர்வும் இன்று வரை எட்டப்படவில்லை. இலங்கைப் போக்குவரத்து சபை பேருந்துகளுக்கு எத்தனையோ தடவை கல்லால் அடித்திருக்கின்றார்கள். இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?, எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

குறித்த போக்குவரத்து நிலையத்திற்கு நாங்கள் போகத் தயார். ஆனால், மாகாணங்களுக்கான சேவை மட்டும்தான் அதிலே செயற்படுத்த முடியும்.மேலும், குறித்த பேருந்து நிலையம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, இலங்கைப் போக்குவரத்து சபைக்கு கையளிக்கப்பட்டால் மாத்திரமே அந்த பேருந்து நிலையத்திற்கு செல்ல முடியும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இயக்கங்களில் இருந்தவர்களின் உயிரை மீட்டுத் தருமாறு கூறினால் அதை பெற்றுக் கொடுக்க முடியாது – நீதி அமைச்சர் அலி சப்ரி

“இயக்கங்களில் இருந்தவர்களின் உயிரை மீட்டுத் தருமாறு கூறினால் அதை பெற்றுக் கொடுக்க முடியாது.”  என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணத்தில் நீதி அமைச்சின் நடமாடும் சேவையினை ஆரம்பித்து வைத்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

காணாமலாக்கப்பட்டோர் நீண்ட காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்றைய தினம் யாழ்ப்பாணத்திலும் எமது நிகழ்வு நடக்கும் இடத்திற்கு முன்பும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். நேற்றைய தினம் நான் முல்லைத்தீவில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போதும் நான் கலந்துகொண்ட நிகழ்வு முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் அவர்களை நான் சந்திக்க அழைத்தேன் ஆனால் அவர்கள் சந்திக்க விரும்பவில்லை என்று கூறினார்கள்.

எனவே அதிலிருந்து ஒன்றை நான் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. அவர்கள் போராட்டம் செய்யவே வந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு பிரச்சனைக்குரிய தீர்வு தேவையில்லை. அவர்களுக்கு போராட்டத்தின் மூலம் தீர்வு கிடைக்காது.

கடந்த 13 வருடங்களாக போராட்டங்களை மேற்கொண்டு அவர்களுக்கு என்ன தான் கிடைத்தது. போராட்டங்களை மேற்கொள்வதன் மூலம் எதையும் அவர்கள் பெற்றுக் கொள்ள முடியாது. குறிப்பாக இயக்கங்களில் இருந்தவர்களின் உயிரை மீட்டுத் தருமாறு கூறினால் அதை பெற்றுக் கொடுக்க முடியாது தானே? அதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இந்த காணாமலாக்கப்பட்டோருக்கான பிரச்சினைக்கு ஒரு தீர்வு வழங்க வேண்டும். அதை நான் ஏற்றுக் கொள்கின்றேன்.

ஆனால் நான் ஒன்றை கூறிவைக்க விரும்புகின்றேன் நீதி அமைச்சர் என்ற ரீதியில் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமானால் அது அரசுடன் பேசித்தான் அதற்குரிய தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டுமே தவிர போராட்டங்களை மேற்கொண்டு தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியாது

போராட்டங்களை மேற்கொள்வது அவர்களுடைய ஜனநாயக உரிமை அதனை மதிக்கின்றேன் அதனை தடுக்க மாட்டேன் ஆனால் போராட்டங்களை நடத்தி எதனையும் பெற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றார்.

அரசிடம் கொடுத்த உறவுகளை கேட்டு தெருவில் மக்கள் போராட்டம் – ராஜபக்ஷ அரசு யாருக்கும் பாரபட்சம் காட்டாது என மேடையில் டக்ளஸ் முழக்கம் !

பெப்ரவரி இறுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் சர்வதேசத்தையும் எங்களையும் ஏமாற்றுவதற்காக வடக்கில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை இடம்பெறுகின்றது. இதில் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான நடவடிக்கையில் யாரும் பங்கேற்க வேண்டாமென யாழ் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் தெரிவித்திருந்ததது.

மேலும் நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை இன்றைய தினம் யாழ் மத்திய கல்லூரியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் ஆகியோரின் பங்குபற்றலுடன் கலாசார நிகழ்வுகள் சகிதம் சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில், நீதி அமைச்சின் நீதிக்கான அணுகல் நடமாடும் சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதி அமைச்சின் நடமாடும் சேவையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை உள்ளீர்க்கக்கூடாது என தெரிவித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த நிகழ்வுக்கு வந்த எந்த பிரதிநிதியுமே போராடிக்கொண்டிருந்த மக்களை கடமைக்கேனும் சந்தித்து பேச முன்வரவி்ல்லை என்பதே வேதனையான விடயம். நீதி பற்றி இம்மியளவும் சிந்திக்காத இந்த நாட்டில் இருந்து கொண்டு தான் – இவர்களிடம் தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை எதிர்பாரத்துக்கொண்டிருக்கின்றோம்.

வந்த தென்னிலங்கை அரசியல்வாதிகள் கூட பரவாயில்லை. ஆனால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களின் நடவடிக்கைகள் தான் இன்னும் வேதனையளிக்கின்றது. இதே டக்ளஸ் தேவானந்தா தான் கடந்த வருடம் காணாமலாக்கப்பட்டோரை பற்றிய தகவல்களை கேட்டு உறவுகள் போராடிய போது இரண்டு மாதங்களுக்குள் தீர்வு கிடைக்கும் என ஊடகங்களில் கூறியவர். அது உண்மை போலவும் தீர்வு கிடைக்கும் போலவும்  தொடர்ந்தும் தெரிவித்துக்கொண்டேயிருந்தார். அவர் இதற்கு தீர்வு தருவாதாக கூறியே பல மாதங்கள் ஆகிவிட்டன. பாவம் டக்கர் மறந்து விட்டார் போலும்.

காணமலாக்கப்பட்டோர் விவகாரத்துக்கு தீர்வு இரண்டு மாதங்களில் கிடைக்கும் என கூறியிருந்தார். அவர் இதனை கூறி சில நாட்களிலேயே ஐ.நாவில் உரையாற்றிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ காணாமலாக்கப்பட்டோருக்கு மரணச்சான்றிதழ் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்தார். இந்த கருத்தை எதிர்த்து தீர்வு தருவதாக கூறிய டக்ளஸ் தேவானந்தாவோ – தமிழ் தேசியம் – விடுதலைப்புலிகள் என கூவிக்கொண்டிருக்கும் எந்த தமிழ் தலைமையுமே எதிர்ப்பு நடவடிக்கைகள் எவையுமே மேற்கொண்டிருக்கவில்லை. இவ்வளவு தான் இவர்களுடைய மக்கள் மேலான பற்று. இவர்களுடைய மக்கள் மீதான அக்கறை எல்லாம் தேர்தல் துண்டுப்பிரசுரங்களில் மட்டுமே.

1643453274 doug 2

தாய் நிலத்தில் நிகழ்வு நடந்த பாடசாலைக்கட்டடத்துக்கு வெளியே ஒரு மக்கள் கூட்டம் உறவுகளை தேடி தெருவில் நின்று போராடிக்கொண்டிருக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேடையில் நின்று கொண்டு ,

“அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்களுக்கான விடயங்களில் பாரபட்சங்களை காட்டப் போவதில்லை. இந்த அரசாங்கத்தை நம்பி அவர்களுடன் பயணிப்பதனூடாக எமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை விரைவாக பெற்றுக்கொள்ளவும் முடியும்.” என கூறுகின்றார். இவ்வளவு தான் தமிழர் தலைமைகளுடைய அரசியல் பார்வை.

இன்றைய தமிழ் அரசியல் பரப்பிலுள்ள எல்லா அரசியல்வாதிகளும் தம்மையும் தமது அரசியல் இருப்பையும் பாதுகாத்தால் மட்டும் போதுமானது என்பதாகவே தங்ககளுடைய அரசியலை நகர்த்திக்கொண்டிருக்கின்றனர்.

இந்த காணாமலாக்கப்பட்டோரை மீட்டு தரச்சொல்லி மக்கள் ஒரு தசாப்பதத்துக்கும் மேலாக போராடிக்கொண்டு தான் இருக்கின்றனர். அரசோ – அரசிலிருக்கும் தமிழ் பிரதிநிதிகளோ இதனை எப்போதும் செவியில் வாங்கிக்கொள்ளவில்லை. காணாமலாக்கப்பட்டோரை தேடிய மக்களின் போராட்டம் எப்போதெல்லாம் வலிமை பெறுகிறதோ அப்போதெல்லாம் அரசின் தமிழ்பிரதிகள் ஏதாவது சொல்லி – தீர்வு தருவதாக கூத்தாடி மக்களின் போராட்டத்தை குழப்பி விடுகின்ற சூழலே தொடர்கின்றது.

மாவீரர் தினம் – புலி அரசியல் – பிரபாகரன் கைகாட்டிய கட்சி என்றெல்லாம் கொடி பிடித்து தமிழ் மக்களின் ஓட்டுக்களை பெற்றுக்கொண்ட முக்கியமான தமிழ் தலைமைகள் யாரும் இந்த மக்களை கண்டுகொள்வதேயில்லை என்பதே நிதர்சனம். தொடர்பேயில்லாமல் இவ்வளவு நாளும் இல்லாமல் திடீரென சுடலை ஞானம் வந்ததது போல 13வது திருத்ததச்சட்டத்தை பிடித்து தொங்கிக்கொண்டு ஆளாளுக்கு போராட்டமும் – இந்திய பிரதமருக்கு கடிதமும் எழுதுவதை விட்டுவிட்டு இந்த மக்களுடைய பிரச்சினையை தீர்க்கும் வரைக்காவது ஒரு தொடர்ச்சியான போராட்டத்தை மேற்கொள்ள தமிழ்தலைமைகள் முன்வரவேண்டும்.

உறவுகளை தேடியலைந்து – கேட்டு போராடி போராடியே போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பலர் இறந்துவிட்டார்கள். எஞ்சியவர்களும் இறந்து போவதற்குள் சரி இவர்களுக்கான தீர்வு கொடுக்க கிடைக்க வேண்டும். அதற்காக இயங்க அனைத்து தமிழர் தரப்பு அரசியல் கட்சிகளும் இணைந்து செயலாற்ற முன்வர  வேண்டும். முதலில் இந்த மக்களின் உறவுகள் தொடர்பான  பிரசினைகளை தீர்த்து அவர்களும் எங்களை போல குடும்ப உறவுகளுடன் சந்தோசமாக வாழ நடவடிக்கைகளை மேற்கொள்வதே தமிழ்தேசியத்தை சொல்லி அரசியல் செய்வோர் இந்த மக்களுக்கு செய்யககூடிய பாரிய கைமாறாகும்.

 

உறவுகளை தேடி போராடிக்கொண்டிருக்கும் பெண்கள் – கண்டு கொள்ளாத இலங்கை அரசின் பிரதிநிதிகள் !

நீதி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் நீதிக்கான அணுகல் எனும் தொனிப்பொருளிலான நடமாடும் சேவை இன்றையதினம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட குறித்த நிகழ்வு, இன்றும் நாளையும், முற்பகல் 9.30 முதல் மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் நீதி அமைச்சர் அலி சப்ரி, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா உள்ளிட்ட மேலும் பல முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.

நீதித்துறை சார்ந்த பல்வேறு அரச திணைக்களங்களில், பொதுமக்கள் சேவை பெறும் நோக்கில், இந்த நடமாடும் சேவை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நீதி அமைச்சின் நீதிக்கான அணுகல் நடமாடும் சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதி அமைச்சின் நடமாடும் சேவையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை உள்ளீர்க்கக்கூடாது என தெரிவித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுக்க முயற்சித்தபோது, குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது.

தனது இரண்டு பிள்ளைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து செய்து கொண்ட இலங்கையர் – அவுஸ்ரேலியாவில் சோகம் !‘

இலங்கையை சேர்ந்த நபர் ஒருவரும் அவரது பிள்ளைகளும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய காவல்துறையினர் தந்தை தனது பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர். 40 வயது இந்திக குணதிலக நான்குவயது மகளையும் ஆறுவயது மகனையும் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்;டுள்ளனர்.

Essington Street in the southeast Perth suburb of Huntingdale.  பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிள்ளைகள் தனியாக வசிக்கும் தாயை சந்திப்பதற்கு வருவதற்காக திட்டமிட்டிருந்தனர் எனினும் அவர்கள் வராததை தொடர்ந்து எச்சரிக்கை அடைந்த அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அந்த வீட்டிற்கு சென்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணைகள் இந்த மரணங்களுக்கும் வேறு எவருக்கும் தொடர்பில்லை என்பதை உறுதி செய்துள்ளன என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் இடம்பெறுவதற்கு இரண்டுநாட்களிற்கு முன்னர் கடற்கரையில் தான் பிள்ளைகளுடன் காணப்படும் படத்தினை குணதிலக வெளியிட்டுள்ளார். கிறிஸ்மஸிற்கு முன்னர் வெளியிட்ட வீடியோவொன்றில் தான் மனஉளைச்சலிற்கு ஆளாகியுள்ளதை அவர் உறுதி செய்துள்ளார்.

தன்னை மருத்துவரை பார்க்குமாறு பரிந்துரைத்துள்ளனர் தான் உளவியல்நிபுணர்களை சந்தித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மக்கள் ஆழமான கரும் துவாரத்தில் சிக்குண்டுள்ளனர் தற்கொலை செய்துகொள்பவர்கள் ஒருபோதும் தங்கள் வாழ்க்கையை முடிக்கவிரும்புவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் உண்மையில் தாங்கள் சிக்குண்டுள்ள தாங்கமுடியாத துயரத்திற்கு முடிவை காணவிரும்புகின்றனர் அதிலிருந்து மீள திரும்பமுடியாது மன அழுத்தமே மிகப்பெரிய கொலையாளி எனக்கு அது நன்கு தெரியும் என அவர் தெரிவித்திருந்தார். குணதிலக 2014 முதல் தனது சொந்த வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

“பாதிக்கப்பட்ட தாய்மாரின் வாக்குகளால் பாராளுமன்றம் சென்றவர்கள் இன்று வாய் மூடிமௌனிகளாக இருக்கின்றார்கள்.” – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

“பாதிக்கப்பட்ட தாய்மாரின் வாக்குகளால் பாராளுமன்றம் சென்றவர்கள் இன்று வாய் மூடிமௌனிகளாக இருக்கின்றார்கள்.” என வடக்கு கிழக்க வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று வடக்கு கிழக்க வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு மேலும் பேசிய அவர்,

நீதி அமைச்சரின் வடக்கு வருகையானது தங்களது ஆட்பலத்தின் ஊடாக ஒவ்வொரு மாவட்டத்தினுடைய மக்களையும் தரிசித்து வருகின்றார்கள். வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினராகிய நாம் அதனை முற்றாக நிராகரிக்கின்றோம். ஏற்கனவே பல ஆணைக்குழுக்களை சந்தித்து பல கோரிக்கைகளை முன்வைத்து இதுவரை காலமும் எதுவிதமான தீர்வுகளும் எமக்க தராத நிலையில் இந்த நீதி அமைச்சின் அமைச்சர் எங்களிற்கு எப்படியான நீதியை தரப்போகின்றார்.

உண்மைக்கும் நீதிக்குமான இந்த தேடலை மழுங்கடிக்க செய்வதற்காகவும், வருகின்ற ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடரிலே தங்களையும், அரசையும் காப்பாற்றுவதற்காகவும், குறித்த கூட்டத் தொடர் இடம்பெறவுள்ள நிலையில் இவ்வாறான சந்திப்புக்களை மேற்கொண்டு ஐக்கிய நாடுகள் சபையையும் பாதிக்கப்பட்ட மக்களையும் ஏமாற்றுவதற்கான முயற்சியே இந்த நீதி அமைச்சின் செயற்பாடாகும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுகின்ற இந்த தாய்மாரை ஒருங்கிணைத்து அவர்களிற்கு இழப்பீட்டை அல்லது மரண சான்றிதழை வழங்கி போராட்டத்தை இல்லாது செய்து அமைதியான நிலையை ஏற்படுத்துவதாகவே அவர்களின் வடக்கு வருகை இருக்கின்றது. கொடூர யுத்தத்திலும் இன அழிப்பிலும் பாரிய இழப்புக்களை சந்தித்த மாவட்டங்களாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.பல்வேறு விடயங்களை உள்ளடக்கி கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த மக்கள் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

உண்மையாகவே பெறுமதியான சொத்துக்களை இழந்தவர்கள் தமது இழப்பிற்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் அங்கு சென்றிருப்பார்கள். ஆனால் அவ்வாறு சொத்துக்களை இழந்தவர்களிற்கு அரசினால் வழங்கப்படுவது ஒரு லட்சம் ரூபாய் என்று சொல்லப்படுகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய விடயத்தையும் இதன் ஊடாக மேற்கொண்டு அவர்கள்களிற்கான இழப்பீட்டினையும் மரண சான்றிதழையும் வழங்கலாம் என்று அவர்கள் நினைத்திருக்கின்றார்கள். இந்த ஏமாற்று திட்டத்தை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.

ஐக்கியநாடுகள் சபையை சமாளிப்பதற்காகவும் இலங்கை அரசை காப்பாற்றுவதற்காகவும் எங்களை ஏமாற்றத்துக்குள்ளாக்குவதற்குமாகவே இவர்களது வருகை அமைந்துள்ளது. எங்களுடைய விலை மதிக்கத்தக்க முடியாத எமது உறவுகளிற்கு எவருமே விலை பேச முடியாது.

எங்களுடைய உறவுகளிற்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்தவும் சரணடைந்தவர்கள் ,  கையளிக்கப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட விடயங்களை பல்வேறு தரப்பினருக்கு நாங்கள் கொடுத்துள்ளோம். அவர்களின் உண்மை நிலையை அறிவதற்கு சர்வதேச குற்றவியல் விசாரணையையே நாங்கள் நம்பியிருக்கின்றோம்.

நாங்கள் அரசியலிற்கு செல்லவில்லை. எமது போராட்டத்திற்கும் அரசியலிற்கும் தொடர்பு இல்லை. பாதிக்கப்பட்ட தாய்மாரின் வாக்குகளால் பாராளுமன்றம் சென்றவர்கள் இன்று வாய் மூடிமௌனிகளாக இருக்கின்றார்கள். வவுனியாவில் இடம்பெற்ற போராட்டத்தில் எமது தாய்மாருக்கு ஏற்பட்ட அநீதிகள் தொடர்பில் இன்று வரை இந்த நிமிடம் வரை தட்டிக்கேட்காத பாராளுமன்ற உறுப்பினர்களே இங்கு இருக்கின்றார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.