07

07

“இன-மத-பேதங்கள் கடந்து நாம் ஒரு நாட்டு தாயின் பிள்ளைகளாக இருப்போம்.” – சஜித் பிரேமதாச

எனது கட்சி ஆட்சியமைக்கும் பட்சத்தில் இன, மத பிரிவினைகள் ஏற்பட இடமளிக்க விடமாட்டோம். நாம் ஒரு நாட்டு தாயின் பிள்ளைகளாக இருப்போம்  என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

வவுனியா ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

”ஐக்கிய  மக்கள் சக்தி என்பது நாட்டில் இதுவரை இல்லாத பொது அரசியல் அத்தியாயத்தை முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு. டீல் அரசியல் கலாசாரத்தை இல்லாமல் செய்து நாட்டின் எதிர்காலத்திற்கும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்குமான அமைப்பு தான் இது.

இது தனி நபருக்கானதோ அல்லது ஒரு இனத்திற்கானதோ அல்ல. நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல விரும்புபவர்கள் அனைவரும் இணைந்து பயணிக்கின்றார்கள். ஊழல், கொள்ளைகள் இல்லாத ஒரு அரசாங்கத்தை உருவாக்குவது எமது நோக்கம். மத்திய வங்கி கொள்ளையில் ஈடுட்டவர்கள் எவ்வாறு எம்மோடு இணைய வருவார்கள்.

சுசில் பிரேமஜயந்த அவர்களை பதவி நீக்கிய விடயமானது, தலைவலிக்கு தலையணையை மாற்றுவது போன்ற வேலை. மக்கள் இந்த அரசாங்கத்திற்கு கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை. முழுவதும் கண்துடைப்பாக செய்கிறார்கள். இதனை மாற்ற வேண்டும். இதற்கு புதிய மக்கள் சக்தியை உருவாக்க வேண்டும். அதற்கான வாய்ப்பை மக்களுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

வடக்கு, கிழக்கில் எம்மால் கடந்த அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத் திட்டமானது மக்களின் பங்களிப்புடன் கூடியதாகவே ஆரம்பிக்கப்பட்டது.

இதனை நாம் நடைமுறைப்படுத்தினோம். தற்போதைய அரசாங்கம் கொள்ளையடிப்பதில்  தான் குறியாக இருக்கிறார்கள். இதனால் மக்களுக்கு எப்படி வீட்டுத் திட்டத்தை அவர்களால் வழங்க முடியும்.  நாம் இந்த நாட்டின் ஜனாதிபதியாகி இந்த மக்களின் வீட்டு திட்ட பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை வழங்குவேன் என உறுதியளிக்கின்றேன்.

மேலும், ஊடகம் என்பது ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக இருக்கும் மிகப்பெரிய சக்தி என நான் நம்புகின்றேன். மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவது ஊடகவியலாளரின் கடமை. இவ்வாறு உண்மைகளை வெளிப்படுத்திய ஊடகவியலாளர்கள் பலர் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளார்கள்.

அவ்வாறு பாதிப்படைந்த அல்லது உயிரிழந்த ஊடகவியலாளர்களுக்கு நாம் ஆட்சிக்கு வந்ததும் அரசாங்கம் என்ற வகையில் எம்மால் முடிந்த சலுகைகளை பெற்றுக் கொடுப்போம்.

ஐக்கிய ஐக்கிய மக்கள் சத்தியின் நாட்டிற்கான பயணம் தொடர்கிறது. இந்த பயணத்தில் வடக்கு அரசியல், தெற்கு அரசியல் என்று இல்லை. இதில் எந்த வித பிரிவினைகளும் கிடையாது. இலங்கை என்பது ஒரு நாடு. நாம் அதன் பிரஜைகள் என்ற அடிப்படையில் தான் பணியாற்றுவோம். மக்களது பிரச்சனைகளை நாம் கட்டம் கட்டமாக செய்வோம். இதில் எந்தவித வேறுபாடும் கிடையாது.

இராணுவ வழிநடத்தல் அல்லது இராணுவத்தின் தலைமைத்துவம் என்பது இராணுவத்திற்கு தான் பொருத்தம். எமது நாடு ஜனநாயக நாடு. ஜனநாயக நாட்டை வழிநடத்துவதற்கும், கொண்டு செல்வதற்கும் தேவையானது ஜனநாயக ரீதியலான தேர்தலும், மக்களது வாக்குகளும், அதன் மூலம் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் தான்.

நாட்டின் ஆட்சியில் இராணுவ வழிநடத்தல் என்பது தேவையில்லாதது. இது சம்மந்தமாக என்னிடம் மேலதிகமாக கேட்க வேண்டாம். இந்த அரசாங்கத்திற்கும் நாட்டை இராணுவ ஆட்சியை கொண்டு செல்வது தொடர்பான எண்ணம் இருக்கும் என நான் எண்ணவில்லை.

நாட்டிற்குள் எந்தவித பிரச்சனைகளும் இடம்பெறுவதற்கு இடமளிக்க முடியாது. எனது கட்சி ஆட்சியமைக்கும் பட்சத்தில் இன, மத பிரிவினைகள் ஏற்பட இடமளிக்க விடமாட்டோம். நாம் ஒரு நாட்டு தாயின் பிள்ளைகளாக இருப்போம். இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். எந்த ஒரு இனத்துடனும், மதத்துடனும் முரண்பட முடியாது. ஒரு இனம் அல்லது குறித்த தொகை மக்கள் தமக்கு பாதுகாப்பு இல்லை அல்லது தமது தேவைகள் பூர்த்தியாகவில்லை என்றால் அதனை கேட்க உரிமை உள்ளது. அதனை செய்து கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை” எனத் தெரிவித்தார்.

குசல் மென்டிஸ், குணதிலக, டிக்வெல்ல ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

குசல் மென்டிஸ், தனுஷ்க குணதிலக மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் விளையாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த போட்டித்தடை நீக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா கிரிக்கட் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்த போது, கட்டாய உயிர்குமிழி நடைமுறையை மீறிச் செயற்பட்டமைக்காக குறித்த மூவருக்கும் போட்டித்தடை விதிக்கப்பட்டிருந்தது.

20,000 ஆப்கானியர்களை பிரித்தானியாவில் மீள்குடியேற்ற புதிய திட்டம் !

20,000 ஆப்கானியர்களை பிரித்தானியாவில் மீள்குடியேற உதவும் வகையில், புதிய திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் வெளியேறிய 5,000க்கும் மேற்பட்டோர் முதல் ஆண்டில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்று நீதி அமைச்சர் விக்டோரியா அட்கின்ஸ் கூறினார்.

இருப்பினும், மக்களை அழைத்துச் செல்வதற்கான பிரித்தானியாவின் திறன் வரம்பற்றது என்றும் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிப்பது மிகவும் கடினமானது என்றும் அவர் எச்சரித்தார்.

திட்டத்தைத் தொடங்குவதில் ஏற்பட்ட தாமதம் உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என்று தொழிலாளர் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்த 2001ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை, ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றினர்.

அந்த காலகட்டத்தில் மேற்கத்திய அரசாங்கங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிந்த ஆப்கானிய குடிமக்களின் பாதுகாப்பு குறித்து பெரும் கவலைகள் எழுந்தன. இதனைத்தொடர்ந்து அமெரிக்கா மற்றும் பிரித்தானியா அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது.

 

“அரசாங்கத்தின் செயற்பாடுகளால் நாடு வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்படும்.” – ஐக்கிய மக்கள் சக்தி

நேற்றையதினம் கைச்சாத்திடப்பட்ட திருகோணமலை எண்ணெய் குதங்களை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கைக்கு வழங்கப்பட வேண்டிய நிதி இதுவரையில் வெளியிடப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இந்த தொகையை இரகசியமாக வைத்திருக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும், இந்த நிதி முதலீடாக வழங்கப்படுமா..? அல்லது கடனாக வழங்கப்படுமா.? என்பதும் வெளிப்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின்  பாராளுமன்ற உறுப்பினரான மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்த்துள்ளார். மேலும் பேசிய அவர் ,

லங்கா IOC நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் தொடர்பான உண்மைகளை அமைச்சர் இதுவரை வெளியிடவில்லை.இதன் விளைவுகளை பொதுமக்கள் சந்திக்கும் வகையில் இதுவும் இரகசிய ஒப்பந்தமாக இருக்கும்.

அரசாங்கம் தொடர்ந்தும் இவ்வாறான பாதையில் சென்றால் நாடு வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்படும். பொதுமக்கள் மூன்று வேளை உணவுக்குப் பதிலாக இரண்டு வேளை உணவுடன் உயிர்வாழ முடியும் என சில அமைச்சர்கள் முன்னர் கூறியதால், பொதுமக்கள் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்தினால் நாட்டில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.

தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதையும் பின்னர் அத்தகைய முடிவுகளை திரும்பப் பெறுவதையும் அரசாங்கம் தவிர்க்க வேண்டும். இதுதான் தற்போதைய நிர்வாகத்தின் நோக்கமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

இந்திய பிரதமருக்கு, இலங்கையின் ஒட்டுமொத்த தமிழ் பேசும் கட்சிகளின் விண்ணப்ப கடிதம் – புறக்கணிக்கப்பட்ட மலையக தமிழர்களின் அபிலாஷைகள் ?

இந்திய பிரதமருக்கு, இலங்கையின் ஒட்டுமொத்த தமிழ் பேசும் கட்சிகளின் விண்ணப்ப கடிதம்” என்று ஆரம்பிக்கப்பட்ட கூட்டு செயற்பாட்டில், சமீபத்தைய இந்திய வம்சாவளி மலையக தமிழரின் அபிலாசைகளையும் உள்ளடக்குவதில் சிக்கலை எதிர்கொண்டதாலும், எனவே எமது பங்களிப்பு வடகிழக்கு தமிழ் கட்சிகளின் சுதந்திர செயற்பாட்டுக்கு பாதகமாக இருப்பதை உணர்ந்ததாலும், இந்த செயற்பாட்டுக்கு வெளியில் நின்று அவசியமான ஒத்துழைப்புகளை வழங்குவோம்.

 

இலங்கையின் ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்கள் என்ற பொதுநோக்கில், இந்த செயற்பாட்டை ஆரம்பித்த ஏற்பாட்டாளர்கள் செல்வம் அடைக்கலநாதன் எம்பி, தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்பி, இணைப்பாளர் சுரேன் குருசுவாமி ஆகியோருக்கு எமது வாழ்த்துகளை தெரிவிக்கிறோம்.

அதேவேளை பொது இணக்கப்பாட்டின் மூலம் பொது ஆவணம் தயாரிக்க முடியாமையை கருத்தில் கொண்டு மலையக தமிழரின் அபிலாஷைகளை முன்னிறுத்தி பாரத பிரதமர், இலங்கை ஜனாதிபதி, தமிழக முதல்வர் உள்ளிட்ட அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் தலைவர்களுக்கும் தனித்தனியாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் ஆவண கடிதம் எழுதப்படும் என்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் முடிவுகளை கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வே. இராதாகிருஷ்ணன் ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

 

முதல் கலந்துரையாடல்
“இலங்கை அரசியலமைப்பில் ஏற்கனவே உள்ள 13வது (13A) திருத்த சட்டத்தை முற்று முழுதாக நடைமுறைப்படுத்தி, அர்த்தமுள்ள அதிகார பகிர்வை உறுதி செய்து, மாகாணசபை தேர்தலையும் விரைந்து நடாத்த இலங்கை அரசை வலியுறுத்த, இந்தியாவை ஒருமித்து தமிழ் பேசும் மக்களின் கட்சிகள் கோருதல்” என்ற அடிப்படையிலான அழைப்பின் பேரிலேயே ஏற்பாட்டாளர்களால் இந்த கூட்டு செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலை கழகம், தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கட்சி ஆகிய வட கிழக்கு தமிழ் கட்சிகளுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளும் நவம்பர் இரண்டாம் திகதி நடைபெற்ற முதல் கலந்துரையாடலில் கலந்துக்கொண்டன.

நோக்கம்
இலங்கை அரசமைப்பில் இடம் பெற்றுள்ள ஒரே அதிகார பரவலாக்கல் சட்டமான 13ம் திருத்தம் என்பதை இறுதி தீர்வாக கருதி இந்த பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால் இலங்கை அரசாங்கம், இந்த குறைந்தபட்ச சட்டத்தைக்கூட முழுமையாக அமுல் செய்யாமல் இழுத்தடிப்பதுடன், இச்சட்டமூலம் மாகாணசபைகளுக்கு வழங்கிய அதிகாரங்களையும்கூட வாபஸ் பெறுகிறது என்ற உண்மை உலகிற்கு அதிகாரபூர்வமாக ஒட்டுமொத்த தமிழ் பேசும் கட்சிகளால் அறிவிக்கப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கமே எமது பொது நோக்காக இருந்தது.

இலங்கை தமிழரசு கட்சி உள்வாங்கல்
இந்த செயற்பாட்டில், இலங்கை தமிழரசு கட்சியும் உள்வாங்கப்பட வேண்டும் என்பதை ஆரம்பம் முதல் வலியுறுத்தி கூட்டமைப்பின் தலைவரை நேரடியாக, தமுகூ மனோ கணேசனும், ஸ்ரீமுகா தலைவர் ரவுப் ஹக்கீமும் சந்தித்து அழைப்பு விடுத்ததையும், தமிழரசு கட்சியை தவிர்த்து விட்டு விண்ணப்ப கடிதத்தில் கையெழுத்திடும் யோசனையை, தமிழ் முற்போக்கு கூட்டணியாகிய நாம் நிராகரித்தோம் என்பதையும் ஏற்பாட்டாளர்கள் நன்கறிவார்கள்.

பொது ஆவணகடிதம்
ஆரம்பத்தில், பாரத பிரதமருக்கான கடித வரைபு, அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளும், பொது குறைந்தபட்ச நிலைப்பாடுகளை கொண்ட விண்ணப்ப கடிதமாக சுமார் ஒன்றரை பக்கத்தில் வடிவமைக்கப்பட்டது. எனினும் தொடர்சியாக நடைபெற்ற கலந்துரையாடல்களின் போது, தமிழ் தேசிய அரசியலின் சமகால வரலாறு முழுமையாக அதில் எழுதப்பட்டு, எட்டு பக்கங்களை கொண்ட நீண்ட ஆவணக்கடித வரைபாக மாற்றப்பட்டது. இதன் பின்னுள்ள நியாயப்பாட்டை எம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறது.

ஆனால் ஒட்டு மொத்த தமிழ் பேசும் மக்கள் சார்பான கடிதம் என்பதால், இதே நியாயப்பாட்டின் அடிப்படையில், இக்கடிதத்தில் மலையக தமிழ் மக்களின் அபிலாஷகளும் உள்ளடக்கப்பட வேண்டிய இயல்பான தேவைப்பாடு எழுந்தது. மேலதிகமாக இந்த ஆவணக்கடித வரைபு, இறுதி வடிவம் பெறமுன்னரே ஊடகங்களின் வெளிப்படுத்தப்பட்டு வாதப்பிரதிவாதங்களை தமிழ் பேசும் அரசியல் சமூக பரப்புகளில் ஏற்படுத்தியது.

பொது ஆவணகடிதம் நிராகரிப்பு
இந்நிலையிலேயே, கடந்த வருடத்தின் இறுதி நாளான்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களது கொழும்பு இல்லத்தில், தமுகூ தலைவர் மனோ கணேசன் உட்பட கட்சி தலைவர்கள், பிரதிநிதிகள் கூடி ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் மறுநாள் இவ்வருடத்தின் முதல் நாள், கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் எம்பியின் கொழும்பு இல்லத்தில் கூடி புதிய கடித வரைபு தயாரிக்கப்பட்டது.

ஆனால், இந்த ஆவணக்கடித வரைபு, உடனடியாகவே இலங்கை தமிழரசு கட்சியின் தலைமை சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டதை நாம் அறிந்தோம்.

மலையக தமிழரின் அபிலாஷைகளை முன்னிறுத்தி ஆவணக்கடிதம்
ஆகவே, பொது ஆவணம் தயாரிக்க முடியாமையை கருத்தில் கொண்டு சமீபத்தைய இந்திய வம்சாவளி மலையக தமிழரின் அபிலாஷைகளை முன்னிறுத்தி பாரத பிரதமர், இலங்கை ஜனாதிபதி, தமிழக முதல்வர் உள்ளிட்ட அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் தலைவர்களுக்கும் ஆவணக்கடிதம் எழுத தமிழ் முற்போக்கு கூட்டணி முடிவு செய்துள்ளது.

வடகிழக்கு உடன்பிறப்புகளுக்கு எமது ஒத்துழைப்பு தொடரும்
இப்பின்னணிகளிலேயே, தேவையற்ற முரண்பாடுகளை தவிர்க்கும் நோக்கில், “வடகிழக்கு தமிழ் கட்சிகளின் இந்த செயற்பாட்டுக்கு வெளியில் நின்று ஒத்துழைப்புகளை வழங்குவோம்” என்ற முடிவை நாம் எடுத்துள்ளோம். வடகிழக்கு உடன்பிறப்புகளுக்கு, வரலாறு முழுக்கவும் இதை நாம் செய்துள்ளோம். இனியும் செய்வோம். “உரிமைக்கு குரல் கொடுப்போம்; உறவுக்கு கை கொடுப்போம்” என்ற எமது கொள்கை தொடரும்.

என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூக்கில் தொங்கிய நிலையில் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் 26 வயது பெண்ணின் சடலம் மீட்பு !

ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் இளம் யுவதி மரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா மணிபுரம் பகுதியில் வசிக்கும் இளம் யுவதியொருவர் தாய், தந்தை வேலை நிமித்தம் இன்று (07) காலை வவுனியா நகருக்கு சென்ற சமயத்தில் வீட்டில் தனிமையில் நின்ற யுவதி அவரது வீட்டு அறையில் பஞ்சாவி துணியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் தனிமையில் இளம் யுவதி விபரீத முடிவு! வீட்டிற்கு வந்த பெற்றோரிற்கு காத்திருந்த அதிர்ச்சி - ஜே.வி.பி நியூஸ்

தாய், தந்தை காலை 11 மணி அளவில் வீட்டிற்கு திரும்பிய நேரத்தில் மகள் தூக்கில் தொங்கிய நிலையில் அவதானித்து உடனடியாக மீட்டெடுத்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட போதிலும் யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

26 வயதுடைய தங்கவேல் திவியா என்ற யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் யுவதியின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பஷில் ராஜபக்ஷவின் நிவாரணம் வழங்கும் திட்டத்திற்காக கண்மூடித்தனமாக அச்சடிக்கப்பட்ட 229 பில்லியன் நிதி !

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் நிவாரணம் வழங்கும் திட்டத்திற்கு 229 பில்லியன் நிதி அச்சிடப்பட்டால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு  உச்சளவிலான பணவீக்கம் எதிர்காலத்தில் தோற்றம் பெறும் என ஸ்ரீ லங்கா கம்யூனிச கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் டி.யு குணசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் பேசிய அவர்,

டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் பொருத்தமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. கொவிட் -19 வைரஸ் இலங்கைக்கு மாத்திரம் தாக்கம் செலுத்தவில்லை. இலங்கையை போல் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் கொவிட் தாக்கத்தை சிறந்த முறையில் கையாண்டுள்ளதுடன்,டொலர் நெருக்கடியினையும் சீர் செய்துள்ளன.

அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் காணப்படுகிறது. வரையறையற்ற வகையில் நாணயம் அச்சிடும்போது அத்தியாவசிய பொருட்களின் விலை இயல்பாகவே அதிகரிக்கும். இவ்வாறான பின்னணியில் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ 229 பில்லியன் செலவில் நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானித்துள்ளார்.

தேசிய வருமானம் குறைவடைந்துள்ள நிலையில் 229 பில்லியன் நிதி கண்மூடித்தனமாக அச்சிடப்பட்டால் எதிர்காலத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு  உச்சளவிலான பணவீக்கம் உச்சமடையும் என்றும் அவர் கூறினார்.

புதிய வகை மலேரியா நுளம்பு – யாழ்ப்பாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !

யாழ்ப்பாண நகர எல்லைக்குள் ´எனோபீலிஸ் டிபென்ஸி´ எனப்படுகின்ற புதிய வகை மலேரியா நுளம்பு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இது மிகவும் அனர்த்த நிலை என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ஏ. கேதீஷ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தென்ஆபிரிக்காவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள சிலருக்கு மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசேட வைத்திய நிபுணர்கள் ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாண நகர எல்லையில் அடையாளம் காணப்பட்டுள்ள இந்த நுளம்ப துரிதமாக பரவும் துரிதமாக பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“வடமாகாண ஆளுநர் ஜனாதிபதியின் எடுபிடி. அவர் எமக்கு விளையாட்டு காட்ட கூடாது..” – சிவாஜிலிங்கம் காட்டம் !

“ஆரிய குளத்தை அரசு கையகப்படுத்தப் பார்ப்பது எமக்கு தெரியும். வடமாகாண ஆளுநர் ஜனாதிபதியின் எடுபிடி, அவர் தன்னுடைய வேலைகளை மட்டும் பார்க்க வேண்டும். எமக்கு விளையாட்டு காட்ட வேண்டாம். இந்த விடயத்தில் யாழ் மாநகர முதல்வரை பணியவைக்கும் செயற்பாட்டுக்கு தமிழ் மக்கள் துணைபோக மாட்டார்கள்.” என  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக்கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ். ஊடக மையத்தில் நேற்று (06) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆரிய குளப்புனரமைப்பு திறப்பு விழாவில் கலந்து கொள்ள வருகின்ற பொழுது சிங்கள பௌத்த எஜமான்களை திருப்திப்படுத்துவதற்காக ஆளுநர் கண்டிய மேளதாளங்களுடன் வந்தபோது, சரி வந்து விட்டு போகட்டும் என்று விட்டுவிட்டோம். அன்றையதினம் குளத்தை திறக்க வந்திருந்த பொழுது ஆளுநர் யாருடைய ஆளுகைக்குள் ஆரியகுளம் உள்ளது என்பதைப் பற்றி விசாரித்து இருக்கலாம். ஆனால் விடிய விடிய இராமர் கதை விடிந்தால் ராமன் சீதைக்கு என்ன முறை என்பது போலவே ஆளுநரின் செயற்பாடு காணப்படுகின்றது.

யாழ் மாநகர முதல்வர் ஆரியகுள அழைப்பிதழை வழங்கிய பொழுது இது யாருடைய ஆளுகைக்குள் இருந்தது என்பதை அவரிடம் கேட்டிருக்க வேண்டும். பௌத்தர்கள் விரும்பினால் விகாரைக்கும் இந்துக்கள் விரும்பினால் ஆலயங்களுக்கும் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்கும் முஸ்லீம்கள் பள்ளிவாசல்களுக்கும் செல்ல முடியும். ஆரியகுளத்திற்கு மதச்சாயம் தேவையில்லை.மதங்களை திணிக்க முற்படக் கூடாது அவ்வாறு மதங்களை திணிக்க முற்பட்டால் அந்தியேட்டி அஸ்தியை கரைக்க தமிழ் மக்கள் முற்படுவார்கள். வீணாக இதனை பிரச்சனையாக்க வேண்டாம்.

தொல்லியல் என்று சொல்கிறீர்கள். தொல்லியல் சின்னங்களில் ஏன் மதத்தைக் கொண்டு வருகின்றீர்கள். குருந்தூர்மலையை தொல்லியல் என்று மூடி வைத்துவிட்டு பல விடயங்களை செய்து வருகின்றீர்கள். இவையெல்லாம் எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வியெழுப்பினார்.

ஆரியகுளம் சேற்றுடன் காணப்படும் போது ஒருவரும் திரும்பி பார்க்கவில்லை. அதன் பின்னர் யாழ். மாநகர சபையின் முயற்சியால், தற்போது அழகாக சீரமைக்கப்பட்டு மக்கள் தமது பொழுது போக்கு நேரத்தை செலவழிப்பதற்காக அங்கு வருகின்றனர்.

ஆரிய குளத்தை அரசு கையகப்படுத்தப் பார்ப்பது எமக்கு தெரியும். வடமாகாண ஆளுநர் ஜனாதிபதியின் எடுபிடி, அவர் தன்னுடைய வேலைகளை மட்டும் பார்க்க வேண்டும். எமக்கு விளையாட்டு காட்ட வேண்டாம். இந்த விடயத்தில் யாழ் மாநகர முதல்வரை பணியவைக்கும் செயற்பாட்டுக்கு தமிழ் மக்கள் துணைபோக மாட்டார்கள் என்றார்.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் !

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
வடக்கு, கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான இடமாற்றம் தலைமை நீதியரசரினால் வழங்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டதுடன், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன், யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்ட மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். நீதிபதி இளஞ்செழியனுக்கு நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள், சட்டத்தரணிகள், நீதிமன்ற உத்தியோகத் தர்களால் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.