தை பொங்கல் தினத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வருடா வருடம் தை பொங்கல் தினத்தன்று வல்வெட்டித்துறை உதயசூரியன் திடலில் நடாத்தப்பட்டு வரும் பட்டத்திருவிழாவை இம்முறையும் நடத்துவதற்கு ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்து அறிவித்திருந்தனர்.
அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களை முன்னிறுத்தி இம்முறை பட்டத்திருவிழாவை இடைநிறுத்துமாறு பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் பட்டத்திருவிழா ஏற்பாட்டு குழுவினருக்கும் பிரதேச மக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று மாலை இடம்பெற்றிருந்தது.
குறித்த கலந்துரையாடலில் படத்திருவிழாவை தற்கால சூழ்நிலையில் இடைநிறுத்துமாறு பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இம்முறை வல்வெட்டித்துறை பட்டத்திருவிழா இடைநிறுத்தப்படுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த பட்டத்திருவிழாவிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல்ராஜபக்ஷ உள்ளிட்டோரை வரவேற்ற ஏற்பாட்டுக்குழுவினர் முயற்சிகளை மேற்கொண்டிருந்த நிலையில் “தமிழின அழிப்பை நடாத்தியும் தமிழர்களது பூர்வாங்க நிலங்களை பறித்தெடுத்தும் எண்ணில் கணக்கற்ற தமிழர்களை பயங்கரவாத தடைச்சட்டம் என்ற பெயரில் சிறையில் அடைத்தும் தனது அடக்குமுறை ஆட்சியை நடாத்தி வருகின்ற சிறிலங்கா அரசின் அமைச்சரும் மகிந்த ராஜபக்சவின் மகனுமாகிய நாமல் ராஜபக்சவையும் இன அழிப்பு அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களையும் பட்டத்திருவிழாவிற்கு அழைப்பதானது எமது இனத்திற்கு இழைக்கும் வரலாற்று தவறாகும்.” என பல தமிழ்தேசிய தரப்பினரும் விசனம் வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.