03

03

பிள்ளைகளை நிர்வாணமாக்கி முகத்திலும் உடலிலும் மிளகாய்த்தூளைப் பூசி துன்புறுத்திய தந்தை !

ஹட்டன்- குடாகம பிரதேசத்தில் சிறுவர்கள் இருவரை துன்புறுத்திய அச்சிறுவர்களின் தந்தை ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 6 வயதுடைய சிறுவனும் அச்சிறுவனின் 7 வயது சகோதரியுமே, இவ்வாறு அவர்களது தந்தையால் துன்புறுத்தப்பட்டுள்ளதுடன், இதன்போது அவர்களது தாயும் அருகிலிருந்துள்ளார்.

அச்சிறுவர்களை நிர்வாணமாக்கி, அவர்களது முகத்திலும் உடலிலும் மிளகாய்த்தூளைப் பூசி, அவர்களது வீட்டுக்கு முன்பாகவுள்ள மரத்தில் கட்டி வைத்தமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமையவே, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவர்கள் இருவரும் விறகுக் கட்டு ஒன்றை திருடியதாகவும் அதற்கே இவ்வாறு தண்டனை வழங்கிழயதாகவும் அச்சிறுவர்களின் தந்தை பொலிஸில் தெரிவித்துள்ளார். இவ்வாறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான சிறுவர்கள் இருவரும் சிகிச்சைக்காக கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

பரீட்சை மீள் மதிப்பீட்டில் பெறுபேறு C யில் இருந்து A யாக மாறிய உயர்தர பெறுபேறு – மொத்தமாக 3000க்கும் அதிகமான மாணவர்களின் பெறுபேறுகளில் மாற்றம் !

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் அண்மையில் வௌியாகியிருந்தன. இப்பெறுபேறின் அடிப்படையில் கண்டி மாணவன் ஒருவனின் பெறுபேறு C யில் இருந்து A யாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உயர்தரப் பரீட்சைக்கு கணித பாடத்தில் தோற்றிய கண்டி தர்மராஜா கல்லூரியின் மாணவன் ருச்சிர நிசங்க அபேவர்தன அந்த பாடத்தில் C சித்தி பெற்றிருந்தார். அத்துடன் வேதியியல் மற்றும் இயற்பியலில் பாடங்களில் அவர் A தேர்ச்சி பெற்றிருந்தார்.

அதனடிப்படையில், குறித்த மாணவனின் Z மதிப்பெண் 2.0084 ஆகவும், மாவட்ட மதிப்பீடு 68 ஆகவும், நாட்டு மதிப்பீடு 966 ஆகவும் இருந்தது.

இந்நிலையில் மீள் மதிப்பீட்டின் ஊடாக அவரது கணிதப்பாட பெறுபேறு C யில் இருந்து A ஆக மாறியதை அடுத்து குறித்த மாணவனின் Z மதிப்பெண் 2.5538 ஆகவும், மாவட்ட மதிப்பீடு 12 ஆகவும், நாட்டு மதிப்பீடு 124 ஆகவும் மாறியுள்ளது.

மீள் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்பட்ட 48,000 இற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் 3,329 பெறுபேறுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையை பொறுத்தவரை மாணவர்களின் எதிர்கால கனவுகளுக்கான – தொழில் உலகுக்கான கதவுகளை திறக்கும் திறவுகோலாக உயர்தர பரீட்சையே காணப்படுகின்றது. எனினும் இவ்வாறான பெறுபேறுகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள குழறுபடிகள் ஏற்பட்டு 2S ,  W என எதிர்காலத்தை இழந்த எத்தனை மாணவர்கள் இருந்திருப்பார்கள் என இந்த மாற்றம் சிந்திக்க வைக்கிறது. இந்த மாணவன் மீள் திருத்துவதற்கு விண்ணப்பித்ததால் கிடைத்துள்ளது. ஆனால் விண்ணப்பிக்காமல் இது தான் எனது நிலை என எண்ணி எதிர்காலத்தை தொலைத்த மாணவர்களின் நிலையை பற்றியும் இந்தப்புள்ளியில் இருந்து சிந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. 3,329 பெறுபேறுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள தகவல் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் மேலும் அச்சத்தை மாணவர்களிடையே தோற்றுவித்துள்ளது.

 

இது போன்றதான பிழைகள் இனிமேல் ஏற்படாது பரீட்சைகள் திணைக்களம் முறையாக செயற்படவேண்டும். குறித்த பிழைகளுடன் தொடர்புடைய ஆசிரியர்களுக்கு எதிராக சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இலங்கையில் கிடைக்கின்ற இலவசக்கல்வியின் தரத்தை கல்வி அமைச்சு உறுதிப்படுத்த வேண்டும்.

கொலையாளிகளை கண்டுபிடியுங்கள் – பரந்தன் வர்த்தகர்கள் இன்று முழுகடையடைப்பு !

கிளிநொச்சி பரந்தன் சந்திப் பகுதியில் புத்தாண்டு தினமான முதலாம் திகதி இரவு கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதிக்கோரி பரந்தன் வர்த்தகர்கள் இன்று (03) முழுகடையடைப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

கிளிநொச்சி பரந்தன் சந்திப் பகுதியில் புத்தாண்டு தினமான முதலாம் திகதி இரவு கூரிய ஆயுதத்தால் குத்தி குணரட்னம் கார்த்தீபன் எனும் 24 வயதுடைய இளைஞர் படுகொலை செய்ததோடு மேலுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவத்துடன் தொடர்பு பட்ட எவருமே இதுவரை கைது செய்யப்படவில்லை, எனவும் கொலையாளிகள் ஏற்கனவே பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்பு பட்ட துடன் பொலிஸாருடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டவர்களாகவுள்ளனர் என்றும் உறவுகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்த இளைஞரின் மரணத்துக்கு நீதி வேண்டியும் கொலையுடன் தொடர்புபட்டோரைக் கைது செய்யுமாறும் கோரிக்கை விடும் வகையில் பரந்தன் வர்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி கதவடைப்பை முன்னெடுத்திருந்தனர்.

இந்தியாவிடமிருந்து 900 மில்லியன் டொலர் பெறுமதியான நிதி உதவி இலங்கைக்கு !

இந்தியாவிடமிருந்து 900 மில்லியன் டொலர் பெறுமதியான நிதி உதவி இம்மாதம் இலங்கைக்கு கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கையுடனான நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் 400 மில்லியன் டொலரும் எரிபொருளுக்காக 500 மில்லியன் கடனுதவியும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த இரு நிதியுதவி திட்டங்களில் ஒன்று ஜனவரி 10 ஆம் திகதி கிடைக்கப்பெறும் என உயர்மட்ட தகவல்களை மேற்கோளிட்டு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சர் உதய கம்மன்பில கடந்த வாரம் இலங்கையும் இந்தியாவும் இணைந்து எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்வதாக அறிவித்திருந்த அதேவேளை லங்கா இந்தியன் எண்ணெய் நிறுவனத்தின் தாங்கிகளின் குத்தகை மேலும் 50 வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

400 மில்லியன் டொலர் நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தை தவிர, எரிபொருளுக்காக 500 மில்லியன் டொலர் கடன் வரியையும், உணவு மற்றும் மருத்துவக் கொள்வனவுகளுக்காக 1 பில்லியன் டொலர் கடனையும் இலங்கை நாடியது.

இந்த நிலையில், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஜனவரி 10 ஆம் திகதி இந்தியாவிற்கு தனது இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பதவி விலகுகிறாரா பிரதமர் மகிந்தராஜபக்ஷ..,? – பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்யவுள்ளதாக வெளியாகும் தகவலை பிரதமர் அலுவலகம் இன்று நிராகரித்துள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவார் என்றும், புதிய பிரதமராக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நியமிக்கப்படுவார் என்றும் அண்மையில் பல செய்திகள் வெளியாகின.

எவ்வாறாயினும், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் இவ்வாறான செய்திகள் பரப்படுவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

“கறைபடிந்த வரலாற்றுத் தவறை மேற்கொள்ளத் துணைபோகாதீர்கள்.” – பட்டத்திருவிழா தொடர்பில் கஜேந்திரர்கள் விசனம் !

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா இம்முறை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் பூரண ஆதரவுடன் ‘வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022’ ஆக நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். பட்டத் திருவிழா ஏற்பாட்டுக் குழுவினருக்கும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது ‘வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022’ இனை கோலாகலமாக நடத்துவதற்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் முழு ஆதரவை வழங்குவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

இந்த அறிவிப்பு வெளியானது தொடக்கம்  பல்வேறுபட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட வண்ணம் உள்ளன.

முக்கியமாக,  இனப்படுகொலை அரசின் பிரதிநிதிகளை பட்டத்திருவிழாவுக்கு விருந்தினர்களாக அழைக்கும் முயற்சிக்கு கண்டனம் தெரிவிப்பதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி ,

வல்வெட்டித்துறை மண்ணில் இதுவரை காலமும் தமிழர் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில், பட்டத்திருவிழா மிகச் சிறப்பாக நடாத்தப்பட்டு வந்திருந்தது. வழமைக்கு மாறாக, இந்த ஆண்டு தமிழின விரோத சக்திகளின் வழிநடத்தலில், தமிழினத்தின் வாழ்வுரிமையைச் சிதைத்த, இனவழிப்பு அரசின் பிரதிநிதிகளை விருந்தினர்களாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரச முகவர்களின் சதிமுயற்சிக்குள், ஏற்பாட்டுக் குழுவினரை சிக்க வைத்துள்ள இந்த செயற்பாடானது தமிழின பண்பாட்டு அழிப்பின் தொடர் முயற்சி என்றும் அவர்கள் சாடியுள்ளனர்.

தமிழர் வரலாற்றில் பின்னிப்பிணைந்த பாரம்பரிய நிகழ்வான பட்டத்திருவிழாவில், இவ்வாறான கறைபடிந்த வரலாற்றுத் தவறை மேற்கொள்ளத் துணைபோக வேண்டாம் என ஏற்பட்டு குழுவிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மருத்துவ கழிவுகளை கொட்டி எரியூட்டிய வைத்தியசாலை உரிமையாளருக்கு 70 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் !

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள காணிகளில் மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை கொட்டி, எரியூட்டிய வைத்தியசாலை உரிமையாளருக்கு, 7 குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக யாழ்.நீதிமன்றம் 70 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் வித்தித்துள்ளது.

குறித்த தண்டப்பணத்தை கட்டத்தவறின் ஒரு மாத சிறைத்தண்டனை எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருநெல்வேலி, பரமேஸ்வராச் சந்திக்கு அருகில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்று, மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை, யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அருகில் அமைந்துள்ள தமக்கு சொந்தமான காணியில் கொட்டி எரியூட்டிய நிலையில் அயலவர்களால், மாநகர சபை உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாநகர சபை உறுப்பினர்கள, சுகாதார பிரிவினர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை உரிமையாளருக்கு எதிராக யாழ்.மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியினால், யாழ்.நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் குறித்த வழக்கு, இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் தொற்றுநோயை பரப்பும் வகையில் நோயாளிக்கு பாவித்த மருந்து போத்தல்களை வீசியமை, தொற்றுநோயை பரப்பும் வகையில் நோயாளிகளினது Toilet pampers வீசியமை, தொற்று நோயை உருவாக்கும் வகையில் நோயாளிக்கு பாவித்த ஊசிகளை வீசியமை,தொற்று நோயை உருவாக்கும் வகையில் நோயாளிக்கு பாவித்த சேலைன் போத்தல்களை வீசியமை,தொற்று நோயை உருவாக்கும் வகையில் நோயாளிக்கு பாவித்த இரத்த பரிசோதனை குப்பிகளை வீசியமை, சத்திர சிகிச்சைக் கையுறை மற்றும் அங்கிகளை வீசியமை,தொற்று நோயை பரப்பும் வகையில் றெஜிபோம் மற்றும் படுக்கை மெத்தைகளை வீசியமை ஆகிய 7 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்தஅனைத்து குற்றச்சாட்டுக்களையும் வைத்தியசாலை உரிமையாளர் ஏற்றுக்கொண்டதனை அடுத்து, அவரை கடுமையாக எச்சரித்த நீதிமன்றம், ஒவ்வொரு குற்றத்திற்கு தலா 10ஆயிரம் ரூபாய் வீதம் 70 ஆயிரம் ரூபாய் தண்டப்பணத்தை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

“தமிழின விடுதலைக்கான போராட்டத்தில்  தமிழர்களுக்கு தற்போது மீண்டுமொரு சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.” – சிவசக்தி ஆனந்தன்

“தமிழின விடுதலைக்கான போராட்டத்தில்  தமிழர்களுக்கு தற்போது மீண்டுமொரு சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.” என  ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் பகிரங்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதன் படி,

“இலங்கை அரசாங்கமானது தற்போது பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளது. அதேநேரம், ஆட்சியாளர்களின் பங்காளிகளுடனும் அரசியல் ரீதியான முரண்பாடுகள் ஏற்பட்டிருக்கின்றன. சிங்கள, பௌத்த கோட்பாட்டின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த 69இலட்சம் தென்னிலங்கை மக்களே ஆட்சியாளர்களை திட்டித்தீர்க்கின்ற அளவிற்கு வெறுப்பை காறி உமிழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறான நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஆட்சியாளர்கள் இந்தியா, சீனா, அமெரிக்கா என்று தமக்காக திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் உள்ள அனைத்துக் கதவுகளையும் தட்ட ஆரம்பித்துள்ளார்கள்.ஆனால் இலங்கையை மையப்படுத்தி ஏற்பட்டிருக்கும் பூகோளப்போட்டியின் பங்குதாரர்களான இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகியன தன்னலன்களை மையப்படுத்தி காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளன.

இதில் அமெரிக்கா, இந்தியாவை முன்னிலைப்படுத்திய நகர்வினை இலங்கை விடயத்தில் கையாள்கின்றது. அதேபோன்றே ஏனைய மேற்குலக நாடுகளும் அவ்விதமான நகர்வினையே பின்பற்றுகின்றது. இந்நிலையில் இந்தியாவிடமிருந்து இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான கடன்களை பெறுவதற்கு தயாராகியுள்ளது.

மறுபக்கத்தில் சீனாவிடத்திலும் கடன்களை, நன்கொடைகளை பெறுவதற்கு தயாராகி வருகின்றது. இந்தப் பின்னணியில், எதிர்வரும் எட்டாம், ஒன்பதாம் திகதிகளில் சீன வெளிவிவகாரங்களுக்கான அமைச்சர் வாங் யி இலங்கைக்கு வருகின்றார். அவர் இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டு 65ஆவது ஆண்டுக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதையே பிரதான விடயமாக கொண்டிருக்கின்றார்.

அதேநேரம், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஒன்பதாம் திகதி இந்தியாவுக்குச் செல்வதற்கு தயாராக வருகின்றார். குஜராத்தில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்பது காரணமாக கூறப்பட்டாலும், பிரதமர் மோடியைச் சந்திப்பது, இந்தியாவிடமிருந்து பெறக்கூடிய டொலர்களை விரைவுபடுத்துவது என்பன அந்தப் பயணத்தின் பின்னணிகளாக உள்ளன.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகளும், ஏனைய முஸ்லிம், மலையக கட்சிகளும் இணைந்து தமிழ் பேசும் கட்சிகளாக பிரதமர் மோடிக்கு அனுப்பவுள்ள ஆவணத்தினை விரைவுபடுத்த வேண்டியுள்ளது.

குறித்த ஆவணத்தினை அனுப்புவதன் ஊடாக, இந்தியா இலங்கை மீதான தனது பிடியை உறுதிப்படுத்தும் அதேநேரம், அதன் பயனாக ஆகக்குறைந்தது இந்திய இலங்கை ஒப்பந்தத்தினையாவது முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும். அதிகாரப் பகிர்வுக்கான முதற்படியாக அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தினை பாதுகாப்பதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும் இயலுமானதாக இருக்கும்.

தற்போது ஏற்பட்டுள்ள பூகோள, பிராந்திய அரசியல், இராஜதந்திர மூலோபாயச் சூழலை உணர்ந்து கொள்ளாது வாய்ப்பினை நழுவ விட்டால் தமிழினத்தின் எதிர்காலம் மேலும் மோசடைவதற்கான வாய்ப்புக்களே அதிகமுள்ளன.

தமிழின விடுதலைக்கான போராட்டத்தில் பல்வேறு சந்தர்ப்பங்கள் எமக்கு ஏற்பட்டுள்ள போதும் அவை நழுவவிட்டமைதான் கடந்தக்கால வரலாறாக உள்ள நிலையில், தற்போது மீண்டுமொரு சந்தர்ப்பம் உருவாகியுள்ள நிலையில் அதனை நழுவ விட்டுவிடக்கூடாது.

எனவே குறிப்பறிந்து, தீர்க்கமான தீர்மானத்தினை எடுக்கும் அதேநேரம், தொடர் தாமதங்களை தவிர்த்து மிகமிக விரைவாக கூட்டு ஆவணத்தினை ஏகோபித்து பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்க வேண்டுமென” குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் சிறுபான்மை இனங்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை – இந்து வியாபாரி மர்ம நபர்களால் கொலை !

பாகிஸ்தானில் இந்து வியாபாரி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள லஸ்பிலா நகரில் வசித்து வருபவர் ரமேஷ் லால் நந்த். இவர் கொடுத்த கடனை வசூலிப்பதற்காக ஹப்பிற்கு சென்றபோது மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் பலுசிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரமேஷ் லால் நந்த் மீதான தாக்குதல் பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதலுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு ஆகும்.

சமீப காலமாக பாகிஸ்தானில் சிறுபான்மை மதத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.